War began! | Vana Parva - Section 169 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
நிவாதகவசர்களோடு அர்ஜுனன் போர் புரியத் தொடங்கியது...
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, பிறகு,, நிவாதகவசர்கள் ஆயுதங்கள் தாங்கிய படி ஒரே கூட்டமாக உணர்ச்சிப் பெருக்குடன் என்னை நோக்கி விரைந்து வந்தார்கள். தேரின் பாதையைத் தடுத்து, சத்தமாகக் கர்ஜித்த அந்தப் பெரும் பலம் மிக்க ரதசாரதிகள் என்னை அனைத்து புறங்களிலும் நெருக்கி, அவர்களது கணைகளால் என்னை மூடினர். பிறகு பெரும் பராக்கிரமம் கொண்ட பிற பேய்கள் {அசுரர்கள்}, தங்கள் கணைகளாலும், தங்கள் கைகளில் இருந்த கைக்கோடரிகளையும், ஈட்டிகளையும், கோடரிகளையும் என் மீது வீசினர். இப்படி வீசப்பட்ட பெரும் பலம் வாய்ந்த கணைகளும், எண்ணற்ற கதாயுதங்களும், தண்டங்களும் இடைவிடாமல் எனது தேரில் விழுந்தபடியே இருந்தன. நிவாதகவசர்களில் பெரும்பயங்கரமான முகம் படைத்தவர்கள் விற்களையும் கூரிய ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு போருக்காக என்னை நோக்கி ஓடி வந்தார்கள். அந்த மோதலில் நேராகச் செல்லக்கூடிய பலவகையான வேகமான கணைகளை எனது காண்டீவத்தில் இருந்து அடித்து, அவர்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தேன். கல்லில் கூரேற்றப்பட்ட எனது கணைகளால் அவர்கள் திரும்பி ஓடினார்கள்.
பிறகு, மாதலியால் {இந்திரனின் தேரோட்டியால்} திறம்பட ஓட்டப்பட்ட எனது குதிரைகள், பலவிதமான அசைவுகளைக்காட்டி வாயு வேகத்துடன் இருந்தன. மாதலியால் திறம்பட வழிநடத்தப்பட்ட அவை திதியின் மகன்களை {அசுரர்களை} மிதிக்கத் தொடங்கின. மாதலியால் செயல்திறத்துடன் செலுத்தப்பட்ட அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான {பதினாயிரம்} குதிரைகள், ஏதோ சிலவே {சிறு எண்ணிக்கையிலான குதிரைகளே} இருந்தது போல எளிதாக நகரத்தொடங்கின. அவற்றின் மிதியாலும், தேர்ச்சக்கரத்தின் சடசடப்பாலும், எனது கணை மழையாலும், தானவர்கள் நூற்றுக்கணக்கில் விழ ஆரம்பித்தனர். விற்களுடன் போர்க்கோலத்தில் இருந்த மற்றவர்கள் உயிரிழந்து, தங்கள் தேரோட்டிகள் கொல்லப்பட்டு, குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டனர். பிறகு, அனைத்து பக்கங்களையும், திசைகளையும் மூடியபடி, தாக்குவதில் திறம் படைத்த அனைவரும் (அனைத்து தானவர்களும்) பலதரப்பட்ட ஆயுதங்களுடன் வந்ததைக் கண்டு எனது மனது வருத்தமடைந்தது. (இச்சமயத்தில்) கடுமை நிறைந்த குதிரைகளைத் திறம்பட நடத்திய மாதலியின் அற்புத பராக்கிரமத்தை நான் சாட்சியாகக் கண்டேன்.
பிறகு, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த மோதலில் வித்தியாசமான வேகமான ஆயுதங்களால் நான் ஆயுதம்தாங்கிய நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கானவர்களைத் (பேய்களை [அசுரர்களை]} துளைத்தேன். ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அனைத்து முயற்சிகளையும் முனைந்து கொண்டு களத்தில் திரிந்த என்னைக் கண்ட சக்ரனின் வீரத் தேரோட்டி {மாதலி} பெரும் திருப்தி கொண்டான். அந்தக் குதிரைகளாலும், தேராலும் ஒடுக்கப்பட்ட ஒரு சிலர் (அவர்கள் [அசுரர்கள்]} நிர்மூலமடைந்தனர்; பிறர் மோதலில் இருந்து விலகினர்; அதே நேரத்தில் கணைகளால் துன்புற்ற (சிலர்) நிவாடகவசர்கள், களத்தில் எங்களுக்குச் சவால் விட்டு பெரும் பலமிக்கக் கணைகளை மழையாகப் பொழிந்த படி எதிர்த்து வந்தனர். அதன்பேரில், மந்திரங்களால் ஈர்க்கப்பட்டுப் பிரம்ம ஆயுதங்களோடு தொடர்புடைய நான் அடித்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வேகமான ஆயுதங்கள் அவர்களை எரிக்கத் தொடங்கின. என்னால் கடுமையாக ஒடுக்கப்பட்ட அந்தப் பலமிக்க அசுரர்கள் கோபம் மூண்டு ஒன்றாகச் சேர்ந்து கதாயுதங்களையும்ம், கணைகளையும் வாட்களையும் என் மீது பொழிந்தனர்.
பிறகு, ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, தேவர்கள் தலைவனுக்குப் {இந்திரனுக்குப்} பிடித்த ஆயுதமான மாகவன் என்ற பெயர் கொண்ட கடும் சக்தி படைத்த தலைமையான ஆயுதத்தை எடுத்து, அந்த ஆயுதத்தின் சக்தியைக் கொண்டு, அவர்களால் அடிக்கப்பட்ட திரிசூலங்கள், வாட்கள், மற்றும் தோமரங்களை ஆயிரம் துண்டுகளாக அறுத்தெறிந்தேன். பிறகு கோபத்தால் அவர்கள் கரங்களையும் அறுத்து ஒவ்வொருவர் மீதும் பத்து கணைகளைத் துளைத்தேன். அந்தப் போர்க்களத்தில் காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட கணைகள் அத்தனையும் கருவண்டுகளின் வரிசைகள் போலத் தெரிந்ததைக் கண்டு மாதலி ரசித்தான். அவர்களும் என் மீது கணைகளைப் பொழிந்தனர். ஆனால் நான் அந்தப் பலமிக்கக் கணைகளை எனது கணைகளால் அறுத்தேன்.
பிறகு இப்படி அடிக்கப்பட்ட நிவாதகவசர்கள் மீண்டும் அனைத்துப் புறங்களில் இருந்தும் பலம் மிக்கக் கணைகளால் என்னை மறைத்தனர். நான் அந்தக் கணைகளின் சக்தியை எனது வேகமான அற்புதமான எரிஆயுதங்களால் சமன் செய்து, கலங்கடித்து, அவர்களை ஆயிரக்கணக்கில் துளைத்தெடுத்தேன். அவர்களது கிழிந்த உடலில் இருந்த இரத்தம், மலை முகடுகளில் இருந்து ஓடும் மழைக்கால நீர் போல வழியத் தொடங்கியது. இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்று நேராகச் செல்லும் எனது வேகமான கணைகளால் காயமடைந்த அவர்கள் பெரிதும் துன்பமடைந்தனர். அவர்களது உடல்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் துளைக்கப்பட்டிருந்தனர். அவர்களது கரங்களின் சக்தியும் குறைந்து போயிற்று. பிறகு அந்த நிவாதகவசர்கள் மாயைக் கொண்டு (மாயையின் உதவி கொண்டு) என்னுடன் மோதினர்.