Visit of Krishna! | Vana Parva - Section 182a | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
கிருஷ்ணன் சத்யபாமாவுடன் காம்யக வனம் சென்று பாண்டவர்களைச் சந்தித்தல்; நாரதர் மற்றும் மார்க்கண்டேயர் வருகை; கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்க மார்க்கண்டேயர் விளக்கங்களைச் சொல்லத் தொடங்குதல்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! குருவின் மகனே {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனும் மற்றவர்களும் காம்யக வனத்தை அடைந்ததும், முனிவர்க்கூட்டத்தால் அன்போடு வரவேற்கப்பட்டு, அங்கேயே கிருஷ்ணையுடன் {திரௌபதி} வாழ்ந்தனர். பாண்டுவின் மகன்கள் அங்கே பாதுகாப்புடன் வசித்து வந்த போது, பல அந்தணர்கள் அவர்களுக்காகக் காத்திருந்தனர். அப்போது ஒரு குறிப்பிட்ட அந்தணர், "சூரனின் வழித்தோன்றலும், வலிய கரங்களும், சுயக்கட்டுப்பாடும் கொண்டவனும், உயர்ந்த அறிவாளியும், அர்ஜுனனுக்கு அன்பிற்குரிய நண்பனுமானவன் {கிருஷ்ணன்} இங்கே வருவான். குருவின் வழித்தோன்றல்களில் முதன்மையானவர்களே, நீங்கள் இங்கே வந்துவிட்டீர்கள் என்பதை ஹரி {கிருஷ்ணன்} அறிவான். அந்த ஹரி {கிருஷ்ணன்} எப்போதும் உங்களைக் காண விரும்புபவனாவான். அவன் எப்போதும் உங்கள் நன்மையை நாடுபவன். மேலும், பல வருடங்களாகக் கடும் தவத்திற்கும், கல்விக்கும், நோன்புக்கும் தன்னை அர்ப்பணித்திருந்த மார்க்கண்டேயரும் உங்களை இங்கே வந்து சந்திப்பார்" என்றார் {அந்த அந்தணர்}.
இவ்வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் சைப்யம், சுக்ரீவம் என்ற குதிரைகளால் இழுக்கப்பட்ட ரதத்தில், சத்யபாமாவுடன் கூடியவனாகத் தேரோட்டிகளில் சிறந்தவனான கிருஷ்ணன், புலோமனின் மகளான சச்சியுடன் கூடிய இந்திரன் போல அங்கே காணப்பட்டான். குருவின் வழித்தோன்றல்களில் மிகவும் நேர்மையானவர்களைக் காண விரும்பிய தேவகியின் மகன் {கிருஷ்ணன்} அங்கே {காம்யக வனத்திற்கு} வந்தான். புத்திகூர்மையுடைய கிருஷ்ணன், தனது தேரில் இருந்து இறங்கி, நிர்ணயிக்கப்பட்ட வழியின்படி அந்த அறம்சார்ந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} முன்பாக இதய மகழ்ச்சியுடன் நிலம்படிந்தான் {நெடுஞ்சாண் கிடையாக வணங்குவது}. அதேபோல, பலசாலி மனிதர்களில் முதன்மையான பீமனின் முன்னிலையிலும் அவ்வாறே செய்தான். பின்பு அவன் {கிருஷ்ணன்} தௌமியருக்குத் தனது மரியாதையைத் தெரிவித்தான். அதே வேளையில் இரட்டையர்கள் இருவரும் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும்} அவனிடம் {கிருஷ்ணனின் முன்பாக} நிலம்படிந்தனர். பிறகு, சுருள் முடி கொண்ட அர்ஜுனனை வாரி அணைத்துக் கொண்டு, துருபதனின் மகளிடம் {திரௌபதியிடம்} ஆறுதல் வார்த்தைகள் பேசினான் {கிருஷ்ணன்}.
அன்பிற்குரிய அர்ஜுனன் தன் அருகே வரவும், தாசார்ஹ குலத் தலைவனின் வழித்தோன்றலான அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {கிருஷ்ணன்}, அவனைக் {அர்ஜுனனைக்} கண்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால், மீண்டும் மீண்டும் அணைத்துக் கொண்டான். அதே போல, கிருஷ்ணனின் அன்பிற்குரிய மனைவியான சத்யபாமாவும், பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} அன்பிற்குரிய மனைவியான துருபதனின் மகளைத் {திரௌபதியைத்} தழுவினாள். தங்கள் மனைவியுடனும் {திரௌபதியுடனும்}, புரோகிதருடன் {தௌமியருடனும்} கூடிய பாண்டுவின் மகன்கள், வெண்தாமரையைப் போன்ற கண்களைக் கொண்ட கிருஷ்ணனுக்குத் தங்கள் மரியாதைகளைச் செய்து எல்லாப்புறமும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். படைக்கப்பட்ட அனைத்திற்கும் மதிப்புமிக்கத் தலைவனும் பலம்வாய்ந்த தலைவனுமான சிவன் (தனது மகன்) கார்த்திகேயனுடன் சேர்ந்திருக்கும் போது பெறும் அழகைப் போலவே, செல்வங்களை வெல்பவனும், அசுரர்களுக்குப் பயங்கரமானவனுமான பிருதையின் {குந்தியின்} மகன் அர்ஜுனனுடன் கூடி நிற்கும்போது கிருஷ்ணன் அழகாக இருந்தான்.
வளையங்களுடன் கூடிய கிரீடத்தைத் தனது தலையில் தாங்கியிருந்த அர்ஜுனன், கானகத்தில் {இதுவரை} என்னவெல்லாம் நடந்தன என்பது குறித்துச் சுருக்கமாகக் கதனின் [1] அண்ணனான கிருஷ்ணனிடம் விவரித்தான். பிறகு அர்ஜுனன், "சுபத்திரையும், அவளது மகன் அபிமன்யுவும் எப்படி இருக்கிறார்கள்?" என்று {கிருஷ்ணனிடம்} கேட்டான். மதுவைக் கொன்றவனான கிருஷ்ணன், பிருதையின் மகனுக்கும், புரோகிதருக்கும் {தௌமியருக்கும்} நிர்ணயிக்கப்பட்ட முறையில் தனது மரியாதைகளைச் செலுத்திவிட்டு, அவர்களுடன் அமர்ந்து, மன்னன் யுதிஷ்டிரனைப் புகழ்ந்து பேசினான். அவன் {கிருஷ்ணன்}, "ஓ! மன்னா, நாடுகளை வெல்வதைக் காட்டிலும் அறமே விரும்பத்தக்கது; அது உண்மையில் ஒரு தவப்பயிற்சியாகும். கடமை உமக்கு நிர்ணயித்தவற்றுக்கு உண்மையுடனும் கள்ளங்கபடமற்றும் கீழ்ப்படிந்த நீர், இவ்வுலகையும், இதைத் தொடர்ந்து வரும் உலகையும் வென்றுவிட்டீர். முதலில் {பிரம்மச்சரிய காலத்தில்} நீர் அறக்கடமைகளை ஆற்றும்போது கல்வி பயின்றீர். முறையான வழியில் முழுமையான ஆயுத அறிவியலை அடைந்து, க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்ட முறையான வழிகளில் செல்வத்தை வென்று, எல்லாக்காலங்களிலும் கொண்டாடப்படும் வேள்விச் சடங்குகளைச் செய்தீர். நீர் சிற்றின்பங்களில் மூழ்கவில்லை; ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, இன்ப நோக்கங்களைக் கொண்டு {காமத்தினால்} நீர் செயல்படுவதுமில்லை, அல்லது, செல்வத்தில் பேராசை கொண்டு, நீர் அறம் வழுவியதில்லை; இதன் காரணமாகவே, ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, நீர் அறம்சார்ந்த மன்னன் {தர்மராஜா} என்ற பெயர் கொண்டிருக்கிறீர். நாடுகளையும், செல்வங்களையும், இன்ப வழிகளையும் {போகங்களையும்} வென்றும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கொடை {தானம்}, உண்மை {சத்தியம்}, தவம், நம்பிக்கை, தியானம், இரக்கம் மற்றும் பொறுமை ஆகியவையே உமக்குச் சிறந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
[1] வசுதேவருக்கும் தேவரக்ஷிதா என்ற பெண்ணுக்கும் பிறந்தவன் ஆவான். இவன் கிருஷ்ணனுக்குத் தம்பியாவான்.
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, குருஜாங்காலத்தின் மக்கள், சபாமண்டபத்தில் சீற்றத்துடன் இருந்த கிருஷ்ணையின் {திரௌபதியின்} நிலையைக் கண்ட போது, அறம் மற்றும் பண்பாட்டுக்குப் புறம்பான, மிகவும் வெறுக்கத்தக்க அதை {அச்சம்பவத்தை}, உம்மைத் தவிர வேறு யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்? அனைத்து விருப்பங்களும் நிறைவேறி ஐயமின்றி, விரைவில் மனிதர்களை நீண்ட காலம் ஆள்வீர். நிபந்தனைகள் முழுமையடைந்ததும், குருக்களைத் தண்டிக்க இதோ நாம் தயாராக இருக்கிறோம்" என்றான் {கிருஷ்ணன்}.
தாசார்ஹ குலத்தின் முதன்மையானவனான கிருஷ்ணன், தௌமியரிடமும், பீமனிடமும், யுதிஷ்டிரனிடமும், இரட்டையர்கள் மற்றும் கிருஷ்ணையிடமும், "உங்கள் ஆசிகளால் மணிமுடி தாங்கிய அர்ஜுனன், அனைத்து ஆயுதங்களின் அறிவியலையும் அறிந்து திரும்பிவிட்டான்" என்றான். பிறகு, நண்பர்கள் சூழ இருந்த தாசார்ஹ குலத்தின் தலைவனான கிருஷ்ணன், யக்ஞசேனனின் மகளான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, "ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, ஓ! யக்ஞசேனன் மகளே, உனது மகன்கள், ஆயுதங்களின் அறிவியலைக் கற்பதற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, நேர்மையான நண்பர்களுடன் நன்னடத்தையுடன் நடந்து கொள்கிறார்கள். உனது தந்தையும், உனது உடன்பிறந்த சகோதரர்களும், அவர்களுக்கு ஒரு நாட்டையும், சில இடங்களையும் அளித்தார்கள்; ஆனால் பிள்ளைகளுக்குத் துருபதனின் இல்லத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை, தாய்மாமன்கள் இல்லத்திலும் அவர்களுக்கு அது தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக ஆனர்த்தர்களின் நிலத்திற்கு வந்து, ஆயுதங்களின் அறிவியலைப் பயில்வதில் மிகவும் மகிழ்கிறார்கள். உனது மகன்கள் விருஷ்ணிகளின் நகரத்துக்குள் நுழைந்த உடனே, அங்கே இருக்கும் மக்களுக்கு விருப்பமானவர்களாகிறார்கள். நீ எப்படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று வழிநடத்துவாயோ, அல்லது மரியாதைக்குரிய குந்தி எப்படி வழிநடத்துவாளோ அப்படியே சுபத்திரை அவர்களைக் கண்காணிப்புடன் வழிநடத்துகிறாள். உண்மையில், அவள் மேலும் கவனமாகவே இருக்கிறாள் என்று சொல்ல வேண்டும்.
ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, அநிருத்தன், அபிமன்யு, சுநீதன், பானு ஆகியோருக்கு குருவாக இருப்பது போலவே, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்} அவர்களுக்கு {உனது பிள்ளைகளுக்கு} குருவாகவும், புகலிடமாகவும் இருக்கிறான். ஒரு நல்ல குருவாக, கதாயுதம், வாள், கேடயம், ஏவுகணை ஆகியவற்றைத் தாங்கவும், தேரோட்டவும், குதிரையோட்டவும், வீரமாக இருக்கவும் தொடர்ந்து பயிற்றுவிக்கிறான். ஓ! துருபதனின் மகளே {திரௌபதி}, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, அவர்களுக்கு நல்ல பயிற்சியை அளித்து, பலதரப்பட்ட ஆயுதங்களை முறையாகப் பயிற்றுவித்து, உனது மகன்கள் மற்றும் அபிமன்யுவின் வீரச்செயல்களால் திருப்தியடைகிறான். உனது மகன்கள் விளையாட்டுக்காக வெளியே செல்லும்போது, அவர்கள் ஒவ்வொருவரையும், ரதங்களும், குதிரைகளும், வாகனங்களும், யானைகளும் தொடர்ந்து செல்கின்றன" என்றான் {திரௌபதியிடம் கிருஷ்ணன்}.
பிறகு கிருஷ்ணன், அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரனிடம், "தாசார்ஹ குலத்தின் போர்வீரர்களும், குகுரர்களும், அந்தகர்களும், ஓ! மன்னா, உமது கட்டளையை ஏற்பார்கள். அவர்கள் நீர் விரும்பியதைச் செய்வார்கள். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, குதிரைவீரர்கள், காலாட்படை, குதிரைகள், ரதங்கள், யானைகள் ஆகியவற்றைக் கொண்டு, பலராமனின் தலைமையில் காற்றுபோல (எதிர்த்து நிற்க முடியாதபடி) வரும் மது குலத்தின் படை உமது கட்டளையை ஏற்கத் தயாராக இருக்கிறது. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, பாவிகளில் தீயவனும் திருதராஷ்டிரன் மகனுமான துரியோதனனை, அவனைத் தொடர்பவர்களுடனும், அவனது நண்பர்கள் கூட்டத்துடனும், சௌபத்தின் தலைவன் சென்ற வழியே விரட்டுவீராக. ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, சபா மண்டபத்தில் ஏற்கப்பட்ட நிபந்தனைகளின் படி நீர் இருப்பதை வரவேற்கிறோம். ஆனால், தாசார்ஹ படை வீரர்களால் எதிரிகள் கொல்லப்பட்டு, ஹஸ்தினா நகரம் {ஹஸ்தினாபுரம்} உமக்காகத் தயாராக இருக்க நீர் அனுமதி அளிப்பீராக. அப்போது, நீர் உமது பாவங்களில் இருந்து விடுபட்டு, துன்பத்தை விலக்கி, அற்புதமான நிலப்பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் நன்கு அறியப்பட்ட அந்த ஹஸ்தினா நகரத்தில் நுழையும்போது, அங்கு நீர் விரும்பும் இடங்களில் உலவி இன்பமாக இருக்கலாம்" என்றான் {கிருஷ்ணன்}.
பிறகு தயாள குணம் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மனிதர்களில் சிறந்தவனான கிருஷ்ணன் தெளிவாகச் சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டு, அதை மெச்சி, ஆழ்ந்து ஆலோசித்த பிறகு, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} கூப்பிய கரங்களுடன், "ஓ! கேசவா, நீயே பாண்டு மகன்களின் புகலிடம் என்பதில் ஐயமில்லை; பாண்டுவின் மகன்கள் உன்னிலே தங்கள் பாதுகாவலனைக் கொண்டிருக்கிறார்கள். நேரம் வரும்போது, நீ சொன்ன பணியை நீ செய்வாய் என்பதில் ஐயமில்லை. அதைவிட அதிகமாகவும் செய்வாய். உறுதி கூறியபடி, நாங்கள் பனிரெண்டு வருடங்களைத் தனிமையான கானகங்களில் கழித்தோம். ஓ! கேசவா, நிர்ணயிக்கப்பட்ட வழியில் மறைந்திருக்கும் காலத்தையும் {அஜ்ஞாதவாசத்தையும்} முழுமையாக முடித்த பின்னர்ப் பாண்டுவின் மகன்கள் உம்மைப் புகலிடமாகக் கொள்வர். ஓ! கிருஷ்ணா, இதுவே உம்முடன் தொடர்புடையோரின் நோக்கமாக இருக்க முடியும். பாண்டுவின் மகன்கள் உண்மையின் வழியில் இருந்து பிறழமாட்டார்கள், ஏனெனில், பிருதையின் {குந்தியின்} மகன்கள் தங்கள் தானத்துடனும், தங்கள் மக்கள் மீது கொண்ட பக்தியுடனும், தங்கள் மனைவியர் மற்றும் உறவினருடனும் உன்னிலேயே பாதுகாவலனைக் கொண்டிருக்கின்றனர்" என்றான் {யுதிஷ்டிரன்}.