Bhima encouraged Yudhishthira! | Vana Parva - Section 313 | Mahabharata In Tamil
(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)
முனிவர்களிடமும் யதிகளிடமும் விடைபெற அனுமதி கோரிய பாண்டவர்கள்; யுதிஷ்டிரன் மயங்கி விழுந்தது; தௌமியர் யுதிஷ்டிரனைத் தேற்றியது; பீமன் யுதிஷ்டிரனுக்கு உற்சாகமூட்டியது; அந்தணர்களும் முனிவர்களும் பாண்டவர்களிடம் விடைபெற்றது; தாங்கள் அப்போதிருந்த இடத்தில் இருந்து ஒரு குரோச தூரம் சென்று ஆலோசனை நடத்திய பாண்டவர்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி கண்டறியப்படாமல் கழிக்கப்பட வேண்டிய {அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டிய} பதிமூன்றாவது {13} வருடத்தை மாறுவேடத்தில் கழிக்க, நீதியின் தலைவனால் {தர்மதேவனால்} கட்டளையிடப்பட்டவர்களும், உண்மையைப் பராக்கிரமமாகக் கொண்டு நோன்புகள் நோற்கும் உயர் ஆன்மா கொண்டவர்களுமான பாண்டவர்கள், தங்களுடன் கானக வாழ்வில் ஒன்றாக வசித்த கற்றோர் மற்றும் நோன்பு நோற்கும் துறவிகள் முன்பு அமர்ந்தனர். குறித்த வகையில் பதிமூன்றாவது வருடத்தைக் கழிக்க அனுமதி கோரும் நோக்கில், கூப்பிய கரங்களுடன் அவர்களிடம் {கற்றோர் மற்றும் துறவிகளிடம்} இந்த வார்த்தைகளை அவர்கள் {பாண்டவர்கள்} பேசினர்.
அவர்கள் {பாண்டவர்கள்}, “திருதராஷ்டிரரின் மகன்கள் எங்கள் நாட்டை வஞ்சகமாக அபகரித்தனர் என்பதும், எங்களுக்கு இன்னும் பல தீங்குகளைச் செய்தனர் என்பதும் நீங்கள் நன்கு அறிந்ததே! நாங்கள் பெரும் துக்கத்துடன் பனிரெண்டு {12} வருடங்களைக் காட்டில் கழித்துவிட்டோம். கண்டறியப்படாமல் {ஆஞ்ஞாதவாசத்தில்} கழிக்க வேண்டிய பதிமூன்றாவது வருடம் மட்டுமே மீதம் இருக்கிறது. இப்போது நாங்கள் தலைமறைவாக வாழவேண்டிய அந்த ஒரு வருடத்தைக் கழிக்க நீங்கள் அனுமதிப்பதே உங்களுக்குத் தகும். செற்றம் {#} நிறைந்த எங்கள் எதிரிகளான சுயோதனன் {துரியோதனன்}, தீய மனம் கொண்ட கர்ணன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோர் எங்களைக் கண்டுபிடித்தால், குடிமக்களுக்கும், நமது நண்பர்களுக்கும் பெரும் தீங்கிழைப்பார்கள்! {அப்படி நடந்தால்} அந்தணர்களுடன் கூடிய நாங்கள் எங்கள் நாட்டில் மீண்டும் நிறுவப்படுவோமா?” என்றனர் {என்று கேட்டனர்}.
இதைச் சொன்னபிறகு, பரிசுத்த மனம் கொண்ட அறமன்னனான {தர்மராஜாவான} யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைபட்ட குரலுடன், துயரம் மேலிட மயங்கினான். அதன்பிறகு, அவனது {யுதிஷ்டிரனின்} தம்பிகளுடன் சேர்ந்த அந்தணர்கள் அவனைத் {யுதிஷ்டிரனைத்} தேற்றத் தொடங்கினர். பிறகு தௌமியர், வலிமைமிக்க {சிறந்த} பொருள் நிறைந்த இந்த வார்த்தைகளை அந்த மன்னனுக்குச் {யுதிஷ்டிரனுக்குச்} சொன்னார். அவர் {தௌமியர் - யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ கற்றவன், இழப்பைத் தாங்கிக் கொள்ள இயன்றவன், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியானவன், புலன்களை அடக்கியவன்! இப்படிப்பட்ட முத்திரை கொண்ட மனிதர்கள் பேரிடர்களில் மதிமயங்கமாட்டார்கள். உயர் ஆன்மா கொண்ட தேவர்கள் கூட எதிரிகளை வெல்வதற்காகப் பலதரப்பட்ட இடங்களில் மாறுவேடங்களில் திரிந்திருக்கிறார்கள். இந்திரன், தனது எதிரிகளை வெல்லும் பொருட்டு நிஷாத நாட்டின் கிரிபிரஸ்தத்தில் {நகரம்} உள்ள ஆசிரமத்தில் மாறுவேடத்தில் வசித்துத் தனது முடிவை அடைந்தான்.
அதிதியின் கருவறையில் பிறவியெடுக்கும் முன்னர், தைத்தியர்களை அழிக்கும்பொருட்டு, ஹயக்கிரீவன் {குதிரை கழுத்து கொண்ட} வடிவமேற்ற விஷ்ணு நீண்ட காலம் கண்டறியப்படாமல் இருந்தான். அதன்பிறகு குள்ளன் {வாமனன்} வேடத்தைத் தரித்த அவன் {விஷ்ணு}, தனது பராக்கிரமத்தால் பலியின் நாட்டை இழக்கச் செய்ததை நீ கேட்டிருக்கிறாய்! நீருக்குள் நுழைந்த ஹுதாசனன் {அக்னி}, அங்கேயே மறைந்திருந்து, தேவர்களின் காரியத்தைச் சாதித்தான் என்பதையும் நீ கேட்டிருக்கிறாய். ஓ! கடமையை அறிந்தவனே {யுதிஷ்டிரா}, பகைவரை வெல்லும் நோக்கில், சக்ரனின் {இந்திரனின்} வஜ்ராயுதத்தில் நுழைந்த ஹரி அங்கேயே மறைந்திருந்தான் என்பதையும் நீ கேட்டிருக்கிறாய்.
ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, மறுபிறப்பாளரான {பிராமணரான} அவுர்வ {ஔர்வ} முனிவர் ஒரு காலத்தில் தேவர்களின் காரியத்திற்காகத் தனது தாயின் கர்ப்பத்திலேயே மறைந்திருந்தார் என்பதை நீ கேட்டிருக்கிறாய். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, பூமியின் அனைத்து பகுதியிலும் மறைந்திருந்த, சிறந்த சக்தி கொண்ட விவஸ்வத் {சூரியன்}, முடிவில் தனது எதிரிகளை அனைவரையும் எரித்தான். தசரதனின் வசிப்பிடத்தில் மாறுவேடத்தில் வாழ்ந்த, கடுஞ்செயல்கள் புரியும் விஷ்ணு {ராமன்}, போர்க்களத்தில் பத்துக்கழுத்தனை {ராவணனைக்} கொன்றான். முன்னர், பல இடங்களில் மாறுவேடத்தில் இருந்த உயர் ஆன்மா கொண்ட மனிதர்கள் தங்கள் எதிரிகளைப் போர்க்களத்தில் இப்படியே வென்றிருக்கிறார்கள்" என்றார் {தௌமியர்}.
இப்படித் தௌமியரின் வார்த்தைகளால் தேற்றப்பட்டவனும், சாத்திரங்களால் அடையப்பட்ட தன் ஞானத்தை நம்புபவனுமான அறம்சார்ந்த யுதிஷ்டிரன், தனது சுயநினைவை மீண்டும் அடைந்தான். பிறகு, வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனான வலிமை மிக்கக் கரங்கள் கொண்டவனும், பெரும் பலம் கொண்டவனுமான பீமசேனன், மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மிகவும் உற்சாகமூட்டும் வகையில், “கடமையுணர்ச்சியுடன் செயல்படுபவனான காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்}, (அனுமதிக்காக) உமது முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பாரும். அவன் {அர்ஜுனன்} இன்னும் எத்தகு முரட்டுத்தனத்தையும் காட்டவில்லை. கடும் பராக்கிரமம் கொண்ட நகுலனும், சகாதேவனும் எதிரியை அழிப்பதற்கு முழுவதும் இயன்றவர்களாக இருப்பினும், என்னால் எப்போதும் தடுக்கப்பட்டே வந்திருக்கின்றனர்! எங்களை நீர் எதில் ஈடுபடுத்துவீரோ அதிலிருந்து நாங்கள் எப்போதும் விலக மாட்டோம்! செய்ய வேண்டியதை எங்களுக்கு நீர் சொல்லும்! விரைவில் நாங்கள் நம் எதிரிகளை வெல்வோம்!” என்றான் {பீமன்}.
பீமசேனன் இதைச் சொன்னதும், அந்தணர்கள் பாரதர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லினர். பிறகு அவர்களது {பாண்டவர்களின்} அனுமதியைப் பெற்று, அவரவர் பகுதிகளுக்குச் சென்றனர். வேதங்களை அறிந்த முனிவர்களிலும், யதிகளிலும் முதன்மையானவர்களும், பாண்டவர்களை மீண்டும் காண மிகுந்த ஆவல் கொண்டவர்களுமான அவர்கள், தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். பிறகு, கற்ற வீரர்களும், நோன்புகள் கொண்டவர்களுமான அந்த ஐந்து பாண்டவர்களும் தௌமியருடனும் கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} {அங்கிருந்து} கிளம்பினர். தனித்தனி அறிவியல்களையும் {சாத்திரங்களையும்}, மந்திரங்களையும், எப்போது அமைதி தீர்மானிக்கப்பட வேண்டும், எப்போது போர் தொடுக்கப்பட வேண்டும் என்பதையும் நன்கறிந்த மனிதர்களில் புலியான அவர்கள் {பாண்டவர்கள்} ஒவ்வொருவரும், கண்டறியப்படக்கூடாத வாழ்வுக்குள் நுழைவதற்காக, அடுத்த நாளில் ஒரு குரோச தூரம்* சென்று, ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்யும் நோக்கில் கீழே அமர்ந்தனர்.
*குரோச தூரம்- 2.0 - 2.5மைல் தூரம் (அ) கூப்பிடும் தூரம்.
*********ஆரணேயப் பர்வம் முற்றிற்று*********
*********வன பர்வம் முற்றிற்று*********
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.