Arjuna became skilled in arms! | Vana Parva - Section 167b | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தான் இந்திரலோகம் சென்றதையும், அங்கு வாசம் செய்ததையும், இந்திரனிடம் ஆயுதங்கள் பெற்றதையும், நிவாதகவசர்களை நோக்கி யுத்தத்திற்குப் புறப்பட்டதையும் அர்ஜுனன் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, குதிரைகள் பூட்டப்பட்ட புனிதமான தெய்வீகத்தேர் மாதலியால் {இந்திரனின் தேரோட்டியால்} நடத்தப்பட்டு அற்புதமாக வருவதை நான் கண்டேன். லோகபாலர்கள் சென்ற பிறகு மாதலி என்னிடம், "ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {அர்ஜுனா}, தேவர்கள் தலைவன் {இந்திரன்} உன்னைக் காணும் விருப்பத்துடன் இருக்கிறான். ஓ! பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்டவனே {அர்ஜுனா}, தகுதியைப் பெற்ற பிறகு, உனது காரியத்தை செய். தகுதியால் அடையக்கூடிய உலகங்களை வந்து பார். இந்த உடலுடனேயே சொர்க்கத்துக்கு வா. ஓ! பாரதா {அர்ஜுனா}, ஆயிரம் கண் கொண்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்} உன்னைக் காண விரும்புகிறான்" என்றான். மாதலியால் இப்படிச் சொல்லப்பட்ட நான், இமய மலையை விட்டு அகன்று, அந்த அற்புதமான தேரை வலம் வந்து, அதன் மேல் ஏறினேன். குதிரை மரபுகளை நன்கறிந்த மிகத் தாராளமான மாதலி, மனோ வேக வாயு வேகங்களைக் கொடையாகக் கொண்ட குதிரைகளை செலுத்தினான்.
தேர் நகரத் தொடங்கியதும், அந்தத் தேரோட்டி {மாதலி} உறுதியாக அமர்ந்திருந்த எனது முகத்தைப் பார்த்து ஆச்சரியங்கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னான், "இன்று நடப்பது எனக்கு ஆச்சரியமாகவும் எதிர்பாராததாகவும் இருக்கிறது. இந்தத் தெய்வீகத் தேரில் அமர்ந்திருக்கும் நீ, சிறிதும் அசைந்ததாகத் தெரியவில்லை. ஓ! பாரத குலத்தில் முதன்மையானவனே {அர்ஜுனனே}, குதிரைகளின் முதல் தாவலில், தேவர்கள் தலைவன் கூட {இந்திரன் கூட} அசைவதை {தடுமாறுவதை} நான் எப்போதும் கவனித்திருக்கிறேன். ஆனால், இந்த ரதம் நகர்ந்த பிறகும் நீ அசைவற்றவனாக {தடுமாறாதவனாக} இருப்பதைக் காண்கிறேன். இது சக்ரனின் {இந்திரனின்} சக்தியையும் விஞ்சியிருக்கும் சக்தியாக எனக்குப் படுகிறது" என்றான் {மாதலி}.
ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, இதைச் சொன்ன மாதலி வானத்தில் பிரவேசித்து, தேவர்களின் வசிப்பிடங்களையும், அவர்களது அரண்மனைகளையும் காட்டினான். பிறகு குதிரைகள் பூட்டப்பட்ட அந்த ரதம் மேல்நோக்கிச் சென்றது. ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, தேவர்களும் முனிவர்களும் (அந்த ரதத்தை) வழிபடத்தொடங்கினர். நினைத்த இடங்களுக்கு செல்லவல்ல உயர்ந்த சக்தி கொண்ட கந்தர்வர்கள், அப்சரசுகள் மற்றும் தெய்வீக முனிவர்களின் உலகங்களை நான் கண்டேன். சக்ரனின் {இந்திரனின்} தேரோட்டியான மாதலி, தேவர்களுக்குச் சொந்தமான நந்தவனத்தையும் மற்ற பிற நந்தவனங்களையும் எனக்குக் காட்டினான். அடுத்ததாக நான், பொன்னாலும், விரும்பிய கனிகள் காய்க்கும் மரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட இந்திரனின் வசிப்பிடமான அமராவதியைக் {அமராவதி நகரத்தைக்} கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அங்கே சூரியன் வெப்பத்தைச் சிந்துவதில்லை; வெப்பமோ, குளிரோ, களைப்போ (யாரையும்) அங்கே வாட்டுவதில்லை. ஓ! பெரும் ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஓ! எதிரிகளை வாட்டுபவரே, அங்கே தேவர்கள் துக்கத்தையோ, ஆவியில் வறுமையையோ, பலவீனத்தையோ உணர்வதில்லை. ஓ! மனிதர்களை ஆள்பவரே {யுதிஷ்டிரரே}, தேவர்களும் மற்றவரும் கோபமோ, பேராசையோ கொள்வதில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} தேவர்களின் வசிப்பிடங்களில் வாழ்பவர்கள் எப்போதும் உள்ளடக்கத்துடன் இருக்கிறார்கள்.
மேலும், அங்கே மரங்கள் எப்போதும் பசுமையான இலைகள், கனிகள், மற்றும் மலர்களைத் தாங்கியபடி இருக்கின்றன. அங்கிருக்கும் பலதரப்பட்ட ஏரிகளில் தாமரை மணம் வீசுகிறது. அங்கு வீசும் தென்றல் குளிர்ச்சியாகவும், சுவையாகவும், மணமிக்கதாகவும், தூயதாகவும், ஊக்கத்தைத் தருவதாகவும் இருக்கிறது. அங்கிருக்கும் நிலம், பல வகையான ரத்தினங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அங்கே எண்ணிலடங்கா அழகிய விலங்குகளும், ஆகாயத்தில் எண்ணிலடங்கா விண்ணதிகாரிகளும் {பறவைகளும்} இருந்தன. பிறகு நான், வசுக்களையும், ருத்திரர்களையும், சத்யஸ்களையும், மருதர்களையும், ஆதித்தியர்களையும், அசுவனி இரட்டையர்களையும் கண்டு அவர்களை வணங்கி வழிபட்டேன். அவர்கள் தங்கள் வாழ்த்துகளை எனக்குத் தெரிவித்து, எனக்கு பலத்தையும், பராக்கிரமத்தையும், சக்தியையும், புகழையும், ஆயுதங்களையும் (ஆயுதங்களில் நிபுணத்துவத்தையும்), போர்க்களத்தில் வெற்றியையும் அருளினர். பிறகு கந்தவர்களாலும், தேவர்களாலும் வணங்கப்படும் அந்த அழகான நகரத்துக்குள் {அமராவதி நகரத்துக்குள்} நுழைந்து, கைகள் கூப்பியபடி, ஆயிரம் கண் கொண்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்} முன்பு நான் நின்றேன்.
அதன்பிறகு, அந்தக் கொடையளிப்பவர்களில் சிறந்தவன் {இந்திரன்}, தனது ஆசனத்தில் பாதியை மகிழ்ச்சியுடன் எனக்கு அளித்தான். அந்த வாசவன் {இந்திரன்} மதிப்புடன் என்னைத் தொட்டான் {தோள் மீது கை போடுதலாக இருக்கலாம்}. ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, ஆயுதங்களை அடைவதையும், அவற்றைக் கற்பதையும் நோக்கமாகக் கொண்ட நான், தாராள ஆன்மா கொண்ட தேவர்கள் மற்றும் கந்தர்வர்களுடன் சொர்க்கத்தில் வசிக்க ஆரம்பித்தேன். விஸ்வவனன் {விஸ்வவசு = குபேரன்} மகனான சித்ரசேனன் எனக்கு நண்பனான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அவன் எனக்கு கந்தர்வம் (கந்தர்வ அறிவியல்} முழுவதையும் கற்றுக் கொடுத்தான். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, சக்ரனின் வசிப்பிடத்தில் நன்றாக கவனிக்கப்பட்டு, எனது விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டு, ஆயுதங்கள் பயின்று, பாடல்களையும், இசைக்கருவிகளின் தெளிவான ஒலிகளையும் கேட்டு, அப்சரசுகளில் முதன்மையானவர்களின் ஆட்டங்களையும் கண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். கலைக்கல்வியை புறந்தள்ளாமல், அதைச் சரிவர கற்றேன். எனது கவனம் முழுவதும் ஆயுதங்களை அடைவதிலேயே குறிப்பாக நிலைத்திருந்தது. ஆயிரம் கண் கொண்ட அந்தத் தலைவன் {இந்திரன்} எனது நோக்கத்தில் திருப்தி கொண்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இப்படியே வாழ்ந்து, சொர்க்கத்தில் இருந்தக் காலத்தைக் கடத்தினேன்.
குதிரையை {உச்சைஸ்ரவத்தை) வாகனமாகக் கொண்டவன் (இந்திரன்), நான் ஆயுதங்களில் நிபுணத்துவம் அடைந்தேன் என்று நம்பிக்கைக் கொண்ட பிறகு, தனது கையால் எனது தலையைத் தட்டி {தடவி}, "இப்போது தேவர்களாலும் உன்னை வீழ்த்த முடியாது. அப்படி இருக்கையில் பூமியில் வசிக்கும் குறையுள்ள {imperfect mortals) மனிதர்களை என்னவென்று சொல்வது? பாதிப்படையாத வலிமையுடையவனாகவும், கட்டுப்படுத்தப்பட முடியாதவனாகவும், போரில் ஒப்பிட முடியதவனாகவும் ஆகிவிட்டாய்" என்ற வார்த்தைகளைச் சொன்னான். பிறகு தனது உடல் ரோமங்கள் சிலிர்த்தெழ அவன் {இந்திரன்} என்னிடம், "ஓ! வீரா {அர்ஜுனா}, ஆயுதங்களால் போரிடும் போது உனக்கு இணையானவன் எவனும் இல்லை. ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {அர்ஜுனா}, எப்போதும் கவனம் நிறைந்தவனாக, கைகளைத் திறமையோடு உபயோகிப்பவனாக, உண்மையுள்ளவனாக, புலன்களை அடக்கியவனாக, அந்தணர்களின் பாதுகாவலனாக, ஆயுதங்களில் திறமையுள்ளவனாக, போர்க்குணமுள்ளவனாக நீ இருக்கிறாய். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, ஐந்து விதிகளையும் {1. விடுப்பது, 2. திரும்ப அழைப்பது, 3. மீண்டும் மீண்டும் விடுத்து திரும்ப அழைப்பது, 4. அடிபட்டவரை மீட்பது; 5. ஆயுதத்திற்கு புத்துயிரூட்டுவது} (விதிகளின் அறிவையும்), (அவற்றைப்) பயன்படுத்தி, நீ பதினைந்து {15} ஆயுதங்களைப் பெற்றிருக்கிறாய். ஆகையால், உனக்குச் சமமானவன் எவனும் இல்லை. நீ (ஆயுதங்களை) விடுப்பதையும், (அவற்றைத்) திருப்பி அழைப்பதையும், (அவற்றை) மறுபடி விடுப்பதையும், மறுபடி திருப்பி அழைப்பதையும், (அவற்றோடு) தொடர்புடைய பிராயச்சித்தத்தையும் {ஆயுத நெருப்பால் எரிக்கப்பட்ட குற்றமற்றவர்களைப் பிழைப்பித்தல் என்ற பொருள் வரும் என்கிறார்கள்}, அவை கலங்கடிக்கப்பட்டால், அவற்றுக்கு புத்துயிரூட்டுவதையும் முறையாகச் சரியாகக் கற்றிருக்கிறாய். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {அர்ஜுனா}, நீ குருவுக்குக் கூலி {குருதட்சணை) கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கூலி கொடுப்பதாய் உறுதி கொடு; பிறகு நான் நீ என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாகச் சொல்வேன்" என்றான் {இந்திரன்}.
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அதன் பேரில் நான் தேவர்கள் ஆட்சியாளனிடம் {இந்திரனிடம்}, "எனது சக்திக்குட்பட்ட வேலையாக அது இருந்தால், அது ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதாகக் கருதிக்கொள்" என்றேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த வார்த்தைகளை நான் சொன்ன போது, இந்திரன் புன்னகையுடன், "மூவுலகிலும் (நீ சாதிக்க) உனது சக்திக்குட்படாத எதுவும் இல்லை. எனது எதிரிகளான நிவாடகவசர்கள் என்ற பெயர்கொண்ட தானவர்கள், சமுத்திரத்தின் கருவறைக்குள் வசிக்கின்றனர். அவர்கள் முப்பது கோடி {30,00,00,000} பேர் இருக்கின்றனர். அவர்கள் மோசமானவர்கள். அவர்கள் அனைவரும் சம உருவம், சம பலம் மற்றும் சம பிரகாசம் கொண்டவர்களாவர். அவர்களை அங்கேயே நீ கொல்ல வேண்டும். ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, அதுவே உனது குருவுக்கு நீ கொடுக்கும் கூலியாக இருக்கும்" என்றான் {இந்திரன்}.
இதைச்சொன்ன அவன் {இந்திரன்}, எனக்கு மயில் தோகை போன்ற ரோமங்களால் அலங்கரிக்கப்பட்டு, மாதலியால் {இந்திரனின் தேரோட்டியால்} நடத்தப்பட்ட பெரும் பிரகாசம் கொண்ட தெய்வீகத் தேரைக் கொடுத்தான். எனது தலையில் இந்த அற்புத கிரீடத்தைச் சூட்டினான். மேலும் அவன், தனது ஆபரணங்களைப் போலவே, எனது உடலிலும் தரித்துக் கொள்ள ஆபரணங்களையும் கொடுத்தான். தன்வகையில் சிறந்த துளைக்கப்பட முடியாத கவசத்தையும், தொடுவதற்கு இலகுவான, நீண்டு உழைக்கக்கூடிய நாணையும் காண்டீவத்தில் பொருத்திக் கொள்ள தந்தான். பிறகு, பழங்காலத்தில் விரோச்சனன் மகனான பலியை தேவர்கள் தலைவன் {இந்திரன்} எந்த ரதத்தில் இருந்து வீழ்த்தினானோ அந்த அற்புத ரதத்தில் நான் ஏறினேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, அந்த ரதத்தின் சடசடப்பொலியால், அனைத்து தேவர்களும் என்னை தேவர்களின் மன்னன் {இந்திரன்} என்று நினைத்துக் கொண்டு (அங்கே) வந்தனர்.
பிறகு என்னைக் கண்ட அவர்கள், "ஓ! பல்குனா {அர்ஜுனா}, நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் நடந்ததைச் சொல்லி, "நான் இந்தப் போரை நடத்துவேன். உயர்ந்த நற்பேறைப் பெற்றவர்களே, நிவாதகவசர்களைக் கொல்ல விரும்பிக் கிளம்பிச் செல்கிறேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஓ! பாவமற்றவர்களே, எனக்கு அருள் வழங்குங்கள்" என்று கேட்டேன். அதன் பேரில் அவர்கள் தங்கள் தேவனான புரந்தரனை {இந்திரனை} துதிப்பது போல என்னைத் துதிக்க ஆரம்பித்தனர். அவர்கள், "மகவான் {இந்திரன்}, இந்தத் தேரைச் செலுத்தியே, சம்பரன், நமுசி, பலன், விரித்திரன், பிரஹராதன், நரகன் ஆகியோரை வென்றான். மேலும் மகவான் {இந்திரன்}, இந்தத் தேரில் ஏறியே, பல்லாயிரம், பல கோடி, பல நூறு கோடிகள் தைத்தியர்களை வென்றான். ஓ! கௌந்தேயா {அர்ஜுனா}, நீயும் இத்தேரில் ஏறி, பழங்காலத்தின் சுயம்படைத்த மகவானைப் {இந்திரனைப்} போல உனது பராக்கிரமத்தால், நிவாதகவசர்களைப் போரில் வெல்வாய். இதுவே சங்குகளில் சிறந்தது; இதைக் கொண்டு தானவர்களை நீ வீழ்த்துவாய். இதனால் நீ உயர் ஆன்ம சக்ரனின் {இந்திரனின்} வார்த்தைகளை வெல்வாய்" என்றனர். இதைச் சொன்ன தேவர்கள் (என்னிடம்), ஆழத்தில் உதித்த இந்தச் சங்கைக் {சங்கு} கொடுத்தனர். நான் இதை வெற்றிக்காகப் பெற்றுக் கொண்டேன். இந்நேரத்தில் என்னைத் தேவர்கள் புகழ்ந்தனர். பிறகு செயலில் ஈடுபடுவதற்காக நான், இந்த சங்கையும், கவசத்தையும், கணைகளையும், எனது வில்லையும் தரித்துக் கொண்டு, தானவர்களின் {அசுரர்களின்} வசிப்பிடத்தை நோக்கி முன்னேறினேன்" என்றான் {அர்ஜுனன்}.