Duryodhana liberated! | Vana Parva - Section 244 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
துரியோதனனை ஏன் சிறைப்பிடித்தான் என்பதைச் சித்திரசேனன் அர்ஜுனனிடம் கூறியது; யுதிஷ்டிரனிடம் துரியோதனன் விலங்குடன் அழைத்துச் செல்லப்பட்டது; யுதிஷ்டிரன் துரியோதனனை விடுவித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சுடர்மிகும் பிரகாசமிக்க அந்தப் பலமிக்க வில்லாளியான அர்ஜுனன், கந்தர்வப்படைக்கு மத்தியில் சித்திரசேனனிடம் சிரித்துக் கொண்டே, "ஓ! வீரனே, கௌரவர்களை நீ தண்டிக்கும் நோக்கம் என்னது?" என்று கேட்டான்.
அதற்குச் சித்திரசேனன் {அர்ஜுனனிடம்} , "ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, எனது வசிப்பிடத்தை விட்டு அசையாமலேயே, நான் இந்தத் தீய துரியோதனனும், கேடுகெட்ட கர்ணனும் இங்கே வருவதற்கான காரணத்தை அறிந்தேன். கவனிக்க யாருமற்றவர்கள் போல, நீங்கள் வனவாசத்தை மேற்கொண்டிருப்பதையும், அதனால் நீங்கள் பெரும் துன்பங்கள் அனுபவிப்பதையும், தான் செழிப்புடன் இருப்பதையும் அறிந்த இந்தப் பாதகன் {துரியோதனன்}, நீங்கள் துயரத்திலும், துரதிர்ஷ்டத்திலும் மூழ்கியிருப்பதைக் காண விரும்பியே இங்கு வந்தான். உங்களையும், சிறப்புமிக்கத் துருபதன் மகளையும் {திரௌபதியையும்} கேலி செய்யவே இங்கே வந்தனர். அவர்களது நோக்கங்களை உறுதி செய்த தேவர்கள் தலைவன் {இந்திரன்}, என்னிடம், " நீ சென்று, துரியோதனனையும், அவனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்} சங்கிலியில் பிணைத்து இங்கே கொண்டு வா. தனஞ்சயன் {அர்ஜுனன்} உனது அன்புக்குரிய நண்பனும், சீடனும் ஆனதால், போர்க்களத்தில், அவனும் {அர்ஜுனனும்}, அவனது சகோதரனும் உன்னால் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று சொன்னான். தேவர்கள் தலைவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நான் இங்கே வேகமாக விரைந்து வந்தேன். இந்தத் தீய இளவரசனும் {துரியோதனனும்} சங்கிலியில் பிணைக்கப்பட்டான். நான் இப்போது, தேவலோகம் செல்வேன். பகனைக் கொன்றவனுடைய {பாகசாசனான இந்திரனுடைய} உத்தரவின் பேரில் இந்தத் தீயவனைக் கொண்டு செல்வேன்" என்றான்.
அதற்கு அர்ஜுனன், "ஓ! சித்திரசேனா, எனக்கு ஏற்புடையதை நீ செய்ய விரும்பினால், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் கட்டளைக்கிணங்க எங்கள் சகோதரனான சுயோதனனை {துரியோதனனை} விடுதலை செய்!" என்றான்.
சித்திரசேனன் {அர்ஜுனனிடம்}, "இந்த இழிந்த பாவி எப்போதும் கர்வம் நிறைந்தவனாக இருப்பவன். விடுதலைக்கு இவன் தகுந்தவனில்லை. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இவன் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் கிருஷ்ணை {திரௌபதி} ஆகிய இருவருக்கும் தீங்கிழைத்திருக்கிறான். குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இந்தப் பாதகன் {துரியோதனன்} ஏன் இங்கு வந்தான் என்பதை இன்னும் அறியான். எனவே, அனைத்தையும் அறிந்த பிறகு, மன்னனே {யுதிஷ்டிரனே}, தான் விரும்பியதைச் செய்யட்டும்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதற்குப் பிறகு, அவர்கள் அனைவரும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் சென்றனர். மன்னனிடம் சென்ற பிறகு, அவர்கள் துரியோதனனின் நடத்தைகள் குறித்த அனைத்தையும் அவனிடம் தெரிவித்தார்கள். கந்தர்வர்கள் சொன்ன அனைத்தையும் கேட்ட அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, அனைத்து கௌரவர்களையும் விடுவித்து, கந்தர்வர்களைப் பாராட்டினான். பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, "பெரும் பலத்தைக் கொடையாகக் கொண்டிருந்தும் நீங்கள், திருதராஷ்டிரரின் இந்தத் தீய மகனையும், அவனது ஆலோசகர்கள் மற்றும் உறவினர்களையும் இன்னும் கொல்லாமல் வைத்திருந்தது நாங்கள் செய்த நற்பேறாகும். ஓ! ஐயா, இது கந்தர்வர்கள் எனக்குச் செய்த மிகப்பெரிய கருணையாகும். இந்தத் துன்மார்க்கனை விடுவித்ததால் என் குடும்ப மதிப்பும் காக்கப்பட்டது. உங்கள் அனைவரையும் கண்டு நான் மகிழ்கிறேன். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தையும் பெற்றுக் கொண்ட பிறகு, எங்கிருந்து வந்தீர்களோ அங்கே நீங்கள் திரும்புங்கள்" என்றான் {யுதிஷ்டிரன்}.
பாண்டுவின் புத்திசாலி மகனால் {யுதிஷ்டிரனால்} இப்படிச் சொல்லப்பட்ட கந்தர்வர்கள் மிகவும் மகிழ்ந்து, அப்சரசுகளுடன் சேர்ந்து அங்கிருந்து சென்று விட்டார்கள். பிறகு அந்த இடத்திற்குத் தேவர்கள் தலைவன் {இந்திரன்} வந்து, குருக்களுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட கந்தர்வர்கள் மீது தெய்வீக அமுதத்தைத் தெளித்து அவர்களை மீட்டெடுத்தான் {உயிர்ப்பித்தான்}. அரச குடும்பத்தின் மகளிரையும், தங்கள் உறவினர்களையும் விடுவித்து, (கந்தர்வப் படையை வீழ்த்தி} செயற்கரிய செயலைச் செய்த பாண்டவர்கள், அதனால் மிகவும் திருப்தியடைந்தனர். தங்கள் மகன்கள் மற்றும் மனைவியரோடு கூடிய குருக்களால் வழிபடப்பட்ட சிறப்புமிக்கவர்களும், பலம்வாய்ந்தவர்களுமான அந்தப் போர்வீரர்கள் {பாண்டவர்கள்}, வேள்வி மண்டபத்தில் சுடர்விடும் நெருப்பைப் போலச் சுடர்விட்டுப் பிரகாசித்தனர். பிறகு, பாசத்தால், தன் சகோதரர்களுடன் கூடி விடுதலை அடைந்த துரியோதனனிடம் யுதிஷ்டிரன், "ஓ! குழந்தாய், மீண்டும் இது போன்ற மூர்க்கச் செயலை ஒருபோதும் செய்யாதே. ஓ பாரதா {துரியோதனா}, மூர்க்கமானவன் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைந்ததில்லை. ஓ! குரு குலத்தின் மகனே {துரியோதனா}, உனது தம்பிகளுடன் மகிழ்ச்சியாக இரு. மனவருத்தம் {விரக்தி} மற்றும் உற்சாகமின்மைக்கு உன்னை இழக்காமல், உனது விருப்பப்படி, உன் தலைநகருக்குச் செல்" என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படிப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} விடுவிக்கப்பட்ட மன்னன் துரியோதனன், பிறகு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை வணங்கி, அவமானத்தில் மூழ்கி, இதயம் இரண்டாகப் பிளப்பபட்டு, உயிரற்ற ஒருவனைப் போல, இயந்திரத்தனமாகத் தனது தலைநகரை நோக்கிச் சென்றான். அந்தக் கௌரவ இளவரசன் {துரியோதனன்} சென்றதும், குந்தியின் மகனான வீரமிக்க யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் கூடி அந்தணர்களை வணங்கினான். பிறகு, துறவை செல்வமாகக் கொண்ட அந்த அந்தணர்களால் சூழப்பட்ட அவன் {யுதிஷ்டிரன்}, தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் சக்ரனைப் {இந்திரனைப்} போல, அந்தத் துவைதவனத்தில் தனது நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்தான்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.