Who is a Brahmana? | Vana Parva - Section 179 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பாம்பான நகுஷனின் கேள்விகளுக்குப் பதிலளித்த யுதிஷ்டிரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார் "தனது அன்புக்குரிய தம்பி {பீமன்}, அந்தப் பாம்பின் சுருளுக்குள் அகப்பட்டிருப்பதைக் கண்ட யுதிஷ்டிரன், "ஓ! குந்தியின் மகனே {பீமா}, உனக்கு இந்தத் தீயூழ் {துரதிர்ஷ்டம்} எவ்வாறு வந்தது? மலையைப் போன்ற உடல் படைத்த இந்தப் பாம்புகளில் சிறந்தவன் யார்?" என்று கேட்டான். அதற்குப் பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வழிபடத்தகுந்தவரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும்பலம்வாய்ந்தவன் என்னைத் தனது உணவுக்காகப் பிடித்திருக்கிறான். பாம்பின் உருவில் வாழும் இவன் அரச முனியான நகுஷனாவான்" என்றான். யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! நீண்ட ஆயுள் கொண்டவனே {நகுஷனே}, அளவிடமுடியாத பராக்கிரமம் கொண்ட எனது தம்பியை {பீமனை} விடு; நாங்கள் உனது பசிக்கு வேறு உணவு தருகிறோம்" என்றான். அதற்கு அந்தப் பாம்பு, "எனது வாய்க்கருகில் வந்த இந்த மன்னனின் மகன் {பீமன்} இன்று எனக்கு உணவு ஆவான். நீ போகலாம். நீ இங்கு நிற்கலாகாது. (அப்படி நீ நின்றாயானால்) நீ எனக்கு நாளைய உணவாவாய். ஓ! வலுத்த கரம் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, எனது இடத்திற்கு வருவபன் எனது உணவாவான் என்பது எனக்கு விதிக்கிப்பட்டிருக்கிறது. நீயும் எனது இடத்திற்குள்ளேயே நிற்கிறாய். நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று எனக்கு உணவாக உனது தம்பி கிடைத்திருக்கிறான். நான் அவனை விடமாட்டேன். வேறு எந்த உணவையும் நான் விரும்பவில்லை" என்றான் {நகுஷன்}.
அதற்கு யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! பாம்பே, நீ தேவனாகவோ, அசுரனாகவோ, அரக்கனாகவோ இருப்பின் என்னிடம் உண்மையைக் கூறு. நான் யுதிஷ்டிரன் கேட்கிறேன். ஓ! பாம்பே, பீமசேனன் உன்னால் எதற்குப் பிடிக்கப்பட்டான்? எதை அடைந்தால், அல்லது எதை அறிந்தால் நீ திருப்தியடைவாய். ஓ! பாம்பே, நான் உனக்கு என்ன உணவைத் தர வேண்டும்? எதன் காரணமாக நீ அவனை விடுவிப்பாய்" என்று கேட்டான். அதற்கு அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாவமற்றவனே, நான் ஆயுவின் மகனான உனது மூதாதையும், சந்திரனில் இருந்து ஐந்தாமவனும் ஆவேன். நகுஷன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட மன்னன் நான். வேள்விகள், தவம், வேத கல்வி, சுயக்கட்டுப்பாடு, பராக்கிரமம் ஆகியவற்றால் நான் மூன்று உலகங்களின் ஆட்சியுரிமையை அடைந்தேன். நான் அப்படி ஒரு நிலையில் இருந்த போது, அகங்காரம் என்னை ஆட்கொண்டது. எனது அரியாசனத்தைச் சுமப்பதில் ஆயிரக்கணக்கான அந்தணர்கள் ஈடுபட்டார்கள். மேலாதிக்கப் போதையில் இருந்த நான் அந்தணர்களை அவமதித்தேன். ஓ! பூமியின் தலைவன், அகஸ்தியர் என்னை இந்த நிலைக்குத் தாழ்த்தினார். இருப்பினும், ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, இந்த நாள் வரை {பழைய பிறவியைக் குறித்த} எனது ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர் ஆன்ம அகஸ்தியரின் அருளால், நாளின் ஆறாவது பாகத்தில், நான் உனது தம்பியை {பீமனை} எனது உணவாக அடைந்தேன். நான் அவனை விடவும் மாட்டேன், வேறு உணவை நான் விரும்பவும் மாட்டேன். ஆனால், இன்று நீ என்னால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்தாயானால் நான் விருகோதரனை {பீமனை} விடுவிப்பேன்" என்றான் {நகுஷன்}.
அதற்கு யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! பாம்பே {நகுஷனே}, நீ உனது விருப்பப்படி கேள்! என்னால் முடிந்தால், நான் உன்னைத் திருப்திப்படுத்தும் நோக்கில் உனது கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன். அந்தணன் அறிய வேண்டிய அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய். ஆகையால், ஓ! பாம்புகளின் மன்னா {நகுஷனே}, (நீ) கேட்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன்" என்றான்.
அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, எவன் பிராமணன்? எது அறியப்பட வேண்டியது? என்பதைச் சொல். உனது பேச்சால் நீ மிகுந்த புத்திசாலி என்பதை உணர்கிறேன்" என்றது.
யுதிஷ்டிரன் {பாம்புருவில் இருந்த நகுஷனிடம்}, "ஓ! பாம்புகளில் முதன்மையானவனே {நகுஷனே}, எவனொருவனில் உண்மையும், கொடையும், மன்னிக்கும் குணமும் {(forgivness) பொறுமையும்}, நன்னடத்தையும், இரக்கமும், தனது வகைக்குரிய சடங்குகளை நோற்றலும் {தவம்}, கருணையும் காணப்படுகின்றனவோ அவனே பிராமணனென்று கருதப்படுவான் என்று ஞானம் கொண்டவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். ஓ! பாம்பே {நகுஷனே}, எதை அடைந்தால் உயிரினங்கள் துயரால் பாதிக்கப்படாதோ, எதில் மகிழ்ச்சியோ துயரமோ இல்லையோ அந்த உயர்ந்த பிரம்மமே அறியப்பட வேண்டியது. இதில் உனது கருத்து என்ன?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்} "ஓ! யுதிஷ்டிரா, உண்மை, கொடை, மன்னிக்கும் குணம், இரக்கம், அருளைடைமை, அன்பு, வேதம் ஆகியன நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} நன்மையே செய்யும்.1 அறம் சம்பந்தப்பட்டவற்றில் இவை {இக்குணங்கள்} அதிகாரமிக்கவை. அது உண்மையே. இவை சூத்திரர்களிடமும் காணப்படுகின்றனவே. அறியப்பட வேண்டியது குறித்ததில், மகிழ்ச்சி, துயரம் என இரண்டும் அற்ற எந்தப் பொருளையும் நான் காணவில்லை" என்றான்.
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "சூத்திரரிடம் இருக்கும் குணங்கள் பிராமணரிடம் இருப்பதில்லை; அதே போல் பிராமணர்களிடம் இருப்பவை சூத்திரரிடம் இருப்பதில்லை. ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்லன். அதே போல ஒரு பிராமணன் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்லன். எவனிடம் அத்தகு குணங்கள் இருக்கின்றனவோ அவன் பிராமணன் என்று ஞானமுள்ளோர் சொல்லியிருக்கின்றனர். அறியத்தக்கது இல்லை என்றும், மகிழ்ச்சி துயரமற்ற எந்தப் பொருளும் இல்லை என்றும் நீ சொல்கிறாய். அது உன் எண்ணம். எப்படிக் குளிர்ந்த பொருளில் வெப்பம் {சூடு} இல்லையோ, சூடுள்ள பொருளில் குளிரில்லையோ அவ்வாறே மகிழ்ச்சியுள்ள பொருளில் துக்கமும், துக்கமுள்ள பொருளில் மகிழ்ச்சியும் இருக்காது. இவ்வாறாக மகிழ்ச்சி மற்றும் துயரங்களால் விடுபட்ட (ஆனந்தமயமான) இடம் ஓரிடத்தில் இருக்கிறது. இது என் எண்ணம். (நான் சொன்னவாறு) அறியத்தக்க பொருள் (என்று நான் உறுதி சொன்னது) எதுவும் இல்லை என்று நீ உறுதி கூறுகிறாய். இரண்டும் (மகிழ்ச்சியும், துயரமும்) அற்ற எந்தப் பொருளும் இல்லை என்பது உனது கருத்து. ஓ! பாம்பே, (அவை) இரண்டும் இல்லாத எதுவும் இல்லைதான். ஆனால் குளிரில் வெப்பம் இருப்பதில்லை. அதே போல வெப்பத்தில் குளிர் இருப்பதில்லை. ஆகையால், இரண்டும் (மகிழ்ச்சியும் துயரமும்) இல்லாத ஒரு பொருள் இருக்க முடியாதா?" என்றான்.
பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, நீ ஒருவனை அவனது குணத்தால் பிராமணன் என்று உணர்ந்தாயானால், ஓ! நீண்ட ஆயுள் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, நடத்தை என்பது அரங்கத்திற்கு வராதவரை சாதி வேறுபாடு என்பது வீணாகிவிடுமே" என்றான் {நகுஷன்}.
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "மனித சமுதாயத்தில், ஓ! பலமும், புத்திகூர்மையும் கொண்ட பாம்பே {நகுஷனே}, நான்கு வகையினரின் வரைமுறையற்ற கலவியால், ஒருவனது சாதி இன்னதென்று உறுதி செய்வது சிரமமானதாகும். இது எனது கருத்து. அனைத்து வகையைச் சார்ந்த மனிதர்களும் (வரைமுறையற்று) அனைத்து வகைப் பெண்களிடமும் வாரிசைப் பெறுகிறார்கள். மேலும் மனிதர்களில், பேச்சு, கலவி, பிறப்பு, இறப்பு என்பது அனைத்து வகையினருக்கும் பொதுவானதாகும். மேலும், முனிவர்கள் இதற்குச் சாட்சி பகர்வது போல, வேள்வியின் ஆரம்பத்தில், "நாங்கள் எந்தச் சாதியாக இருந்தாலும், நாங்கள் வேள்வியைக் கொண்டாடுகிறோம்" என்று சொல்கிறார்கள் எனவே, குணமே அத்தியாவசியமான தலைமைத் தேவை, என ஞானமுள்ளோர் வலியுறுத்துகின்றனர். தொப்புள் கொடியை அறுப்பதற்கு முன் ஒருவனுக்குப் பிறவி விழா கொண்டாடப்படுகிறது {ஜாதகர்ம சமஸ்காரம் விதிக்கப்படுகிறது}. அவனுக்கு தாய் சாவித்ரியாகவும், அவனது தந்தை புரோகிதராகவும் அதில் செயல்படுகின்றனர். வேதங்களை {படிக்க} ஆரம்பிக்காத வரை ஒருவன் சூத்திரன் எனக் கருதப்படுகிறான். இதில் சந்தேகங்கள் எழுவதால், ஓ! பாம்புகளின் இளவரசனே {நகுஷனே}, ஸ்வாயம்புவ மனு {Swayambhuba Manu}, சுத்திகரிப்புச் சடங்குகள் செய்த பிறகும் பிந்தையவர் {சூத்திரர்} நன்னடத்தை விதிகளுக்கு ஒத்துப் போகவில்லையென்றால், அவர் சார்ந்த அந்த வர்க்கத்தை விட, கலப்புசாதிகளே சிறந்தவையாகக் கருதத்தக்கவை எனத் தீர்மானித்தார். ஓ! அற்புதமான பாம்பே {நகுஷனே}, தூய விதிகளுக்கும், அறம்சார்ந்த நடத்தைகளுக்கும் எவனொருவன் கட்டுப்படுகிறானோ அவனையே, நான் இப்போது பிராமணனாக அறிவிக்கிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}. அந்தப் பாம்பு {நகுஷன்}, "ஓ யுதிஷ்டிரா, அறியத்தகுதி படைத்த அனைத்தையும் நீ அறிந்து வைத்திருக்கிறாய், உனது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, நான் (இப்போது) எவ்வாறு உனது தம்பி விருகோதரனை உண்பேன்" என்றான் {நகுஷன்}2*.
*****************************************************************************
1.சூத்திரர்கள் நடத்தும் சடங்குகள் அனைத்தின் மூலமும் வேதத்தில் இருக்கின்றன என்று கங்குலி கூறுகிறார். வேதமறியும் உரிமையை சூத்திரர்களும் பெற்றிருந்தனர் என்று இங்கு நிறுவப்படுவதாக நான் நினைக்கிறேன். ↩
2.நகுஷன் : யயாதியின் தந்தை.↩
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
தக்ஷன், புருரவஸ், நகுஷன் மற்றும் யயாதி வரலாறு | ஆதிபர்வம் - பகுதி 7
*****************************************************************************
1.சூத்திரர்கள் நடத்தும் சடங்குகள் அனைத்தின் மூலமும் வேதத்தில் இருக்கின்றன என்று கங்குலி கூறுகிறார். வேதமறியும் உரிமையை சூத்திரர்களும் பெற்றிருந்தனர் என்று இங்கு நிறுவப்படுவதாக நான் நினைக்கிறேன். ↩
2.நகுஷன் : யயாதியின் தந்தை.↩
மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
தக்ஷன், புருரவஸ், நகுஷன் மற்றும் யயாதி வரலாறு | ஆதிபர்வம் - பகுதி 7