The wrath of Bhima! | Vana Parva - Section 254 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
வேள்வி செய்வதற்காகத் துரியோதனன் அனைவரையும் அழைப்பது; துச்சாசனன் பாண்டவர்களை அழைக்க ஒரு தூதுவனை அனுப்புவது; யுதிஷ்டிரன் வாழ்த்துவது; பீமன் கோபத்துடன் பேசி, துரியோதனனுக்கு எச்சரிக்கை அனுப்புவது; வேள்வி நிறைவடைவது; துரியோதனன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு அனைத்து கைவினைஞர்களும், முக்கியமான ஆலோசகர்களும் {அமைச்சர்களும்}, உயர்ந்த ஞானம் கொண்ட விதுரனும், திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, “அற்புதமான வேள்விக்குரிய அனைத்து தயாரிப்புகளும் முடிந்துவிட்டன. ஓ! மன்னா {துரியோதனா}, ஓ பாரதா, நேரமும் வந்துவிட்டது. பெரும் மதிப்புமிக்கத் தங்கக் கலப்பையின் நிர்மாணம் முடிந்தவிட்டது" என்றனர். இதைக் கேட்ட மன்னர்களில் சிறந்தவனான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} வேள்விகளில் தலைமையான வேள்வியை ஆரம்பிக்க உத்தரவிட்டான். பிறகு, அபரிமிதமான உணவு வகைகளுடன், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட அந்த வேள்வி ஆரம்பித்தது. காந்தாரியின் மகன் {துரியோதனன்} அவ்வேள்வியை விதிப்படி தொடங்கிவைத்தான். திருதராஷ்டிரன், சிறப்புமிகுந்த விதுரன், பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், கொண்டாடப்படும் காந்தாரி ஆகியோர் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தனர்.
ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இளவரசர்கள் மற்றும் அந்தணர்களை அழைக்க விரைவாகச் செல்லும் தூதுவர்களைத் துரியோதனன் அனுப்பினான். விரைவாகச் செல்லும் வாகனங்களின், தங்கள் (ஒவ்வொருவருக்கும்) நிர்ணயிக்கப்பட்ட திசைகளில் அவர்கள் {தூதுவர்கள்} சென்றார்கள். ஒரு குறிப்பிட்ட தூதுவன் கிளம்பும் போது துச்சாசனன், “விரைவாகத் துவைத வனத்திற்குச் செல்; பிறகு அந்தக் கானகத்தில் இருக்கும் அந்தணர்களையும், தீய மனிதர்களான பாண்டவர்களையும் முறையாக அழை" என்றான். அதன்பேரில் அவன் {அந்தத் தூதுவன்} அங்கே சென்று அனைத்துப் பாண்டவர்களையும் வணங்கி, “தனது வலிமையின் மூலம் பெருஞ்செல்வத்தை அடைந்த, மன்னர்களில் சிறந்த, குருக்களில் முதன்மையான துரியோதனன், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஒரு வேள்வியைக் கொண்டாடுகிறான் {நடத்துகிறான்}. பல திசைகளில் இருந்து மன்னர்களும், அந்தணர்களும் அங்கே போகிறார்கள் ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அந்த உயர் ஆன்ம கௌரவனால் அனுப்பப்பட்டேன்; அந்த மன்னனும் மனிதர்களின் தலைவனுமான திருதராஷ்டிரன் மகன், உங்களை அழைக்கிறான். எனவே, அந்த ஏகாதிபதியின் மகிழ்சிகரமான வேள்வியைக் காண்பதே உமக்குத் தகும்" என்றான்.
அத்தூதுவனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னர்களில் புலியான அந்த அரசன் யுதிஷ்டிரன், “மூதாதையர்களின் புகழை மேம்படுத்தும் மன்னன் சுயோதனன் {துரியோதனன்} நற்பேறினாலேயே வேள்விகளில் சிறந்த வேள்வியைக் கொண்டாடுகிறான். நிச்சயமாக நாங்கள் அங்கு வர வேண்டும்; ஆனால் அதை எங்களால் செய்ய முடியாது; பதிமூன்றாவது வருடம் (நிறைவடையும்) வரை, நாங்கள் எங்கள் நோன்பை நோற்க வேண்டியுள்ளது" என்றான். நீதிமானான யுதிஷ்டிரனின் பேச்சைக் கேட்ட பீமன் {தூதுவரிடம்}, “அதன்பிறகு நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் அங்கே வருவார். அப்போது ஆயுதங்களால் கிண்டப்பட்ட நெருப்பில் அவனைத் (துரியோதனனைத்) தூக்கி எறிவார். சுயோதனனிடம், “பதிமூன்றாவது வருடம் நிறைவடையும்போது, மனிதர்களின் தலைவனான அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, போர்க்களம் எனும் வேள்வியில், திருதராஷ்டிரர்கள் மேல், கோபம் எனும் தெளிந்த நெய்யை ஊற்றும்போது, {பீமனாகிய} நானும் வருவேன்" என்று சொல்லும்" என்றான் {பீமன்}.
ஆனால் மற்ற பாண்டவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, எந்த விரும்பத்தகாதவற்றையும் பேசவில்லை. அந்தத் தூதுவன் (திரும்பிய போது) அனைத்தையும் திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} சொன்னான். பிறகு திருதராஷ்டிரனின் நகரத்திற்கு, மனிதர்களில் முதன்மையானவர்களும், பல நாடுகளின் தலைவர்களும், உயர்ந்த அறம்சார்ந்த அந்தணர்களும் வந்தனர். முறையாக விதிப்படி வரவேற்கப்பட்ட அந்த மனிதர்களில் தலைவர்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்து மனநிறைவு கொண்டனர். அனைத்து கௌரவர்களாலும் சூழப்பட்ட ஏகாதிபதிகளில் முதன்மையான திருதராஷ்டிரன், மகிழ்ச்சியின் எல்லையை அனுபவித்து, விதுரனிடம், “ஓ! க்ஷத்தா {விதுரா}, வேள்வி மண்டபத்தில் இருக்கும் அனைவருக்கும் விரைவாக உணவைப் பரிமாறி அவர்களைப் புத்துணர்ச்சிபெற்று, மனநிறைவு கொள்ளச் செய்" என்றான்.
ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, அவ்வுத்தரவுக்கு இசைந்த அறநெறி அறிந்த கற்ற விதுரன், மகிழ்ச்சியாக, இறைச்சி, மற்றும் உண்ணத்தக்க, குடுக்கத்தக்க பானங்கள், மணமிக்க மாலைகள், பல்வேறு வகையிலான ஆடைகள் ஆகியவற்றைப் பொருத்தமான அளவுக்குக் கொடுத்து அனைவரையும் உற்சாகமூட்டினான். ({விருந்தினர்கள்} அவர்கள் தங்குவதற்காக) மண்டபங்களைக் கட்டியிருந்த அந்த வீரனான மன்னர்களில் முதன்மையானவன் {துரியோதனன்}, இளவரசர்களுக்கும் அந்தணர்களுக்கும் பலவிதமான செல்வங்களைக் கொடுத்து அவர்களை உற்சாகமூட்டி வழியனுப்பினான். அனைத்து மன்னர்களையும் இப்படி அனுப்பிய அவன் {துரியோதனன்}, தன் தம்பிகள் சூழ, கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரின் துணையுடன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.