Kunti denied boon! | Vana Parva - Section 303 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
குந்தி செய்த பணிவிடையால் மகிழ்ந்த அந்தணர் அவளுக்கு வரம் கொடுக்க முன் வந்தது; வரத்தை மறுத்த குந்தி; அவள் வரத்தை ஏற்கவில்லையென்றாலும், மந்திரம் உபதேசித்த அந்தணர்; அந்தணர் அரசனிடம் விடைபெற்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடும் நோன்புகள் கொண்ட அந்தக் கன்னிகை {குந்தி}, ஓ! வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பரிசுத்த இதயம் கொண்ட தனது பணிவிடையால், கடும் நோன்புகள் கொண்ட அந்த அந்தணரை {துர்வாசரை} மனம் நிறையச் செய்வதில் வென்றாள். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, “நான் காலையில் திரும்பி வருவேன்" என்ற சொல்லும் அந்த அந்தணர்களில் சிறந்தவர்கள், சில நேரங்களில் மாலையிலோ இரவிலோதான் திரும்புவார்; எனினும், அந்தக் கன்னிகை {குந்தி}, அனைத்து நேரங்களிலும் அருமையான உணவு, பானம் மற்றும் படுக்கை ஆகியவற்றைக் கொடுத்து அவரை {அந்த அந்தணரை; துர்வாசரை} வழிபட்டாள். நாளுக்கு நாள் அவரது உணவு, இருக்கை மற்றும் படுக்கை ஆகியவற்றில் அவளது {குந்தியின்} கவனம் தேய்ந்துபோவதற்குப் பதிலாக வளர்ந்து வந்தது.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவளது {குந்தியின்} ஏற்பாடுகளில் ஏதாவது குறை கண்டு அந்த அந்தணர் {துர்வாசர்} அவளைக் கடிந்து கொண்டாலோ, கடும்வார்த்தைகள் பேசினாலோ கூட, பிருதை {குந்தி}, அவருக்கு ஏற்பில்லாத எதையும் செய்தாளில்லை. பல சந்தர்ப்பங்களில் அந்த அந்தணர் குறித்த நேரத்திற்கு நெடுநேரத்திற்குப் பின்னரே வந்தார். பல சந்தர்ப்பங்களின் உணவைக் கொடுக்கக் கடினமான நேரங்களில் (நள்ளிரவு நேரம் போன்ற நேரங்களில்) அவர் {துர்வாசர்}, “எனக்கு உணவு கொடு!” என்று கேட்பார். ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம், “அனைத்தும் தயாராக இருக்கின்றன" என்று சொல்லும் பிருதை {குந்தி} அவர் கேட்டதை அவருக்கு முன் ஏந்துவாள். ஒரு சீடரையோ {சிஷ்யை}, மகளையோ, தங்கையையோ போலப் பெண்களில் ரத்தினமான அந்தப் பழியற்ற பெண் அர்ப்பணிப்பான இதயத்துடன், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அந்தணர்களின் முதன்மையானவரை {துர்வாசரை} மனநிறைவு கொள்ளச் செய்தாள்.
அந்தணர்களில் சிறந்த அவர் {துர்வாசர்}, அவளின் {குந்தியின்} நடத்தையில் கவனிப்பிலும் மனம் மகிழ்ந்தார். சரியான மதிப்புடன் கூடிய அவளது கவனிப்புகளை அவர் {துர்வாசர்} பெற்றார். ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் அவளின் {குந்தியின்} தந்தை {குந்திபோஜன்} அவளிடம், “ஓ! மகளே {குந்தி}, உனது கவனிப்பால் அந்தணர் {துர்வாசர்} மனநிறைவு அடைகிறாரா?” என்று கேட்பான். அதற்கு அந்தச் சிறப்புமிக்கக் கன்னிகை {குந்தி}, “மிக நன்றாக!” என்று மறுமொழி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அதன்பேரில், உயர் ஆன்ம குந்திபோஜன் உயர்ந்த மகிழ்ச்சியை உணர்ந்தான். ஒரு முழு வருடம் கடந்ததும், அந்தத் துறவிகளில் சிறந்தவரால் {துர்வாசரால்}, தன்னைக் கவனித்துக் கொள்வதில் ஈடுபட்டிருந்த பிருதையிடம் {குந்தியிடம்} எந்தத் குற்றத்தையும் காண முடியாமல் அவளிடம் மிகவும் மனநிறைவு கொண்டு, “ஓ! மென்மையான கன்னிகையே {குந்தியே}, உனது கவனிப்புகளால், ஓ! அழகான பெண்ணே {குந்தியே}, நான் மிகவும் மகிழ்ந்தேன். ஓ! அருளப்பட்ட பெண்ணே {குந்தி}, இவ்வுலகத்தில் மனிதர்களால் அடைய முடியாத அரிதான வரங்களைக் கேள். அதை அடைவதால், நீ இவ்வுலகில் உள்ள பெண்கள் அனைவரின் புகழையும் விஞ்சி நிற்பாய்!” என்றார் {துர்வாசர்}.
இந்த வார்த்தைகளுக்குக் குந்தி {துர்வாசரிடம்}, “வேதங்களை அறிந்தவர்களின் தலைவரான நீரும், எனது தந்தையும், என்னிடம் மனநிறைவுடன் இருப்பதால், என் சார்பாக அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன. வரங்களைப் பொறுத்தமட்டில், ஓ! அந்தணரே, அவை அனைத்தும் என்னால் ஏற்கனவே பெறப்பட்டுவிட்டன!” என்றாள். அதற்கு அந்த அந்தணர் {துர்வாசர் குந்தியிடம்}, “ஓ! மென்மையான கன்னிகையே, ஓ! இனிய புன்னகை கொண்டவளே {குந்தி}, நீ என்னிடம் இருந்து வரங்களை அடைய விரும்பவில்லையென்றால், தேவர்களை அழைக்கும் மந்திரத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக! தேவர்களுக்கு மத்தியில் உள்ள எவரை நீ இந்த மந்திரத்தை உச்சரித்து அழைத்தாலும், அவன் உன் முன் வந்து, ஆளுகைக்குள் இருப்பான். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த மந்திரத்தின் தகுதியினால் மென்மையான வடிவத்தில் வரும் அத்தேவன் அடிமையின் பணிவான அணுகுமுறை அனுமானித்து, உனது அதிகாரத்துக்கு உட்பட்டு இருப்பான்!” என்றார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கன்னிகை {குந்தி}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, இருபிறப்பாளர்களில் சிறந்தவரின் {அந்த அந்தணரின்} சாபத்திற்கஞ்சி, அவரது விருப்பங்களை இரண்டாவது முறையாக மறுக்க முடியவில்லை. பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அந்தணர் குற்றமற்ற அங்கங்கள் கொண்ட அந்தப் பெண்ணுக்கு {குந்திக்கு} அதர்வண வேதத்தின் தொடக்கத்தில் உள்ள அந்த மந்திரங்களை உரைத்தார். அந்த மந்திரங்களை அவளுக்குச் சொன்ன பிறகு, அவர் {துர்வாசர்} குந்திபோஜனிடம், “ஓ! ஏகாதிபதி {குந்திபோஜா}, எப்போதும் உரிய முறையில் வழிபடப்பட்டு, உனது மகளிடம் {குந்தியிடம்} மனநிறைவு கொண்டு உனது இல்லத்தில் இருந்த நான், இப்போது செல்கிறேன்" இதைச் சொன்ன அவர் அங்கேயே மறைந்து போனார். அந்த அந்தணர் {துர்வாசர்} அங்கே மறைந்து போனதைக் கண்ட மன்னன் {குந்திபோஜன்} ஆச்சரியத்தால் தாக்கப்பட்டான். மேலும், பிறகு, அந்த ஏகாதிபதி {குந்திபோஜன்}, தனது மகளை {குந்தியை} சரியான மதிப்புடன் நடத்தினான்"
.
இங்கே குறிப்பிடப்படும் அந்தணர், கங்குலியின் புத்தகத்தில் துர்வாசர் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் பல பதிப்புகளில் இந்த அந்தணர் துர்வாசர் என்றே குறிப்பிடப்படுகிறார். தேவிபாகவதத்தில் இந்த அந்தணர் துர்வாசரே என்று சொல்லப்பட்டுள்ளது.
இங்கே குறிப்பிடப்படும் அந்தணர், கங்குலியின் புத்தகத்தில் துர்வாசர் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் பல பதிப்புகளில் இந்த அந்தணர் துர்வாசர் என்றே குறிப்பிடப்படுகிறார். தேவிபாகவதத்தில் இந்த அந்தணர் துர்வாசரே என்று சொல்லப்பட்டுள்ளது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.