The Lord of Justice granted boons! | Vana Parva - Section 312 | Mahabharata In Tamil
(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)
யக்ஷன் சொன்னது போலவே பாண்டவர்கள் துயிலிலிருந்து எழும்புவது போலப் புத்துணர்ச்சி பெற்ற எழும்புவது; யுதிஷ்டிரனைப் பாராட்டிய தர்மதேவன், அவனுக்கு வரங்களை அருளியது; பாண்டவர்கள் அந்தணருக்கு அவரது அரணிகளைத் திருப்பிக் கொடுத்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு யக்ஷனின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாண்டவர்கள் எழுந்தனர்; அவர்களது பசியும், தாகமும் ஒரு கணத்தில் அவர்களை விட்டு அகன்றன. பிறகு யுதிஷ்டிரன், “வீழ்த்தப்பட முடியாதவராக, குளத்தில் ஒற்றைக் காலில் நிற்கும் உம்மை யக்ஷராக என்னால் எடுத்துக் {ஏற்றுக்} கொள்ள முடியவில்லை; ஆதலால் நீர் எந்தத் தேவன்? வசுக்களில் முதன்மையானவரா? ருத்திரர்களில் முதன்மையானவரா? மருதர்களின் தலைவரா? அல்லது வஜ்ரத்தைத் தாங்கும் தேவர்களின் தலைவரா {இந்திரனா}? எனது இந்தத் தம்பிகள் ஒவ்வொருவரும் போரில் நூறாயிரம் வீரர்களுக்குச் சமமானவர்களாவர். இவர்கள் அனைவரையும் கொல்லும் ஒரு வீரனையும் நான் காணவில்லை {கண்டதில்லை}! ஏதோ இனிமையான தூக்கத்தில் இருந்து எழுந்ததைப் போல அவர்களின் புலன்கள் புத்தணர்வு பெற்றிருப்பதை நான் காண்கிறேன். நீர் எங்களது நண்பரா? அல்லது எங்களது தந்தையா?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
அதற்கு யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, நான் பெரும் பராக்கிரமம் படைத்த நீதியின் தலைவன் {யமன்=தர்மதேவன்}. நான் உனது தந்தையுமாவேன்! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உன்னைக் காண விரும்பியே நான் இங்கு வந்தேன் என்பதை அறிந்து கொள்! புகழ், உண்மை {சத்தியம்}, தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு}, தூய்மை {பரிசுத்தம்}, வெளிப்படைத்தன்மை {candour = நடுநிலைமை}, பணிவு, உறுதியான நிலை, தானம், தவம், பிரம்மச்சரியம் ஆகியன எனது உடலாகும்! ஊறிழைக்காமை {அகிம்சை}, நடுநிலை {சமத்துவம்}, அமைதி, தவங்கள், தூய்மை {புனிதம்}, துர்க்குணம் விலக்கல் ஆகியவையே (என்னை அணுகுவதற்கான) கதவுகள். நீ எப்போதும் எனது அன்புக்குரியவனே! நல்லூழின் {#} காரணமாகவே நீ ஐந்துக்கும் [1] உன்னை அர்ப்பணித்திருக்கிறாய். மேலும் நல்லூழின் காரணமாகவே நீ ஆறை {ஆறு-ஐ} {ஷடபதீ-களை} [2] வென்றிருக்கிறாய். மனிதர்களை அடுத்த உலகிற்கு அனுப்பும் நிமித்தமாக, அந்த ஆறில், முதல் இரண்டு {பசி, தாகம் ஆகியன} வாழ்வின் முதல் பகுதியிலும்; இன்னும் இரண்டு {துக்கம், மோகம் ஆகியன} நடுப்பகுதியிலும், மீதம் உள்ள இரண்டு {மூப்பும், மரணமும்} கடைசியிலும் தோன்றும்.
[1] 1. மன அமைதி, 2. சுயக்கட்டுப்பாடு, 3. சிற்றின்பம் தவிர்த்தல், 4. ஒழிவு {ஓய்வு} 5.யோகத்தியானம் என்கிறார் கங்குலி.[2] 1. பசி, 2. தாகம், 3. துக்கம், 4. மோகம் {மழுங்கிய [மயக்கம் தரும்] மனித உணர்வு}, 5. மூப்பு, 6. மரணம் என்கிறார் கங்குலி.
உனக்கு நன்மையே விளையட்டும், நான் நீதியின் தலைவன் {தர்ம தேவன்}, நான் உனது தகுதியைச் சோதிக்கவே இங்கு வந்தேன்! தீங்கில்லாத உன்னைச் சாட்சியாகக் கண்டு நான் மனம் நிறைந்தேன்; ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா} நான் உனக்கு வரங்களை அளிப்பேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா} நீ என்னிடம் வரங்களைக் கேள். ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, நான் அவற்றை உனக்கு நிச்சயம் அளிப்பேன். என்னை வணங்குவோர், துயரங்கொள்ளார்!” என்றான் {யமன்}. யுதிஷ்டிரன் {யமனிடம்}, “அந்தணர் ஒருவரின் அரணிகளை ஒரு மான் தூக்கிச் சென்றது. எனவே, முதல் வரமாக, அந்த அந்தணரின் அக்னி வழிபாடு தடைபடாதிருக்கட்டும் என்று கேட்பேன்!” என்றான். யக்ஷன் {தர்மதேவன்} {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிரகாசமிக்கக் குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, உன்னைச் சோதிப்பதற்காக, மானின் வேடம் கொண்டு நானே, அந்த அந்தணரின் அரணிகளைத் தூக்கிச் சென்றேன்!” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அதன்பிறகு, அந்த வழிபடத்தகுந்தவன் {தர்மதேவன்}, “நான் உனக்கு இந்த வரத்தைத் தருகிறேன்! உனக்கு நன்மையே விளையட்டும்! ஓ! தேவனைப் போல இருப்பவனே, புதிதாக வேறு வரத்தைக் கேள்!” என்றான். யுதிஷ்டிரன், “காட்டில் பனிரெண்டு வருடங்களைக் கழித்தோம்; பதிமூன்றாவது வருடம் வந்துவிட்டது; இந்த வருடத்தை நாங்கள் எங்காவது கழிக்கும்போது யாரும் எங்களை அடையாளம் காணாது இருக்கட்டும்!" என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அதற்கு அந்த வழிபடத்தகுந்தவன் {தர்மதேவன்}, “நான் உனக்கு இந்த வரத்தைத் தருகிறேன்" என்றான். பிறகு, உண்மையைப் பராக்கிரமமாகக் கொண்ட குந்தியின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மீண்டும் உறுதியளிக்கும் விதமாக, அவன் {தர்மதேவன்}, “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உங்கள் சரியான உருவங்களில் {இயற்கையான உங்கள் தோற்றத்திலேயே} நீங்கள் {இந்த முழு} பூமியில் உலவினாலும், மூவுலகில் உள்ள எவரும் உங்களை அடையாளம் காண மாட்டார்கள். குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்களே, எனது அருளால், ரகசியமாகவும், அடையாளம் காணப்படாமலும், இந்தப் பதிமூன்றாவது {13} வருடத்தை விராட நாட்டில் நீங்கள் கழிப்பீர்கள். உங்களில் ஒவ்வொருவராலும், அவரவர் விரும்பும் வடிவத்தை ஏற்க இயலும்! இப்போது நீ அந்த அந்தணருக்கு அவரது அரணிகளைக் கொடுக்கலாம். உன்னைச் சோதிப்பதற்காகவே நான் மானின் வடிவம் கொண்டு அவற்றைத் தூக்கிச் சென்றேன்! {என்று சொல்லி அரணிகளை யுதிஷ்டிரன் கையில் தர்மதேவன் கொடுத்திருக்க வேண்டும்}. ஓ! மனதிற்கினிய யுதிஷ்டிரா, நீ விரும்பும் மற்றுமொரு வரத்தைக் கேள்! நான் அதை உனக்கு அளிப்பேன். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உனக்கு {அந்த} வரங்களை வழங்கியதன் மூலம் நான் இன்னும் மனநிறைவு கொள்ளவில்லை. என் மகனே {யுதிஷ்டிரா}, பெரியதும் ஒப்பற்றதுமான மூன்றாவது வரத்தை ஏற்றுக் கொள்! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ என்னால் பிறந்தவன், விதுரன் எனது பகுதிகளில் ஒருவன்!” என்றான் {தர்மதேவன்}.
அதன்பிறகு யுதிஷ்டிரன் {தர்மதேவனிடம்}, “தேவர்களுக்கு தேவனான நித்தியமான {தர்மதேவனான} உம்மை, எனது புலன்களைக் கொண்டு கண்டதே எனக்குப் போதுமானது! ஓ! தந்தையே {தர்மதேவரே}, நீர் எனக்கு என்ன வரமளித்தாலும், நான் அதை நிச்சயம் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன்! ஓ! தலைவா {தர்மதேவரே}, பேராசை, மூடத்தனம், கோபம், ஆகியவற்றை நான் எப்போதும் வெல்ல வேண்டும். மேலும், ஈகை {#}, உண்மை {சத்தியம்}, தவச்சடங்கு ஆகியவற்றில் எனது மனம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கட்டும்!” என்று சொன்னான். அதற்கு நீதியின் தலைவன் {தர்மதேவன் - யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, நீ நீதியின் தலைவனேயாகையால் {நானே ஆகையால்} இந்தக் குணங்கள் அனைத்தும் உன்னிடம் இயற்கையாகவே இருக்கின்றன! நீ கேட்டதை மீண்டும் அடைவாயாக!” என்றான் {தர்மதேவன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அனைத்து உலகங்களிலும் ஆழ்ந்து பார்க்கும் பொருளான வணங்கத்தக்க நீதியின் தலைவன் {தர்மதேவன்}, இவ்வார்த்தைகளைச் சொன்னதும் அங்கேயே மறைந்து போனான்; இனிமையாக உறங்கிய அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டனர். களைப்பு நீங்கிய அவ்வீரர்கள், ஆசிரமத்திற்குத் திரும்பி, அந்த அந்தணருக்கு, அவரது அரணிகளைத் திரும்பக் கொடுத்தனர்.
(பாண்டவர்கள்) புத்துயிர் பெறுவதும், தந்தையும் {தர்மன்} மகனும் {யுதிஷ்டிரனும்} சந்திப்பதும், ஒப்பற்றதும், புகழை அதிகரிப்பதுமான இந்தக் கதையை நாடிய {கேட்ட [அ] படித்த} மனிதன், பரிபூரண மன அமைதியையும், மகன்கள் மற்றும் பேரர்களையும், நூறு வருடங்களைத் தாண்டி நீளும் வாழ்வையும் அடைவார்கள்! இந்தக் கதையை மனதில் நிறுத்தும் மனிதன், அநீதி {அதர்மம்}, நண்பர்களுக்குள் பூசல் {மித்ரபேதம்}, பிறன் உடைமையை மோசடி செய்வது; பிறர் மனைவியைக் களங்கப்படுத்தல் {தொடுதல்}, தவறான {தீய} எண்ணங்கள் {அற்பத்தனங்கள்} ஆகியவற்றில் மகிழ்வடைய மாட்டார்கள்! {பற்றுதல் கொள்ள மாட்டார்கள்!}” {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.