Yudhishthira cried for his brothers! | Vana Parva - Section 311a | Mahabharata In Tamil
(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)
தன் தம்பிகள் இறந்து கிடப்பதைக் கண்டு யுதிஷ்டிரன் அழுது புலம்பியது; யமனைத் தவிர வேறு யாராலும் தன் தம்பிகளைக் கொன்றிருக்க முடியாத என யுதிஷ்டிரன் தீர்மானிப்பது; பிறகு தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளத் தடாகத்தில் இறங்கியது; முன்பு போலவே யக்ஷன் எச்சரித்தது....
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்திரனின் புகழைக் கொண்ட தனது தம்பியர், யுகத்தின் முடிவில் தங்கள் கோளங்களில் {Spheres} {துறைகளில்} இருந்து விழுந்து கிடக்கும் லோகபாலர்களைப் போல இறந்து கிடப்பதைக் கண்டான் யுதிஷ்டிரன் {Yudhishthira}. தன் வில் மற்றும் கணைகளுடன் தரையில் விழுந்து இறந்து கிடக்கும் அர்ஜுனனையும், உயிர் இழந்து அசைவற்றுக் கிடக்கும் பீமசேனனையும், இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்} கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்} சூடான நீண்ட பெருமூச்சுவிட்டு, துயரத்தில் ஏற்பட்ட கண்ணீரால் குளித்தான்.
தனது தம்பிகள் இறந்து கிடப்பதைக் கண்ட வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, துயரத்தால் பதட்டம் கொண்ட இதயத்துடன், நிற்காது அழுது புலம்பத் தொடங்கி, “ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட விருகோதரா {Vrikodara-பீமா}, "போர்க்களத்தில் துரியோதனனின் தொடைகளை எனது கதைகளால் நொறுக்குவேன்" என்று சொன்னாயே! ஓ! குருக்களின் புகழை அதிகரிப்பவனே {பீமா}, ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட உயர் ஆன்மா கொண்டவனே {மகாத்மாவே} {பீமனே}, உனது மரணத்தால், அவை அனைத்தும் கனியற்றதாகிவிட்டனவே! மனிதர்களின் வாக்குறுதிகள் பலனற்றதாயிருக்கலாம்; ஆனால் உன்னைக் குறித்துத் தேவர்கள் சொன்ன வார்த்தைகள் ஏன் கனியற்றதாகின?
ஓ! தனஞ்சயா {Dhananjaya- அர்ஜுனா}, நீ உனது தாயின் பிரசவ அறையில் இருந்தபோது, தேவர்கள், “ஓ! குந்தி, இந்த உனது மகன், ஆயிரம் கண் கொண்டவனுக்குச் {இந்திரனுக்குச்} சற்றும் குறைந்தவனல்ல!” என்று சொன்னார்கள். வடக்கேயுள்ள பாரிபாத்திர மலைகளில் “எதிரிகளால் திருடப்பட்ட (இந்தக் குலத்தின்) செழிப்பனைத்தும் தாமதமில்லாமல் இவனால் மீட்கப்படும். போர்க்களத்தில் இவனை எவரும் வீழ்த்த முடியாது. அதே வேளையில், இவனால் வீழ்த்த முடியாத யாரும் இருக்க மாட்டார்கள்" என்று அனைத்துயிர்களும் பாடின. பிறகேன், பெரும் பலம் கொண்ட அந்த ஜிஷ்ணு {Jishnu- அர்ஜுனன்} மரணத்துக்கு ஆட்பட்டான்? ஓ! எவனை நம்பி இந்தப் பேரிடர் அனைத்தையும் நாங்கள் பொறுத்தோமோ அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏன் எனது நம்பிக்கைகளையெல்லாம் கொன்று [1] இப்படித் தரையில் கிடக்கிறான்?
[1] மூலத்தில் உள்ள சம்ஹிருத்யா எனும் சொல்லுக்கு கொல்லுதல் என்று பொருள் எனச்சொல்கிறார் கங்குலி.
எதிரிகளை எப்போதும் கொல்பவர்களும், எந்த ஆயுதத்தாலும் தடுக்கப்படாதவர்களுமான குந்தியின் பலமிக்க மகன்களான பீமசேனன், தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய அந்த வீரர்கள் ஏன் எதிரியின் சக்திக்கு அடங்கினர்! இன்று இந்த இரட்டையர்கள் {நகுலனும் சகாதேவனும்} தரையில் கிடப்பதைக் கண்டும் இரண்டாகப் பிளக்காத இந்த எனது தீய இதயம் நிச்சயம் வஜ்ரத்தால் ஆனதாக {adamant =பிடிவாதம் நிறைந்ததாக=வஜ்ரம் அல்லது வரைக்கல் போன்ற கடினம் நிறைந்ததாக என்று பொருள் கொள்ளலாம்} இருக்க வேண்டும்! புனித ரித்துகளை அறிந்து, காலம் இடம் ஆகியவற்றை அறிந்து தவத்தகுதி கொண்டு, அனைத்து புனித சடங்குகளையும் செய்த இந்த மனிதர்களில் காளையரே, உங்களுக்குத் தகுந்த செயல்களைப் புரியாமல் ஏன் இப்படிப் படுத்திருக்கிறீர்கள்? ஐயோ, எதிரிகளால் வெல்லப்படாதவர்களே, உங்கள் மேனில் புண் கொள்ளாமல், உங்கள் நோன்புகள் {சபதங்கள்} நிறைவேறாமல் ஏன் இப்படிப் பூமியில் உணர்வற்று கிடக்கிறீர்கள்?” என்றான்{என்று சொல்லி அழுதான் யுதிஷ்டிரன்}. மலைச்சரிவுகளில் (அவர்கள் எப்போதும் உறங்குவது போல) இனிமையாகத் துயிலும் தங்கள் தம்பியரைக் கண்ட அந்த உயர் ஆன்ம மன்னன் {யுதிஷ்டிரன்}, துன்பம் மேலிட, வியர்வையில் குளித்து, துயர நிலையை அடைந்தான். பிறகு, “இது இப்படிஆனதே" என்று சொல்லி, துயரக்கடலின் நடுவில் நின்று, மனங்குழம்பிய அந்த மனிதர்களில் அறம் சார்ந்த தலைவன் {யுதிஷ்டிரன்}, அதற்கான (அந்தப் பேரழிவின்) காரணத்தை ஆலோசித்தான். பிறகு, இடம் நேரம் ஆகியவற்றின் பிரிவுகளை அறிந்த அந்த வலிமையான கரங்கள் மற்றும் உயர் ஆன்மா கொண்டவனால் {மகாத்மாவான யுதிஷ்டிரனால்}, செய்யத்தக்க தனது செயலைக் குறித்து ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை.
இப்படித் துயரத்தால் மிகவும் அழுது புலம்பிய தர்மன் அல்லது தபுவின் {Dharma or Tapu,}மகனான அறம்சார்ந்த யுதிஷ்டிரன், தனது ஆன்மாவை {மனதை} அடக்கி, இந்த வீர்ர்களைக் கொன்றவன் யார் எனத் தனது மனதில் நினைக்கத் தொடங்கினான். “இவர்களின் மேல் ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள் ஏதுமில்லை. யாருடைய கால்தடங்களும் இங்கில்லை. யாரால் எனது தம்பிகள் கொல்லப்பட்டனரோ அவன் மிகுந்த வலிமை மிக்க உயிரினமாக {பூதமாக} இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். மனப்பூர்வமாக நான் இதைச் சிந்திக்க வேண்டும். அல்லது முதலில் நான் இந்த நீரைக் குடித்துப் பிறகு அனைத்தையும் அறிவேன். பழக்கத்தினாலேயே கோணல் புத்தி கொண்ட துரியோதனன், கந்தர்வர்கள் மன்னனைக் கொண்டு ரகசியமாக இந்த நீர்நிலையை இங்கு வைத்திருக்க வேண்டும். எவனிடம் நன்மையும் தீமையும் சமமாக இருக்கிறதோ, தீய ஆசைகள் கொண்ட அந்த இழிந்தவனை எந்தப் புத்தியுள்ள மனிதனால்தான் நம்ப முடியும்? அல்லது, ஒருவேளை, தனது ரகசிய தூதர்கள் மூலம் இந்தச் செயலை அந்தத் தீய ஆன்ம கொண்டவன் செய்திருப்பானா?” என்று நினைத்தான் {யுதிஷ்டிரன்}.
இப்படி அந்தப் பெரும் புத்திக் கூர்மை கொண்டவன் {யுதிஷ்டிரன்} பலதரப்பட்ட சிந்தனைகளுக்கு ஆட்பட்டான். “எனது தம்பிகளின் முகத்தின் நிறம் மங்கவில்லை!” என்று நினைத்த யுதிஷ்டிரன், {தன் தம்பியர்} இறந்தனர் எனினும் பிணத்தைப் போன்ற நிறமிழப்பு அவர்களுக்கு ஏற்பட வில்லை என்பதைக் கண்டு, அந்த நீர் நஞ்சு கலக்கப்பட்டது என்பதை நம்பவில்லை. பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} {இப்படித்} தொடர்ந்தான், “இந்த மனிதர்களில் முதன்மையானவர் ஒவ்வொருவரும் மழைவீழாறு {#} போன்றவர்கள். எனவே, அனைத்துப் பொருட்களுக்கும் குறித்த நேரத்தில் முடிவைக் கொண்டு வரும் யமனைத் தவிர வேறு யாரால் இவர்களை இப்படிக் கலங்கடித்திருக்க முடியும்?” {என்றான் யுதிஷ்டிரன்}
இதை உறுதியாகத் தீர்மானித்த அவன் {யுதிஷ்டிரன்}, அந்தத் தடாகத்தில் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள {நீராடலைத்} தொடங்கினான். அப்படி அவன் {யுதிஷ்டிரன்} அதற்கு {தடாகத்துக்குள்} இறங்கிய போது, வானத்தில் இருந்து யக்ஷனால் {Yaksha} உதிர்க்கப்பட்ட வார்த்தைகளைக் கேட்டான். {யக்ஷன்}, “நான் சிறு மீனைக் {உண்டு} கொண்டு வாழும் ஒரு கொக்கு. ஆவி பிரிந்தவர்களின் தலைவனுடைய {யமனின்} கட்டுப்பாட்டுக்கு என்னாலேயே உனது தம்பிகள் அனுப்பட்டனர். ஓ! இளவரசே {யுதிஷ்டிரா}, நீ என்னால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லையென்றால், நீயும் ஐந்தாவது சவமாவாய். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, துடுக்காகச் செயல்படாதே! இத்தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. முதலில் எனது கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ {நீரைக்} குடித்து, (உனக்குத் தேவைப்படும் அளவுக்கு) எடுத்துச் செல்!" என்றான் {யஷன்}.
இந்த வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {யஷனிடம்}, “நீ ருத்திரர்களில் முதன்மையானவனா? வசுக்களில் முதன்மையானவனா? மருதர்களில் முதன்மையானவனா? நான் கேட்கிறேன், நீ எந்தத் தேவன்? இதை ஒரு பறவையால் செய்திருக்க முடியாது! இமயம், பாரிபாத்திரம், விந்தியம், மலயம் { the Himavat, the Paripatra, the Vindhya, and the Malaya}ஆகிய இந்த மலைகளையும் எவன் வீழ்த்தியவன்? பலமிக்க மனிதர்களில் முதன்மையான உன்னால் செய்யப்பட்ட சாதனை பெரிது! ஒரு பெரும் மோதலில் தேவர்களாலும், கந்தர்வர்களாலும், அசுரர்களாலும், ராட்சசர்களாலும் கூடக் கொல்லப்பட இயலாதவர்கள், உன்னால் கொல்லப்பட்டுள்ளனர்! எனவே உன்னால் செய்யப்பட்ட இந்தக் காரியம் மிகவும் அற்புதமானது! உனது காரியம் என்னவென்பதை நான் அறியேன். அதன் காரணத்தையும் நான் அறியேன். எனவே, எனக்கு ஏற்பட்டிருக்கும் ஆவலும் பயமும் பெரிதாக இருக்கிறது! எனது மனம் பெரிதும் கலங்கியிருக்கிறது. எனது தலை வலிக்கிறது. எனவே, ஓ! வழிபடத்தகுந்தவனே, நான் உன்னைக் கேட்கிறேன். இங்கே வசிக்கும் நீ யார்?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}. இந்த வார்த்தைகளைக் கேட்ட யக்ஷன், “உனக்கு நன்மை விளையட்டும். நான் ஒரு யக்ஷன்; இருநிலையில் {நிலத்திலும் நீரிலும்} வாழும் பறவையல்லேன். என்னாலேயே, பெரும்பலமிக்க உனது தம்பிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்!” என்றான் {யக்ஷன்}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.