Narada prevents Arjuna! | Vana Parva - Section 174 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தான் பெற்ற தெய்வீக ஆயுதங்களை அர்ஜுனன் யுதிஷ்டிரனுக்குக் காட்டியது; ஆயுதங்களின் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உலகம் நடுங்கியது; இந்திரனால் அனுப்பப்பட்ட நாரதர் அர்ஜுனனைத் தடுத்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இரவு கடந்ததும் நீதிமானான யுதிஷ்டிரன் எழுந்து, தனது தம்பிகளுடன் சேர்ந்து தேவையான கடமைகளைச் செய்தான். பிறகு தனது தாயின் {குந்தியின்} மகிழ்வுக்குக் காரணமான அர்ஜுனனிடம் அவன் {யுதிஷ்டிரன்}, "ஓ! கௌந்தேயா {அர்ஜுனா}, தானவர்களை எவற்றைக் கொண்டு வீழ்த்தினாயோ அவ்வாயுதங்களைக் (எனக்கு) காட்டு" என்றான்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதன்பேரில், ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டுவின் மகனான அதீத தூய்மை பயிலும் பெரும் பலமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேவர்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களைக் காட்டினான். மலைகளைத் துருவமாகவும் {pole} தரையை அச்சாகவும் {axle}, அடர்த்தியான மூங்கில் மரங்களை {துருவத்தையும் அச்சையும் இணைக்கும்} முப்பட்டையான மரமாகவும் {socket pole} கொண்ட பூமியில் தனது தேரில் அமர்ந்திருப்பது போல, பிரகாசமிக்க தெய்வீக கவசத்துடனும் காந்தியுடனும் அமர்ந்திருந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்துத் துவங்கும் பொருட்டுத் தனது காண்டீவத்தையும், தனக்குத் தேவர்களால் கொடுக்கப்பட்ட சங்கையும் எடுத்தான்.
அந்தத் தெய்வீக ஆயுதங்கள் பொருத்தப்பட்டபோது, (அர்ஜுனனின்) பாதங்களால் ஒடுக்கப்பட்ட பூமி, (தன் மேலிருந்த) மரங்களுடன் சேர்ந்து நடுங்கத் தொடங்கினாள்; நதிகளும், கடலும் கலங்கித் தத்தளித்தன. (மலைப்) பாறைகள் வெடித்தன; காற்றும் அமைதியடைந்தது (வீசவில்லை). சூரியன் பிரகாசிக்கவில்லை; நெருப்புச் சுடர்விடவில்லை; இறுபிறப்பாளர்களின் வேதங்கள் பிரகாசிக்கவில்லை {அந்தணர்களுக்கு வேதங்கள் நினைவுக்கு வரவில்லை}. மேலும், ஓ! ஜனமேஜயா, இதனால் துன்பப்பட்ட பூமிக்கு அடியில் வசிக்கும் உயிரினங்கள், நடுக்கத்துடனும் உருக்குலைந்த முகத்துடனும் மேலெழும்பி கரங்கள் கூப்பிபடி பாண்டவர்களைச் சூழ்ந்து கொண்டன. அந்த ஆயுதங்களின் வெப்பத்தால் எரிக்கப்பட்ட அவை, தனஞ்சயனைத் (தங்கள் உயிருக்காகத்} தஞ்சம் அடைந்தன.
பிறகு பிரம்ம முனிவர்களும், சித்தர்களும், பெருமுனிவர்களும், அசையும் உயிரினங்கள் அனைத்தும் (காட்சிக்கு) வந்தன. தேவ முனிவர்களில் முதன்மையானவர்களும், தேவர்களும், யக்ஷர்களும், ராட்சசர்களும், கந்தர்வர்களும், இறகு படைத்த குழுக்களும் {பறவைகளும்}, (பிற) விண்ணதிகாரிகளும் {பறவைகளும்} (காட்சியில்) வந்தன. பெருந்தகப்பனும் {பிரம்மாவும்}, அனைத்து லோகபாலர்களும், தெய்வீகமான மகாதேவனும் தங்களைத் தொடர்பவர்களுடன் அங்கே வந்தனர். பிறகு ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, புவிசாரா பலவண்ண மலர்களைச் சுமந்து வந்த வாயு (காற்று தேவன்), அந்தப் பாண்டவனைச் {அர்ஜுனனைச்} சுற்றி அவற்றைத் தூவிச் {சென்றான்} விழுந்தான். தேவர்களால் அனுப்பப்பட்ட கந்தர்வர்கள் பல்வேறு பாடல்களைப் பாடினர். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அப்சரக்கூட்டங்களும் (அங்கே) ஆடின.
அப்படிப்பட்ட வேளையில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, தேவர்களால் அனுப்பப்பட்ட நாரதர் அங்கே வந்து, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இனிய வார்த்தைகளால், "அர்ஜுனா, ஓ! அர்ஜுனா, தெய்வீக ஆயுதங்களைத் தொடுக்காதே. (தகுந்த) ஒரு இலக்கும் இல்லாமல் இவற்றைப் பிரயோகம் செய்யக்கூடாது. இலக்கு என்று ஒன்று (தற்போது) இருந்தாலும், ஆபத்தில்லா சூழ்நிலையில் இவற்றைப் பிரயோகம் செய்யக்கூடாது. ஓ! குருக்களின் மகனே {அர்ஜுனா}, (தகுந்த நிகழ்வில்லாமல்) பிரயோகிப்படும் இந்த ஆயுதங்கள் பெரும் தீமையைச் செய்யும். மேலும், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உனக்கு உரைக்கப்பட்டது போல இந்தப் பலமிக்க ஆயுதங்களை உரியமுறையில் வைத்திருந்தால், சந்தேகமில்லாமல் உனது பலமும் மகிழ்ச்சியும் பெருக அது வழிவகுக்கும். இவற்றை உரிய முறையில் வைக்கவில்லையென்றால், ஓ! பாண்டவா {அர்ஜுனா}, இவை மூவுலகங்களையும் அழிக்கவல்ல கருவிகளாக மாறும். எனவே, நீ இதுபோல மீண்டும் செயல்படாதே. ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, பார்த்தன் {அர்ஜுனன்} போர்க்களத்தில் உனது எதிரிகளை அடிக்கும்போது, நீயும் இந்த ஆயுதங்களைக் காண்பாய்" என்றார் {நாரதர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இப்படிப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தடுத்த தேவர்களும் பிறரும் அங்கிருந்து தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினர். ஓ! கௌரவா {ஜனமேஜயா}, அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, அதே வனத்தில் திரௌபதியுடன் கூடிய பாண்டவர்கள் மகிழ்ச்சியாக வசிக்க ஆரம்பித்தனர்.