Arjuna returned to Indraloka! | Vana Parva - Section 171 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
நிவாதகவசர்களைக் கொன்ற பிறகு, அர்ஜுனன் இந்திரலோகம் திரும்புதல்....
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "மாயையின் உதவியுடன் கண்ணுக்குப்புலப்படாமலேயே தைத்தியர்கள் போரிடத்தொடங்கினர். கண்ணுக்குப் புலப்படும் ஆயுதங்களின் சக்தியைப் பயன்படுத்தி நானும் அவர்களுடன் போரிட்டேன். காண்டீவத்தில் இருந்து புறப்பட்ட கணைகள், பல்வேறு இடங்களில் இருந்த அவர்களின் தலைகளை அறுக்கத் தொடங்கின. இப்படி அந்த மோதலில் நான் தாக்கிய போது, திடீரெனத் தங்கள் மாயையை விலக்கிய நிவாதகவசர்கள், விரைவாகத் தங்கள் நகரத்திற்குள் நுழைந்தனர். இப்படி அந்தத் தைத்தியர்கள் ஓடி, அனைத்தும் தெரியத் தொடங்கிய போது, நூற்றுக்கணக்கானவர்களும் ஆயிரக்கணக்கானவர்களும் கொல்லப்பட்டுக் கிடப்பதை நான் கண்டேன். அங்கே நொறுக்கப்பட்ட ஆயுதங்களையும், ஆபரணங்களையும், உறுப்புகளையும், கவசங்களையும் நூற்றுக்கணக்காக நான் கண்டேன். குதிரைகள் ஓரிடத்தில் இருந்து மறு இடம் செல்வதற்கு இடமே கிடைக்கவில்லை {அப்படி அந்த இடம் நிறைந்திருந்தது}. ஆகையால் ஒவ்வொரு குதிப்புக்கும் அவை ஆகாயத்தில் செல்வது போல இருந்தது.
கண்களுக்குப் புலப்படாமலேயே இருந்த நிவாதகவசர்கள் ஆகாயத்தைப் பாறைக்குவியல்களால் மறைத்தார்கள். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, பிற பயங்கரமான தானவர்கள், பூமியின் குடலுக்குள் நுழைந்து கொண்டு, குதிரைகளின் கால்களையும், தேரின் சக்கரங்களையும் பற்றினர். நான் போரிட்டுக் கொண்டிருந்த போதே, அவர்கள், பாறைகளால் எனது குதிரைகளைக் கடுமையாகக் குழப்பி, (எனது) தேரோடு சேர்த்து என்னையும் தாக்கினர். ஏற்கனவே விழுந்திருந்த பாறைகளாலும், விழுந்த கொண்டிருப்பவைகளாலும், நான் இருந்த அந்த இடம் பார்ப்பதற்கு ஒரு மலைக்குகையைப் போலக் காட்சியளித்தது. பாறைகள் என்னை முழுவதும் மூடின, குதிரைகளும் கடுமையாக நசுக்கப்பட்டன. இதனால் நான் கடுமையாகத் துயருற்றேன். இதை மாதலி {இந்திரனின் தேரோட்டி} கவனித்தான். பயந்திருக்கும் என்னைக் கண்ட அவன் {மாதலி}, என்னிடம், "ஓ! அர்ஜுனா, அர்ஜுனா! நீ அஞ்சாதே. ஓ! மனிதர்களின் தலைவா {அர்ஜுனா}, வஜ்ராயுதத்தை ஏவு" என்றான்.
அவனது வார்த்தைகளைக் கேட்ட நான், தேவர்களின் மன்னனுக்குப் {இந்திரனுக்குப்} பிடித்தமான ஆயுதமான அந்தப் பயங்கரமான வஜ்ராயுதத்தைச் செலுத்தினேன். காண்டீவத்திற்கு மந்திரங்களை ஊட்டிய நான், அந்தப் பாறைகள் இருந்த இடத்தைக் குறி வைத்து, இடி போலத் தாக்குகின்ற கூரான இரும்புக் கணைகளை அடித்தேன். வஜ்ரத்தினால் ஏவப்பட்ட அந்த மிகக்கடுமையான கணைகள் அங்கே இருந்த அனைத்து மாயைகளுக்குள்ளும் புகுந்து, நிவாதகவசர்களுக்கு மத்தியில் சென்றது. இடியின் சீற்றத்தால் {அந்த ஆயுதங்களால்} கொல்லப்பட்ட மலை போன்ற தானவர்கள், பூமியில் மொத்தமாகக் குவியலாக விழுந்தனர். தேரின் குதிரைகளைப் பூமிக்கடியில் கொண்டு போன தானவர்களுக்கு மத்தியில் நுழைந்த அக்கணைகள், அவர்களை யமனின் மாளிகைக்கு அனுப்பி வைத்தன. கொல்லப்பட்ட அல்லது நிலைகுலையச்செய்யப்பட்ட நிவாதகவசர்களால் அந்தப் பகுதியே முழுவதுமாக நிரம்பியிருந்தது. மலைகளைப் போன்ற அவர்கள் பாறைகளைப் போலச் சிதறிக் கிடந்தனர். குதிரைகளுக்கோ, தேருக்கோ, மாதலிக்கோ அல்லது எனக்கோ எந்தக் காயமும் ஏற்படாதிருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
பிறகு ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, புன்னகைத்தவாறே மாதலி {இந்திரனின் தேரோட்டி} என்னிடம், "ஓ! அர்ஜுனா, தேவர்களில் கூட உன்னிடம் காணப்படும் பராக்கிரமம் காணப்படவில்லை" என்றான். அந்தத் தானவப் படை அழிக்கப்பட்ட போது, அந்நகரத்தில் இருந்த {அசுரப்} பெண்கள் அனைவரும் இலையுதிர் கால நாரைகள் போல {சாரஸப் பறவைகள் போல} ஒப்பாரி வைத்தனர். பிறகு, தேரின் சடசடப்பொலி நிவாதகவசர்களின் மனைவியருக்கு அச்சமூட்டும்படி நான் மாதலியுடன் அந்த நகரத்திற்குள் நுழைந்தேன். அப்போது, மயில்களைப் போல {நிறத்தில்} இருந்த அந்தப் பத்தாயிரம் குதிரைகளையும், சூரியனைப் பிரதிபலித்த அந்தத் தேரையும் கண்ட அப்பெண்கள் கூட்டமாக ஓடினர். {அப்படி அவர்கள் ஓடும்போது} பயந்திருந்த அம்மங்கையரின் ஆபரணங்களில் (அது கீழே விழும்போது) மலைகளில் இருந்து விழும் பாறைகளைப் (பாறைகளின் ஒலி) போல ஒலி கேட்டது. (ஒரே நீளத்தில்), பீதியடைந்திருந்த அந்தத் தைத்தியர்களின் மனைவியர், எண்ணிலடங்கா ரத்தினங்களுடன் பலவண்ணங்களில் மின்னிய தங்கள் தங்கள் பொன் மாளிகைக்குள் நுழைந்தனர்.
தேவர்களின் நகரைக் காட்டிலும் மேன்மையான அந்த அற்புதமான நகரைக் கண்ட நான், மாதலியிடம், "தேவர்கள் ஏன் இது போன்று (இடத்தில்) வசிக்கவில்லை?. நிச்சயமாக இது புரந்தரனின் {இந்திரனின்} நகரத்தை விட மேன்மையாகத் தோன்றுகிறது" என்றேன். அதற்கு மாதலி, "ஓ பார்த்தா {அர்ஜுனா}, பழங்காலத்தில் இது எங்கள் தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} நகரமாகவே இருந்தது. பிறகு நிவாதகவசர்களால் தேவர்கள் இங்கிருந்து விரட்டப்பட்டனர். கடும் தவங்களை இயற்றிய அவர்கள் பெருந்தகப்பனைத் {பிரம்மனை} திருப்தி செய்து, 'தாங்கள் இங்கே வசிக்க வேண்டும் என்றும், தேவர்களுடன் போர் ஏற்படும்போது அபாயங்களில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும்' என்றும் வரங்கள் கேட்டனர் (கேட்டு அதை அடைந்தனர்). பிறகு சக்ரன் {இந்திரன்}, சுயம்புவான தலைவனிடம் {பிரம்மனிடம்} "ஓ! தலைவா, எங்கள் நன்மையில் விருப்பத்துடன், சரியானதைச் செய்யும்" என்றான். அதன்பேரில், ஓ! பாரதா {அர்ஜுனா}, இவ்விஷயத்தில் அந்தத் தலைவன்{பிரம்மன்} (இந்திரனிடம்), "ஓ! எதிர்களைக் கொல்பவனே {இந்திரனே}, வேறு உடல் {அர்ஜுனன் என்ற உடல்} கொண்டு, நீயும் (தானவர்களை அழிப்பாய்) செய்வாய்" என்று கட்டளையிட்டான். பிறகு, அவர்களைக் கொல்வதற்காகவே, சக்ரன் {இந்திரன்}, உன்னிடம் அந்த ஆயுதங்களைக் கொடுத்தான். உன்னால் கொல்லப்பட்ட இவர்களைத் தேவர்களால் கொல்ல இயலவில்லை. ஓ! பாரதா {அர்ஜுனா}, காலத்தின் நிறைவால், அவர்களை அழிப்பதற்காக நீ இங்கு வந்தாய். அதைச் செய்தும் முடித்தாய். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, இந்தப் பேய்கள் {அசுரர்கள்} கொல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, மகேந்திரன் {இந்திரன்}, உன்னிடம் இந்த ஆயுதங்களில் உள்ள அற்புதமான தலைமையான சக்திகளை வெளிப்படுத்தினான்" என்றான்.
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "தானவர்களை அழித்து, அந்நகரத்தை வீழ்த்திய பிறகு நான் மாதலியுடன் {இந்திரனின் தேரோட்டியுடன்} சேர்ந்து மீண்டும் தேவர்கள் வசிப்பிடம் சென்றேன்"