A plan contrived by Karna! | Vana Parva - Section 236 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
திருதராஷ்டிரன் தன்னைத் துவைதவனம் செல்ல அனுமதிக்க மாட்டான் எனவும், அதனால், திருதராஷ்டிரன் ஏற்றுக்கொள்ளும் வகையில் அதற்கு ஒரு சிறந்த திட்டத்தைத் தீட்டுமாறும் துரியோதனன் கர்ணனைப் பணித்தது; மாட்டு மந்தைகளைக் கண்காணிக்கச் செல்கிறோம் என்று திருதராஷ்டிரனிடம் சொல்லுமாறு துரியோதனனிடம் கர்ணன் சொன்னது....
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கர்ணனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, மன்னன் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். எனினும், விரைவில், அந்த இளவரசன் {துரியோதனன்} மனச் சோர்வடைந்து, அப்படிப் பேசியவனிடம் {கர்ணனிடம்}, "ஓ! கர்ணா, நீ சொல்வது, எப்போதும் என் மனதில் இருக்கிறது. எனினும், பாண்டவர்கள் வசிக்கும் இடத்திற்குச் செல்வதற்கான அனுமதியை என்னால் பெற முடியாது. மன்னர் திருதராஷ்டிரர் எப்போது அந்த வீரர்களுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையில், தங்கள் தவங்களால் பாண்டுவின் மகன்கள் மேலும் பலமடைந்திருப்பதாக மன்னர் {திருதராஷ்டிரர்} கருதுகிறார். அல்லது, நமது நோக்கங்களைப் புரிந்திருப்பதால், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர் நமக்கு அனுமதி வழங்கமாட்டார். ஓ! பெரும் பிரகாசமிக்கவனே, துவைதவனத்தில் வனவாசத்தை மேற்கொண்டு இருக்கும் பாண்டவர்களை அழிப்பதைவிட நமக்கு வேறு எதுவும் காரியம் கிடையாது என்பதை அறிந்ததால் அவர் {திருதராஷ்டிரர்} அனுமதி வழங்க மாட்டார்.
பகடையாட்டத்தின் போது, என்னிடமும், உன்னிடமும், சுபலனனின் மகனிடமும் {சகுனியிடமும்} க்ஷத்திரி {விதுரர்} பேசிய வார்த்தைகளை நீ அறிவாய். அந்த வார்த்தைகள் அனைத்தையும், மற்றவர்கள் புலம்பியதையும் (அவரும் {விதுரரும்} பிறரும் புலம்பியதையும்) நினைத்துப் பார்த்தால், நான் போக வேண்டுமா, வேண்டாமா என்பதை என் மனதால் தீர்மானிக்க முடியவில்லை. பீமனும், பல்குனனும் {அர்ஜுனன்} கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து தங்கள் நாட்களை வனத்தில் வலியுடன் கடத்துவதை என் கண்களால் கண்டால், நிச்சயம் நான் பெரிதும் மகிழ்வேன். பாண்டுவின் மகன்கள் மரவுரி உடுத்தி மான் தோல்களை அணிந்திருப்பதைக் காணும்போது நான் அடையும் மகிழ்ச்சியை, இந்த முழு உலகின் ஆட்சியும் நான் பெறும்போது கூட அடைய மாட்டேன். ஓ! கர்ணா, துருபதன் மகள் {திரௌபதி} அந்த வனத்தில் சிவப்புக் கந்தலாடை அணிந்திருப்பதைக் காண்பதை விட என்ன மகிழ்ச்சி எனக்குப் பெரிதாக இருக்கும்?
பாண்டுவின் மகன்களான யுதிஷ்டிரனும் பீமனும், நான் பெரும் செல்வாக்கு அடைந்திருப்பதைக் கண்டால்தான், எனது வாழ்வின் பெரிய இலக்கை அடைந்த நிறைவைக் கொள்வேன். எனினும், நான் கானகத்திற்குச் செல்வதற்கான வழிகளைக் காணவில்லை. உண்மையில், நான் அங்குச் செல்வதற்கு, எதைக் கொண்டு மன்னரின் அனுமதியைப் பெற முடியும்! எனவே, நாம் கானத்திற்குச் செல்லும் வகையில், சுபலனின் மகனோடும் {சகுனியோடும்}, துச்சாசனனோடும் சேர்ந்து ஒரு திறமை வாய்ந்த திட்டத்தை முயன்று கண்டுபிடி {திறமையான திட்டத்தை உருவாக்கு}! நானும், நான் அங்குச் செல்வதா வேண்டாமா என்று எனது மனதில் உறுதி செய்து கொண்டு, நாளை மன்னரின் முன்னிலைக்குச் செல்கிறேன். குருக்களில் சிறந்தவரான பீஷ்மரோடு நான் அமர்ந்திருக்கும்போது, நீ சகுனியோடு சேர்ந்து நீங்கள் உருவாக்கிய திட்டத்தை முன்மொழி. பயணம் குறித்துப் பீஷ்மர் மற்றும் மன்னரின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, எங்கள் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} வேண்டிக் கொண்டு அனைத்தையும் தீர்மானிக்கிறேன்" என்றான் {துரியோதனன்}.
"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிய அவர்களை அனைவரும் தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்று விட்டனர். இரவு கடந்ததும், கர்ணன் மன்னனிடம் {துரியோதனனிடம்} வந்தான். அவனிடம் வந்த கர்ணன் சிரித்துக் கொண்டே துரியோதனனிடம், "என்னால் ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, அதைக் கேள்! நமது மந்தைகள் {இடைச்சேரிகள்} துவைதவனக் காட்டில் உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன! ஆடுமாடுகளின் மந்தைகளைக் கண்காணிக்கிறோம் என்ற சாக்கைச் சொன்னால், நிச்சயம் நாம் அனைவரும் அங்கே செல்லலாம். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, மாட்டு மந்தைகளுக்கு மன்னர்கள் அடிக்கடி செல்வது {கோஷ யாத்திரை செல்வது} முறையே. ஓ! இளவரசே {துரியோதனா}, இதுவே நோக்கமாக முன்மொழியப்பட்டால், உனது தந்தை நிச்சயம் உனக்கு அனுமதி வழங்குவார்!" என்றான்.
துரியோதனனும் கர்ணனும் இப்படிச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கையில், சகுனி அவர்களிடம் "அங்குச் செல்வதற்கு, இந்தத் திட்டத்தையே சிரமமற்றது என நானும் கண்டேன்! மன்னர் {திருதராஷ்டிரர்} நமக்கு நிச்சயம் அனுமதி வழங்குவார். மேலும் அவரே நம்மைப் போகும்படியும் ஏவுவார். நமது மந்தைகள் அனைத்தும் துவைதவனக் காடுகளில் உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. மாட்டு மந்தைகளைக் கண்காணிக்கச் செல்கிறோம் என்ற சாக்கில் நாம் அனைவரும் அங்குச் செல்வோம் என்பதில் ஐயமில்லை" என்றான் {சகுனி}.
பிறகு அவர்கள் மூவரும் சிரித்து, ஒருவருக்கொருவர் கைகளைக் கொடுத்தனர். ஒரு தீர்மானத்தை அடைந்த அவர்கள், குருக்களின் தலைவனைக் {திருதராஷ்டிரனைக்} காணச் சென்றனர்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.