Lord Surya spoke to Kunti! | Vana Parva - Section 304 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
மந்திரங்களின் சக்தியைச் சோதிக்கக் குந்தி எண்ணுவது; அதே நேரத்தில் அவளுக்குப் பருவமும் வந்தது; கிழக்கில் உதிக்கும் சூரியனைக் கண்டு மந்திரங்களால் குந்தி அவனை அழைத்தது; சூரியன் வந்தது; குந்தி அவனைத் திரும்பி செல்லும்படி சொன்னது; சூரியன் குந்தியை மிரட்டியது; குந்தி தனது நிலையை விளக்குவது; சூரியன் தனது நிலையை விளக்குவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த அந்தணர்களில் முதன்மையானவர் {துர்வாசர்}, வேறு வேலையாகச் சென்றுவிட்ட பிறகு, அந்தக் கன்னிகை {குந்தி}, அந்த மந்திரங்களின் திறனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினாள். அவள் தனக்குள்ளேயே, "அந்த உயர் ஆன்மா கொண்டவரால் {மகாத்மாவால்} எனக்கு அளிக்கப்பட்ட அந்த மந்திரங்களின் இயல்பு எப்படிப்பட்டது? தாமதிக்காமல் நான் அதன் சக்தியைச் சோதிப்பேன்" என்று நினைத்தாள். அப்படி அவள் {குந்தி} சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே, திடீரெனப் பருவகாலத்தின் {ருது} அறிகுறிகள் தனக்குத் தென்படுவதை உணர்ந்தாள். திருமணமாகாத போதே, தனக்குப் பருவகாலம் வந்ததால், அவள் {குந்தி} வெட்கமும் நாணமுமடைந்தாள். தனது அறையில் ஓர் ஆடம்பரப் படுக்கையில் அமர்ந்திருந்த அவள் {குந்தி}, கிழக்கில் சூரியக் கோளம் உதிப்பதைக் காண நேர்ந்தது. சிறந்த இடை கொண்ட அந்தக் கன்னிகையின் {குந்தியின்} கண்கள் மற்றும் மனம் ஆகிய இரண்டும் அந்தச் சூரிய கோளத்தின் மேல் நிலைத்து நின்றது. காலைச் சூரியனின் அழகைக் கண்டு, தெவிட்டாமல் மீண்டும் மீண்டும் அந்தக் கோளத்தை அவள் கூர்ந்து நோக்கியபடியே இருந்தாள். திடீரென அவளுக்கு {குந்திக்கு} தெய்வீகப் பார்வை கொடையாகக் கிடைத்தது.
பிறகு அவள் {குந்தி}, கவசத்துடனும், காது குண்டலங்களுடனும் இருந்த அந்தத் தெய்வீகமான தேவனைக் {சூரியனைக்} கண்டாள். ஓ மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, அந்தத் தேவனைக் {சூரியனைக்} கண்ட அவள் மந்திரங்களைக் {மந்திரங்களின் திறனைக்} குறித்து ஆவல் கொள்ளத் தொடங்கினாள். அதன்பிறகு அந்தக் கன்னிகை {குந்தி}, அவனை {சூரியனை} அழைக்கத் {மந்திரங்களால் அழைக்கத்} தீர்மானித்தாள். மேலும், பிராணாயாமத்தின் உதவியைக் கொண்டு, அவள் {குந்தி} நாள்-படைப்போனை {சூரியனை} {மந்திரங்களால்} அழைத்தாள் {invoked}. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படி அவளால் அழைக்கப்பட்ட நாள்படைப்போன் {சூரியன்}, விரைவில் {அவளுக்குத்} தன்னை வெளிப்படுத்தினான். தேன் போன்ற மஞ்சள் நிறமும், வலிய கரங்களும், சங்கின் கோடுகளைப் போன்று கழுத்தில் கோடுகளும் அவனுக்கு {சூரியனுக்கு} இருந்தன. மேலும் தோள்வளைகளும், கிரீடமும் அணிந்திருந்த அவன், சிரித்தபடியே அனைத்து திசைகளையும் ஒளியூட்டிக் கொண்டு வந்தான். யோக சக்தியின் மூலமாகத் தன்னை இருகூறாகப் பிரித்து, அதில் ஒன்றைக் கொண்டு தொடர்ந்து வெப்பத்தை அளித்தான். மற்றொன்றைக் கொண்டு குந்தியின் முன்பு தோன்றினான்.
அவன் {சூரியன்} குந்தியிடம் மிகுந்த இனிமையான வார்த்தைகளில், "ஓ! மென்மையான கன்னிகையே {குந்தி}, மந்திரங்களுக்குக் கட்டுப்பட்ட நான், உனக்குக் கீழ்ப்படிந்து வந்திருக்கிறேன். ஓ! ராணி {குந்தி}, உனது ஆளுகைக்கு ஆட்பட்டிருக்கும் நான் என்ன செய்ய வேண்டும்? நீ என்ன கட்டளையிட்டாலும் நான் அதைச் செய்வேன். எனக்குச் சொல்?" என்று கேட்டான். அந்தத் தெய்வத்தின் {சூரியனின்} வார்த்தைகளைக் கேட்ட குந்தி {சூரியனிடம்}, "ஓ! வழிபாட்டுக்குரியவரே {சூரியனே}, நீர் எங்கிருந்து வந்தீரோ அங்கேயே செல்லும்! ஆவலின் காரணமாக மட்டுமே நான் உம்மை {மந்திரங்களால்} அழைத்தேன். ஓ! வழிபாட்டுக்குரியவரே {சூரியனே}, என்னை மன்னியும்" என்றாள். பிறகு சூரியன், "மெலிந்த இடைகொண்ட காரிகையே {குந்தி}, நீ சொன்னது போலவே நான் வந்த இடத்திற்கே திரும்பி செல்வேன்! எனினும், ஒரு தேவனை அழைத்து, அவனை வீணாக அனுப்புவது சரியாகாது! ஓ! அருளப்பட்டவளே {குந்தி}, காதுகுண்டலங்களும், கவசமும் தரித்து, உலகத்தில் ஒப்பிலாத பராக்கிரமம் கொண்ட ஒரு மகனைச் சூரியனிடம் இருந்து பெறுவதே உனது எண்ணம். எனவே, ஓ! யானை நடை கொண்ட காரிகையே {குந்தி}, உன்னை என்னிடம் ஒப்படைப்பாயாக! ஓ! மங்கையே, பிறகு நீ உனது விருப்பப்படி ஒரு மகனை அடைவாய்! ஓ மென்மையான பெண்ணே, ஓ! இனிய புன்னகை கொண்டவளே {குந்தி}, உன்னை அறிந்த பிறகு நான் திரும்பிச் செல்வேன்!
நீ இன்று எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, எனக்கு மனநிறைவளிக்கவில்லை என்றால், கோபத்தில் உன்னையும், உனது தந்தையையும் {குந்திபோஜனையும்}, அந்த அந்தணரையும் {துர்வாசரையும்} நான் சபிப்பேன். உனது குற்றத்தால், நான் அவர்கள் அனைவரையும் எரிப்பேன். உனது வரம்புமீறலை அறியாத உனது முட்டாள் தகப்பனுக்கும், உனது மனநிலையையும், நடத்தையையும் அறியாது, உனக்கு மந்திரங்களை அளித்த அந்த அந்தணருக்கும் உகந்த தண்டனையை அளித்து அல்லற்படுத்துவேன். ஓ! பெண்ணே, புரந்தரனைத் தலைமையாகக் கொண்ட சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் அனைவரும் உன்னால் ஏமாற்றப்படும் என்னைக் கண்டு ஏளனச் சிரிப்புடன் அதோ அங்கு நின்று பார்க்கின்றனர். நீ இப்போது தெய்வீகப் பார்வை கொண்டிருக்கிறாய், எனவே, அந்தத் தேவர்களைப் பார்! நீ என்னைப் பார்ப்பதற்காகவே, தெய்வீகப் பார்வையை நான் உனக்கு ஏற்கனவே அளித்திருக்கிறேன்" என்றான் சூரியன்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அதன்பிறகு அந்த இளவரசி {குந்தி}, ஆகாயத்தில் தத்தமது துறையில் [1] சரியாக நிற்கும் தேவர்களையும், ஏற்கனவே தன் முன் கண்டது போலவே கதிர்களுடனும், பெரும் பிரகாசத்துடனும் இருக்கும் சூரியனையும் கண்டாள். அவர்கள் அனைவரையும் கண்ட அந்தப் பெண் மிகவும் பயந்தாள். பிறகு அவளின் {குந்தியின்} முகம் வெட்கத்தாலும் நாணத்தாலும் நிறைந்தது. பிறகு அவள் {குந்தி} சூரியனிடம், "ஓ! கதிர்களின் தலைவரே {சூரியனே}, உமது துறைக்கே [1] திரும்பிப் போம். எனது கன்னித்தன்மையைக் கருத்தில் கொண்டு, உமது இந்தச் சீற்றம், எனக்குக் கடும் துயர் நிறைந்ததாக இருக்கிறது. ஒரு தந்தையோ, தாயோ, பிற மேன்மையானவர்களோ தான் தங்கள் மகளின் உடலைக் கொடுக்க முடியும். தூய்மை குன்றாமல் இருப்பதே பெண்களின் உயர்ந்த கடமை என்று இவ்வுலகம் கருதுவதை உயர்வாக எண்ணும் நான் அறத்தை தியாகம் செய்ய மாட்டேன். ஓ! பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்டவரே {சூரியனே}, எனது மந்திரங்களின் சக்தியைச் சோதித்துப் பார்க்க மட்டுமே, சிறுபிள்ளைத்தனமாக நான் உம்மை அழைத்துவிட்டேன். இளம் வயது கொண்ட ஒரு பெண் செய்த காரியம் இஃதென்றெண்ணி, ஓ! தலைவா {சூரியனே}, அவளை மன்னிப்பதே உமக்குத் தகும்!" என்றாள் {குந்தி}.
[1] மூலத்தில் விமானம் என்ற சொல் இருப்பதாகவும், அதைத் தேர் எனக் கொள்ளலாம் எனவும் கங்குலி சொல்கிறார்.
பிறகு சூரியன் {குந்தியிடம்}, "உன்னை நான் அப்படிப்பட்ட பெண் என்று {சிறுமியாகக்} கருதுவதாலேயே, ஓ! குந்தி, நான் உன்னிடம் இவ்வளவு மிதமாகப் பேசுகிறேன். வேறு ஒருத்தியிடமும் {சிறுமியல்லாதவளிடம்} நான் இதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இதனால் நீ நிச்சயம் மகிழ்ச்சியை அடைவாய். ஓ! அச்சம் கொண்ட கன்னிகையே {குந்தி}, நீ மந்திரங்களைக் கொண்டு என்னை அழைத்ததால், எந்தக் காரியமும் நடைபெறாமல் நான் செல்வது தகாது. ஓ! குற்றமற்ற அங்கங்கள் கொண்டவளே {குந்தி}, அப்படி நான் செய்தால், இவ்வுலகத்தில் கேலிக்குரியவனாவேன். ஓ அழகிய காரிகையே {குந்தி}, அனைத்துத் தேவர்களில் இருந்து நான் விடுபடுவேன் {a bye-word with all the celestials}. எனவே, உன்னை எனக்குத் தா! அதனால் நீ என்னைப் போன்றே ஒரு மகனை அடைந்து, இவ்வுலகால் புகழப்படுவாய்" என்றான் {சூரியன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.