Mudgala and Durvasa! | Vana Parva - Section 258 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
முத்கலர் மற்றும் துர்வாசகர் கதையை வியாசர் யுதிஷ்டிரனுக்கு உரைத்தல்; துர்வாசர் முத்கலரைச் சோதித்தால்; முத்கலரை அழைத்துச் செல்ல தேவ தூதன் வந்தது...
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஏன் அந்த உயர் ஆன்மா கொண்டவர் {முத்கலர்} ஒரு துரோணம் சோளத்தைத் தானமளித்தார்? ஓ! பக்தியில் பெரியவரே {வியாசரே}, யாருக்கு, எந்தக் குறிப்பிட்ட முறையில் அவர் தானமளித்தார்? இதை நீர் எனக்குச் சொல்லும். அனைத்தையும் சாட்சியாகக் கண்டு வரும், ஆறு குணம் கொண்டவனை {பரமாத்மாவை}, தனது பயிற்சிகளால் நிறைவு கொள்ள வைத்த அறம்சார்ந்த மனிதன், தன் பிறவிப் பயனை அடைந்தவனாவான் என நான் கருதுகிறேன்" என்றான்.
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முத்கலர் என்ற பெயரில் ஒரு அறம்சார்ந்த மனிதர் (தவசி) வாழ்ந்து வந்தார். அவர் உண்மையுள்ளவராகவும் {சத்தியவானாகவும்}, தீக்குணத்தை விலக்கியவராகவும், புலன்களை அடக்கியவராகவும் இருந்தார். அவர் {முத்கலர்} சிலம், உஞ்சம் [1] ஆகிய வாழ்வுமுறைகளைப் பின்பற்றிவந்தார். {தானியங்களைச் சேர்த்து} ஒரு புறாவைப் போல வாழ்ந்து வந்தாலும், வலிமைமிக்கத் தவத்தகுதி கொண்டு அவர் {முத்கலர்}, விருந்தினர்களை உபசரித்து, இஷ்டிகிரிதா என்றழைக்கப்படும் வேள்வியையும், மற்றும் பிற சடங்குகளையும் செய்தார். தன் மகன் மற்றும் தன் மனைவியுடன் இருந்த அந்தத் தவசி {முத்கலர்} பதினைந்து நாட்களுக்கு உண்டு, மீதி பதினைந்து தினங்களுக்குப் புறா வாழ்வு வாழ்ந்தார் {அதாவது தானியங்களைச் சேகரித்தார்} {And that sage together with his son and wife, ate for a fortnight, and
during the other fortnight led the life of a pigeon, collecting a drona of corn.}. தர்சம், பௌர்ணமாஸ்யம் ஆகிய வேள்விகளைச் செய்த அந்தச் சூதற்றவர் {முத்கலர்}, தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் படைத்த பின்பு மீந்ததையே உண்டு தன் நாட்களைக் கடத்தி வந்தார்.
[1] (அ) சோள உமிகளையும் {ears of corn = சோளத்தின் பருக்கைகளை} என நினைக்கிறேன்} (ஆ) அரிக்கட்டுகளை எடுத்துச் செல்லும் உழவர்களால் நிலத்தில் விட்டுச் {சிந்திச்} செல்லப்படும் தனிப்பட்ட தானியங்களையும் {தனித் தனித் தானியங்களையும்} எடுத்துத் தன்னைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வு முறையே (அ) சிலம் என்றும் (ஆ) உஞ்சம் என்றும் அழைக்கப்பட்டன என்கிறார் கங்குலி.கதிர் நெல் முதலியவற்றைச் சேகரித்து அவற்றை உண்டு வாழ்வது சிலம் என்றும், தானியமணிகளை ஒவ்வொன்றாகச் சேகரித்து அவற்றை உண்டு வாழ்வது உஞ்சம் என்றும்கூடச் சொல்வார்கள். மேலும், உஞ்சவிருத்தி என்பது பிச்சை எடுத்து உயிர் வளர்த்தல் என்றும் சொல்லப்படுகிறது.
மங்களகரமான சந்திர நாட்களில், மூன்று உலகங்களுக்கும் தலைவனான இந்திரன், தேவர்கள் துணையுடன் தானே அங்கு வந்து, ஓ! வலிமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவரது {முத்கலரின்} வேள்வியில் காணிக்கையாகத் தரப்படும் உணவை உண்டு வந்தான். முனிவர்களின் வாழ்வு முறையைப் பின்பற்றி வந்த அவர் {முத்கலர்}, அது போன்ற நாட்களில் வந்த விருந்தினர்களுக்கு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்தோடு உணவு கொடுத்து உற்சாகமூட்டினார். அந்த உயர் ஆன்மா கொண்டவர் {முத்கலர்}, சுறுசுறுப்புடன் தன் உணவைப் பகிர்ந்தளித்த போது, மீதியிருந்த துரோணம் அளவு சோளம், மேலும் விருந்தினர்கள் தோன்றியதும் {வந்ததும்} பெருகலாயிற்று. சுத்தமான மனம் கொண்ட அவரது {முத்கலரின்} அறத்தால், அத்தவசி {முத்கலர்} தானம் செய்த உணவு, நூற்றுக்கணக்கான அந்தணர்கள் பசியாறும் அளவுக்குப் பெருகிற்று.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நோன்புகள் நோற்கும் அறம் சார்ந்த முத்கலரைப் பற்றிக் கேள்விப்பட்ட துர்வாசர், வெட்டவெளியை மட்டுமே மறைப்பாகக் {ஆடையாகக்} கொண்டு [2], வெறி பிடித்தவனைப் {பைத்தியக்காரனைப்} போல வேடம் பூண்டு, முடியில்லாத தலையுடன் அங்கே வந்து {முத்கலரிடம் வந்து}, ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, {முத்கலரை} அவமதிக்கும் பல்வேறு வார்த்தைகளைப் பேசினார். அந்த முனிவர்களின் சிறந்தவர் {துர்வாசர்}, அந்த அந்தணரிடம் {முத்கலரிடம்} வந்து, "ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {முத்கலா}, உணவை நாடி இங்கே நான் வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக" என்றார். அதற்கு முத்கலர் அந்தத் தவசியிடம் {துர்வாசரிடம்}, "நீர் வரவேற்கப்படுகிறீர்" என்றார்.
[2] நிர்வாணமாக என்கிறார் கங்குலி
விருந்தினர்களைப் பசியாற்றும் நோன்பிருந்தவர் {முத்கலர்}, பசியால் பாதிக்கப்பட்டு வெறிபிடித்தவர் போல இருந்த அந்தத் தவசிக்கு {துர்வாசருக்கு}, கால் கழுவவும், வாய் கழுவவும் நீர் கொடுத்து, அவர் முன்னிலையில் அற்புதமான உணவை வைத்தார். பசியால் துன்புற்ற அந்தக் கடும் முனிவர் {துர்வாசர்}, தனக்குக் காணிக்கையாக்கப்பட்ட அனைத்து உணவையும் முழுமையாக உண்டார். அதனால், முத்கலர் மீண்டும் அவருக்கு {துர்வாசருக்கு} {தன்னிடம் இருந்த அனைத்து உணவையும் கொண்டு} உணவளித்தார். பிறகு அந்த உணவு அனைத்தையும் உண்டு முடித்த அவர் {துர்வாசர்}, அசுத்தமான மீந்த உணவை தன் மேனியில் பூசிக்கொண்டு, தான் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றுவிட்டார்.
இதே போலவே, அடுத்து வந்த காலத்திலும் {அடுத்த பதினைந்து தினத்திலும்}, அவர் மீண்டும் வந்து, உஞ்ச வாழ்வு முறை வாழ்ந்து வந்த ஞானியால் {முத்கலரால்} படைக்கப்பட்ட உணவனைத்தையும் உண்டார். அதனால், உணவு உண்ணாத நிலையில் இருந்த தவசியான முத்கலர் மீண்டும் உஞ்ச வாழ்வுமுறையை மேற்கொண்டு சோளம் சேகரிப்பதில் மீண்டும் ஈடுபட்டார். பசியால் அவரது உள்ளச்சமநிலையைக் {மன அமைதியை [அ] பற்றற்ற தன்மையைக்} கலைக்க முடியவில்லை. கோபம், சூது, இழிந்த உணர்வு, கிளர்ச்சி ஆகியவற்றால் உஞ்ச வகை வாழ்வு வாழ்ந்து, தன் மனைவி மற்றும் மகனுடன் இருந்த அந்த அந்தணர்களில் சிறந்தவரின் {முத்கலரின்} இதயத்திற்குள் நுழையமுடியவில்லை.
இப்படி, துர்வாசர், தொடர்ந்து வந்த ஆறு காலங்களிலும் உஞ்ச வகை வாழ்வு வாழ்ந்து வந்த அந்தத் தவசிகளில் சிறந்தவர் {முத்கலர்} முன்பு பல முறை சென்றார். இருப்பினும், அந்த முனிவரால் {துர்வாசரால்}, முத்கலரின் இதயத்தில் எந்தக் கிளர்ச்சியையும் காண இயலவில்லை. சுத்தமான ஆன்மாவைக் கொண்ட அந்தத் துறவியின் சுத்தமான இதயம், எப்போதும் சுத்தமாக இருப்பதைக் கண்டார். அதனால் மனம் நிறைந்த அந்தத் தவசி {துர்வாசர்}, முத்கலரிடம், “உன்னைப் போன்ற சூதற்றவனும், தானம் செய்பவனும் இவ்வுலகில் இல்லை. பசியின் வேட்கை நேர்மையான உணர்வை வெகு தூரத்திற்கு ஓட்டி, மனிதர்களின் பொறுமை அனைத்தையும் இழக்க வைக்கும். சுவையை விரும்பும் நாக்கு, மனிதர்களை, அவற்றை நோக்கி ஈர்க்கும். உணவாலேயே உயிர் நிலைத்திருக்கிறது. மேலும் மனமானது நிலையற்றதாகவும், அடக்கிவைக்கக் கடினமானதாகவும் இருக்கிறது. குவிந்த நிலையில் உள்ள மனமும், புலன்களும் {கொண்ட நிலை} நிச்சயமாகத் தவத்துறவே என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வலிகளால் அடைந்தவற்றைச் சுத்தமான மனதுடன் கைவிடுவது மிகக்கடினமாகும். இருப்பினும், ஓ! பக்திமானே {முத்கலா}, இவை அனைத்தும் உன்னால் முறையாக அடையப்பட்டுள்ளது. உனது துணையால் நாம் கடமையுணர்ச்சியையும், மனநிறைவையும் உணர்கிறோம். சுயக்கட்டுப்பாடு, மனோபலம், நீதி, புலன் மற்றும் உள்ளுணர்வு அடக்கம், கருணை, நல்லொழுக்கம் ஆகிய இவை அனைத்தும் உன்னில் நிலைபெற்றிருக்கின்றன. உனது செயல்களால் நீ பல உலகங்களை வென்றுவிட்டாய். அதனால், அருள் உலகங்களுக்குச் செல்லும் வழிகளை நீ அடைந்துவிட்டாய். ஆ! சொர்க்கவாசிகள் கூட உனது தானத்தைப் பெருஞ்செயல் எனப் பிரகடனம் செய்கிறார்கள். ஓ! நோன்புகள் நோற்பவனே {முத்கலா}, நீ உனது உடலுடன் சொர்க்கத்திற்குச் செல்வாய்" என்றார் {துர்வாசர்}.
முனிவர் துர்வாசர் இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது, முத்கலர் முன்பு, ஒரு தேவ தூதன் தோன்றினான். அவன் {தேவ தூதன்}, அன்னங்களும் கொக்குகளும் பூட்டப்பட்டு, கிண்கிணி மணிகள் நிறைந்து, தெய்வீக நறுமணத்துடன், அழகாக வண்ணம் பூசப்பட்டிருந்த, நினைத்த இடம் செல்லக்கூடிய ஒரு தேரில் வந்திருந்தான். அவன் {தேவதூதன்}, அந்த அந்தண முனிவரிடம் {முத்கலரிடம்}, “ஓ தவசியே {முத்கலரே}, உமது செயல்களால் நீர் அடைந்த இத்தேரில் ஏறும். உமது தவத்தின் கனியை நீர் அடைந்துவிட்டீர்" என்றான்.
அந்தத் தேவர்களின் தூதன் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தத் தவசி {முத்கலர்} அவனிடம் {தேவ தூதனிடம்}, “ஓ! தேவதூதா, அங்கே {தெய்வலோகத்தில்} வசிப்பவர்களின் குணங்களை நீர் எனக்கு விவரித்துச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்களுக்குத் தவம் எது? அதற்கான காரணங்கள் யாது? ஓ! தேவர்களின் தூதனே, சொர்க்கத்தில் நிலவும் மகிழ்ச்சிக்கு எது காரணம்? அதனால் ஏற்படும் பாதகம் என்ன? பக்திமான்களுடன் நட்புடன் இருப்பது என்பது, ஏழு பதங்களால் {சொற்கள் அல்லது காலடிகள்} அடையப்படுகிறது என்று நல்ல குலத்தில் பிறந்த அறம்சார்ந்த மனிதர்களால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஓ! தலைவா {தேவதூதா}, அந்த நட்பின் பேரால் நான் உன்னிடம் கேட்கிறேன், “தயங்காமல் நீ எனக்கு உண்மையைச் சொல். அதுவே இப்போது எனக்கு நன்மையைப் பயக்கும். நீ சொல்வதைக் கேட்ட பிறகு, உனது வார்த்தைகளின் படி, நான் எவ்வழியைத் தொடர வேண்டும் என்பதை நான் உறுதி செய்வேன்" என்றார் {முத்கலர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.