The soul of the slain Naraka hath assumed the form of Karna! | Vana Parva - Section 250 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தானவர்களும் தைத்தியர்களும் துரியோதனனுக்குத் தாங்கள் எவ்வாறெல்லாம் உதவ முடியும் என்று சொன்னது; கர்ணன் நரகாசுரனின் ஆன்மா கொண்டவன் என்று சொன்னது; உயிரைத் துறக்கும் முடிவைக் கைவிடச் சொல்லி மீண்டும் துரியோதனனை அதே இடத்தில் விட்டது; நடந்தது அத்தனையும் கனவெனத் துரியோதனன் நினைத்தது; கர்ணன் துரியோதனனுக்குச் சொன்ன வார்த்தைகள்; துரியோதனன் தனது சொந்த நகரத்திற்குத் திரும்பியது…
தானவர்கள் {துரியோதனனிடம்}, "ஓ! சுயோதனா, ஓ! பெரும் மன்னா! ஓ! பாரதக் குலத்தைத் தழைக்க வைப்பவனே, நீ எப்போதும் வீரர்களாலும், சிறப்பு மிகுந்த மனிதர்களாலும் சூழப்பட்டு இருக்கிறாய். பிறகு ஏன் நீ பட்டினி நோன்பு எனும் இத்தகு மூர்க்கச் செயலைச் செய்கிறாய்? தற்கொலை எப்போதுமே நம்மை நரகத்திலேயே ஆழ்த்தும். மேலும் நம்மை இகழ்ச்சி பேச்சுக்குப் பாத்திரமாக வைக்கும். புத்திக்கூர்மையுள்ள மனிதர்கள், தங்கள் சிறந்த விருப்பங்களுக்கு எதிராக, தங்கள் நோக்கங்களின் வேரையே தாக்கும் பாவம் நிறைந்த செயல்களில் கை வைக்க மாட்டார்கள். எனவே, ஓ! மன்னா, அறநெறிகள், லாபம், மகிழ்ச்சி, புகழ், பராக்கிரமம், சக்தி ஆகியவற்றுக்கு அழிவைத் தந்து, எதிரிக்கு மகிழ்ச்சியைத் தரும் உனது இந்தத் தீர்மானத்தில் இருந்து பின்வாங்கு. ஓ! மேன்மையான மன்னா {துரியோதனா}, உனது உடலை உண்டாக்கிய உனது ஆன்மாவின் தெய்வீக மூலத்தைத் தெரிந்து கொண்டு, உண்மையை அறிந்து கொள். பிறகு பொறுமையை உனது உதவிக்கு அழைத்துக் கொள்.
பழங்காலத்தில் ஓ! மன்னா {துரியோதனா}, பெரும் ஆன்ம தவங்கள் செய்து நாங்கள் உன்னை மகேஸ்வரனிடம் {சிவனிடம்} இருந்து அடைந்தோம். உனது உடலின் மேல் பகுதி {தொப்புளுக்கு மேலே} வஜ்ரக் குவியலால் செய்யப்பட்டது. எனவே, ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, அஃது எவ்வகை ஆயுதத்தாலும் பாதிப்படையாது. பெண்களின் இதயங்களைக் கவரும் ஈர்ப்புடன் உடைய உனது உடலில் கீழ்ப்பகுதி {தொப்புகளுக்குக் கீழே}, மலர்களைக் கொண்டு மகாதேவரின் மனைவியால் செய்யப்பட்டது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, இப்படியே உனது உடல் மகேஸ்வரனாலும் அவனது தேவியாலும் {உமையாலும்} படைக்கப்பட்டதாகும். எனவே, ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, நீ மனிதனல்ல; தெய்வீகத் தன்மை கொண்டவனாவாய். பகதத்தனின் தலைமையில் உள்ள பெரும் பலம் கொண்ட மற்ற வீரமிக்க க்ஷத்திரியர்கள் அனைவரும், தெய்வீக ஆயுதங்களைப் பெற்றிருப்பதால், உனது எதிரிகளைக் கொல்வார்கள். எனவே, உனது இந்தத் துயரத்தை நிறுத்து. நீ அஞ்சத்தக்க காரணம் ஏதுமில்லை. உனக்கு உதவி செய்வதற்காகப் பல வீரமிக்கத் தானவர்கள் பூமியில் பிறந்திருக்கிறார்கள்.
மற்ற அசுரர்களும், பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் பிறரைப் பீடிக்க இருக்கின்றனர். அவ்வசுரர்களின் பிடிக்குள் இருக்கும் அந்த வீரர்கள், உனது எதிரிகளுடன் போரிடும்போது, தங்கள் கருணையைக் கைவிடுவார்கள். உண்மையில் அந்தத் தானவர்கள் அவர்களின் இதயத்திற்குள் நுழைந்து, அவர்களை முழுதும் பீடித்ததும், அனைத்துப் பாசங்களையும் தூக்கியெறிந்தவர்களார், இதயத்தில் கடுமையை நிறைத்துக் கொள்ளும் அவ்வீரர்கள், போரில் தங்களை எதிர்த்து வரும் மகன்கள், சகோதரர்கள், தந்தைகள், நண்பர்கள், சீடர்கள், உறவினர்கள் ஆகியோரை மட்டுமல்ல குழந்தைகள், முதியவர்கள் ஆகியோரையும்கூட அடிப்பார்கள். அறியாமையாலும், கோபத்தாலும் குருடாகி, படைப்பாளனால் விதிக்கப்பட்ட விதியால் உந்தப்பட்ட இந்த மனிதப் புலிகளின் இதயங்கள் பாவத்தில் நுழைந்து, ஓ! குருக்களில் முதன்மையானவனே {துரியோதனா}, தங்கள் அனைத்துவகை ஆயுதங்களையும் ஆண்மையுடனும், பலத்துடனும் வீசி உலகை மக்கள் தொகையற்றதாக்குவார்கள். மேலும் அவர்கள் ஒருவரிடம் ஒருவர், "நீ என்னிடம் இருந்து இன்று உயிருடன் தப்பிக்க மாட்டாய்" என்று கர்வத்தோடு பேசுவார்கள். எண்ணிக்கையில் ஐந்து பேரான பாண்டுவின் சிறப்புமிக்க இந்த மகன்கள், இவர்கள் அனைவருடனும் போரிடுவார்கள். விதியின் உதவியால் பலம் பொருந்தி அவர்கள் {பாண்டவர்கள்}, இவர்களது அழிவுக்கு வழிவகுப்பார்கள்.
ஓ! மன்னா {துரியோதனா}, க்ஷத்திரிய வகையில் பிறந்துள்ள தைத்தியர்களும் ராட்சசர்களும், போர்க்களத்தில், கதாயுதங்கள் {maces}, தண்டங்கள் {clubs}, ஈட்டிகள் {lances}, மற்றும் மேன்மையான பல வகை ஆயுதங்களைக் கொண்டும் உனது எதிரிகளுடன் பெரும் வீரத்துடன் போரிடுவார்கள். ஓ! வீரா, அர்ஜுனனைக் குறித்து உனது இதயத்தில் இருக்கும் அச்சத்திற்காக, அர்ஜுனனைக் கொல்லும் வழிகளை ஏற்கனவே நாங்கள் தீர்மானித்து வைத்திருக்கிறோம். கொல்லப்பட்ட நரகனின் ஆன்மா கர்ணனின் வடிவை அடைந்திருக்கிறது. தனது பழைய பகைமையை நினைவுகூரும் அவன் {கர்ணன் வடிவில் இருக்கும் நரகாசுரன்}, கேசவனுடனும் {கிருஷ்ணனுடனும்}, அர்ஜுனனுடனும் மோதுவான். அடிப்பவர்களில் முதன்மையான அந்தப் பலமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, தனது பராக்கிரமத்தில் கர்வம் கொண்ட அர்ஜுனனையும், உனது எதிரிகள் அனைவரையும் போர்க்களத்தில் வீழ்த்துவான். இவையாவற்றையும் அறிந்த வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்}, அர்ஜுனனைக் காக்க விரும்பி, மாற்றுருவம் கொண்டு வந்து கர்ணனிடம் இருந்து காது குண்டலங்களையும், கவசத்தையும் கவர்ந்து செல்வான்.
அந்தக் காரணத்திற்காகவே, நாங்கள் நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் {லட்சக்கணக்கான} சம்சப்தகர்கள் [1] என்ற பெயரால் அறியப்படும் தைத்தியர்களையும், ராட்சசர்களையும் நியமித்திருக்கிறோம். இந்தக் கொண்டாடப்படும் வீரர்கள், வீரனான அந்த அர்ஜுனனைக் கொல்வார்கள். எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, வருந்தாதே. ஓ! ஏகாதிபதி, எதிரியற்ற முழு உலகை நீ ஆள்வாய். சோர்வுக்கு இடம் கொடுக்காதே. இது போன்ற நடத்தை உனக்குப் பொருந்தாது. ஓ! குரு குலத்தவனே {துரியோதனா}, நீ இறந்துவிட்டால், நமது கட்சி பலவீனமடையும். செல், ஓ! வீரா, உனது மனதில் வேறு வகையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதே. நீயே எங்களுக்கு எப்போதும் புகலிடம், பாண்டவர்கள் தேவர்களுக்குப் புகலிடமாக இருக்கிறார்கள்" என்றனர்.
[1] "வெற்றி அல்லது மரணம் என்ற சபதமேற்றிருக்கும் வீரர்கள். ஒரு முழு அக்ஷௌஹிணி இருந்த இவர்கள் கிருஷ்ணனிடம் இருந்தார்கள். இவர்களைக் கிருஷ்ணன் துரியோதனனுக்காகப் போரிட அவனுக்கு {துரியோதனனுக்குக்} கொடுத்தான். ஒரு புறத்தில் போரிடுவதில்லை என்று சபதமேற்று ஆலோசகராக மட்டும் இருக்கும் தானும் {கிருஷ்ணனும்}, மறுபுறத்தில் அவர்களும் {சம்சப்தகர்களும்} என்ற தேர்வை, கிருஷ்ணன் தானம் கேட்டு வந்த துரியோதனனுக்குக் கொடுத்தான் என்ற கதை உத்யோக பர்வத்தில் முழுமையாக வருகிறது. துரியோதனன் தனது முட்டாள்த்தனத்தால் படைகளை ஏற்றான், முடிவில் அர்ஜுனன் அவர்கள் அனைவரையும் கொன்றான்" என்கிறார் கங்குலி
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவனிடம் {துரியோதனனிடம்} இப்படிப் பேசிய அந்தத் தைத்தியர்கள், மன்னர்களில் யானையான அவனை {துரியோதனனை} அணைத்துக் கொண்டனர். பிறகு தானவர்களில் காளையரான அவர்கள் ஒடுக்கப்பட முடியாத அவனைத் {துரியோதனனைத்} தங்கள் மகனைப் போல நினைத்து உற்சாகமூட்டினர். ஓ! பாரதா {ஜனமேஜயனிடம்}, மென்மையான பேச்சால் அவனது மனத்தைக் குளிர்வித்து, "சென்று வெற்றியை அடை! போ" என்று சொல்லி அவன் விடைபெற அனுமதியளித்தனர். அந்தப் பலமிக்கக் கரம் கொண்டவனுக்கு அவர்கள் விடை கொடுத்ததும், அதே தேவதை {கிருத்தியை = ஏவியதைச் செய்யும் தேவதை}, உயிரை மாய்த்துக்கொள்ள அவன் அமர்ந்திருந்த அதே இடத்திற்கே சுமந்து சென்றாள். அந்த வீரனை {துரியோதனனை} அங்கே இறக்கி, அவனை வணங்கிய அந்தத் தேவதை மன்னனின் அனுமதி பெற்று மறைந்து போனாள். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவள் போனதும், மன்னன் துரியோதனன் {நடந்தது அத்தனையும்} கனவெனக் கருதினான். பிறகு அவன் தனக்குள், "நான் போர்க்களத்தில் பாண்டவர்களை வீழ்த்துவேன்" என்று நினைத்தான்.
கர்ணன் மற்றும் சம்சப்தகப் படை ஆகிய இரண்டும் (அழிக்கும்) திறனும், பகைவர்களைக் கொல்பவனான பார்த்தனை {அர்ஜுனனை} அழிக்கும் நோக்கம் உடையவை எனச் சுயோதனன் நினைத்தான். இப்படியே, ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, தீய மனம் கொண்ட திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு}, பாண்டவர்களை வெல்லலாம் என்ற நம்பிக்கை பலமடைந்தது. கர்ணனும், அந்தராத்மாவில் நரகனின் ஆன்மா ஊடுருவியதால், அர்ஜுனனைக் கொல்வது என்ற கொடும் தீர்மானத்தோடு அப்போது இருந்தான். வீரர்களான அந்தச் சம்சப்தகர்களும், ராட்சசர்களின் அறிவால் பீடிக்கப்பட்டு, இருள் மற்றும் உணர்வுகளின் குணங்களால் பாதிப்படைந்து, பல்குனனைக் {அர்ஜுனனைக்} கொல்லும் விருப்பத்துடனே இருந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, கிருபரைத் தலைமையாகக் கொண்ட பீஷ்மர், துரோணர் ஆகியோர் தானவர்களின் ஆதிக்கத்தால், முன்பிருந்ததைப் போலப் பாண்டுவின் மகன்களின் பாசத்துடன் இருக்கவில்லை. ஆனால் மன்னன் சுயோதனன் இதைக் குறித்து யாரிடமும் சொல்லவில்லை.
இரவு கடந்ததும், சூரியனின் வாரிசான கர்ணன், கரங்கள் கூப்பியபடி, புன்னகையுடன் மன்னன் துரியோதனனிடம் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசினான், அவன், "இறந்த எந்த மனிதனும், தனது எதிரிகளை வெல்வதில்லை; அவன் உயிரோடிருக்கும்போதே அவனது நன்மையைக் காண முடியும். இறந்த மனிதனால் ஆகும் நன்மையென்ன? ஓ! கௌரவேயா {துரியோதனா}, அவனது வெற்றி எங்கே? எனவே துயருறவோ, அச்சம் கொள்ளவோ, இறக்கவோ இது காலமன்று" என்றான். அந்தப் பலமிக்கக் கரம் கொண்டவனை {துரியோதனனை} தனது கரங்களால் அணைத்துக் கொண்ட அவன் {கர்ணன்}, மேலும், "ஓ! மன்னா {துரியோதனா}, எழு! ஏன் படுத்திருக்கிறாய்? ஓ! பகைவர்களைக் கொல்பவனே, ஏன் வருந்துகிறாய்? உனது பராக்கிரமத்தால் எதிரிகளைத் துன்புறுத்தியபிறகு, நீ ஏன் மரணத்தை விரும்புகிறாய்? அர்ஜுனனின் பராக்கிரமத்தைக் கண்டதால், உனக்கு இந்த அச்சம் ஏற்பட்டிருக்கிறதென்றால், நான் போர்க்களத்தில் அர்ஜுனனைக் கொல்வேன் என உண்மையில் உனக்குச் சத்தியம் செய்கிறேன். பதிமூன்று வருடங்கள் கடந்ததும், நான் பிருதையின் {குந்தியின்} மகன்கள் உனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என என் ஆயுதங்களின் மீது சத்தியம் செய்கிறேன்" என்றான் {கர்ணன்}.
கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், தைத்தியர்களின் வார்த்தைகளை நினைவு கூர்ந்து, (தனது தம்பிகளான) அவர்கள் விடுத்த கோரிக்கைகளாலும் சுயோதனன் எழுந்தான். தைத்தியர்களின் அந்த வார்த்தைகளைக் கேட்டிருந்த அந்த மனிதர்களில் புலி {துரியோதனன்}, இதயத்தில் நிலைத்த தீர்மானத்தை எடுத்து, குதிரைகளும், யானைகளும், தேர்களும், காலாட்படையும் நிறைந்த தனது படையை வரிசைப்படுத்தினான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, வெண்குடைகளும், கொடிகளும், வெண்சாமரங்களும், தேர்களும், குதிரைகளும், காலட்படை வீரர்களும் கொண்ட அந்தப் பலமிக்கப் படை, கங்கையின் நீரைப்போல அசைந்து சென்றது. குறித்த காலத்தில் மேகங்கள் கலைந்து இலையுதிர் காலத்தின் {சரதக் காலம்} குறியீடுகள் கொஞ்சம் தொடங்கியதும் தெரியும் அருள்மிக்க வானம் போல அந்தப்படையின் நடை இருந்தது.
ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, வெற்றிக்கு ஆசிகள் கூறிய அந்தணர்களில் சிறந்தவர்களால் ஏகாதிபதியைப் போலத் துதிபாடப்பட்ட திருதராஷ்டிரனின் மகனான மனிதர்களின் தலைவன் {துரியோதனன்}, எண்ணிடங்கா குவிந்த கரங்களின் வணக்கங்களை ஏற்று, எல்லையில்லா பிரகாசத்துடன் சுடர்விட்டு கர்ணன் மற்றும் சூதாடியான சுபலனின் மகனுடன் சேர்ந்து முன்னே சென்றான். துச்சாசனனைத் தலைமையாகக் கொண்ட அவனது தம்பிகள், பூரிஸ்ரவஸ், சோமதத்தன், பெரும் பலம்வாய்ந்த மன்னனான பாஹ்லீகன் ஆகியோர் பல்வேறு வடிவங்களிலான தங்கள் ரதங்கள், குதிரைகள், யானைகளில் சிறந்தவை ஆகியவற்றில் மன்னர்களில் சிங்கமானவனின் {துரியோதனனின் செல்லும்} வழியில் பின்தொடர்ந்து சென்றார்கள். ஓ! ஏகாதிபதிகளில் தலைமையானவனே {ஜனமேஜயா}, பிறகு, குறுகிய காலத்திற்குள், அந்தக் குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்கள் தங்கள் சொந்த நகரத்துக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.