A being of immeasurable energy! | Vana Parva - Section 185d | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
சிறுவனின் வயிற்றுக்குள் மார்க்கண்டேயர் அண்டசராசரங்களையும் காணுதல்; ஆறுகள், மலைகள், விலங்குகள், பறவைகள், மிருகங்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைத்தையும் காணுதல்; வயிறு முழுமையும் திரிந்தும், அதன் எல்லையை அடையமுடியாத மார்க்கண்டேயர் அச்சிறுவனை ஒப்பற்ற தெய்வம் என்ற தீர்மானத்திற்கு வந்து அவனைச் சரணடைதல்; சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து மார்க்கண்டேயர் வெளியேறுதல்
{மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொல்லுதல்}: ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்த ஒப்பற்றவனின் வயிற்றுக்குள் திரிந்து கொண்டிருந்த போது, நான் கங்கை, சதத்ரு, சீதை, யமுனை, கௌசிகி, சர்மண்வதி, வேதரவதி, சந்திரபங்கை, சரஸ்வதி, சிந்து, விபாசை, கோதாவரி, வஸ்வோகாசரை, நளினி, நர்மதை, தமரா, காண்பதற்கினிய ஓட்டமும் புனிதமான நீரும் கொண்ட வேணை, சுவேணை, கிருஷ்ணவேணை, இராமை, மஹாநதி, விதஸ்தை ஆகிய நதிகளையும், ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் நதியான காவேரியையும், ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, விசால்யை, கிம்புருனை ஆகிய நதிகளையும் அவனுள் கண்டேன். இந்த அனைத்து நதிகளையும், பூமியின் இன்னபிற நதிகளையும் நான் அங்குக் கண்டேன்.
ஓ! பகைவர்களை அழிப்பவனே {யுதிஷ்டிரா}, முதலைகளும், சுறாக்களும் நிறைந்து, ரத்தினங்களின் சுரங்கமாகவும், நீரின் அற்புத கொள்ளிடமாகவும் இருக்கும் பெருங்கடலை நான் அங்குக் கண்டேன். சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சூரியன் மற்றும் சந்திரனோடு கூடிய ஆகாயம், சூரியனின் நெருப்பு போன்ற காந்தியுடன் அங்கு இருப்பதை நான் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கானகங்கள் மற்றும் தோப்புகளுடன் கூடிய பூமியையும் நான் அங்குக் கண்டேன். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பலதரப்பட்ட வேள்விகளில் ஈடுபட்டிருக்கும் பல அந்தணர்களையும், அனைத்து வகை மக்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபட்டிருக்கும் க்ஷத்திரியர்களையும், விவசாயம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் வைசியர்களையும், மறுபிறப்பாள வகையினர் அனைவருக்கும் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்திருக்கும் சூத்திரர்களையும் நான் அங்குக் கண்டேன்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் ஆன்மா கொண்டவனின் வயிற்றில் உலவிக்கொண்டிருந்த போது, நான் இமயத்தையும், ஹேமகூட மலைகளையும் கண்டேன். மேலும் நிஷதம் மற்றும் வெள்ளி நிறைந்த ஸ்வேத மலைகள் ஆகியவற்றையும் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே கந்தமாதன மலையையும் கண்டேன். மேலும், ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, உயர்ந்த மலைகளான நீல மலைகளையும் நான் அங்குக் கண்டேன். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே மேருவின் தங்க மலைகளையும், மகேந்திரத்தையும், அற்புதமான மலைகளான விந்திய மலைகளையும் கண்டேன். மேலும், மலையம், பரிபாத்ரம் ஆகிய மலைகளையும் நான் அங்கே கண்டேன். இவையும், பூமியின் இன்ன பிற மலைகளும் அவனது வயிற்றுக்குள் என்னால் காணப்பட்டன. இவை அனைத்தும் ரத்தினங்களுடனும் தங்கங்களுடனும் இருந்தன.
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நான் அவனது வயிற்றில் உலவிய போது, சிங்கங்கள், புலிகள், பன்றிகள் ஆகியவற்றையும், உண்மையில், பூமியில் உள்ள பிற விலங்குகளையும் கண்டேன். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, ஓ! மனிதர்களில் புலியே, அவனது வயிற்றில் நுழைந்த நான், சுற்றித்திரிந்து, சக்ரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களின் குலம், சத்யஸ்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், குஹ்யர்கள், பித்ருக்கள், பாம்புகள், நாகங்கள், இறகு படைத்த குலங்கள், வசுக்கள், அசுவினிகள், கந்தர்வர்கள், அசுவினிகள், யக்ஷர்கள், முனிவர்கள், தைத்திய-தானவ-நாகக் கூட்டங்கள் ஆகியவர்களைக் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிங்கிகையின் மகன்களையும், தேவர்களின் அனைத்து எதிரிகளையும், உண்மையில் பூமியில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தும், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் வயிற்றில் என்னால் காணப்பட்டன.
ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, பழங்களை உண்டு, அவனது உடலில் பல நூற்றாண்டுகள் வசித்துக் கொண்டே அங்கிருந்த முழு அண்டத்தையும் சுற்றித் திரிந்தேன். இருப்பினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, என்னால் அவனது உடலின் எல்லைகளைக் காண இயலவில்லை. ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனது உடலின் எல்லைகளைக் காண்பதில் நான் தோல்வியுற்றபோதும், மனதில் பெரும் துன்பத்துடன் நான் தொடர்ந்து சுற்றித் திரிந்தேன். பிறகு, சிந்தனையாலும் செயலாலும் நான் அந்த வரம் தரும் ஒப்புயர்வற்ற தெய்வத்திடம், அவனது மேன்மையை ஏற்றுச் சரண்டைந்தேன். நான் அப்படிச் செய்ததும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, திறந்திருந்த அந்த உயர் ஆன்மா கொண்டவனின் வாய் வழியாகக் காற்றின் பலத்தால் திடீரென நான், (அவனது உடலுக்குள் இருந்து) வெளியேற்றப்பட்டேன்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு நான், முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு சிறுவனின் உருவில், (மார்பில்) ஸ்ரீவத்ச மருவுடன் இருந்த அந்த அளவிடமுடியாத சக்தி கொண்டவன், ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அதே ஆலமரக் கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். மஞ்சள் ஆடையுடனும் {பீதாம்பரத்துடனும்}, சுடர் மிகும் பிரகாசத்துடனும், ஸ்ரீவத்ச மருவுடனும் கூடிய அந்தச் சிறுவன், என்னில் திருப்தி அடைந்து, புன்னகைத்தவாறே, "ஓ! மார்க்கண்டேயரே, ஓ! முனிவர்களில் சிறந்தவரே, எனது உடலில் சிறிது காலம் வசித்து மிகவும் களைத்திருக்கிறீர்! இருப்பினும் நான் உம்மிடம் பேசுவேன்" என்றான். என்னிடம் அவன் இப்படிச் சொன்னதும், எனக்குப் பேசுமளவுக்குப் புதிய பார்வை கிடைத்தது. அதைக் கொண்டு உலக மாயையில் இருந்து விடுபட்டு உண்மையான அறிவைப் பெற்றேன். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, அந்த அளவிட முடியாத சக்தி கொண்டவனின் வற்றாத பலத்தைச் சாட்சியாகக் கண்ட நான், அவனை வணங்கி, தாமிரம் போன்று பிரகாசமாகவும், கட்டுக்கோப்பாகவும், லேசான சிவப்பு நிறத்தில் விரல்களையும் கொண்டிருந்த அவனது உள்ளங்கால்களைக் கவனமாக எடுத்து எனது தலையில் வைத்து, அடக்கத்துடன் என் கரங்களைக் குவித்து, அவனை மரியாதையுடன் அணுகினேன். தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய, அனைத்திற்கும் ஆன்மாவான அந்தத் தெய்வீகமானவனை நான் மீண்டும் கண்டேன்.
குவிந்த கரங்களுடன் அவன் முன் வணங்கிய நான், அவனிடம், "ஓ! தெய்வீகமானவனே, நான் உன்னையும், உனது உயர்ந்த அற்புதமான மாயையும் அறிய விரும்புகிறேன். ஓ! சிறப்புமிக்கவனே, நான் உனது வாய்வழியாக உனது உடலுக்குள் நுழைந்ததும், முழு அண்டத்தையும் உனது வயிற்றில் கண்டேன். ஓ தெய்வீகமானவனே, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என உண்மையில் முழு அண்டத்திலும் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிர்கள் அனைத்தையும் உனது உடலில் கண்டேன். உனது அருளால், நிற்காமல் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் நான் உனது உடலில் திரிந்தாலும், எனது ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. ஓ! பெரும் தலைவா, நான் உனது விருப்பத்தாலேயே உனது உடலைவிட்டு வெளியே வந்தேன். எனது விருப்பத்தாலல்ல. ஓ! தாமரை இதழ் கண்கள் கொண்டவனே, குறைகளற்ற உன்னை நான் அறிய விரும்புகிறேன்! முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு, நீ ஏன் இங்குச் சிறுவனின் உருவத்தில் இருக்கிறாய்? இவை அனைத்தையும் எனக்கு விவரித்துச் சொல்வதே உனக்குத் தகும். ஓ! பாவமற்றவனே, முழு அண்ட மும் ஏன் உனது வயிற்றில் இருக்கிறது? ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, எவ்வளவு காலம் நீ இங்கிருப்பாய்? அந்தணர்களுக்குத் தகுந்த ஆவலால் உந்தப்பட்டே, ஓ அனைத்து தேவர்களுக்கும் தலைவா, இவை அனைத்தையும் உன்னிடம் இருந்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே அனைத்தையும் சரியாக அது நிகழ்ந்தவாறே, அனைத்து விவரங்களுடனும் சொல்வீராக. ஓ! தலைவா, புத்திக்கு எட்டாத அற்புதமான அவற்றை நானும் கண்டிருக்கிறேன்" என்றேன். இப்படி என்னால் சொல்லப்பட்டதும், தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான, அனைத்துப் பேச்சாளர்களில் முதன்மையான அவன், சுடரும் பிராகசத்துடனும், பெரும் அழகுடனும், எனக்குச் சரியாக ஆறுதல் அளிக்கும் வகையில் என்னிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான்.