Vaishnava Sacrifice of Duryodhana! | Vana Parva - Section 253 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
ராஜசூய வேள்வி செய்ய விரும்பிய துரியோதனன்; யுதிஷ்டிரனும் திருதராஷ்டிரனும் உயிரோடு இருப்பதால் துரியோதனன் அவ்வேள்வியைச் செய்ய முடியாது என்று புரோகிதர் சொன்னது; ராஜ சூய வேள்விக்கு ஈடான வைஷ்ணவ வேள்வியைத் துரியோதனன் செய்யலாம் என்று சொன்னது; வைஷ்ண வேள்வி செய்ய நடந்த ஏற்பாடுகள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா, ஓ !மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, எதிரி வீரர்களைக் கொல்பவனான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ! கௌரவா, துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உன் இதயத்தில் நிறுத்து. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, எனது வார்த்தைகளைக் கேட்ட பின்பு, அனைத்து வழிகளிலும் அதன்படி செயல்படுவதே உனக்குத் தகும். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, ஓ! வீரா, இப்போது இந்தப் பூமி {உனக்கு} எதிரிகளற்று இருக்கிறது. எதிரிகளை அழித்த பிறகு மனோபலம் கொண்ட சக்ரன் {இந்திரன்} எப்படி ஆண்டானோ, அதே போல அவளை {பூமியை} ஆட்சி செய்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட மன்னன் அவனிடம் {கர்ணனிடம்} மீண்டும், “ஓ! மனிதர்களில் காளையே, ஒருவனுடன் இணக்கமாக இருந்து, முழுவதும் அவனுடைய நன்மையையே நீ நோக்கமாகக் கொண்டிருக்கிறாய் எனும்போது, உன்னைப் புகலிடமாகக் கொண்ட இந்த ஒருவனால் {துரியோதனனான என்னால்} அடைய முடியாதது எது? இப்போது எனக்கு ஒரு காரியம் இருக்கிறது. அதைக் கேள். வேள்விகளில் முதன்மையான பெரும் ராஜசூய வேள்வி பாண்டவர்களால் செய்யப்பட்டதைக் கண்டதால், எனக்கு (அதே வேள்வியைச் செய்ய) ஒரு விருப்பம் எழுந்திருக்கிறது. ஓ! சூதனின் மகனே {கர்ணா}, எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக" என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் மன்னனிடம், “பூமியிலுள்ள அனைத்து மன்னர்களும் இப்போது உனக்கு அடிபணிந்து இருக்கிறார்கள். எனவே, முதன்மை அந்தணர்களை அழை. ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, வேள்விக்குத் தேவையான பொருட்களை முறையாகச் சேகரி. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, பரிந்துரைக்கப்பட்ட வேதமறிந்த ரித்விக்குகளைக் கொண்டு உனது சடங்குகளை விதிப்படி கொண்டாடு. ஓ! மன்னா, ஓ பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, உனது அந்தப் பெரும் வேள்வி நடக்கும்போது, இறைச்சி, பானம் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் நிறைந்திருக்கட்டும்" என்றான் {கர்ணன்}.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகன் புரோகிதரை அழைத்து அவரிடம், “அற்புதமான தக்ஷினைகளுடன் கூடிய வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்வியைச் சரியான உரிய முறையில் எனக்காகக் கொண்டாடுங்கள் {நடத்துங்கள்}” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்களில் சிறந்தவர், மன்னனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! கௌரவர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, யுதிஷ்டிரன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஓ! மன்னர்களின் இளவரசனே {துரியோதனா}, உனது குடும்பத்தில் அந்த வேள்விகளில் சிறந்த வேள்வியைக் கொண்டாடமுடியாது. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் தந்தை நீண்ட வாழ்நாளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதன் காரணமாகவும் நீ அந்த வேள்வியைச் செய்யக்கூடாது. ஓ! தலைவா {துரியோதனா}, ராஜசூயத்துக்கு ஈடான மற்றுமொரு பெருவேள்வி இருக்கிறது. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ அந்த வேள்வியைச் செய்யலாம்.
எனது இவ்வார்த்தைகளைக் கேள். ஓ! மன்னா {துரியோதனா}, பூமியில் உள்ள இந்த ஆட்சியாளர்கள் எல்லாம் உனக்குக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பதால், சுத்தமாகவும் சுத்தமல்லாததாகவும் தங்கத்தைக் கப்பமாகக் கொடுப்பார்கள். அந்தத் தங்கங்களைக் கொண்டு, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, இப்போது ஒரு (வேள்வி) கலப்பையைச் செய். ஓ! பாரதா {துரியோதனா}, வேள்வி செய்யும் இடத்தை அந்தக் கலப்பையால் உழு. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, உரிய சடங்குகளுடன், எந்த இடையூறும் இல்லாமல், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட சுத்தமான உணவுகளுடன் {உழப்பட்ட} அந்த இடத்தில் வேள்வி நடைபெறட்டும். அறம்சார்ந்த மனிதர்களுக்குத் தகுந்த அவ்வேள்வியின் பெயர் வைஷ்ணவம் ஆகும். பழைமையான விஷ்ணுவைத் தவிர வேறு எவரும் அவ்வேள்வியை இதற்கு முன்னால் செய்ததில்லை. இந்தப் பெரும் பிரம்மாண்டமான வேள்வி, வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்விக்குச் சமமானது ஆகும். மேலும், அது {வேள்வி} நம்மை விரும்புகிறது. அது உனது நன்மைக்காகவும் கொண்டாடப்படட்டும். மேலும் அது எந்த இடையூறும் இல்லாமல் கொண்டாடக்கூடியதாகும். (இதைச் செய்வதால்) உனது விருப்பங்கள் நிறைவேறும்" என்றார்.
இப்படி அந்த அந்தணர்களால் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகனான அம்மன்னன் {துரியோதனன்}, கர்ணன், தனது தம்பிகள் மற்றும் சுபலனனின் மகன் {சகுனி} ஆகியோரிடம், “சந்தேகத்திற்கு அப்பால், அந்தணர்களின் வார்த்தைகள் எனக்கு முற்றிலும் பிடித்திருக்கிறது. அவற்றால் நீங்களும் மகிழ்ந்தீர்களென்றால், தாமதிக்காமல் அதை வெளிப்படுத்துங்கள்" என்றான். இப்படிக் கோரப்பட்ட அவர்கள் மன்னனிடம் {துரியோதனனிடம்}, “அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்கள். பிறகு மன்னன் ஒருவர் பின் ஒருவராக அவரவர்க்கு உரிய பணிகளில் அமர்த்தினான். சிற்பிகளை அழைத்து (வேள்வி) கலப்பையைச் செய்யச் சொன்னான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டவையெல்லாம் ஒன்றுன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.