The Interpretation of Markandeya! | Vana Parva - Section 182b | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
உயிரினங்களின் நற்செயல் மற்றும் தீச்செயல்களுக்கான பலனான மகிழ்ச்சி மற்றும் துயர அனுபவம் குறித்துப் பாண்டவர் மற்றும் அவர்களோடு கூடியிருந்தவர்களுக்கு மார்க்கண்டேயர் சொல்லல்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, விருஷ்ணிகளின் வழித்தோன்றலான கிருஷ்ணனும், அறம்சார்ந்த மன்னனும் {யுதிஷ்டிரனும்} இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, அங்கே தவப்பயிற்சியால் கறுத்திருந்த மார்க்கண்டேயர் தோன்றினார். ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்வைக் கண்ட அந்தப் பக்திமிக்க ஆன்மா கொண்டவர், பெரும் தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தார். முதிர்ந்த வயதுக்குரிய எந்த அறிகுறியும் அவரிடம் காணப்படவில்லை; மரணமற்ற அவர் அழகு, கண்ணியம் மற்றும் பல நற்குணங்களைப் பெற்றிருந்தார். அவர் {மார்க்கண்டேயர்} இருபத்தைந்து {25} வயதுடைய ஒருவர் போலத் தெரிந்தார். ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்வைக் கண்ட அந்த முதிர்ந்த முனிவர் வந்ததும், அனைத்து அந்தணர்களும் அவருக்குத் தங்கள் மரியாதையைத் தெரிவித்தனர். அப்படியே பாண்டுவின் மகனுடன் கூடிய கிருஷ்ணனும் செய்தான். அந்த உயர்ந்த ஞானம் கொண்ட முனிவர் {மார்க்கண்டேயர்} இப்படிக் கௌரவிக்கப்பட்டு, நட்புறவுடன் அவர் ஆசனத்தில் அமர்ந்ததும், அந்தணர்கள் மற்றும் பாண்டுவின் மகன்களின் எண்ணங்களை மனதில் கொண்ட கிருஷ்ணன் பேச ஆரம்பித்தான்.
"ஓ! மார்க்கண்டேயரே, பாண்டுவின் மகன்கள், இங்கே கூடியிருக்கும் அந்தணர்கள், துருபதன் மகள் {திரௌபதி}, சத்தியபாமா ஆகியோரும் நானும் மிக அற்புதமான உமது வார்த்தைகளைக் கேட்க ஆவலுடன் இருக்கிறோம். கடந்த காலத்தின் புனிதமான கதைகளையும், மன்னர்கள், பெண்கள், முனிவர்கள் ஆகியோருக்கு வழிகாட்டும்படியான நேர்மையான நடத்தைக்கான நித்திய விதிகளையும் எங்களுக்கு எடுத்துரைப்பீராக" என்றான் {கிருஷ்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அனைவரும் தங்கள் ஆசனங்களில் அமர்ந்த பிறகு, தெய்வீக முனிவரும், சுத்தமான ஆன்மா கொண்டவருமான நாரதரும், பாண்டுவின் மகன்களைச் சந்திக்க அங்கே வந்தார். அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவருக்கும் {நாரதருக்கும்}, அறிவுஜீவிகளில் முதன்மையான அவர்கள் அனைவரும் {பாண்டவர்கள்}, உரிய முறையில் பாதங்களைக் கழுவ நீரும், நன்கு அறியப்பட்ட சுத்திகரிப்புப் பொருளான ஆர்க்கியாவையும் கொடுத்தனர். அந்தத் தெய்வீக முனிவரான நாரதர், மார்க்கண்டேயரின் உரையைக் கேட்க அவர்கள் அனைவரும் காத்திருப்பதை அறிந்து, அந்த ஏற்பாட்டுக்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். எது உகந்ததாக இருக்கும் என்பதை அறிந்த அந்த மரணமற்றவர் {நாரதர்} புன்னகையுடன், "ஓ! அந்தண முனிவரே, நீர் சொல்ல விரும்புவதைப் பாண்டுவின் மகன்களுக்குச் சொல்லும்" என்றார். பெரும் தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த மார்க்கண்டேயர் இப்படிச் சொல்லப்பட்டதும், "சற்றுப் பொறும். ஒரு பெரும் காரியம் விவரிக்கப்படும்" என்று மறுமொழி கூறினார். இப்படிச் சொல்லப்பட்டதும், இருபிறப்பாளர்களுடன் {பிராமணர்களுடன்} இருந்த பாண்டுவின் மகன்கள், நடுப்பகல் சூரியனைப் போல் {பிரகாசத்துடன்} இருந்த அந்தப் பெரும் முனிவரைக் கண்டவாறே சிறிது நேரம் காத்திருந்தனர்"
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பாண்டுவின் மகனும், குரு குலத்தின் மன்னனுமானவன் {யுதிஷ்டிரன்}, பேசுவதற்கு விருப்பத்துடன் இருந்த அந்தப் பெரும் முனிவரைக் {மார்க்கண்டேயரைக்} கண்டு, தலைப்புகளைப் பரிந்துரைக்கும் வண்ணம் சில கேள்விகளைக் கேட்கும் பொருட்டு, "நீர் {வயதால்} பழைமையானவர், தேவர்கள், அசுரர்கள், ஒப்பற்ற முனிவர்கள் மற்றும் அனைத்து அரச குலத்தவரின் செயல்களையும் அறிந்தவர். நாங்கள் உம்மை வழிபடத்தகுந்தவராகவும், மதிப்பிற்குரியவராகவும் கருதுகிறோம். உமது தொடர்பை நாங்கள் நீண்ட காலமாக விரும்பினோம். எங்களைக் காண வந்த தேவகி மகனான கிருஷ்ணன் இங்கே இருக்கிறான். உண்மையில், மகிழ்வில் இருந்து விழுந்துவிட்ட என்னை நான் கண்டு, தீய வாழ்வு வாழும் திருதராஷ்டிரன் மகன்கள் அனைத்து விதத்திலும் வளமோடு இருப்பதையும் நான் சிந்திக்கும்போது, ஒரு கருத்து என்னுள் எழுகிறது. நன்மையோ தீமையோ, ஒரு மனிதனே எத்தகு செயலையும் செய்கிறான். அவனே அந்தச் செயல்கள் கொடுக்கும் கனியையே அனுபவிக்கிறான். அப்படியிருக்கும்போது, இங்கே கடவுள் என்ன காரியமாற்றுகிறார்? ஓ! கடவுள் குறித்த ஞானத்தை அடைந்தவர்களுள் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, மனிதர்களின் செயல்கள், அவர்களை எவ்வாறு தொடர்கின்றன? அது இவ்வுலகத்தில் தொடர்கிறதா? அல்லது அடுத்தடுத்த உலகங்களில் தொடர்கிறதா? ஓ இருபிறப்பாள நேர்மையாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, நல்வினையும், தீவினையும், ஒரு உடல்படைத்த உயிரினத்தை எவ்வாறு அடைகின்றன? மரணத்திற்குப் பின்பா? அல்லது இந்த உலகத்திலா? அல்லது இவ்வாழ்வில் செய்யும் செயல்கள் அடுத்த உலகில் கனி தருமா? மரணிக்கும் ஒரு உயிரினத்தின் செயல்கள் எங்கேதான் செல்கின்றன?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பேச இயன்றவர்களில் சிறந்தவனே, இந்தக் கேள்வி உனக்குத் தகும். அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது. அறிய வேண்டிய அனைத்தையும் நீ அறிவாய். கேட்க வேண்டுமே என்பதற்காகவே, நீ இந்தக் கேள்வியைக் கேட்டாய். இப்போது நான் உனக்குப் பதில் சொல்கிறேன்; கவனம் நிறைந்த மனதுடன், இவ்வுலகிலும், வர இருக்கும் உலகிலும் ஒரு மனிதன் மகிழ்ச்சியையும் துயரத்தையும் அனுபவிக்கிறான் என்று நான் சொல்வதைக் கேள்.
பிறந்த அனைத்து உயிரினங்களின் தலைவனே முதலில் எழுந்தான். உடல் படைத்த அனைத்து உயிரினங்களையும் உண்டாக்கினான். ஓ! குருவின் வழித்தோன்றல்களில் ஞானியே {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்த உந்துவிசைகளுக்குக் கீழ்ப்படியும், சுத்தமான களங்கமற்ற உயிரினங்களைப் படைத்தான். பழங்கால மனிதர்கள் தங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறியவர்களாக இருந்தார்கள், புகழத்தக்க வாழ்வுமுறைகளைக் கொண்டவர்களாக, உண்மை பேசுபவர்களாக, தெய்வீகமானவர்களாக, சுத்தமானவர்களாக இருந்தார்கள். அனைவரும் தேவர்களுக்குச் சமமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் விரும்பிய போது வானத்தில் இன்பமாக எழவும், மீண்டும் திரும்பி வரவும் அவர்களால் முடிந்தது. அவர்கள் தங்கள் மரணத்தையும் தங்கள் வாழ்வையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். அவர்களுக்குப் பாதிப்புகள் சிறிதளவே இருந்தன. அவர்களுக்குப் பயம் இல்லை; தங்கள் விருப்பங்கள் ஈடேறியவர்களாக இருந்தார்கள். அவர்கள் எந்த விதத் தொந்தரவும் இன்றி இருந்தார்கள். அவர்கள் தேவர்களையும், பெருமைமிக்க முனிவர்களையும் அணுக முடிந்தது. அனைத்து நேர்மையான விதிகளையும் மனப்பாடமாக வைத்திருந்தனர். அவர்கள் சுய அடக்கத்துடன் பகைமை இன்றி இருந்தார்கள். அப்படியே அவர்கள் பல ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து பல ஆயிரம் மகன்களைப் பெற்றனர்.
இப்படியே காலம் கடந்ததும், அவர்கள் காமத்தாலும், கோபத்தாலும் பீடிக்கப்பட்டு, கபடம், டம்பம், தந்திரம் பேராசை ஆகியவற்றைக் கைக்கொண்டு உணர்வற்றவர்களானார்கள். பிறகு அத்தகு தீய மனிதர்கள் உடலை விட்டுப் பிரிந்த போது, அவர்கள் நேர்மையற்ற அருள் இல்லாத காரியங்களால் நரகத்தின் பாதையில் சென்றார்கள். திரும்பத் திரும்பத் தாக்கப்பட்ட அவர்கள், இந்த அற்புதமான உலகில் திரும்பத் திரும்பத் துன்பத்தை நோக்கித் தள்ளப்பட்டார்கள். அவர்களது விருப்பங்கள் நிறைவேறவில்லை; நோக்கங்கள் சாதிக்கப்படவில்லை; அவர்களது அறிவு பயனற்றது ஆகியது. அவர்களது புலன்கள் முடக்கப்பட்டன; அவர்கள் அனைத்துக்குப் பயப்பட ஆரம்பித்து, பிற மக்களின் துன்பங்களுக்குக் காரணமானார்கள். அவர்கள் பொதுவாக, தீச்செயல் செய்பவர்களாக, தாழ்ந்த குடும்பங்களில் பிறந்து, தீயவர்களாகி, நோய்களால் பாதிக்கப்பட்டு, பிறருக்கு பயங்கரமானவர்களானார்கள். அவர்களது வாழ்நாள் குறைந்து, பாவிகளாகி, அவர்களது பயங்கரச் செயல்களுக்கான கனிகளை அறுத்தனர். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அவர்கள் அனைத்தின் மீதும் பேராசை கொள்பவர்களாகவும், தெய்வமற்றவர்களாகவும் {நாத்திகர்களாகவும்}, மனம் உடைந்தவர்களாகவும் ஆனார்கள். மரணத்திற்கு அப்பால், அனைத்து உயிரினங்களின் விதியும், இவ்வுலகில் அவன் செய்த செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது.
முனிவர்கள் {கற்றறிந்தவர்கள்} மற்றும் அறியாதவர்களின் {புத்தியில்லாதவர்களின்} செயல்களின் கருவூலம் {வினை பொக்கிஷம்} எங்கே இருக்கிறது என்றும், நற்செயல் மற்றும் தீச்செயல்களின் கனியை அவர்கள் எங்கே அனுபவிப்பார்கள் என்று நீ கேட்டாய். இது சம்பந்தமான விதிகளைக் கேள். மனிதன், கடவுளால் படைக்கப்பட்ட நுட்பமான அசல் உடலைக் கொண்டு, நன்மை தீமைகளின் பெரும் கருவூலத்தை {பொக்கிஷத்தை} உருவாக்குகிறான். மரணத்திற்குப் பின்னால் அவன் தனது நலிந்த (புற) உடலைத் துறந்து, உடனே வேறு வகை உயிரினமாகப் பிறக்கிறான். ஒரு கணமேனும் அவன் இல்லாதிருப்பதில்லை {சரீரமில்லாமல் அவன் இருப்பதில்லை}. அவனது புதிய வாழ்வில், அவனது செயல்கள் அவனை நிழலைப் போலத் தொடர்ந்து, பலனைக் கொடுத்து, அவனது விதியை மகிழ்ச்சிகரமாகவோ, துன்பம் நிறைந்ததாகவோ அமைக்கிறது. ஞானம் கொண்ட மனிதன், தனது ஆன்ம நுண்ணுணர்வால் {Spiritual Insight}, அனைத்து உயிரினங்களும் அழிப்பவரின் {destroyer = சிவனின்} மாற்ற முடியாத விதிக்கு கட்டுப்பட்டவை என்பதையும், தனது செயல்களால் ஏற்படும் நல்வினையோ தீவினையோ எதிர்க்க முடியாதது என்பதை அறிந்தவனாக இருக்கிறான். இதுவே, ஓ! யுதிஷ்டிரா, ஆன்ம அறியாமையில் இருக்கும் உயிரினங்களின் கதியாகும்.
உயர்ந்த ஆன்மிகப் பார்வை கொண்ட மனிதர்கள் அடையும் சரியான வழியை இப்போது கேள். உயர்ந்த தவ அறங்களை உடையவர்கள், நல்ல மற்றும் தீய காரியங்களை அறிந்து, தங்கள் அறக்கடமைகளைச் செய்யத் துணிவுள்ளவார்களாவும், உண்மைக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் குருக்களுக்கும், மூத்தவர்களுக்கும் உரிய மரியாதை அளிப்பார்கள். அவர்கள் யோகம் பயில்பவர்களாகவும், மன்னிக்கும் குணம் கொண்டவர்களாகவும், தன்னடக்கம், ஆற்றல், பக்தி மற்றும் பொதுவான அனைத்து அறங்களையும் உடையவர்களாக இருப்பார்கள். உணர்ச்சிகளை வெல்வதன் மூலம், அவர்கள் மனதை அடக்குகிறார்கள்; யோகம் பயில்வதன் மூலம் அவர்கள் நோய், அச்சம், கவலையிலிருந்து விடுபடுகிறார்கள்; அவர்கள் {அவர்களது மனம்} தொந்தரவுகளுக்கு ஆளாவதில்லை. பிறப்பின் போது, முதிர்ந்த அல்லது முதிராத அல்லது கருவில் பதுங்கியிருக்கும் நிலை என அனைத்து நிலைகளிலும், தங்கள் ஆன்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள உறவை ஞானக்கண் கொண்டவர்கள் உணர்கிறார்கள். உள்ளுணர்வு மற்றும் நேர்மறை ஆறிவு கொண்ட அந்த உயர்ந்த மனம் படைத்த முனிவர்கள், செயல்களின் இந்தப் பகுதியை {பூமியைக்} கடந்து சென்று, மீண்டும் தேவர்களின் வசிப்பிடத்திற்குத் திரும்புகிறார்கள்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்கள், தெய்வங்களின் {தேவர்களின்} அருளாலும், விதியாலும், தங்கள் சொந்த செயல்களாலும் என்ன கிடைக்குமோ அதை அடைகிறார்கள். வேறு வகையாக நீ எண்ண வேண்டாம். ஓ! யுதிஷ்டிரா, இவ்வுலகத்தில் எது உயர்ந்த நன்மை என்று கருதுகிறார்களோ அதையே நானும் உயர்ந்ததாகக் கருதுகிறேன் {மானிட உலகில் உள்ள நன்மையே சிறந்ததென எண்ணுகிறேன்}. சிலர் இவ்வுலகில் மகிழ்ச்சியை அடைகிறார்கள், ஆனால் அடுத்ததில் அடைவதில்லை; பிறர் அடுத்ததில் அடைகிறார்கள், ஆனால் இங்கு அடைவதில்லை. அதே போல, சிலர் இவ்வுலகிலும் அடுத்த உலகிலும் மகிழ்ச்சியை அடைகிறார்கள்; பிறரோ இங்கேயும் அடுத்த உலகிலும் மகிழ்ச்சியை அடைவதில்லை. பெருஞ்செல்வம் படைத்தவர்கள், தங்களை நன்றாக அலங்கரித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் பிரகாசிக்கிறார்கள். ஓ பலம்வாய்ந்த எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரா}, உடல்சார்ந்த இன்பங்களுக்கு {சரீர சந்தோஷங்களுக்கு} அடிமையான அவர்கள், இவ்வுலகத்தில் மட்டுமே இன்பத்தை அனுபவிக்கிறார்கள், மறு உலகத்தில் அனுபவிப்பதில்லை. ஆனால், ஆன்ம தவங்களிலும், வேத கல்வியிலும் ஈடுபட்டு, தவத்தில் ஊக்கமுடன் இருப்பவர்களும், தங்கள் கடமைகளைச் செய்வதன் மூலம், தங்கள் உடலின் வீரியத்தைக் குறைத்துக் கொள்பவர்களும், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களும், எவ்வுயிரையும் கொல்லாதிருப்பவர்களும், ஓ! எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரா}, மறு உலகத்தில் இன்பத்தை அடைகிறார்கள், ஆனால் இங்கு அடைவதில்லை. பக்தி வாழ்வு வாழ்ந்து, சரியான நேரத்தில் அறம் மீறாமல் செல்வத்தை அடைந்து, மணம் {திருமணம்} செய்து கொண்டு, வேள்விகள் செய்பவர்கள், இவ்வுலகிலும் மறு உலகிலும் அருளை அடைகிறார்கள்.
ஞானமும் அடையாமல், தவத்திலோ, தானத்திலோ, தன் இனத்தைப் பெருக்குவதிலோ, உலக இன்பங்களிலோ ஈடுபடாமலும் இருக்கும் முட்டாள் மனிதர்கள், இவ்வுலகிலும் மறு உலகிலும் அருளை அடைவதில்லை. ஆனால் நீங்கள் அனைவரும், அறிவுத்திறனும், பெரும் பலமும் வலிமையும், தெய்வீக வீரியமும் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். (தீயவர்களை) ஒழிக்கவும், தேவர்களின் காரியங்களை ஆற்றவும், நீங்கள் வேறு உலகத்தில் இருந்து இங்கே வந்து பிறப்பை அடைந்திருக்கிறீர்கள். வீரமிக்கவர்களாக, தவத்தில் ஈடுபட்டு, சுய அடக்கத்திற்கான பயிற்சிகள் செய்து, அறச்சடங்குகள் செய்து, முயற்சியை விரும்புபவர்களாக இருக்கும் நீங்கள், பெரும் சாதனைகள் செய்து, தேவர்களையும், முனிவர்களையும், பித்ருகளையும் திருப்திப்படுத்திய பிறகு, உங்கள் செயல்களின் காரணமாக, அனைத்து அறம்சார்ந்த மனிதர்களின் இருப்பிடமான தலைமையான உலகத்தை {சொர்க்கத்தை} அடைவீர்கள். ஓ! குரு குலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, இந்த உனது துன்பங்களினால் உனது மனம் சந்தேகமடையாதிருக்கட்டும். இந்தத் துன்பமும் உனது நன்மைக்கே" என்றார் {மார்க்கண்டேயர்}.