Sahadeva became a cowherd! | Virata Parva - Section 10 | Mahabharata In Tamil
(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 10)
இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : இடையன் வேடத்தில் சகாதேவன் விராடனின் முன்னிலைக்கு வருவது; சகாதேவனைக் குறித்து விராடன் விசாரித்தல்; சகாதேவன் விராடனிடம் கோரிய பணி; விரும்பிய பணியில் நியமிக்கப்பட்ட சகாதேவன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இடையரின் ஆடை உடுத்தி, இடையர்களின் பேச்சுவழக்கைப் பேசிக் கொண்டு, விராட நகரத்தின் மந்தைவெளிக்கு வந்தான் சகாதேவன். காந்தியுடன் பிரகாசித்த அந்த மனிதர்களில் காளையைக் கண்ட மன்னன் {விராடன்}, திகைப்படைந்தான். பிறகு அவன் {விராடன்} தனது ஆட்களை அனுப்பிச் சகாதேவனை அழைத்தான். அவன் {சகாதேவன்} வந்ததும், மன்னன் {விராடன்} அவனிடம் {சகாதேவனிடம்}, “நீ யாருக்கு உடையவன்? நீ எங்கிருந்து வருகிறாய்? நீ என்ன வேலையை எதிர்பார்க்கிறாய்? உன்னை இதற்கு முன் நான் கண்டதில்லையே! ஓ! மனிதர்களில் காளையே, உன்னைக் குறித்த உண்மையை எனக்குச் சொல்" என்றான் {மன்னன் விராடன்}.
மன்னனின் {விராட மன்னனின்} முன்னிலைக்கு வந்த எதிரிகளைத் துன்புறுத்துபவனான சகாதேவன், ஆழ்ந்த குரலில் மேகம் போலக் கர்ஜித்து, “நான் ஒரு வைசியன். எனது பெயர் அரிஷ்டநேமியாகும். குருகுலத்தின் காளைகளான பாண்டுவின் மகன்களால் நான் காளைகளைப் பராமரிக்கும் இடையனாக நியமிக்கப்பட்டிருந்தேன். ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {விராடரே}, மன்னர்களில் சிம்மங்களான அந்தப் பிருதையின் {Pritha -குந்தியின்} மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை நான் அறியாததால், நான் உம்மை அண்டி வாழ விரும்புகிறேன். சேவை செய்யாமல் என்னால் வாழ இயலாது. ஓ! மன்னா {விராடரே}, நான் உம்மைத் தவிர வேறு எவருக்கும் சேவை செய்ய விரும்பவில்லை" என்றான் {சகாதேவன்}.
இந்த வார்த்தைகளைக் கேட்ட விராடன், “நீ அந்தணனாகவோ, க்ஷத்திரியனாகவோ இருக்க வேண்டும். கடல் சூழ்ந்த முழு உலகத்துக்கும் தலைவனைப் போல நீ தெரிகிறாய். ஓ! எதிரிகளைச் சிதைப்பவனே, எனக்கு உண்மையைச் சொல். வைசியரின் அலுவல் {வேலை} உனக்குத் தகாதது. நீ எந்த மன்னனின் பகுதியில் இருந்து வருகிறாய் என்றும், நீ என்ன அறிவாய் என்றும், என்ன திறனுடன் நீ எங்களிடம் இருக்கப் போகிறாய் என்றும், என்ன கூலியை நீ ஏற்பாய் என்றும் எனக்குச் சொல்" என்றான் {மன்னன் விராடன்}.
சகாதேவன் {மன்னன் விராடனிடம்}, “பாண்டுவின் ஐந்து மகன்களில் மூத்தவரான யுதிஷ்டிரர், பசுக்களைப் பத்தாயிரமாகவும் {10,000}, இன்னுமொரு பத்தாயிரமாகவும் {10,000}, மேலும் இருபதாயிரமாகவும் {20,000} என இப்படியே எட்டு லட்சத்துப் பத்தாயிரம் {8,10,000} எண்ணிக்கையிலான பசுக்களை ஒரு பகுதியாக {8,10,000} வைத்திருந்தார். அந்தக் கால்நடைகளைக் காக்கும் பணியில் நான் நியமிக்கப்பட்டிருந்தேன். மக்கள் என்னைத் தந்திரீபாலன் என்று அழைப்பது வழக்கமாகும். பத்து யோஜனைக்குள் வாழும், கணக்கெடுக்கப்பட்ட பசுக்கள் அனைத்தின் நிகழ்காலம், கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை நான் அறிவேன். என்னிடம் நல்ல மன நிறைவு கொண்டவரும், சிறப்புமிக்கவருமான குரு மன்னர் யுதிஷ்டிரர் எனது நற்தகுதிகளை அறிவார். குறுகிய காலத்திற்குள் பசுக்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் வழிமுறைகளையும், அவற்றை {பசுக்களை} நோயில் இருந்து காக்கும் உபாயத்தையும் நான் அறிவேன். இந்தக் கலைகளையே நான் அறிந்திருக்கிறேன். எத்தகைய காளைகளின் சிறுநீர் வாசமே கூட, மலடையும் {மலட்டுப் பசுவையும்} கன்று ஈன வைக்குமோ, மனிதர்களால் வழிபடப்படும் அத்தகைய காளைகளின் மங்களக்குறிகளைக் கொண்டு, அவற்றை என்னால் இனம் பிரிக்க முடியும்" என்றான் {சகாதேவன்}.
விராடன் {சகாதேவனிடம்}, “தனித்துவமானவை எனப் பிரிக்கப்பட்ட ஒரு லட்சம் பசுக்கள் {1,00,000 – நூறாயிரம்} என்னிடம் இருக்கின்றன. அவற்றையும், அவற்றைப் பாதுகாப்பவர்களையும் உன் பொறுப்புக்குள் வைக்கிறேன். இனிமேல் என் விலங்குகள் உனது பாதுகாப்பில் இருக்கும்" என்றான் {மன்னன் விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, மனிதர்களில் தலைவனான சகாதேவன், விராடனால் பராமரிக்கப்பட்டு, அந்த ஏகாதிபதியால் கண்டுபிடிக்கப்படாதவாறு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தான். (அவனது சகோதரர்களைத் தவிர- பாண்டவர்களைத் தவிர} வேறு யாராலும் அவனை {சகாதேவனை} அடையாளம் காண முடியவில்லை". {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.