Bhima caught by a snake! | Vana Parva - Section 177 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பீமன் வனத்தில் வேட்டையாடித் திரிகையில் ஒரு பாம்பிடம் அகப்பட்டது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, பெரும் பராக்கிரமும், பத்தாயிரம் {10,000} யானைகளின் பலமும் கொண்ட பீமன் அந்தப் பாம்பினால் (அதைக் கண்டு) எப்படிப் பீதியடைந்தான்? அந்த எதிரிகளைக் கொல்பவன், (குபேரனின்) தாமரைத் தடாகத்தில் யக்ஷர்களையும், ராட்சசர்களையும் கொன்றவன், வளங்களை அளிக்கும் புலஸ்தியரின் மகனை {குபேரனை} கர்வத்தோடு ஒற்றைக்கு ஒற்றைச் சண்டைக்கு அழைத்தவன், அப்படிப்பட்ட அவன் {பீமன்} பயத்தால் கலங்கி திகைத்துப் போனான் என்கிறீரே! நான் இதை (உம்மிடமிருந்து) கேட்க விரும்புகிறேன்; எனது ஆவல் பெரிதாக இருக்கிறது" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {ஜனமேஜயனே}, மன்னன் விருஷபர்வனின் ஆசிரமத்தை அடைந்த அந்தப் பயங்கரப் போர்வீரர்கள் பலதரப்பட்ட அற்புதமான வனங்களில் வாழ்ந்து வந்த போது, கையில் வில்லுடனும், கத்தியுடனும் இன்பமாக உலவி வந்த விருகோதரன் {பீமன்}, தேவர்களும் கந்தர்வர்களும் வந்து செல்லும் ஒரு அழகிய கானகத்தைக் கண்டான். அதன் பிறகு அவன் {பீமன்}, தேவ முனிவர்களும், சித்தர்களும் வந்து போவதும், அப்சரசு கூட்டங்கள் வாழும் இடமுமான இமய மலையின் (சில) அழகான இடங்களைக் கண்டான். அங்கே சகோரங்களும், சக்கரவாகங்களும், ஜீவஜீவங்களும், குயில்களும், பிருங்கராஜங்களும் ஆங்காங்கே (தங்கள் கானத்தை) ஒலித்தன. அங்கே அடர்ந்த நிழல் கொண்ட மரங்கள், எப்போதும் பூத்துக் குலுங்கும் மலர்களுடனும் கனிகளுடனும் மெதுவான பனியின் ஸ்பரிசத்துடன், கண்ணுக்கும் மனதிற்கும் இனிமையை அளித்தன.
அவன் {பீமன்} அங்கே பளிங்கு போல இருந்த மலையருவிகளையும், வெண்பனி நிறம் கொண்ட பத்தாயிரம் வாத்துகளையும், அன்னங்களையும், மேகங்களைச் சிறைபிடிக்கும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகளையும், இடையிடையே மஞ்கள் நிற சந்தன மரங்கள், துங்கா, காளீயக மரங்கள் அடர்ந்த காடுகளையும் கண்டான். அந்தப் பெரும்பலமிக்கவன் {பீமன்} மேடு பள்ளமில்லாத, தண்ணீரில்லாத பாலை மலைவெளிகளில் நஞ்சற்ற சுத்தமான அம்புகளால் வேட்டை விளையாட்டினை விளையாடித் திரிந்தான். அந்தக் கானகத்தில், நூறு {100} யானைகளின் பலத்தைக் கொண்ட, புகழும் பலமும் மிக்கப் பீமசேனன் (பல) பெரிய காட்டுப் பன்றிகளைத் தனது (கரத்தின்) சக்தியால் கொன்றான். கடும் பராக்கிரமும், பெரும் பலமும், சிங்கம் மற்றும் புலியைப் போன்ற சக்தியும், நூறு மனிதர்களைத் தடுக்கும் ஆற்றலும், நீண்ட கரங்களும், நூறு யானைகளின் பலமும் கொண்ட அவன் {பீமன்}, பல மான்களையும், காட்டுப் பன்றிகளையும், எருமைகளையும் கொன்றான். அந்தக் கானகத்தில் ஆங்காங்கே மரங்களை வேருடன் பிடுங்கி வேகத்துடன் அவற்றை ஒடித்தான். அச்சத்தம் அக்கானகம் முழுதும், பூமி முழுதும் எதிரொலித்தது. மலைகளின் சிகரங்களை நொறுக்கியவாறும் தனது கர்ஜனையாலும், கைத்தட்டலாலும், போர்க்குரலாலும், புஜங்களைத் தட்டியும் பூமியை எதிரொலிக்கச் செய்த சிதைவற்றவனும், சதாகர்வியும், பயமற்றவனுமான பீமசேனன், மீண்டும் மீண்டும் அக்கானகத்தில் குதித்தபடி சென்றான்.
பீமசேனனின் கர்ஜனையைக் கேட்ட பலமிக்கச் சிங்கங்களும், பெரும் பலம் மிக்க யானைகளும் அச்சத்துடன் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வந்தன. அதே கானகத்தில் அச்சமற்று உலவி, ஓர் கானக வாசியைப் போல {வேடுவனைப் போல}, மனிதர்களில் மிகுந்த வீரமிக்கவன் வேட்டை விளையாட்டினை விளையாடிக் கொண்டு அந்தக் கானகத்தில் நடந்தான். வலிமையும், பராக்கிரமும் கொண்ட அவன் {பீமன்}, விசித்திரமான சத்தங்களை {strange whoopos} எழுப்பி, அனைத்து உயிர்களுக்கும் திகிலூட்டியபடி, அந்தப் பரந்தக் காட்டில் ஊடுருவினான். திகிலடைந்த பாம்புகள் குகைகளுக்குள் {தங்களை} மறைத்துக் கொண்டன. ஆனால் தாமதமில்லாமல் அவைகளை முந்தியும், மெதுவாக அவற்றைப் பின்தொடர்ந்து சென்றான்.
பின்னர், தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வலிமைமிக்கப் பீமசேனன், மலைக்குகைகள் ஒன்றில் வாழும், அந்த (முழு) குகையையும் தனது பருத்த உடலால் மூடிக்கொண்ட, தனக்கு மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கிய {அதைக் கண்ட அச்சத்தினால்} ஒரு பாம்பைக் கண்டான். மலையைப் போன்ற பெரும் உடலும், அசுரத்தனமான பலமும், உடல் முழுதும் புள்ளிகளும் கொண்டு மஞ்சளைப் போன்ற {மஞ்சள்} நிறத்தில் இருந்து. அதன் வாய், நான்கு பற்களுடன் குகையின் உருவத்தில் தாமிர நிறத்தில் இருந்தது. சுடர்விடும் கண்களுடன் அது தொடர்ந்து தனது கடைவாயை நக்கிக் கொண்டிருந்தது. அசையும் உயிர்கள் அனைத்தையும் பீதியடைய வைக்கும் அது {அந்தப் பாம்பு}, அழிப்பவனான யமனின் உருவம் போலத் தெரிந்தது. அது விடும் மூச்சிரைப்பு ஒலியால் {ஹிஸ் என்ற ஒலி - hissing noise} அதட்டுவதைப் போல அது கிடந்தது.
பீமன் தனக்கு மிக அருகில் வந்ததைக் கண்ட ஆட்டை விழுங்கும் கோபம் கொண்ட அந்தப் பாம்பு, பெரும் கோபத்துடனும் வன்முறையுடனும் தனது பிடிக்குள் பீமசேனனைப் பற்றியது. பிறகு, அந்தப் பாம்பு பெற்றிருந்த வரத்தால், அதன் பிடிக்குள் இருந்த பீமசேனன், உடனே தனது சுய நினைவை இழந்தான். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பீமசேனன் கரங்களின் பலம் பத்தாயிரம் யானைகளின் பலத்திற்குச் சமமானது. ஆனால், பெரும் பராக்கிரமம் கொண்ட அந்தப் பீமன் அந்தப் பாம்பினால் வீழ்த்தப்பட்டு, மெதுவாக நடுங்கி அசைவதற்கு சக்தியற்று எதுவும் முயலாமல் இருந்தான். பலம் கொண்ட கரங்களும், சிம்மம் போன்ற தோள்களும் கொண்ட அவன் {பீமன்}, பத்தாயிரம் {10000} யானைகளின் பலத்தைப் பெற்றிருந்தாலும், அந்தப் பாம்பினால் பிடிக்கப்பட்டு, அது பெற்றிருந்த வரத்தின் காரணமாக வீழ்த்தப்பட்டு, தனது அனைத்து பலத்தையும் இழந்தான். அவன் தப்பிப்பதற்காகக் கடுமையாகப் போராடினான். ஆனால், எவ்விதத்தினாலும் {அந்தப் பாம்பைத்} திருப்பி அடிப்பதற்கு சக்தியுள்ளவன் ஆவதில் அவன் வெற்றிபெறவில்லை."