Digvijaya of Karna! | Vana Parva - Section 252 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பூமியின் நாற்புறமும் உள்ள மன்னர்களையும் வீழ்த்திய கர்ணன் மீண்டும் ஹஸ்தினாபுரம் திரும்பியது; கர்ணனை துரியோதனன் பாராட்டியது; துரியோதனனும், சகுனியும் அடைந்த பெருமிதம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், "பிறகு, ஓ! பாரதர்களில் காளையே {ஜனமேஜயா}, அந்தப் பெரும் பலம்வாய்ந்த வில்லாளியான கர்ணன், பெரிய படை சூழ துருபதனின் அழகிய நகரத்தை முற்றுகையிட்டான். அதன்பிறகு நடைபெற்ற கடும்போரில், அந்த வீரனைத் {துருபதனைத்} தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயா} துருபதனை அவனுக்கு {கர்ணனுக்கு} வெள்ளி, தங்கம் மற்றும் ரத்தினங்களைக் காணிக்கையாகக் கொடுக்க வைத்து, அவனைக் கப்பமும் கட்ட வைத்தான்.[1] ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா} அவனை {துருபதனை} அடக்கிய பிறகு, அவனுக்குக் (துருபதனுக்குக்) கீழ் அடங்கியிருந்த பிற இளவரசர்களையும் தனது (கர்ணன்) கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்களையும் கப்பம் கட்ட வைத்தான்.
[1] ஆதிபர்வம் 140வது பகுதியில் "நெருப்புச் சக்கரம் போல அந்தக் களத்தில் சுழன்ற துருபதன், தனது கணைகளால் துரியோதனன், விகர்ணன் மற்றும் பலம்வாய்ந்த கர்ணனையும் மற்றும் பல வீர இளவரசர்களையும், எண்ணற்ற வீரர்களையும், அடித்து, அவர்களின் போர்த் தாகத்தைத் தணித்தான்" என்றும், "பிறகு, கௌரவர்கள், போர் தங்களுக்கெதிராக உக்கிரமடைவதைக் கண்டு, போர் செய்வதை விடுத்து, பாண்டவர்களை நோக்கி ஓடினர்" என்றும் வருகிறது. இங்குக் கர்ணனும் சேர்ந்து துருபதனிடம் புறமுதுகிடுகிறான் என்பதைக் கவனிக்கவும். வனபர்வத்தின் இந்தப் பகுதியில் நிகழும் போரில் கர்ணன் தனியாகச் {துரியோதனன் படையுடன் சேர்த்துத்தான்} சென்று, திருஷ்டத்யுமனன் துணையுடன் கூடிய துருபதனை வீழ்த்தினான் என்று வருகிறது என்பதையும் கவனிக்கவும்.
பிறகு வடக்கு நோக்கி சென்ற அவன் அந்தப் பகுதியின் மன்னர்களைத் தனக்கு அடிபணிய வைத்து, பகதத்தனுக்குத் தோல்வியைக் கொடுத்த ராதையின் மகன் {கர்ணன்}, தனது எதிரிகளுடன் போரிட்டுக் கொண்டே மாபெரும் மலையான இமயத்தின் மீது ஏறினான். அங்கே அனைத்துப் பக்கங்களுக்கும் சென்று, இமயத்தில் வசித்த அனைத்து மன்னர்களையும் தனக்கு அடிபணியச் செய்து, அவர்களைக் கப்பம் கட்ட வைத்தான். பிறகு அந்த மலையில் இருந்து இறங்கி, கிழக்கிற்கு விரைந்து, அங்கம், வங்கம், கலிங்கம், மண்டிகம் {சுண்டிகம், மிதிலை ஆகிய இரண்டும் சேர்ந்த பகுதி என்று நினைக்கிறேன்}, மகதம், கர்க்ககண்டம் ஆகிய நாடுகளையும், பின்பு ஆவசீரம், யோத்யம், அஹிக்ஷத்ரம் ஆகிய நாடுகளையும் வீழ்த்தினான்.
(இப்படி) கிழக்குப்பகுதியை வென்ற கர்ணன், பிறகு தன்னை வத்ஸபூமியில் வெளிப்படுத்தினான். வத்ஸபூமியை வென்று, ஆகியோரையும் வென்று அந்த நாடுகள் அனைத்தையும் கப்பம் கட்ட வைத்தான். கேவலம், மிருத்திகாவதி மோஹனம், பத்ராணம், திரிபுரம், கோசலம் ஆகிய நாடுகளையும் வீழ்த்தி, அவர்கள் அனைவரையும் தனக்குக் கப்பம் கட்ட வைத்தான்.
பிறகு தெற்கே சென்ற கர்ணன், (அந்தப் பகுதியில் உள்ள) பலம்வாய்ந்த தேரோட்டிகளை வீழ்த்தினான். தென்னாட்டில் {Dakshinatya = தக்ஷிநாட்யத்தில்} அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} ருக்மியுடன் மோதலில் நுழைந்தான். கடுமையாகப் போரிட்டபிறகு, ருக்மி, சூதனின் மகனிடம் {கர்ணனிடம்}, "ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {கர்ணா}, உனது பலத்தையும் பராக்கிரமத்தையும் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு நான் தீங்கிழைக்க மாட்டேன். நான் க்ஷத்திரியக் கடமையையே நிறைவேற்றினேன். நீ விரும்பும் தங்க நாணயங்களை மகிழ்ச்சியுடன் உனக்குக் கொடுப்பேன்" என்றான். ருக்மியைச் சந்தித்த பிறகு, கர்ணன், பாண்டியநாட்டிற்கும், ஸ்ரீ என்ற மலைக்கும் சென்றான். காரலன், மன்னன் நீலன், வேணுதாரியின் மகன், மற்றும் தெற்கு திசையில் வாழ்ந்த மன்னர்களில் சிறந்தவர்கள் அனைவருடனும் போரிட்டு அவர்களைக் கப்பம் கட்ட வைத்தான்.
பிறகு சிசுபாலனின் மகனிடம் சென்ற சூதனின் மகன் {கர்ணன்} அவனை வீழ்த்தினான். அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {கர்ணன்}, {சேதி நாட்டுக்கு அருகில் இருந்த} அண்டை நாட்டு ஆட்சியாளர்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, அவந்தி நாட்டினரை அடக்கி, அவர்களோடு அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு, விருஷ்ணிகளைச் சந்தித்த அவன் [2], மேற்குப்பகுதிகளை வென்றான். வருணன் பகுதிக்கு வந்த அவன் அனைத்து யவன, பர்ப்பர {Varvara} மன்னர்களையும் தனக்குக் கப்பம் கட்ட வைத்தான்.
[2] விருஷ்ணிகளைச் சந்தித்தான் என்றால் வென்றான் என்றே பொருள் என நினைக்கிறேன். அப்படிக் கர்ணன் விருஷ்ணிகளை வென்றான் என்றால் கிருஷ்ணனையும் பலராமனையும் வென்றானா என்பதை இங்குத் தெளிவுபடக் கூறவில்லை.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்தையும் வென்ற அந்த வீரன், தனக்கு எந்த உதவியுமின்றி அனைத்து மிலேச்ச, மலைவாசி, பத்ர, ரோகித, அக்னேய, மாலவ நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். நகனஜிதனைத் தலைமையாகக் கொண்ட பெரும் பலம்வாய்ந்த ரதசாரதிகளை வென்ற அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, சசகர்களையும், யவனர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இப்படி முழு உலகையும் தனக்கு அடிபணிய வைத்த அந்தப் பலம்வாய்ந்த தேரோட்டியும், மனிதர்களில் புலியுமானவன் {கர்ணன்} ஹஸ்தினாபுரத்திற்கு (திரும்பி) வந்தான்.
தன் தந்தை, தம்பிகள், நண்பர்களுடன் இருந்த மனிதர்களின் தலைவனான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, போர்த்தகுதிகளால் மகுடம் சூடப்பட்டுத் திரும்பி வந்திருந்த அந்தப் பலம்வாய்ந்த வில்லாளியிடம் {கர்ணனிடம்} வந்து அவனுக்கு {கர்ணனுக்கு} உரிய வரவேற்பைக் கொடுத்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, "பீஷ்மரிடமோ, துரோணரிடமோ, கிருபரிடமோ, பாஹ்லீகரிடமோ பெறாதாதை, நான் உன்னிடம் பெறுகிறேன். நன்மையே உனக்கு நேரட்டும்! நீளமாகப் பேச வேண்டிய தேவை என்ன? ஓ! கர்ணா! எனது வார்த்தைகளைக் கேள்! ஓ! மனிதர்களின் தலைவா {கர்ணா}, உன்னிடமே எனது புகலிடத்தைக் கொண்டிருக்கிறேன் {நீயே எனது அடைக்கலம்}. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே, ஓ மனிதர்களில் புலியே, பாண்டவர்களும், செழுமையால் முடிசூட்டப்பட்ட மன்னர்கள் அனைவரும் சேர்ந்தாலும், உன்னில் பதினாறில் ஒரு பங்குக்குக்கூட அவர்கள் ஈடாக மாட்டார்கள். ஓ! வலிமைமிக்க வில்லாளியே, ஓ! கர்ணா, வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} அதிதியைக் காண்பது போல, திருதராஷ்டிரரையும், சிறப்புமிக்கக் காந்தாரியையும் பார்" என்றான்.
பிறகு ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த ஹஸ்தினாபுர நகரத்தில் ஓ! என்றும் ஐயோ! என்றும் ஆரவாரம் எழுந்தது. ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, சில மன்னர்கள் அவனைப் (கர்ணனைப்) புகழவும், சிலர் நிந்திக்கவும், சிலர் அமைதியாகவும் இருக்கவும் செய்தனர். ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இப்படி மலைகள், காடுகள், வானம், கடல்கள், ஏராளமான உயர்ந்த மற்ற தாழ்ந்த நிலப்பரப்புகள், நகரங்கள், தீவுகள் ஆகியவற்றைக் கொண்ட இந்தப் பூமியைக் குறுகிய காலத்தில் {கர்ணன்} வென்றான். ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, இப்படியே அனைத்து ஏகாதிபதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வற்றாத செல்வத்தை வென்ற சூதனின் மகன் {கர்ணன்} மன்னனின் {துரியோதனன்} முன்னிலையில் தோன்றினான்.
பிறகு, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, அந்த மாளிகையின் உள்ளே சென்ற வந்த வீரன் {கர்ணன்}, காந்தாரியுடன் இருந்த திருதராஷ்டிரனைக் கண்டான். ஓ! மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, அறநெறிகள் அறிந்த அவன் {கர்ணன்}, ஒரு மகனைப் போல அவனது {திருதராஷ்டிரன்} பாதத்தைப் பற்றினான். திருதராஷ்டிரனும் அவனைப் பாசத்துடன் அரவணைத்து, பிறகு அவனுக்கு விடை கொடுத்தனுப்பினான். அந்நேரத்திலிருந்து, ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனனும், சுபலனின் மகனான சகுனியும், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, போர்க்களத்தில் ஏற்கனவே கர்ணனால் வீழ்த்தப்பட்டதாகவே கருதினர்."
[1], [2] ஆகிய விளக்கங்களுக்கு நண்பர்களின் மறுமொழியைக் கீழே இங்கே அளிக்கிறேன்.
[1]க்கான நண்பர் திரு.மெய்யப்பன் அருண் அவர்களின் மறுமொழி
ஆதி பர்வம் 140–ல் அங்க மன்னன் கர்ணன் துருபதனிடம் தோல்வியுற்றதாக கருதுகின்றீர்கள் ஆனால் என்னுடைய புரிதல் என்னவெனில்
மகாபாரதத்தில் அங்க மன்னன் கர்ணன் வருமிடங்களில் வியாசர் கர்ணனை வசுசேணன், ராதேயன் , சூதாவின் மகன், விகர்த்தன குமாரன், வ்ருஷா, போன்ற பெயர்களையும் சேர்த்து குறிப்பிடுவார். இது ஏனைய முக்கிய கதாப்பாத்திரங்களும் பொருந்தும். துருபதானான போரில் கர்ணனை அவ்வாறான எந்த பெயரிலும் குறிப்பிடவில்லை . மேலும் திருதிராஷ்டிரரின் 48-வது மகனின் பெயரும் கர்ணனே. அந்த 140 வது பகுதியில் வியாசர் துரியோதணின் சில தம்பிகளின் வரிசையிலே கர்ணனை குறிப்பிடுகின்றார். நிச்சயம் அது அங்கதேசத்து மன்னன் கர்ணனாக இருந்திருந்தால் கர்ணனின் சிறப்புபெயர்களில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டிருப்பார்.
எனவே அந்த கர்ணன் திருதராஸ்டிரரின் 48 வது மகன் கர்ணனே.
[1] நண்பர் திரு.மெய்யப்பன் அருண் அவர்களின் மறுமொழிக்கு, நண்பர் திரு.ராமராஜன் மாணிக்கவேல் அவர்களின் மறுப்பு
நண்பர் திரு.மெய்யப்பன் இட்டப்பதிவில் அது திருதராஷ்டரன் 48வது மகன் கர்ணன் என்று சொல்லி உள்ளார். எனக்கு அதில் உடன் பாடு இல்லை. காரணம்
//துரியோதனன், கர்ணன், பலம்வாய்ந்த யுயுத்சு, துட்சாதனன், விகர்ணன், ஜலசந்தன், சுலோசனன் ஆகியோரும், பெரும் வீரம் கொண்ட க்ஷத்திரிய இளவரசர்கள் பலரும் சேர்ந்து தாக்குதலில் முன்னணி பெற ஒருவருக்கொருவர் போட்டியிட்டுச் சென்றனர்//
பகுதி 140ல் வியாசபெருமான் துரியோதன் அதற்கு அடுத்து கர்ணன் என்று ஏன் வரிசை வைத்து சொல்லவேண்டும்? பெரும் வீரனாகிய துட்சாதனனை பலம்வாய்ந்த யுயுத்சுக்கு பின்னால் ஏன் வைக்கிறார்? அப்படி என்றால் வீரம் இங்கு காட்டப்படுகின்றது. 48வது மகன் கர்ணன் பெரும் வீரன் என்று எங்காவது காட்டப்பட்டு உள்ளதா?
//நெருப்புச் சக்கரம் போல அந்தக் களத்தில் சுழன்ற துருபதன், தனது கணைகளால் துரியோதனன், விகர்ணன் மற்றும் பலம்வாய்ந்த கர்ணனையும் மற்றும் பல வீர இளவரசர்களையும், எண்ணற்ற வீரர்களையும், அடித்து, அவர்களின் போர்த் தாகத்தைத் தணித்தான்//
மேற்கண்ட பதிவில் துரியோதன், விகர்ணன், பலம்வாய்ந்த கர்ணனையும் என்று சொல்லிவிட்டு மற்றும் பல வீர இளவரசர்கள் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாராவில் துச்சாதனன் யுயுச்சு பெயரைக்கூட விட்டுவிட்டவர் ஏன் கர்ணன் பெயரை மட்டும் விட்டுவிட வில்லை? மீண்டும் இங்கு வீரமே சுட்டப்படுகின்றது. துரியோதனனுக்கு நிகரான அர்ஜுனனுக்கு நிகரான ஒரு வீரன் கர்ணன் அவனை விட்டுவிட வியாசருக்கு மனம் இல்லை அடை மொழி தந்தாலும் தராவிட்டாலும் அது அங்கநாட்டு மன்னன் கர்ணன்தான்.
நன்றி.
[2]க்கான நண்பர் திரு.ராமராஜன் மாணிக்கவேல் அவர்களின் மறுமொழி
திக்விஜயம் என்பது ஒரு கொடியின் கீழ் ஒரு நாட்டைநோக்கி படை நடத்துவது இது ஒரு தூதுப்போலத்தான், தூது வென்றால் பரிசைப்பெறலாம் தூது வெல்லைவில்லை என்றால் திறமையைக்காட்டவேண்டும். திக்விஜயம் செய்தவன் வென்றால் நாட்டை அந்த நாட்டுமன்னனிடமே கொடுத்துவிட்டு பரிசுப்பெற்று முன்னேறுவது மட்டும். அதன்பின் அவன் சுதந்திரநாடு உடையவன்தான். திக்விஜயம் செய்தவன் தோற்றால் நாடு வென்றவனுக்கு கிடைக்காது அதனுடன் அவன் திரும்பி தனது நாட்டுக்கு செல்லவேண்டும்.
கர்ணன் திக்விஜயம் செய்வது ஹஸ்தினபுரியின் கொடியின் கீழ் இவனோடு போர்புரிவதால் எந்த நன்மையும் கண்ணனுக்கு கிடையாது வெறும் நேரவிரயமும், படை நஷ்டமும்தான் இதை சிறந்த ஞானியான கண்ணன் உணர்ந்து கர்ணனுடன் நட்புக்கரம் நீட்டி இருப்பார். கர்ணனும் வெல்லவில்லை கண்ணனும் தோற்கவில்லை என்ற நிலை. இன்னும் ஒரு ராஜதந்திரமும் இதில் உண்டு. தோற்றவன் தூங்குவதில்லை வெற்றிக்காக ஓடிக்கொண்டே இருக்கிறான் ஆனால் வென்றவன் மமதையில் திறமையை இழக்கின்றான். கர்ணனின் திறமைக்கு இதுவே கடைசி முற்றுப்புள்ளியாகவும் கண்ணன் வைக்கிறார்.
துருபதனும், திருஷ்டத்தியுமனும் இறுதிப்போர் பதிநான்காவது ஆண்டில் உண்டு என்று நிச்சயமாக எண்ணுகின்றார்கள் அங்கு துரியோதனனுக்கும், கர்ணனுக்கும் இலக்கு வகுக்கப்பட்டு உள்ளது அதுதான் அவர்களின் இந்த தோல்விக்கும் காரணம். தன்னை வென்ற அர்ஜுனனை மருமகனாக அடையவேண்டும் என்றே இலக்கு நிர்ணயத்தவன் துருபதன் அவன் மதியூகம் எத்தனை காலத்தை தாண்டி உள்ளது. சிந்திக்க வைக்கிறது.நன்றி
வாழ்க வளமுடன்
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.