Draupadi bonded her knotted braid! | Virata Parva - Section 9 | Mahabharata In Tamil
(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 9)
அப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : தலைமுடிந்து, கருப்புநிற ஒற்றையாடை உடுத்திய திரௌபதியை, மாடியில் இருந்து சுதேஷ்ணை பார்ப்பது. திரௌபதியை யார் என்று சுதேஷ்ணை விசாரிப்பது; திரௌபதி என்ன காரியத்திற்காக வந்திருக்கிறாள் என்று சொல்வது; திரௌபதி அனைவரையும் ஈர்ப்பாள் என்று கருதி சுதேஷ்ணை பயந்தது; பின்பு தனது இல்லத்திலேயே பணி அமர்த்திக் கொண்டது...
ரவிவர்மாவின் படத்தில் கூட திரௌபதி தலை முடியவில்லை |
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கருமையான விழிகளும், இனிய புன்னகையும் கொண்ட திரௌபதி, கருமையான, மென்மையான, மெல்லிய, நீளமான, மெலிந்தமுனைகளுடைய, குற்றமற்ற தனது கூந்தலை, முடிச்சுகள் கொண்ட பின்னலாக்கித் தனது வலது தோளில் தூக்கிவீசி, துணியால் அதை {கூந்தலை} மறைத்தாள் [1]. பிறகு, விலையுயர்ந்ததாக இருந்தாலும் அழுக்காக இருந்த கருப்பு நிற ஒற்றையாடையை அவள் {திரௌபதி} உடுத்தினாள். சைரந்தரியைப் போல உடுத்திக் கொண்ட அவள், துன்பத்திலிருப்பவள் போல அங்கும் இங்கும் நடந்தாள். அப்படி அவள் {திரௌபதி} உலவுவதைக் கண்ட ஆண்களும் பெண்களும், அவளிடம் {திரௌபதியிடம்} விரைந்து வந்து, “நீ யார்? என்ன தேடுகிறாய்?” என்று கேட்டனர்.
இங்கு ஒரு குறிப்பு வருகிறது:
[1] திரௌபதி கூந்தலை முடியமாட்டேன் என்று சபதம் செய்திருந்தாள் என்றொரு கதை உண்டு. அது இந்த வரிகளினால் அடிபட்டுப் போகிறது. அப்படி அவள் சபதம் மேற்கொள்ளவில்லை என்பதையே கங்குலியின் {வங்க, பம்பாய் மூல பதிப்புகளைத் தழுவிய} மொழிபெயர்ப்பு நிறுவுகிறது என்று கொள்ளலாம்.
அதற்கு அவள் {திரௌபதி}, “நான் ஒரு மன்னனின் சைரந்திரி, என்னைப் பராமரிப்பவர் யாராக இருப்பினும், நான் அவர்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன்" என்றாள். ஆனால், அவளின் {திரௌபதியின்} அழகையும், ஆடையையும் கண்டவர்களாலும், அவளது இனிய பேச்சைக் கேட்ட மக்களாலும் பிழைப்புக்காக வந்த ஒரு பணிப்பெண்ணாக அவளை {திரௌபதியை} ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படி இருக்கையில், கேகய மன்னனின் மகளும், விராடனின் அன்புக்குரிய ராணியுமானவள் {சுதேஷ்ணை}, உப்பரிகையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாகத் திரௌபதியைக் காணும்படி நேரந்தது.
கதியற்றவளும், ஒற்றையாடையில் இருந்தவளுமான அவளை {திரௌபதியைக்} கண்ட ராணி {சுதேஷ்ணை}, அவளிடம், “ஓ! அழகானவளே, நீ யார்? நீ என்ன தேடுறாய்?” என்று கேட்டாள். அதற்குத் திரௌபதி {ராணி சுதேஷ்ணையிடம்}, “ஓ! அரசிகளில் முதன்மையானவளே, நான் ஒரு சைரந்திரி. என்னைப் பராமரிப்பவர்கள் யாருக்கும் நான் சேவை செய்வேன்" என்றாள்.
பிறகு சுதேஷ்ணை {திரௌபதியிடம்}, “இவ்வளவு அழகுடன் இருக்கும் நீ சொல்வது (உனது தொழிலைப் பொறுத்தவரை) இணக்கமாக இல்லை. (மறுபுறம்) ஆண் மற்றும் பெண் பணியாட்களுக்கு நீ தலைவியாய் இருக்கலாம். உனது குதிங்கால்கள் பிரதானமாக இல்லை {மென்மையானவையாக இருக்கின்றன}. உனது தொடைகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கின்றன. உனது புத்திக்கூர்மை பெரிதாக இருக்கிறது, உனது நாபி {தொப்புள்} ஆழமாக இருக்கிறது. உன்னிடம் வார்த்தைகள் மனப்பூர்வமாக வருகின்றன. உனது பெரும் கால்விரல்களும், மார்புகளும், இடைகளும், பின்புறமும், பக்கவாட்டுப் பகுதிகளும், கால்விரல் நகங்களும், உள்ளங்கைகளும் நன்கு வளர்ந்திருக்கின்றன. உனது உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் மற்றும் முகம் ஆகியன சிவந்து உள்ளன. உன் பேச்சு அன்னத்தைப் போன்ற இனிய குரலில் இருக்கிறது. உனது கேசம் அழகாக இருக்கிறது. உனது மார்புகள் வடிவத்துடன் இருக்கின்றன. நிறைந்த அருளை நீ பெற்றிருக்கிறாய். உனது இடைகளும் மார்புகளும் பருத்திருக்கின்றன.
காஷ்மீரத்து {Kasmerean} பெண் குதிரையைப் போல அனைத்து நற்குறிகளையும் நீ பெற்றிருக்கிறாய். உனது கண் இமைகள் அழகாக இருக்கின்றன. உனது கீழுதடு சிவந்த நிலம் போல இருக்கிறது. உனது இடை மெலிந்திருக்கிறது. உனது கழுத்தில் சங்கு போன்ற கோடுகள் உள்ளன. உனது நரம்புகள் அரிதாகவே தெரிகின்றன. உண்மையில், உனது முகம் முழு நிலவைப் போன்று இருக்கிறது. உனது கண்கள் இலையுதிர் காலத்து தாமரை இதழ்கள் போல இருக்கின்றன. உனது உடல் அந்தத் தாமரையின் நறுமணத்தையே கொண்டிருக்கிறது. அழகில், இலையுதிர் காலத் தாமரையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீயைப் {மகாலட்சுமியைப்} போல அப்படியே நீ இருக்கிறாய். ஓ! அழகான காரிகையே, நீ யார் என்பதை எனக்குச் சொல். நீ பணிப்பெண்ணாக இருக்கவே முடியாது. நீ யக்ஷியா? தேவியா? {தேவதையா?}, கந்தர்வியா?, அப்சரசா? நீ தேவனின் மகளா? அல்லது நீ நாகப் பெண்மணியா? ஏதாவதொரு நகரத்தின் காவல் தேவதையா? ஒரு வித்யாதரியா? அல்லது கின்னரியா? அல்லது ரோகிணியா? அல்லது ஆலம்புசையா? அல்லது மிச்ரகேசியா? புண்டரீகையா? மாலினியா? இந்திரன் அல்லது வருணனின் ராணியா? அல்லது நீ விஸ்வகர்மனின் மனைவியா? அல்லது படைப்புத்தலைவனின் {பிரம்மனின்} மனைவியா {சரஸ்வதியா}? ஓ! அருளப்பட்டவளே, தேவலோகத்தில் புகழ்பேற்ற இந்தத் தேவியரில் நீ யார்?” என்று கேட்டாள் {விராடன் மன்னனின் மனைவி ராணி சுதேஷ்ணை}.
அதற்குத் திரௌபதி {ராணி சுதேஷ்ணையிடம்}, “ஓ! மங்களகரமான பெண்ணே, நான் தேவியோ, கந்தர்வியோ, யக்ஷியோ, ராட்சசியோ அல்ல. நான் சைரந்திரி வர்க்கத்தைச் சார்ந்த ஒரு பணிப்பெண்ணே. நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் (மணமிக்கப் பொருட்களால்) களிம்புகளும் {#} சிகை அலங்காரமும் செய்வேன். ஓ! அழகான பெண்ணே, மல்லிகைகள், தாமரைகள், நீல அல்லிகள் {கருநெய்தல்}, செண்பக மலர்களைக் கொண்டு அழகான பலவண்ண மாலைகளைச் செய்வேன். கிருஷ்ணனுக்குப் பிடித்தமான ராணியான சத்யபாமாவுக்கும், குருகுலத்தில் அழகில் முதன்மையானவளும், பாண்டவர்களின் மனைவியுமான திரௌபதிக்கும் நான் முன்பு பணி செய்திருக்கிறேன். நல்ல உணவையும், உடையையும் ஈட்டிக் கொண்டு நான் தனியாக உலவி வருகிறேன்; இவை கிடைக்கும்வரை அந்த இடத்திலேயே தொடர்ந்து வாழ்வேன். திரௌபதி என்னை மாலினி (மாலைகள் செய்பவள்) என்று அழைப்பாள்" என்றாள்.
இதைக் கேட்ட சுதேஷ்ணை {திரௌபதியிடம்}, “மன்னரே {விராடரே} உன்னிடம் முழு இதயத்துடன் ஈர்க்கப்படுவார், என்ற சந்தேகம் எனது மனதில் வராதிருந்தால், நான் உன்னை எனது தலையிலேயே வைத்துக் கொண்டிருப்பேன். உன்னால் ஈர்க்கப்பட்டு, எனது அரசகுடும்பத்தின் பெண்மணிகளும், எனது பணிப்பெண்களும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பின்னர், எந்த ஆண்மகனால்தான் உன் மீது ஏற்படும் ஈர்ப்பைத் தடுக்க முடியும்? ஓ! அழகிய இடைகள் கொண்டவளே, ஓ! அழகிய குணங்கள் கொண்ட காரிகையே, மனிதப்பெண்ணுக்கு அப்பாற்பட்ட அழகுடைய உனது வடிவத்தைக் கண்டால், மன்னர் விராடர் நிச்சயம் என்னைக் கைவிட்டுவிட்டு, முழு இதயத்துடன் உன்னை நோக்கித் திரும்பிவிடுவார்.
ஓ! குறையற்ற அங்கங்கள் கொண்டவளே, ஓ! துரிதப் பார்வைகளை வீசும் பெரிய கண்களைக் கொண்டவளே, ஆசையுடன் நீ யாரையாவது பார்த்தால், அவன் நிச்சயம் பாதிக்கப்படுவான். ஓ! இனிய புன்னகைகள் கொண்டவளே, ஓ! குற்றமற்ற வடிவம் கொண்டவளே, உன்னைத் தொடர்ந்து பார்ப்பவன், நிச்சயம் நெருப்பைத் தொட்டவனாவான். ஓ! இனிய புன்னகை கொண்டவளே, தனது சொந்த அழிவிற்காகக் கருத்தரிக்கும் நண்டைப் போலவும், தனது சொந்த அழிவை நிர்ணயித்து மரம் ஏறுபவனைப் போலவும், உனக்குத் தஞ்சமளித்தால் நானே எனக்கான அழிவைக் கொண்டு வந்ததாக ஆகிவிடும்" என்றாள் {ராணி சுதேஷ்ணை}.
அதற்குத் திரௌபதி {ராணி சுதேஷ்ணையிடம்}, “ஓ! அழகான பெண்மணியே, கந்தர்வ மன்னனின் மகன்களான ஐந்து இளம் கந்தர்வர்கள் எனக்குக் கணவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னை எப்போதும் பாதுகாப்பதால், விராடரோ, அல்லது எந்தப் பிற மனிதரோ என்னை அடைய முடியாது. யாராலும் எனக்குத் தீங்கிழைக்க முடியாது. மற்றொருவர் ஏற்கனவே தொட்ட உணவைக் கொடுக்காதவர்கள் மற்றும் தங்கள் பாதங்களை, என்னைக் கழுவச் சொல்லாதவர்கள் ஆகியோருக்கு மட்டுமே நான் பணி செய்ய வேண்டும் என்பது எனது கந்தர்வ கணவர்களின் விருப்பமாகும். ஏதோ பொது மனைவியைப் போல என்னை அடைய முயலும் மனிதன் அந்த இரவே மரணத்தைச் சந்திப்பான். ஓ! அழகான பெண்ணே {ராணி சுதேஷ்ணையே}, ஓ! இனிய புன்னகை கொண்டவளே, பெரும் சக்தியும், பெரும் பலமும் கொண்ட அந்த அன்புக்குரிய கந்தர்வர்களால் கமுக்கமாக {இரகசியமாக} எப்போதும் நான் பாதுகாக்கப்படுவதால், என்னை அடைவதில் யாரும் வெல்ல முடியாது" என்றாள் {திரௌபதி}.
சுதேஷ்ணை {திரௌபதியிடம்}, “ஓ! இதயத்துக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருபவளே, நீ சொல்வது போல இருந்தால், நான் நிச்சயம் உன்னை எனது வீட்டில் வைத்துக் கொள்கிறேன். வேறு ஒருவர் தொட்ட உணவை நீ தொட வேண்டியதோ, வேறொருவர் பாதங்களைக் கழுவ வேண்டியதோ இல்லை" என்றாள்” {ராணி சுதேஷ்ணை}
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விராடனின் மனைவியால் இப்படிச் சொல்லப்பட்டதும், ஓ! ஜனமேஜயா, தன் தலைவர்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்த கிருஷ்ணை (திரௌபதி) அந்நகரத்தில் வாழ ஆரம்பித்தாள். உண்மையில் அவள் யார் என்பதை யாராலும் உறுதிசெய்ய முடியவில்லை!”.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.