Kabandha Slained! | Vana Parva - Section 277 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
சீதையை ராவணன் கடத்திச் செல்வதைத்தடுத்துப் போராடிய ஜடாயு; ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்துவது; ராமனும் லட்சுமணனும் ஜடாயுவைக் காண்பது; ராவணன் சென்ற திக்கை ஜடாயு குறிப்பால் உணர்த்துவது; கவந்தனிடம் லட்சுமணன் சிக்குவது; கவந்தனின் இரு கைகளை ராமனும் லட்சுமணனும் வெட்டுவது; கவந்தன் ராமனை சக்ரீவனோடு நட்பு கொள்ளச் சொல்வது...
இது ரவிவர்மாவின் ஓவியம் ராவணன் ஜடாயுவை வீழ்த்துவது |
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சம்பாதியைத் தனது உடன்பிறந்த அண்ணனாகவும், அர்ஜுனனைத் {அருணனைத்} தனது தந்தையாகவும் கொண்ட வீரமிக்கக் கழுகு மன்னனான ஜடாயு, தசரதனின் நண்பனாவான். தனது {தன் நண்பனின்} மருமகளான சீதை, ராவணனின் மடியில் இருப்பதைக் கண்ட அந்த விண்ணதிகாரி, அந்த ராட்சச மன்னனை {ராவணனை} எதிர்த்துக் கோபத்துடன் விரைந்தான். அந்தக் கழுகானவன் {ஜடாயு} ராவணனிடம், “மிதிலை இளவரசியை {சீதையை} விடு, அவளை விடு என நான் சொல்கிறேன்! ஓ ராட்சசா, நான் உயிருடன் இருக்கும்போது நீ எப்படி அவளைக் கடத்த முடியும்? நீ எனது மருமகளை {சீதையை} விடவில்லையெனில், என்னிடம் இருந்து நீ உயிருடன் தப்ப மாட்டாய்!” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைச் சொன்ன ஜடாயு, தன் நகங்களைக் கொண்டு அந்த ராட்சச மன்னனைக் {ராவணனைக்} கிழிக்கத் தொடங்கினான். அவனது உடலின் நூற்றுக்கணக்கான வெவ்வேறு பகுதிகளில் தனது அலகாலும், சிறகுகளாலும் அடித்து, அவனைச் சின்னாபின்னமாய்ச் சிதைத்தான். மலையின் ஊற்றில் இருந்து நீர் வடிவது போல, ராவணனின் உடலில் இருந்து இரத்தம் திரளாகப் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.
ராமனுக்கு நன்மை செய்ய விரும்பிய கழுகால் {ஜடாயுவால்} இப்படித் தாக்கப்பட்ட ராவணன், தனது வாளை எடுத்து அந்தப் பறவையின் {ஜடாயுவின்} இரு சிறகுகளையும் அறுத்தெரிந்தான். மேகங்களுக்கு மேலே காட்சித் தரும் பெரும் மலைச்சிகரம் போல இருந்த அந்தக் கழுகு மன்னனைக் {ஜடாயுவைக்} கொன்ற அந்த ராட்சசன் {ராவணன்}, மடியில் சீதையை வைத்துக் கொண்டு காற்றில் உயர எழும்பினான். எங்கெல்லாம் துறவிகளின் ஆசிரமங்கள், தடாகம், ஆறு, குளம் எங்கெல்லாம் தென்பட்டனவோ, அங்கெல்லாம், அந்த விதேக நாட்டு இளவரசி {சீதை}, தனது ஆபரணங்களில் ஒன்றை வீசி எறிந்தாள். ஒரு மலையின் மேல் குரங்களில் முதன்மையான ஐந்து குரங்குகள் இருப்பதைக் கண்ட அந்தப் புத்திக்கூர்மை கொண்ட மங்கை {சீதை}, தன் விலையுயர்ந்த ஆடையில் இருந்து ஒரு பெரும் துண்டை அவர்களுக்கு மத்தியில் வீசி எறிந்தாள். மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த அழகிய துணித்துண்டு, அந்தக் குரங்குகளில் முதன்மையான ஐவர் மத்தியல், மேகத்தில் இருந்து வரும் மின்னல் போலக் காற்றில் படபடத்துக் கொண்டு வந்தது. அதற்குள் அந்த ராட்சசன் {ராவணன்}, காற்றில் {விரைவாகச்} செல்லும் பறவை போல, வானத்தில் வெகு தொலைவு கடந்து சென்றுவிட்டான். விரைவில் அந்த ராட்சசன் {ராவணன்}, உயர்ந்த சுவர்களைக் கொண்டு அனைத்துப் பக்கங்களில் சூழப்பட்டதும், பல வாயில்களைக் கொண்டதும், விஸ்வகிரீத்தால் {விஸ்வகர்மாவால்} கட்டப்பட்டதுமான காண்பதற்கினிய தனது அழகிய நகரத்தைக் கண்டான். பிறகு அந்த ராட்சச மன்னன் {ராவணன்}, இலங்கை என்று அழைக்கப்பட்ட தனது நகரத்திற்குள் சீதையுடன் நுழைந்தான்.
இப்படிச் சீதைக் கடத்திச் செல்லப்பட்ட வேளையில், அந்தப் பெரும் மானைக் {மானுருவில் இருந்த மாரீசனைக்} கொன்ற புத்திக்கூர்மை கொண்ட ராமன், திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, (வழியில்) தன் தம்பி லட்சுமணனைக் கண்டான். தன் தம்பியைக் {லட்சுமணனைக்} கண்ட ராமன், “ராட்சசர்கள் நடமாடும் ஒரு காட்டில், விதேக இளவரிசயை {சீதையை} விட்டு விட்டு, நீ எப்படி இங்கே வரலாம்? என்று சொல்லிக் கடிந்து கொண்டான். மான் தோற்றத்தில் வந்த ராட்சசன் தன்னை நெடுந்தூரம் இழுத்துச் சென்றதையும், (சீதையை ஆசிரமத்தில் தனியாக விட்டுவிட்டு வந்த) தன் தம்பியின் வருகையையும் நினைத்துப் பார்த்த ராமன், வேதனையால் நிரம்பினான். லட்சுமணனைக் கடிந்து கொண்டே, அவனை நோக்கி விரைவாக முன்னேறிய ராமன், “ஓ! லட்சுமணா, விதேக இளவரசி {சீதை} இன்னும் உயிருடன் இருக்கிறாளா? அவள் இனி இல்லை என நான் அஞ்சுகிறேன்!” என்றான்.
பிறகு லட்சுமணன் சீதை சொன்ன அனைத்தையும், குறிப்பாகத் தகாத இழிவான மொழிகளை அடுத்தடுத்துச் சொன்னான். எரியும் இதயத்துடன் ராமன் ஆசிரமத்தை நோக்கி ஓடினான். வழியில் மரண வேதனையில் பெரும் மலைபோல் கிடந்த ஒரு பெரிய கழுகைக் கண்டான். அவன் {ஜடாயு}, ஒரு ராட்சசனாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்த காகுஸ்த குல வழித்தோன்றல் {ராமன்}, பெரும் சக்தியுடன் தனது வில்லை வட்டமாக வளைத்து, தன் தம்பி லட்சுமணனுடன் அவனை {ஜடாயுவை} நோக்கி விரைந்தான். எனினும் அந்தப் பெருங்கழுகானவன் {ஜடாயு}, அந்த இருவரிடமும், “அருளப்பட்டிருப்பீர்கள், நான் கழுகுகளின் மன்னனும், தசரதனின் நண்பனுமாவேன்" என்றான். அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட ராமன் மற்றும் அவனது தம்பி ஆகிய இருவரும் தங்கள் அற்புதமான வில்லை ஒதுக்கி வைத்துவிட்டு, “நம் தந்தையின் பேரை இக்கானகத்தில் சொல்லும் இவன் யார்?” என்றனர்.
பிறகு அவர்கள் அந்த உயிரினத்தை {ஜடாயு என்ற கழுகை}, இரண்டு சிறகுகளும் அற்ற பறவை எனக் கண்டார்கள். அந்தப் பறவையானவன் {ஜடாயு}, சீதைக்காக {போராடி}, ராவணன் கையால் தான் வீழ்ந்ததைச் சொன்னான். பிறகு ராவணன் போன வழியைக் குறித்து ராமன் அந்தக் கழுகிடம் {ஜடாயுவிடம்} விசாரித்தான். அக்கழுகானவன் {ஜடாயு} தனது தலையசைவின் மூலம் பதிலளித்துத் தனது கடைசி மூச்சை விட்டான். ராவணன் தென் திசையில் சென்றான் என்ற அந்தக் கழுகின் குறிப்பைப் புரிந்த கொண்ட ராமன், தன் தந்தையின் நண்பருக்கு {ஜடாயுவிற்கு} அஞ்சலி செலுத்தி, அவனது {ஜடாயுவின்} ஈமச் சடங்குகளை முறைப்படிச் செய்தான்.
பிறகு எதிரிகளைத் தண்டிப்பவர்களான ராமனும் லட்சுமணனும், விதேக இளவரசி {சீதை} கடத்தப்பட்டதால் பெருந்துக்கத்தில் மூழ்கி, தண்டக வனம் செல்லும் தென் பாதையில் பயணித்தனர். அப்படி அவர்கள் போகும் வழியில், தர்ப்பை ஆசனங்கள் சிதறி, நீர்க்குடங்கள் உடைந்து, இலைகளைக் குடைகளாகக் கொண்டிருந்த துறவிகளின் பல ஆசிரமங்கள் ஆளற்று இருப்பதையும், நூற்றுக்கணக்கான நரிகள் அங்கு நிறைந்திருப்பதையும் கண்டனர். சுமித்திரையின் மகனுடன் {லட்சுமணனுடன்} சென்ற ராமன், அந்தப் பெரும் கானகத்தில், அனைத்துத் திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்கும் மான்கூட்டங்களைக் கண்டான். விரைவாகப் பரவும் கானக நெருப்பின் போது {காடு எரியும்போது} கேட்கப்படும் ஒலியைப் போலப் பல்வேறு உயிரினங்களின் ஒலியைக் கேட்டான். விரைவில் அவர்கள் கொடூரமான முகத்தோற்றம் கொண்ட தலையில்லாத ராட்சசன் ஒருவனைக் கண்டனர். மேங்களைப் போலக் கருமையாகவும், மலையைப் போலப் பெரிதாகவும் இருந்த அந்த ராட்சன் சால {ஆச்சா} மரத்தைப் போல அகன்ற தோள்களும், பெரும் கரங்களையும் கொண்டிருந்தான். அவனது மார்பில் இரண்டு பெரிய கண்கள் இருந்தன. வாயின் திறப்பு அவனது அகன்ற தொந்தியில் இருந்தது.
அந்த ராட்சசன் {கவந்தன்} தன் கரம் கொண்டு லட்சுமணனை எந்தச் சிரமமும் இல்லாமல் {எளிதாகப்} பிடித்தான். ராட்சசனால் பிடிக்கப்பட்ட அந்தச் சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, முற்றிலும் குழம்பிப் போய் ஆதரவற்றவனானான். ராமனை நோக்கித் தன் பார்வையைச் செலுத்திய அந்தத் தலையில்லாத ராட்சசன் {கவந்தன்}, தன் உடலில் வாயிருக்கும் பகுதியை நோக்கி லட்சுமணனை இழுக்க ஆரம்பித்தான். அப்போது லட்சுமணன் துயரத்துடன் ராமனிடம், “என் அவலநிலையைப் பாரும்! உமது நாட்டை இழந்தீர், பிறகு நமது தந்தை இறந்தார், சீதை அபகரிக்கப்படாள், இறுதியாக இந்தப் பேரழிவு என்னை அடைந்திருக்கிறது! ஐயோ, விதேக இளவரசியுடன் {சீதையுடன்} கோசலத்துக்கு நீர் திரும்புவதையும், மூதாதையர் வழி வந்த அரியணையில் அமர்ந்து நீர் முழு உலகையும் ஆளப்போவதையும் என்னால் காண முடியாதே! தர்ப்பைப் புற்களாலும், நெற்பொரிகளாலும் {fried paddy}, கருப்புப் பட்டாணிகளாலும் {வன்னித்துளிர்களாலும்} சுத்தப்படுத்தப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்ட நீரில் பட்டமேற்புக்கான குளியலை முடித்து, மேகங்களில் இருந்து வெளிப்படும் சந்திரனைப் போல இருக்கும் உமது முகத்தை, பேறுபெற்றவர்களால்தானே காணமுடியும்!” என்றான் [1]. புத்திகூர்மை கொண்ட லட்சுமணன் இதையும், இதுபோன்ற வார்த்தைகளையும் இதே போன்ற தொனியில் சொல்லிப் புலம்பினான்.
எனினும் காகுஸ்த குலத்தைச் சேர்ந்த அந்தச் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, ஆபத்துக்கு மத்தியில் அச்சமற்றவனாக இருந்து, லட்சுமணனிடம், “ஓ! மனிதர்களில் புலியே {லட்சுமணா}, துயருக்கு வழி கொடுக்காதே! நான் இங்கு இருக்கும்போது உன்னை இது {இந்த அசுரன்} என்ன செய்யும்? இவனது வலக்கரத்தை நீ வெட்டு, நான் இவனது இடக்கரத்தை வெட்டுகிறேன்" என்றான். ராமன் இப்படிப் பேசிக் கொண்டே, அந்த அரக்கனின் இடக்கரத்தை, கூர்மையான தனது கூன்வாள் கொண்டு, எள்ளுக்கட்டைக் வெட்டுவதுபோல வெட்டினான். தன் அண்ணன் தன் முன் நிற்பதைக் கண்ட சுமித்திரையின் பலம் பொருந்திய மகன் {லட்சுமணன்}, தன் வாளைக் கொண்டு, அந்த ராட்சசனின் வலக்கரத்தையும் துண்டித்தான். பிறகு அந்த லட்சுமணன், அந்த ராட்சசனை விலாப்புறத்தில் தொடர்ந்து அடிக்கவும் ஆரம்பித்தான். பிறகு தலையில்லாத அந்தப் பெரும் அரக்கன் தரையில் விழுந்து விரைவாக அழிந்தான்.
[1] இங்கு முழுமகாபாரதத்தில் இராமாயணத்தின் சுருக்கமே மார்க்கண்டேயரால் சொல்லப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டு, கம்பனின் ராமகாதையில், ராமன் புலம்புவதாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்த அழகிய வரிகளையும் கவனியுங்கள்.
அவ் வழி, இளையவன் அமர்ந்து நோக்கியே,
'வெவ்வியது ஒரு பெரும் பூதம், வில் வலாய்,
வவ்விய தன் கையின் வளைத்து, வாய்ப் பெயும்;
செய்வது என் இவண்?' என, செம்மல் சொல்லுவான்:
தோகையும் பிரிந்தனள்; எந்தை துஞ்சினன்;
வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென்;
ஆகலின், யான், இனி, இதனுக்கு ஆமிடம்;
ஏகுதி ஈண்டுநின்று, இளவலே!' என்றான்.
எனினும் காகுஸ்த குலத்தைச் சேர்ந்த அந்தச் சிறப்புமிக்க வழித்தோன்றல் {ராமன்}, ஆபத்துக்கு மத்தியில் அச்சமற்றவனாக இருந்து, லட்சுமணனிடம், “ஓ! மனிதர்களில் புலியே {லட்சுமணா}, துயருக்கு வழி கொடுக்காதே! நான் இங்கு இருக்கும்போது உன்னை இது {இந்த அசுரன்} என்ன செய்யும்? இவனது வலக்கரத்தை நீ வெட்டு, நான் இவனது இடக்கரத்தை வெட்டுகிறேன்" என்றான். ராமன் இப்படிப் பேசிக் கொண்டே, அந்த அரக்கனின் இடக்கரத்தை, கூர்மையான தனது கூன்வாள் கொண்டு, எள்ளுக்கட்டைக் வெட்டுவதுபோல வெட்டினான். தன் அண்ணன் தன் முன் நிற்பதைக் கண்ட சுமித்திரையின் பலம் பொருந்திய மகன் {லட்சுமணன்}, தன் வாளைக் கொண்டு, அந்த ராட்சசனின் வலக்கரத்தையும் துண்டித்தான். பிறகு அந்த லட்சுமணன், அந்த ராட்சசனை விலாப்புறத்தில் தொடர்ந்து அடிக்கவும் ஆரம்பித்தான். பிறகு தலையில்லாத அந்தப் பெரும் அரக்கன் தரையில் விழுந்து விரைவாக அழிந்தான்.
அப்போது அங்கே அந்த ராட்சசன் உடலில் இருந்து ஒரு தெய்வீக மனிதன் வெளிப்பட்டான். அவன் ஒரு நொடி வானத்தில் நின்று, ஆகாயத்தில் இருக்கும் ஒளி பொருந்திய சூரியனைப் போல அந்தச் சகோதரர்களுக்குக் காட்சியளித்தான். பேச்சில் வல்லவனான ராமன், அவனிடம், “நீ யார்? உன்னை விசாரிக்கும் எனக்குப் பதில் சொல்? எப்படி இது போன்ற ஒன்று நடக்கக்கூடும்? அனைத்தும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றன!” என்றான். ராமனால் இப்படிக்கேட்கப்பட்ட அவன் {ராட்சசன்}, “ஓ! இளவரசே {ராமா}, நான் விசுவாவசு என்ற பெயர் கொண்ட கந்தர்வனாவேன். ஒரு அந்தணரின் சாபத்தால் நான் ராட்சசனின் உருவத்தையும் இயல்பையும் அடைந்தேன். உன்னைப் பொறுத்தவரை, ஓ! ராமா, இலங்கையில் வசிக்கும் மன்னன் ராவணனால் சீதை பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டாள். உனக்குத் தனது நட்பைத் தரும் சுக்ரீவனிடம் செல். ரிஷ்யமூகச் சிகரத்திற்கு மிக அருகே புனிதமான நீரும், கொக்குகளும் நிறைந்த பம்பை என்ற பெயர் கொண்ட ஒரு தடாகம் இருக்கிறது. அங்கே பொன் மாலைத் தரித்த குரங்கு மன்னன் வாலியின் தம்பியான சுக்ரீவன், தனது நான்கு ஆலோசகர்களுடன் வசித்து வருகிறான். அவனிடம் சென்று உனது துயரத்தைச் சொல். உன்னைப் போலவே அவல நிலையில் இருக்கும் அவன், தனது உதவியை உனக்கு அளிப்பான். இதைத்தான் {இவ்வளவுமட்டும்தான்} நாம் சொல்ல முடியும். சந்தேகமற நீ ஜனகனின் மகளைக் {சீதையைக்} காண்பாய்! ராவணனையும், பிறரையும் குரங்குகள் மன்னன் {சுக்ரீவன்} அறிந்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை!” என்றான் [2]. இந்த வார்த்தைகளைக் சொன்ன அந்தப் பெரும் ஒளி கொண்ட தெய்வீகமனிதன் தன்னைப் பார்வையில் இருந்து மறைத்துக் கொண்டான். ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய அந்த இரு வீரர்களும் இதனால் {இக்காட்சியினால்} மிகவும் ஆச்சரியப்பட்டனர்.
[2] கவந்தன் ராமனை சுக்ரீவனோடு நட்பு கொள்ளச் சொல்வது :
கம்பனின் மொழியில்'கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானைஎதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின் ஈண்ட,வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது' என்றான்,
அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.