Matali lost his senses! | Vana Parva - Section 170 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தெய்வீக ஆயுதங்களின் துணை கொண்டு அர்ஜுனன் அசுரர்களின் மாயை ஒழித்து அவர்களைக் கொன்றது...
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு மலைப்பாறைகளைப் போன்ற மரத்துண்டுகளைக் கொண்ட கல்மழை பொழிந்தன. அது என்னை மிகவும் துன்புறுத்தியது. அந்த மோதலில் நான் அந்த (மலைகளை), நெருப்புடன் வெளிப்பட்ட எனது வேகமான அம்பு மழையால் சிதறடித்தேன். அந்தப் பாறைத் துணுக்குகள் விழும்போது நெருப்புக் குவியல்களாக விழுந்தன. இப்படி அந்தக் கல் மழை நிறுத்தப்பட்ட பிறகு, நீர் மழை தேர் அச்சின் அளவுள்ள தாரைகளோடு எனது அருகில் தோன்றியது. வானத்தில் இருந்து விழுந்த அந்த ஆயிரக்கணக்கான பலமிக்க நீர்த்தாரைகள் அந்த முழு வானத்தையும் திசைகளையும், திசைப்புள்ளிகளையும் நிரப்பின. கொட்டும் மழையும், வீசும் காற்றும், கர்ஜிக்கும் தைத்தியர்களும் என யாரையும் என்னால் காண முடியவில்லை. அந்தக் போர்க்களத்தில் வானையும் முழுப் பூமியையும் {இணைக்கும்படி} தொட்டுக் கொண்டு, விடாமல் பெய்து கொண்டிருந்த மழை என்னை மயங்கச் செய்தது. அதன்பேரில், நான் இந்திரனிடம் கற்ற தெய்வீக ஆயுதமான, சுடர்விட்டெரியும் பயங்கரமான விசோஷணா என்ற ஆயுதத்தை ஏவி நீரை வற்ற செய்தேன்.
ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, கல்மழை அழிக்கப்பட்டு, நீர்த்தாரைகள் வற்ற செய்யப்பட்ட பிறகு, தானவர்கள் நெருப்பையும் காற்றையும் கொண்டு மாயையைப் பரப்பினார்கள். பிறகு நான் நீராயுதங்களைக் கொண்டு {வருணாஸ்திரம் கொண்டு} அந்நெருப்பை அணைத்தேன். பிறகு பாறைகளை வீசும் ஆயுதம் கொண்டு {சைலாஸ்திரம்} அந்தக் கடும் காற்றை அடக்கினேன். இவையெல்லாம் தடுக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஒடுக்கப்படமுடியாத தானவர்கள் பலதரப்பட்ட மாயைகளைத் தொடர்ந்து உருவாக்கினர். அங்கே பயங்கரமான கல்மழையும், அக்னி மற்றும் வாயு ஆயுதங்களின் மழையும் பொழிந்தன. அப்படிக் கட்டவிழ்க்கப்பட்ட மாயை அம்மோதலில் என்னைத் துன்புறச் செய்தது. எல்லாப்புறங்களிலும் அடர்த்தியான இருள் தோன்றியது.
இப்படி ஆழ்ந்த அடர்ந்த இருள் உலகத்தை மூடியதால் குதிரைகள் திரும்பின, மாதலி விழுந்தான், அவனது கையில் இருந்த தங்கச் சாட்டை {குறடா} பூமியில் விழுந்தது. ஓ! பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இதனால் பயந்து போன அவன் என்னிடம் "எங்கிருக்கிறாய்?" என்று அடிக்கடி கேட்டான். அவன் மனம் பேதலித்திருந்த அவ்வேளையில், என்னையும் அச்சம் ஆட்கொண்டது. பிறகு அவசரத்துடன் அவன் {இந்திரனின் தேரோட்டியான மாதலி} என்னிடம், "ஓ! பார்த்தா, அமுதத்துக்காகத் தேவர்களுக்கும் அசுரர்களுக்குப் பெரும் போர் நடந்திருக்கிறது. ஓ! பாவமற்றவனே, நான் அதைக் (அப்போரைக்) கண்டிருக்கிறேன். சம்பரனை அழித்த போதும் பயங்கரமான போர் மூண்டது. அப்போதும் நான் குறைவில்லாமல் தேவர்கள் தலைவனுக்குத் தேரோட்டியாகப் பணி செய்திருக்கிறேன். அதே போல, விரித்திரனைக் கொன்ற போதும், குதிரைகள் என்னால் நடத்தப்பட்டன. ஓ! பாண்டவா {அர்ஜுனா}, விரோச்சனின் மகன், பலன், பிரஹராதன் மற்றும் பிறருடன் நடந்த கோரமான போர்களையும் நான் கண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட பயங்கரமான போர்களில் எல்லாம் நான் பங்குபெற்றிருக்கிறேன். ஆனால், ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, (இதற்கு முன்னால்) எப்போதும் எனது உணர்வுகளை நான் இழந்ததில்லை. பெருந்தகப்பன் அனைத்து உயிர்களின் அழிவை நிர்ணயித்துவிட்டான் என்றே நிச்சயமாக நினைக்கிறேன். அண்ட அழிவைத் தவிர வேறு எதையும் இந்தப் போர் ஏற்படுத்தாது" என்றான் {மாதலி}.
அவனது வார்த்தைகளைக் கேட்ட நான், எனது சொந்த முயற்சியால் கவலை தரும் குழப்பத்தைத் தணித்துக் கொண்டு, "தானவர்களால் பரப்பப்படும் மாயையின் பெரும் சக்தியை அழிப்பேன் என்று நான் உனக்குச் சொல்கிறேன் மாதலி. எனது கரங்களின் வலிமையையும், எனது ஆயுதங்கள் மற்றும் காண்டீவத்தின் வல்லமையையும் பார். இன்று மாயை உருவாக்கும் ஆயுதங்களால் (அதன் துணையால்), நான் இந்த ஆழ்ந்த மனச்சோர்வையும், மற்றவர்களால் பரப்பப்படும் இந்தப் பயங்கரமான மாயையும் அகற்றுவேன். ஓ! தேரோட்டியே {மாதலி}, அஞ்சாதே. உன்னை அமைதிப்படுத்திக் கொள்" என்றேன். இதைச் சொன்ன நான், ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, தேவர்களின் நன்மைக்காக, அனைத்து உயிர்களையும் வெளிப்படுத்தும் ஆயுத மாயையை ஏற்படுத்தினேன். (அவர்களது) மாயை அகன்ற போது, ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட அசுரர்களில் முதன்மையானவர்களில் சிலர், பலதரப்பட்ட மாயைகளைப் மீண்டும் பரப்பினார்கள்.
அதன்பேரில், ஒரு நேரம் (உலகம்) தெரிந்தது, மறு நேரம் இருள் அதை விழுங்கியது, ஒரு நேரம் உலகம் பார்வையில் இருந்த மறைந்தது, மறு நேரம் அது நீருக்குள் மூழ்கியது. அது பிரகாசமடைந்த போது, ரதத்தின் முன்பு அமர்ந்த மாதலி, நன்கு செலுத்தப்பட்ட குதிரைகளுடன், மயிர்க்கூச்செரியும்படி அக்களத்தில் உலவ ஆரம்பித்தான். பிறகு கடுமை நிறைந்த நிவாதகவசர்கள் என்னைத் தாக்கத் தொடங்கினார்கள். எனது வாய்ப்பைக் கண்டுபிடித்த நான், அவர்களை {தானவர்களை} யமனின் மாளிகைக்கு அனுப்பி வைக்க ஆரம்பித்தேன். பொங்கியெழும் அம்மோதலில், திட்டமிட்டு நிவாதகவசர்களை அழிக்க எண்ணினேன். திடீரென்று மாயையினால் மறைக்கப்பட்ட அந்த தானவர்களை என்னால் காண முடியவில்லை.