Duryodhana, induced by Sakuni! | Vana Parva - Section 235 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
செழிப்புடன் இருக்கும் தன்னைக் காட்டி, பாண்டவர்களின் பொறாமையைத் தூண்டி அவர்களது துன்பத்தை அதிகரிக்கும்படி சகுனியும், கர்ணனும் துரியோதனனைத் தூண்டியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட சகுனி, சந்தர்ப்பம் கிடைத்த போது, கர்ணனின் துணையோடு துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான். அவன் {சகுனி}, "ஓ! பாரதா {துரியோதனா}, உனது பராக்கிரமத்தினால் வீரர்களான பாண்டவர்களை நாடு கடத்திய பிறகு, சம்பரனைக் கொன்றவன் சொர்க்கத்தை ஆண்டதைப் போல, எதிரிகள் இல்லாத இப்பூமியை ஆட்சி செய்! ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கின் மன்னர்கள் அனைவரும் உனக்குக் கப்பம் செலுத்துகின்றனர். ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, முன்பு பாண்டுவின் மகன்களுக்குச் சொந்தமாக இருந்த பிரகாசமான செழிப்பனைத்தையும், இப்போது உனது தம்பிகளுடன் கூடிய நீ அடைந்துவிட்டாய்? இந்திரப்பிரஸ்தத்தில் முன்பு யுதிஷ்டிரனிடம் இருந்த அந்தப் பிரகாசமான செழுமையை நாம் முன்பு கனத்த இதயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். ஓ! மன்னா {துரியோதனா}, இப்போது அந்தச் செல்வங்கள் உனது தம்பிகளுடன் சேர்ந்த உனக்குச் சொந்தமாகிவிட்டது. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட ஏகாதிபதி {துரியோதனா}, அரசனான யுதிஷ்டிரனிடம் இருந்து அந்தச் செழிப்பை அறிவின் பலத்தால் மட்டுமே பறித்தோம்.
ஓ! எதிரி வீரர்களைக் கொல்பவனே {துரியோதனா}, பூமியின் அனைத்து மன்னர்களும் உனக்கு அடங்கி வாழ்ந்து, முன்பு யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தது போல, இப்போது உனது கட்டளைக்காகக் காத்திருக்கின்றனர். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, மலைகள், கானகங்கள், நகரங்கள், சுரங்கங்கள், குன்றுகளுடன் கூடி, கடல்களின் சுற்றளவோடு கட்டுக்கடங்காத பரப்புக் கொண்ட பூமா தேவி இப்போது உனதாகிவிட்டாள். உனது பராக்கிரமத்தின் காரணமாக, அந்தணர்களால் புகழப்பட்டும், மன்னர்களால் வழிபடப்பட்டும், சொர்க்கத்தில் தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போல நீ பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய். ருத்திரர்களால் சூழப்பட்ட யமனைப் போலவும், மருதர்களால் சூழப்பட்ட வாசவனைப் {இந்திரனைப்} போலவும் குருக்களால் சூழப்பட்ட நீ, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் சந்திரனைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய்.
எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, எந்தக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல், எந்த அடக்குமுறைக்கும் அடிபணிந்து வாழாமல் இருந்த பாண்டுவின் மகன்கள், தங்கள் செழிப்பை இழந்திருக்கும் இந்த நேரத்தில், நாம் அவர்களைப் பார்க்க வேண்டும். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, இப்போது பாண்டவர்கள் துவைதவனத்தில் இருக்கும் தடாகத்தின் கரையில், காட்டையே தங்கள் இல்லமாகக் கொண்டு, எண்ணற்ற அந்தணர்கள் புடைசூழ வாழ்ந்து வருகிறார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம். தனது வெப்பக் கதிர்களால் அனைத்தையும் தகிக்க வைக்கும் சூரியனைப் போல, அனைத்துச் செல்வங்களுடனும் கூடிய நீ, உன்னுடைய மகிமையை பாண்டுவின் மகன்களைக் காணச் செய்து {அவர்களை}, அனலால் தகிக்க வைப்பதற்கு அவ்விடம் {அவர்கள் இருக்கும் இடத்திற்கு} செல்வாயாக. நீ நாட்டை அடைந்தவன், அவர்கள் நாட்டை இழந்தவர்கள், நீ செழிப்புடன் இருப்பதையும், அவர்கள் அதை இழந்திருப்பதையும், நீ செல்வாக்குடன் இருப்பதையும் அவர்கள் வறுமையில் இருப்பதையும் {அவர்களும், நீயும்} காண, ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்களைச் சென்று பார்.
பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் புடைசூழ, அனைத்துப் பெரிய அருளையும் அனுபவித்துக் கொண்டு, நகுஷனின் மகனான யயாதியைப் போல இருக்கும் உன்னைப் பாண்டுவின் மகன்கள் காணட்டும். ஒருவனின் நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவராலும் காணப்படும் செழிப்பு, நன்கு நிலைபெற்றதாகக் கருதப்படுகிறது. மலை மேல் இருக்கும் ஒருவன், பூமியில் தவழ்ந்து செல்பவனைக் காண்பதைப் போல, தான் செழிப்புடன் வாழும்போது, எதிரிகள் மோசமான நிலையில் வாழ்வதைக் காண்பதை விட ஒருவனுக்கு எது முழுமையான மகிழ்ச்சியை அளிக்கக்கூடும்? ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, தானம் பெறுவது, செல்வத்தை அடைவது, அல்லது நாட்டை அடைவது ஆகியவற்றைவிட, எதிரிகளின் துயரைக் கண்டு ஒருவன் அடையும் இன்பம் பெரியதாகும்.
செல்வாக்குடன் இருக்கும் ஒருவன் {நீ} மரவுரியும், மான் தோல்களையும் உடுத்தியிருக்கும் தனஞ்சயனைக் கண்டால் எந்த மகிழ்ச்சிதான் அவனுடையதாகாது {உனதாகாது}? {எல்லையற்ற மகிழ்ச்சியை அடைவாய்}. மரவுரியும், மான்தோல்களும் அணிந்து, துயரத்துடன் இருக்கும் கிருஷ்ணை {திரௌபதி}, விலையுயர்ந்த உடைகள் அணிந்திருக்கும் உனது மனைவியைக் கண்டு மேலும் துன்புறட்டும். ஆபரணங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கும் உனது மனைவியைக் காணும்போது, செல்வத்தை இழந்து துக்கத்தில் இருக்கும் துருபதன் மகள் {திரௌபதி}, சபைக்கு மத்தியில் (துச்சாசனனால் இழுத்து வரப்பட்ட போது) அடைந்த துன்பத்தை விட அதிகமான துன்பத்தை அடைந்து, தன்னையும், தன் வாழ்வையும் நிந்தனை செய்து கொள்ளட்டும்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஜனமேஜயா, மன்னனிடம் {துரியோதன்னிடம்} இப்படிப் பேசிய பிறகு, கர்ணனும் சகுனியும் {1} தங்கள் சொற்பொழிவை முடித்துக் கொண்டு அமைதியடைந்தனர்"
{1} சகுனி சொன்னதாக ஆரம்பிக்கும் வைசம்பாயனர், அந்த உரையை முடிக்கும் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் {இந்தக்குறி {} இட்ட இடத்தில்}, சகுனியும் கர்ணனும் அப்படிப் பேசியதாகச் சொல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்தப் பகுதியின் ஆரம்பத்தில் கர்ணனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு துரியோதனன் திருப்தியடைந்தான் {Having heard these words of karna, king duryodhana became highly pleased} என்று வைசம்பயானர் சொல்வதாகக் கங்குலி ஆரம்பிக்கிறார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.