"Give back unto the sons of Pritha their kingdom!" said Sakuni! | Vana Parva - Section 249 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பாண்டவர்களுக்கு நாட்டைத் திருப்பிக் கொடுத்து அவர்களுடன் நட்போடு பழகு என்று சகுனி துரியோதனனுக்குச் சொன்னது; துரியோதனனைத் தேற்றி, தற்கொலை எண்ணத்தில் இருந்து அவனை மீட்க சகுனி செய்த முயற்சி; இறப்பதில் உறுதியாக இருந்த துரியோதனன் உணவைத் துறந்து அமர்ந்தது; தைத்தியர்களும் தானவர்களும் துரியோதனனை பாதாள லோகத்திற்குக் கொண்டு சென்றது…
அசுரர்கள் துரியோதனன் சந்திப்பு |
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவமானத்தைத் தாங்க முடியாமல் உணவைத் துறந்து உயிரை விடத் தீர்மானித்து அமர்ந்திருந்த மன்னன் துரியோதனனைக் கண்ட சுபலனின் மகனான சகுனி ஆறுதலாக இவ்வார்த்தைகளை அவனிடம் {துரியோதனனிடம்} கூறினான். சகுனி, "ஓ! குரு குலத்தின் மகனே, கர்ணன் என்ன சொன்னான் என்பதை இப்போதுதான் கேட்டாய். உண்மையில் அவனுடைய {கர்ணனின்} வார்த்தைகள் ஞானம் நிரம்பியவையாக இருந்தன. ஓ! மன்னா {துரியோதனா}, அற்பமான காரியத்துக்காக உனது உயிரை விடத்துணிந்து, உனக்காக நான் வென்ற உயர்ந்த செழிப்பை முட்டாள்த்தனமாக ஏன் கைவிடுகிறாய்? நீ மூத்தவர்களுக்காக எப்போதும் காத்ததில்லை என்பதை இன்றே நான் கண்டு கொண்டேன். திடீர் இன்பத்தையோ, திடீர் துன்பத்தையோ கட்டுப்படுத்தத்தெரியாதவன், ஏற்கனவே செழிப்பை அடைந்தவனாக இருந்தாலும், சுடப்படாத மண் குடத்தைத் தண்ணீரில் இட்டது போலவே அது {அவனிடமிருந்து} தொலைந்து போகும்.
துணிச்சலற்று, ஆண்மையின் சிறு பொறி கூட இல்லாது, அலட்சியப் போக்குக்கு அடிமையாக, எப்போதும் புத்தியற்றவனாக, சிற்றின்பங்களுக்கு அடிமையாக இருக்கும் ஒரு மன்னன், எப்போதும் தனது குடிகளால் மதிக்கப்படுவதில்லை. நன்மையையே அடைந்த உனக்கு, இந்தக் காரணமற்ற சோகம் ஏன் வந்தது? {நடந்த சம்பவங்களை நினைத்து} மகிழ்ச்சி அடைந்து, பாண்டவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டிய நீ, ஓ மன்னா {துரியோதனா} ஏன் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? இந்த உனது நடத்தை உண்மையில் நிலையற்றதாகும். உற்சாகமாக இரு. உனது உயிரைத் துறக்காதே. ஆனால் அவர்கள் {பாண்டவர்கள்} உனக்குச் செய்த நன்மையை எண்ணி இதயத்தால் மகிழ்ந்து நினைத்துப் பார். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, அவர்களது நாட்டைத் திருப்பிக் கொடு. அத்தகு நடத்தையால், அறத்தையும் புகழையும் வெல். இவ்வழியில் செயல்படுவதால், நீ பெருமையடைவாய். நட்புடன் இருந்து பாண்டவர்களுடன் சகோதர உறவுநிலையை நிறுவு. நீ மகிழ்ச்சியை அடைய வேண்டுமானால், அவர்களது {பாண்டவர்களின்} தந்தை வழி நாட்டை அவர்களுக்குக் கொடு" என்றான் {சகுனி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சகுனியின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் முன்னால் சகோதரப்பாசத்தின் அன்பால் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் வீரமிக்கத் துச்சாசனனைக் கண்ட மன்னன் {துரியோதனன்}, துச்சாசனனை எழுப்பி, தனது பருத்த கரங்களால் அவனை வாரி அணைத்து, பாசத்தால் அவனது தலையை முகர்ந்து பார்த்தான். கர்ணன் மற்றும் சுபலன் {சகுனி} ஆகியோரது இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன் எப்போதையும் விட அதிகமாக நம்பிக்கை இழந்து, அவமானத்தில் மூழ்கினான். நம்பிக்கையற்ற தன்மை அவனது ஆன்மாவை வென்றது. தன் நண்பர்கள் சொன்னது அனைத்தையும் கேட்ட அவன் சோகத்துடன், "அறம், செல்வம், நட்பு, செழுமை, ஆட்சி, கேளிக்கைகள் ஆகியவற்றால் எனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எனது நோக்கத்தைத் தடை செய்யாது, அனைவரும் என்னை விட்டுச் செல்லுங்கள். உணவைத் துறந்து உயிரை விடுவதில் உறுதியான தீர்மானத்தோடு இருக்கிறேன். நகரத்திற்குத் திரும்பி, எனக்கு மூத்தவர்களை மரியாதையோடு நடத்துங்கள்" என்றான் {துரியோதனன்}.
அவனால் இப்படிச் சொல்லப்பட்டது, அவர்கள் அனைவரும் எதிரிகளை அழிக்கும் அந்த மன்னனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதா {துரியோதனா}, உன் வழி எதுவோ, அதுவே எங்களுடையதுமாகும். நீ இல்லாமல் நாங்கள் எப்படி நகரத்துக்குள் நுழைய முடியும்?" என்றனர்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நண்பர்கள், அமைச்சர்கள், தம்பிகள், உறவினர்கள் ஆகியோர் எப்படிச் சொல்லிப் பார்த்தும், அந்த மன்னன் {துரியோதனன்}, தனது நோக்கத்தில் இருந்து வழுவவில்லை. அவனது நோக்கத்திற்கு ஏற்ப திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்}, பூமியில் தர்ப்பை புற்களைப் பரப்பி, நீரைத் தொட்டுத் தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு, அந்த இடத்தில் அமர்ந்தான். மரவுரி மற்றும் தர்ப்பை புற்களை ஆடையாக உடுத்தி அவன் உயர்ந்த நோன்பைக் கடைப்பிடித்தான். {மௌன விரதம் மேற்கொண்டு} அனைத்துப் பேச்சையும் நிறுத்திய அந்த மன்னர்களில் புலி {துரியோதனன்}, சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பி, வெளி விவகாரங்களை அனைத்தையும் விலக்கி வழிபாட்டையும் வேண்டுதலையும் ஆரம்பித்தான்.
அதே வேளையில், பழங்காலத்தில் தேவர்களால் வீழ்த்தப்பட்டுப் பாதாள லோகங்களில் வாழும் தைத்தியர்களும் தானவர்களும், துரியோதனனின் நோக்கத்தை உறுதி செய்து கொண்டு, மன்னன் {துரியோதனன்} இறந்தால், தங்கள் பக்கம் பலவீனமடையும் என்பதை அறிந்து, துரியோதனனைத் தங்கள் முன்னிலைக்குக் கொண்டு வர, ஒரு வேள்வியைச் செய்தனர். மந்திரங்களை அறிந்தவர்கள், ஏற்கனவே பிருஹஸ்பதியாலும், உசானசாலும் {சுக்கிராச்சாரியராலும்} தீர்மானிக்கப்பட்டிருந்த சூத்திரங்களின் உதவியுடன், மந்திரங்களாலும், வேண்டுதல்களாலும் அடையத்தக்க வகையில், அதர்வ {அதர்வண} வேதத்திலும், உபநிஷத்களிலும் சொல்லப்பட்டுள்ள {நவகுண்டீ} சடங்குகளைச் செய்தனர். வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கு அறிந்த, கடும் நோன்புகள் கொண்ட அந்தணர்கள், கவனம் நிறைந்த ஆன்மாவுடன், நெருப்பில் தெளிந்த நெய்யையும் பாலையும் நீர்க் காணிக்கையாக மந்திரங்கள் சொல்லி ஊற்ற ஆரம்பித்தனர்.
அச்சடங்குகள் முடிந்த போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு விசித்திரமான தேவதை {பேய்}, தன் வாயை அகல விரித்த படி (வேள்வி நெருப்பிலிருந்தபடி), "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டது. இதயத்தில் நல்ல மகிழ்ச்சியை அடைந்த தைத்தியர்கள் அவளிடம் {கிருத்தியை = ஏவியதைச் செய்யும் தேவதை}, "திருதராஷ்டிரனின் மகனான மன்னன் {துரியோதனன்} இப்போது, உயிரைத் துறப்பதற்காக உண்ணா நோன்பு நோற்றிருக்கிறான். அவனை இங்கே கொண்டு வா" என்று கட்டளையிட்டனர். இப்படிக் கட்டளையிடப்பட்ட அவள், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி சென்றுவிட்டாள். கண் இமைக்கும் நேரத்தில் சுயோதனன் {துரியோதனன்} இருக்கும் இடத்தை அவள் அடைந்தாள். மன்னனை பாதாள லோகத்திற்கு நொடிப்பொழுதில் கொண்டு வந்த அவள், அதைத் தானவர்களிடம் தெரிவித்தாள். இரவு வேளையில் தங்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட மன்னனைக் {துரியோதனனைக்} கண்ட தானவர்கள் ஒன்று கூடி, இதயத்தால் அவர்கள் அனைவரும் நன்கு மகிழ்ந்து, அம்மகிழ்ச்சியால் கண்கள் அகன்று, இந்தப் புகழ்ச்சி வார்த்தைகளை {முகத்துதியை} துரியோதனனிடம் பேசினர்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.