The might of a Brahmana! | Vana Parva - Section 183 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
அந்தணர்களின் மகிமை குறித்து யுதிஷ்டிரனுக்கும் அவனைச் சூழ்ந்திருந்தவர்களுக்கும் மார்க்கண்டேயர் சொல்லியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பாண்டுவின் மகன்கள் உயர் ஆன்ம மார்க்கண்டேயரிடம், "அந்தணர்களின் பெருமைகளைக் கேட்கக் காத்திருக்கிறோம். நீர் எங்களுக்கு அதைச் சொல்லும்" என்றனர். இப்படிக் கேட்கப்பட்ட தவ அறமும் ஆன்ம சக்தியும், அனைத்துத் துறைகளில் ஞானமும் கொண்ட மதிப்பிற்குரிய மார்க்கண்டேயர், "எதிரிகளின் நகரத்தை வெல்பவனும், ஹேஹய குலத்தைச் சார்ந்தவனும் வலிமையான உறுப்புகள் கொண்டவனுமான ஒரு இளவயது இளவரசன் (ஒரு சமயம்) வேட்டைக்கு வெளியே சென்றான். அப்படி அவன் காட்டு மரங்கள் மற்றும் அடர்த்தியான புற்களுக்கிடையே உலவி கொண்டிருந்த போது, கறுப்பு மான் தோலை தனது மேலாடையாக உடுத்தியிருந்த ஒரு முனிவரைத் தனது அருகில் கண்டு, அவரை மான் என நினைத்துக் கொன்று விட்டான்.
தான் செய்த காரியத்தில் வலி கொண்டு, துயரத்தால் புலன்கள் செயலற்ற அவன், புகழ்பெற்ற ஹேஹயத் தலைவர்களிடம் சென்றான். அந்தத் தாமரை கண்கள் கொண்ட இளவரசன் அவர்களிடம் விவரங்களைத் தெரிவித்தான். ஓ! எனது மகனே {யுதிஷ்டிரா}, அவன் சொன்னதைக் கேட்டும், கனிகளும் கிழங்குகளும் உண்டு வாழ்ந்த அந்த முனிவரின் உடலைக் கண்டும், அவர்கள் மனதால் மிகவும் துன்புற்றார்கள். அவர்கள் அனைவரும் இந்த முனிவர் யாருடைய மகன் என்பதை அறிய அங்கும் இங்கும் தேடி விசாரித்தார்கள். அவர்கள் விரைவில், காசியபரின் மகனான அரிஷ்டநேமியின் ஆசிரமத்தை அடைந்தனர். நிலைத்த தவத்தில் இருந்த அந்தப் பெரும் முனிவரை வணங்கியபடி அவர்கள் அங்கே நின்றார்கள். அதே வேளையில், முனிவர் {அரிஷ்டநேமி} தன்பங்குக்கு, அவர்களை வரவேற்பதில் மும்முரமாக இருந்தார். அவர்கள் அந்தச் சிறப்புமிக்க முனிவரிடம் {அரிஷ்டநேமியிடம்}, விதியின் விளையாட்டால், நாங்கள் உம்முடைய வரவேற்புக்குத் தகுதியற்றவர்களானோம். உண்மையில் நாங்கள் ஒரு அந்தணரைக் கொன்றுவிட்டோம்!" என்றனர்.
அந்த மறுபிறப்பாள முனிவர்கள் அவர்களிடம், "நீங்கள் எப்படி ஒரு அந்தணனைக் கொன்றீர்கள்? அவன் எங்கிருக்கிறான்? நீங்கள் அனைவரும் எனது தவப்பயிற்சியின் சக்தியைப் பாருங்கள்" என்றார். அனைத்தையும் நடந்தவாறே அவரிடம் விவரித்த அவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள். ஆனால், {இறந்த} அந்த முனிவரின் உடல் அங்கே (அவர்கள் அதை விட்டுச் சென்ற இடத்தில்) இல்லை. தேடிக் களைத்த பின்னர், கனவில் கண்டதைப் போல, கருத்திழந்து வெட்கித் திரும்பினர். பிறகு, ஓ! எதிரிகளின் நகரங்களை வெல்பவனே {யுதிஷ்டிரா}, அந்த முனிவர் தார்க்ஷயர் {அரிஷ்டநேமி}, அவர்களிடம், "இளவரசர்களே, நீங்கள் கொன்ற அந்தணன் இவனா? ஆன்மப் பயிற்சிகள் மூலம் அமானுஷ்ய கொடைகள் {சக்திகள்} கொண்ட இந்த அந்தணன் உண்மையில் எனது மகனே" என்றார் {அரிஷ்டநேமி}.
அம்முனிவரைக் கண்ட அவர்கள், ஓ பூமியின் தலைவா, மிகுந்த அதிர்ச்சியை அடைந்தனர். அவர்கள், "என்ன அற்புதம்! இறந்தவர் உயிருடன் திரும்புவது எப்படி? தவ அறத்தின் சக்தியால் இவர் மீண்டும் புத்துயிர் பெற்றாரா? உண்மையில் அதை வெளியிடலாம் என்றால், ஓ அந்தணரே, நாங்கள் கேட்கக் காத்திருக்கிறோம்" என்றனர். அவர்களிடம் அவர் {அரிஷ்டநேமி}, "ஓ மனிதர்களின் தலைவர்களே, எங்கள் மீது சாவுக்கு அதிகாரம் கிடையாது. அதை யுக்தியுடன் சுருக்கமாகச் சொல்வேன். நாங்கள் எங்கள் புனிதமான கடமைகளைச் செய்கிறோம்; ஆகையால் எங்களுக்கு மரணத்திடம் பயம் கிடையாது; நாங்கள் அந்தணர்களைப் பற்றி நல்ல விதமாகப் பேசுகிறோம் ஆனால் அவர்களைக் குறித்துத் தீங்கு நினைத்தது கிடையாது; ஆகையால் மரணம் என்பது எங்களுக்குப் பயத்தைக் கொடுப்பதில்லை. எங்கள் விருந்தினர்களை உணவு, நீர் கொடுத்தும், எங்களை நம்பியிருப்பவர்களுக்கு அபரிமிதமான உணவைக் கொடுத்தும், அதன் பிறகு எஞ்சி இருப்பதை நாங்கள் உண்பதால் மரணத்திடம் எங்களுக்குப் பயம் கிடையாது. அமைதி நிரம்பி, தவம், தானம், பொறுமை ஆகியவற்றைக் கடைப்பிடித்து, புனித இடங்களுக்குச் சென்று, புனிதமான இடங்களில் நாங்கள் வாழ்கிறோம். ஆகையால் எங்களுக்கு மரணத்தின் மீது பயம் கிடையாது. ஆன்மசக்தி நிறைந்த மனிதர்கள் வாழும் இடத்தில் நாங்கள் வாழ்கிறோம்; எனவே எங்களை மரணம் பயமுறுத்துவது கிடையாது. நான் சுருக்கமாக அனைத்தையும் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். இப்போது அனைத்து உலகத் தீமைகளிலிருந்தும் குணமடைந்து நீங்கள் திரும்பலாம். பாவத்தினால் இனி உங்களுக்குப் பயமில்லை" என்றார். "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன அந்த இளவரசர்கள், ஓ! பாரதக் குலத்தின் முதன்மையான குலவழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அம்முனிவரை {அரிஷ்டநேமியை} வணங்கி, மகிழ்ச்சியுடன் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.