"I fled before thy eyes" said Karna! | Vana Parva - Section 245 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தோற்றுத் திரும்பிய துரியோதனன் ஓரிடத்தில் தனது படைகளை நிறுத்தியது; அங்கே கர்ணன் வந்து துரியோதனனைச் சந்தித்து; துரியோதனன் வெற்றியடைந்து திரும்பியிருப்பதாக எண்ணிய கர்ணன் துரியோதனனை மெச்சி கொண்டது ...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "தோல்வியுற்று, எதிரியால் சிறைபிடிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து தான் பாண்டுவின் சிறப்புமிக்க மகன்களின் {பாண்டவர்களின்} ஆயுத சக்தியால் விடுவிக்கப்பட்ட பிறகு, எப்போதும் பாண்டுவின் மகன்களை அவமதிப்பதில் ஈடுபட்டு, தனது சொந்த மேன்மையைத் தற்புகழ்ச்சி செய்து கொள்பவனும், கர்வமும், தீய எண்ணமும், தற்புகழ்ச்சி நிறைந்தவனும், கொடூரம் நிறைந்தவனும், ஆணவம் நிறைந்தவனும், பாதகனுமான துரியோதனன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்தது கடினமானதாக எனக்குத் தோன்றுகிறது. ஓ! வைசம்பாயனரே, அவமானத்தில் மூழ்கி, துயரத்தால் மனம் கலங்கியவனுமான அந்த இளவரசன் {துரியோதனன்}, அந்தத் தலைநகருக்குள் எப்படி நுழைந்தான் என்பதை எனக்கு விரிவாகச் சொல்லும்" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் விடுவிக்கப்பட்ட திருதராஷ்டிரன் மகனான சுயோதனன் {துரியோதனன்}, அவமானத்தால் சிரம் தாழ்த்தி, துன்பத்தாலும், மனச்சோர்வாலும் பாதிக்கப்பட்டு மெதுவாகக் கிளம்பினான். தனது நால்வகைப் படைகளுடன் தனது நகரத்தை நோக்கி முன்னேறிய அந்த மன்னன் {துரியோதனன்}, இதயம் நிறைந்த துயரத்துடனும், தன் தோல்வி குறித்த சிந்தனைகளில் மூழ்கியபடியும், நீரும் புற்களும் நிறைந்த வழியில் சென்றான். தனக்குத் திருப்தியான ஒரு இனிமையான இடத்தில் அந்த மன்னன் {துரியோதனன்}, தனது யானைகள், தேர்கள், குதிரைப்படை மற்றும் காலாட்படைகளைச் சுற்றிலும் நிறுத்தி வைத்தான். நெருப்பின் பிரகாசத்துடன் கூடிய உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த மன்னன் துரியோதனன், விடியற்காலை நேரத்தில், கிரகணத்தில் மூழ்கிய சந்திரனைப் போல இருந்த போது, கர்ணன் அவனை {துரியோதனனை} அணுகி, "ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, நற்பேறால் உயிருடன் இருக்கிறாய்! நற்பேறாலேயே மீண்டும் நாம் சந்திக்கிறோம்! நினைத்த உருவை ஏற்கவல்ல கந்தர்வர்களை நீ வீழ்த்தியது நற்பேறாலேயே. ஓ! குரு குலத்தின் மகனே {துரியோதனா}, நற்பேறாலேயே, பெரும் பலமிக்க வீரர்களான உனது தம்பிகள் அனைவரும், எதிரிகளை அடக்கி வெற்றிவாகையுடன் திரும்பி வருவதை என்னால் காண முடிந்தது!
என்னைப் பொறுத்தவரையில், கந்தர்வர்கள் அனைவராலும் தாக்கப்பட்டு, சிதறி ஓடும் நமது படையை நிலைநிறுத்த இயலாமல், உன் கண்களுக்கு முன்பே நான் தப்பி ஓடினேன். முழுப் பலத்தையும் பயன்படுத்தி எதிரியால் தாக்கப்பட்டு, அவர்களது கணைகளால் எனது உடல் சிதைக்கப்பட்டு விடாமல், தப்பி ஓடி பாதுகாப்பைப் பெற முயன்றேன். எனினும், ஓ! பாரதா {துரியோதனா}, உங்கள் மனைவியருடனும், துருப்புகளுடனும், வாகனங்களுடன் அந்த மனிதசக்திக்கு அப்பாற்பட்ட மோதலில் இருந்து அனைவரும் உடல் நலத்துடன் பாதுகாப்பாக வந்திருக்கும் உங்களின் இச்செயல் பெரும் அதிசயமாகும். ஓ! பாரதா {துரியோதனா}, இன்று போர்க்களத்தில் நீ உனது தம்பிகளுடன் சாதித்திருப்பதை, ஓ! மன்னா {துரியோதனா}, உலகில் மற்றொரு மனிதனால் சாதிக்க முடியாது" என்றான் {கர்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் துரியோதனன், அந்த அங்கர்களின் {அங்க தேச மக்களின்} ஆட்சியாளனிடம் {கர்ணனிடம்}, கண்ணீரால் அடைபட்ட குரலுடன் மறுமொழி கூறினான்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.