Boy seated on a conch! | Vana Parva - Section 185c | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
சம்வர்த்தக நெருப்பால் அழிக்கப்பட்ட பூமியில், மேகக்கூட்டங்கள் திரண்டு பெய்யா பெருமழையைப் பொழிதல்; அனைத்து உயிரினங்களும் அழிதல்; உயிர்களற்ற நீர் திரண்ட பூமியில் மார்க்கண்டேயர் மட்டும் அலந்து திரிந்து கடைசியாக ஒரு சிறுவனைக் கண்டடைதல்; அச்சிறுவன் மார்க்கண்டேயரை விழுங்குதல்...
{மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொல்லுதல்}:
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான்கு யுகங்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான வருடங்களின் முடிவில் மனிதர்களின் வாழ்வு மிகக் குறுகியதாகிவிடுகிறது. பஞ்சம் ஒன்று பல வருடங்களுக்கு நீடிக்கும். பிறகு, ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, மனிதர்களும், குறைந்த பலமும் உற்சாகமும் கொண்ட உயிரினங்களும் ஆயிரக்கணக்கில் பட்டினியாகக் கிடந்து சாகும். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஆகாயத்தில் சுடர்விட்டெரியும் ஏழு சூரியன்கள் தோன்றி, பூமியில் உள்ள ஆறுகள் மற்றும் கடல்களில் உள்ள நீரனைத்தையும் குடித்துவிடும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இயற்கையில் உள்ள வனங்களும், ஈரமாகவோ உலர்ந்தோ இருக்கும் புற்களும், அவற்றால் {சூரியன்களால்} உட்கொள்ளப்பட்டுச் சாம்பலாகும். பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஏழு சூரியன்களின் தழல்கள் மூலம் காய்ந்திருக்கும் பூமியில் காற்றின் உந்துதலால் சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும் நெருப்பு தோன்றும். அந்த நெருப்பானது பூமிக்குள் ஊடுருவி, பாதாள லோகங்களிலும் தனது தோற்றத்தை உண்டாக்கி, தேவர்கள், தானவர்கள் மற்றும் யக்ஷர்கள் இதயங்களில் பெரும் பயங்கரத்தை உருவாக்கும்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான்கு யுகங்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான வருடங்களின் முடிவில் மனிதர்களின் வாழ்வு மிகக் குறுகியதாகிவிடுகிறது. பஞ்சம் ஒன்று பல வருடங்களுக்கு நீடிக்கும். பிறகு, ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, மனிதர்களும், குறைந்த பலமும் உற்சாகமும் கொண்ட உயிரினங்களும் ஆயிரக்கணக்கில் பட்டினியாகக் கிடந்து சாகும். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஆகாயத்தில் சுடர்விட்டெரியும் ஏழு சூரியன்கள் தோன்றி, பூமியில் உள்ள ஆறுகள் மற்றும் கடல்களில் உள்ள நீரனைத்தையும் குடித்துவிடும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இயற்கையில் உள்ள வனங்களும், ஈரமாகவோ உலர்ந்தோ இருக்கும் புற்களும், அவற்றால் {சூரியன்களால்} உட்கொள்ளப்பட்டுச் சாம்பலாகும். பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஏழு சூரியன்களின் தழல்கள் மூலம் காய்ந்திருக்கும் பூமியில் காற்றின் உந்துதலால் சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும் நெருப்பு தோன்றும். அந்த நெருப்பானது பூமிக்குள் ஊடுருவி, பாதாள லோகங்களிலும் தனது தோற்றத்தை உண்டாக்கி, தேவர்கள், தானவர்கள் மற்றும் யக்ஷர்கள் இதயங்களில் பெரும் பயங்கரத்தை உருவாக்கும்.
ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, பாதாள லோகங்களையும், பூமி மீது இருக்கும் அத்தனையையும் அழித்து உட்கொள்ளும் அந்த நெருப்பு {சம்வர்த்தகம்}, ஒரு நொடிப்பொழுதில் அனைத்து பொருட்களையும் அழித்துவிடும். சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும். அமங்கலமான காற்றின் உதவிக் கொண்டிருக்கும் அந்த நெருப்பானது, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான யோஜனைகளுக்குப் பரந்திருக்கும் உலகத்தை உட்கொள்ளும். அனைத்து பொருட்களுக்கும் தலைவனான அந்த நெருப்பு {சம்வர்த்தகம்}, பிரகாசமாகச் சுடர்விட்டு எரிந்து, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பாம்புகள், ராட்சசர்கள் அடங்கிய இந்த அண்டத்தையே உட்கொள்ளும்.
யானைக்கூட்டங்களைப் போன்ற பெரும் மேகக் கூட்டங்கள் வானத்தில் எழுந்து, காண்பதற்கினிய மின்னல் வரிசையுடன் தோன்றும். அப்படி வரும் மேகங்களில் சில மேகங்கள் நீலத் தாமரை போன்ற நிறத்திலும்; சில நீர் குவளை {மலர்} நிறத்திலும்; சில தாமரையின் இதழ்களின் நிறத்திலும்; மேலும் சில ஊதா நிலத்திலும், சில பூசுமஞ்சளைப் போன்ற மஞ்சள் நிறத்திலும், சில காக்கை முட்டை போன்ற நிறத்திலும் இருக்கும். சில தாமரை இதழ்களைப் போன்று பிரகாசமாகவும், சில குங்குமம் போன்ற சிவந்த நிறத்திலும் இருந்தன. சில {மேகங்கள்} அரண்மனைகள் கொண்ட நகரங்களின் வடிவத்திலும், சில யானைக்கூட்டங்கள் போலவும், சில பல்லிகளைப் போலவும், சில முதலை மற்றும் சுறாக்களைப் போன்ற வடிவங்களிலும் இருக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பார்ப்பதற்குப் பயங்கரமான நேரங்களில் வானத்தில் மின்னல்களுடன் கூடும் மேகங்கள் பயங்கரமாகக் கர்ஜனை செய்யும். மழை நிறைந்த அந்த {நீர்} ஆவிக் குவியல், உடனே அந்த முழு வானத்தையும் மூடும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அந்த ஆவிக் குவியல் {மேகக்கூட்டங்கள்}, மலைகள், கானகங்கள், சுரங்கங்கள் நிறைந்த இந்தப் பூமி முழுவதும் பெருவெள்ளத்தைப் பொழியும்.
ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, மேலான தலைவனால் {பிரம்மனால்} உந்தப்பட்ட அம்மேகங்கள் பயங்கரமாகக் கர்ஜனை செய்தவாறு, பூமியின் முழுப் பரப்பின் மேலும் பெருவெள்ளதைப் பொழியும். அபரிமிதமான நீரைப் பொழிந்து முழு உலகத்தையும் நிரப்பியவாறு, அந்தப் பயங்கரமான அமங்கலமான (நாம் ஏற்கனவே பேசிய {சம்வர்த்தகம் என்ற}) நெருப்பை அணைக்கும். சிறப்புமிக்க அந்தத் தலைவனால் {பிரம்மனால்} உந்தப்பட்ட அம்மேகங்கள் பூமியை நிறைத்து பனிரெண்டு வருடங்களுக்குத் தொடர்ச்சியாக மழையைப் பொழியும். பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, கடல் தனது வரம்புகளை மீறும், மலைகள் துண்டுகளாக உடையும், அதிகரிக்கும் பெருவெள்ளத்தில் இந்தப் பூமி மூழ்கும். பிறகு, காற்றின் உந்துதலால் ஆகாயத்தின் முழு விரிவிலும் உலவும் அம்மேகங்கள், காட்சியில் இருந்து திடீரென்று மறைந்து போகும். பிறகு, ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, தாமரையை வசிப்பிடமாகக் கொண்ட அனைத்துக்கும் முதற்காரணமான பிறப்பற்ற தலைவன் {பிரம்மன்}, ஓ! பாரதா {யுதிஷ்டிரா} அந்தப் பயங்கரமான காற்றைக் குடித்து, உறங்கச் செல்வான்.
இப்படி {இதே போல ஒரு முறை} அண்டம் நெடுகிலும் ஒரே நீராகி, அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிர்கள் அனைத்தும் அழிந்து, தேவர்களும், அசுரர்களும் நாசமடைந்து, யக்ஷர்களும், ராட்சசர்களும் இல்லாமலாகி, மனிதர்களற்று, மரங்களும், ஊனுண்ணும் விலங்குகளும் மறைந்து, ஆகாயமும் இல்லாமல் போன போது, நான் மட்டும், ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, துயரத்துடன் அலைந்து கொண்டிருந்தேன். ஓ மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்தப் பயங்கரமான நீர்பரப்பின் மீது நான் அலைந்து கொண்டிருந்த போது, ஒரு உயிரினத்தையும் நான் காணாததால், எனது இதயம் துயரத்தில் இருந்தது! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நிற்காமல் அந்தப் பெருவெள்ளத்தில் திரிந்து கொண்டிருந்த நான் சோர்வடைந்துவிட்டாலும், {எனக்கு} ஓய்வெடுக்க ஒரு இடமும் கிடைக்கவில்லை!
ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, சில காலத்திற்குப் பிறகு அந்த நீர்திரண்ட பெருவெளியில் ஒரு பரந்து விரிந்த ஆலமரத்தைக் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஆலமரத்தின் நீண்ட கிளை ஒன்றில் இணைக்கப்பட்ட தெய்வீகப் படுக்கையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, தாமரையைப் போன்றோ சந்திரனைப் போன்றோ அழகான முகமும், முழுதும் மலர்ந்த தாமரையின் இதழ்களைப் போன்ற கண்களும் கொண்டு, சங்கின் {சங்கு} மீது அமர்ந்திருந்த ஒரு சிறுவனைக் கண்டேன். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இக்காட்சியைக் கண்ட எனது இதயம் ஆச்சரியத்தால் நிரம்பியது. நான் எனக்குள், "உலகமே அழிக்கப்பட்ட பிறகும், எப்படி இச்சிறுவன் மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறான்?" என்று கேட்டுக் கொண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் குறித்த முழு ஞானங்களையும் கொண்ட என்னால் கூட, தவத்தின் மூலம் அவன் யார் என்பதை அறியமுடியவில்லை.
காயாம்பூவின் {Atasi Flower = அலி மலர்} பிரகாசமும், ஸ்ரீவத்சக் குறியும் {மரு அல்லது மச்சமும்} கொண்ட அவன் {அச்சிறுவன்}, லட்சுமியின் வசிப்பிடத்தில் இருப்பதாகவே எனக்குப் பட்டது. தாமரை இதழ்களைப் போன்ற கண்களும், ஸ்ரீவத்ச மருவும், சுடர்விடும் பிரகாசமும் கொண்ட அச்சிறுவன் கேட்பதற்கினிய உயர்ந்த வார்த்தைகளுடன் என்னிடம், "ஓ ஐயா {மார்க்கண்டேயரே}, களைத்துப் போய் ஓய்வெடுக்க விரும்புகிறீர் என்பதை நான் அறிவேன். ஓ! பிருகு குலத்தைச் சேர்ந்த மார்க்கண்டேயரே, நீர் விரும்பும் வரை இங்கு ஓய்ந்திருக்கலாம். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, எனது உடலுக்குள் சென்று, அங்கே ஓய்வெடும். அதுவே நான் உமக்கு நிர்ணயித்திருக்கும் வசிப்பிடமாகும். நான் உம்மிடம் திருப்தி கொண்டுள்ளேன்" என்றான்.
அச்சிறுவனால் இப்படிச் சொல்லப்பட்ட எனக்கு, நீண்ட வாழ்விலும், மனிதனின் நிலையிலும் பெரும் வெறுப்பு உண்டாயிற்று. பிறகு அச்சிறுவன் திடீரெனத் தனது வாயைத் திறந்தான். அசையும் திறனற்றுப்போன நான், விதியின் பயனாக அவனது வாய்க்குள் நுழைந்தேன். ஆனால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, திடீரென அந்தச் சிறுவனின் வயிற்றுக்குள் நுழைந்த நான், அங்கே நகரங்களுடனும், நாடுகளுடனும் கூடிய முழு உலகத்தையும் கண்டேன்.