Kunti cast aside her idleness! | Vana Parva - Section 302 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
குந்திபோஜனுக்கு உறுதி அளித்த குந்தி, ; குந்திபோஜன் சில முறைமைகளைக் குந்திக்குச் சொன்னது; அந்தணரிடம் தனது மகளை அறிமுகப்படுத்திய குந்திபோஜன், அவள் ஏதாவது பிழை செய்தால் பொறுத்தருளுமாறு அந்த அந்தணரிடம் குந்திபோஜன் வேண்டியது; குந்தி அந்த அந்தணரைப் பொறுப்புடன் பார்த்துக் கொண்டது...
குந்தி {வளர்ப்புத் தந்தையான குந்திபோஜனிடம்}, "ஓ! மன்னா, நீர் உறுதிகொடுத்தவாறே, குவிந்த மனதோடு {மனம் ஒன்றி} நான் அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குப்} பணிவிடை செய்வேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {குந்திபோஜரே}, நான் இதைப் போலியாகச் சொல்லவில்லை. அந்தணர்களை வழிபடுவது எனது இயல்பே. மேலும், தற்போதைய வழக்கில், உமக்கு விருப்பமானதை நான் செய்தால், எனது நன்மைக்கு அது பெரிய பலனளிக்கும். அந்த வழிபடத்தகுந்தவர் மாலையிலோ, காலையிலோ, இரவிலோ, நடு இரவிலோ வந்தாலும், என்னிடம் கோபம் கொள்ள அவருக்கு எந்தக் காரணமும் இருக்காது! ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்குச்} சேவை செய்யும் நன்மையைச் செய்வதும், உமது கட்டளைகளை நிறைவேற்றுவதுமே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {குந்திபோஜரே}, எனக்கு உயர்ந்த பலனைத் தரும். எனவே, ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே, என்னை நீர் நம்பலாம்!
அந்த அந்தணர்களில் சிறந்தவர் {துர்வாசர்} உமது இல்லத்தில் வசிக்கும்போது, அதிருப்திக்கான எந்த நிலையையும் அடைய மாட்டார். நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! மன்னா {குந்திபோஜரே}, நான் மிகுந்த கவனத்தோடு, அந்த அந்தணருக்கு ஏற்புடையதையும், உமக்கு நன்மை நிறைந்ததையுமே செய்வேன். ஓ! பாவமற்றவரே, பேரறம்சார்ந்த அந்தணர்கள் மனநிறைவடைந்தால் முக்தியையும், வருந்தினால் அக்குற்றவாளிக்கு அழிவையும் தரவல்லவர்கள் என்பதை நான் முழுமையாக அறிவேன். எனவே, நான் அந்த அந்தணர்களில் முதன்மையானவரை மனம் நிறையச் {திருப்தி கொள்ளச்} செய்வேன். ஓ! ஏகாதிபதி {குந்திபோஜரே}, அந்த மறுபிறப்பாள மனிதர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரை {துர்வாசரைக்} குறித்து நீர் கவலைக் கொள்ளத்தேவையில்லை. ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, முற்காலத்தில் சுகன்யாவின் செயல் காரணமாகச் சியவனர் தீங்கிழைத்தது போல, ஏகாதிபதிகளின் வரம்புமீறல்களின் விளைவாக அந்தணர்கள் அவர்களுக்குத் தீமையை விளைவிக்கின்றனர். எனவே, ஓ! மன்னா {குந்திபோஜரே}, நான் பெரும் ஒழுங்குமுறையுடன் {சரியான இடைவெளிகளில்}, அந்த அந்தணர்களில் சிறந்தவருக்காக {துர்வாசருக்காகக்} காத்திருந்து, உமது கட்டளைகளின் படி நடந்து கொள்வேன்!” என்றாள் {குந்தி}.
அவள் {குந்தி} இப்படி நீளமாகப் பேசியதும், அவளை அணைத்துக் கொண்ட மன்னன் {குந்திபோஜன்}, அவளுக்கு உற்சாகமூட்டி, அவளால் என்ன செய்யப்பட வேண்டும் என்பதை அவளுக்கு விளக்கமாகத் தெரிவித்தான். பிறகு அந்த மன்னன் {குந்திபோஜன் குந்தியிடம்}, “ஓ மென்மையான பெண்ணே {குந்தியே}, உனது நன்மைக்காகவும், எனது நன்மைக்காகவும், உனது குலத்தின் நன்மைக்காகவும், ஓ! குற்றமற்ற அங்கங்கள் கொண்டவளே {குந்தி}, அச்சமில்லாமல் செயல்படு!” என்றான். அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த சிறப்புமிக்கக் குந்திபோஜன், பிறகு, பிருதையை {குந்தியை} அந்த அந்தணரிடம் {துர்வாசரிடம்} அழைத்துச் சென்று, “ஓ! அந்தணரே {துர்வாச முனிவரே}, இது எனது மகள். இளவயது கொண்ட இவள், ஆடம்பரமாக {சுகபோகமாக} வளர்க்கப்பட்டவளாவாள். எனவே, இவள் எப்போதாவது வரம்புமீறி நடந்து கொண்டால், அதை உமது இதயத்தில் கொள்ளாதீர்! முதிர்ந்த மனிதர்கள், சிறுவர்கள், துறவிகள் ஆகியோர் அடிக்கடி வரம்பு மீறினாலும் சிறப்புமிக்க அந்தணர்கள் கோபம் கொள்வதில்லை. அவர்கள் பெரும் குற்றம் இழைத்தாலும் மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} பொறுமைகாப்பார்கள். எனவே, ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, தனது சக்திக்கும் முயற்சிக்கும் இயன்ற அளவு ஒருவனால் செய்யப்படும் வழிபாடு ஏற்கப்பட வேண்டும்!” என்றான் {குந்திபோஜன்}.
ஏகாதிபதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {துர்வாசர்}, “அப்படியே ஆகட்டும்!” என்றார். அதன்பிறகு அந்த மன்னன் {குந்திபோஜன்} மிகுந்த மன நிறைவு கொண்டு அன்னங்களைப் போலவும், சந்திரனின் கதிர்களைப் போலவும் வெண்மையாக இருக்கும் ஒரு மாளிகையை அவருக்குக் கொடுத்தான். வேள்வி நெருப்புக்கான அறையில், குறிப்பாக அவருக்கெனவே ஓர் இருக்கையை மன்னன் {குந்திபோஜன்} வைத்தான். அந்த அந்தணருக்கு அளிக்கப்பட்ட உணவு மற்றும் பிற பொருட்கள் சிறந்த வகையில் இருந்தன. சோம்பலையும், சுயமுக்கியத்துவ உணர்வுகளையும் தள்ளி வைத்த அந்த இளவரசி {பிருதை}, நல்ல உள்ளத்துடன் அந்த அந்தணரை {துர்வாச முனிவரை} தனக்குள் ஆராதித்து, அவருக்காகக் காத்திருக்கத் தீர்மானித்தாள். சுத்தமான நடத்தை கொண்ட கற்புடைய குந்தி, அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குச்} சேவை செய்வதற்காக அங்கே சென்றாள். தெய்வத்துக்காகக் காத்திருப்பது போலவே, அந்த அந்தணருக்காகக் காத்திருந்து, அவரைப் பெரிதும் மனம் நிறையச் செய்தாள் {குந்தி}.”
இங்கே குறிப்பிடப்படும் அந்தணர், கங்குலியின் புத்தகத்தில் துர்வாசர் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் பல பதிப்புகளில் இந்த அந்தணர் துர்வாசர் என்றே குறிப்பிடப்படுகிறார். தேவிபாகவதத்தில் இந்த அந்தணர் துர்வாசரே என்று சொல்லப்பட்டுள்ளது.
இங்கே குறிப்பிடப்படும் அந்தணர், கங்குலியின் புத்தகத்தில் துர்வாசர் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் பல பதிப்புகளில் இந்த அந்தணர் துர்வாசர் என்றே குறிப்பிடப்படுகிறார். தேவிபாகவதத்தில் இந்த அந்தணர் துர்வாசரே என்று சொல்லப்பட்டுள்ளது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.