Stowing of weapons! | Virata Parva - Section 5 | Mahabharata In Tamil
(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 5)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
விராட நகரத்தை நோக்கிப் பாண்டவர்கள் புறப்படுவது; திரௌபதி சோர்வடைவது; அர்ஜுனன் திரௌபதியைத் தூக்கிக் கொள்வது; மயானத்தில் இருக்கும் ஒரு வன்னி மரத்தில் தங்கள் ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைப்பது; அம்மரத்தை மனிதர்கள் அண்டாமல் இருப்பதற்கு, ஒரு சடலத்தை அம்மரத்தில் தொங்க விடுவது; விராட நகரத்துக்குள் நுழைவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தங்கள் இடுப்பைச் சுற்றி வாள்களைக் கட்டிக் கொண்டும், உடும்புத்தோலால் ஆன விரல் உறைகளையும் பல்வேறு ஆயுதங்களையும் அணிந்து கொண்டும், யமுனை நதி இருந்த திசையில் அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} முன்னேறிச் சென்றனர். தங்கள் நாட்டை (விரைவில்) மீட்க விரும்பிய அந்த வில்லாளிகள் {பாண்டவர்கள்}, அணுக இயலாத மலைகளிலும், கடினமான காடுகளிலும் இதுவரை வாழ்ந்து வந்த அவர்கள், இப்போது தங்கள் காட்டு வாழ்வை {வனவாசத்தை} முடித்து, அந்த நதியின் {யமுனையின்} தெற்கு கரையை நோக்கி முன்னேறினர். காட்டில் மான்களைக் கொன்று வேடுவர்களாகத் தங்கள் வாழ்வைக் கடத்திய அந்தப் பெரும் பலம் பொருந்திய வலிமைமிக்க வீரர்கள் {பாண்டவர்கள்}, தங்களுக்கு வலப்புறத்தில் பாஞ்சாலர்களின் நாட்டை விட்டு, இடப்புறத்தில் தாசர்ண நாட்டை விட்டு, யக்ருல்லோம {Yakrilloma}மற்றும் சூரசேன {Surasena} நாடுகளைக் கடந்து சென்றனர். {காம்யக வனத்தில் இருந்து தசார்ண நாட்டுக்கு வடக்காகவும், பாஞ்சால நாட்டுக்குத் தெற்காகவும், யக்ருல்லோம நாடு, சூரசேனம் ஆகிய நாடுகளுக்கு மத்தியிலும் இருந்த யமுனை நதியை வந்தடைந்தார்கள் என்று வேறு பதிப்புகளில் உள்ளன}. தாடியுடன் வெளிறிப் போய்த் தெரிந்த அந்த வில்லாளிகள், வாள்களை அணிந்து கொண்டு, காட்டை விட்டு வேடுவர்களைப் போன்ற தோற்றத்தில் வெளியேறி மத்ஸ்ய {விராட} நாட்டிற்குள் நுழைந்தனர். அந்த நாட்டை அடைந்ததும் கிருஷ்ணை {திரௌபதி}, யுதிஷ்டிரனிடம், “நடைபாதைகளையும், பல்வேறு வயல்களையும் நாம் காண்கிறோம். இதிலிருந்து விராடத் தலைநகரம் {Virata's metropolis} இன்னும் தொலைவில் இருப்பதாகத் தோன்றுகிறது" என்றாள்.
யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பாரதகுலத்தின் தனஞ்சயா {அர்ஜுனா}, பாஞ்சாலியைத் தூக்கி நீ சுமப்பாயாக [1]. காட்டைவிட்டு வெளியேறிய உடனேயே, நாம் நகரத்தை அடையலாம்" என்றான்.
[1] வேறு சில பதிப்புகளில் யுதிஷ்டிரன் நகுலனிடமும், சகாதேவனிடமும் திரௌபதியைத் தூக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அவர்கள் களைப்பாக இருப்பதாகச் சொன்னதால் அர்ஜுனன் சுமந்ததாகவும் வருகிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடந்தார், “பிறகு யானை மந்தையின் தலைமை யானையைப் போல அர்ஜுனன் திரௌபதியை விரைந்து தூக்கிக் கொண்டான். பிறகு நகரம் அருகே வந்ததும், அவளைக் கீழே இறக்கிவிட்டான். அந்த {விராட} நகரத்தை அடைந்ததும், ருருவின் மகன் (யுதிஷ்டிரன்) அர்ஜுனனிடம், “நகரத்திற்குள் நுழைவதற்கு முன்பு, நமது ஆயுதங்களை எங்கே வைப்பது? ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, ஆயுதங்களுடன் நுழைந்தால், நாம் நிச்சயம் குடிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவோம். மேலும், மிகப்பெரிய வில்லான காண்டீவத்தை மனிதர்கள் அனைவரும் அறிவார்கள். அதனால், சந்தேகமற, விரைவில் மக்கள் நம்மை அடையாளம் காண்பார்கள். நம்மில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டாலும், {நமது} வாக்குறுதியின் படி, நாம் மேலும் பன்னிரெண்டு வருடங்களைக் காட்டில் கழிக்க நேரிடும்" என்றான் {யுதிஷ்டிரன்}.
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம் சொன்னான்}, “அடைய முடியா சிகரத்தின் அருகில் இருக்கும், அதோ அந்தக் கடுமை நிறைந்த மயானத்தில், ஒரு பெரும் வன்னி மரம் {Sami tree}, ஏறுவதற்குக் கடினமானதாகவும், பெரும் கிளைகளை விரிந்து பரப்பியிருப்பியபடியும் இருக்கிறது. நாம் நமது ஆயுதங்களை அந்த இடத்தில் {மரத்தில்} வைக்கும்போது, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, நம்மைக் கவனித்துப் பார்க்க அங்கே எந்த மனிதரும் இல்லை என்று நினைக்கிறேன். விலங்குகளும் பாம்புகளும் நிறைந்த காட்டுக்குச் செல்லும் வழியை விட்டு விலகியிருக்கும் {ஒதுக்குப்புறமான} இடத்தின் மத்தியிலும், இருண்ட மயானத்தின் அருகிலும் அந்த மரம் உள்ளது. அந்த வன்னி மரத்தில் நமது ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு, ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, நாம் நகரத்திற்குச் சென்று துயரத்தில் இருந்து விடுபட்டு வாழலாம்" என்றான் {அர்ஜுனன்}
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, இப்படி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் பேசிய அர்ஜுனன், (அந்த மரத்தில்) ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைக்கத் தயாரானான். பிறகு அந்தக் குருக்களின் காளை {அர்ஜுனன்}, பகைக்கூட்டங்களை எப்போதும் அழிப்பதும், தேவர்களையும், மனிதர்களையும், நாகர்களையும் தன்னந்தனித் தேரில் சென்று, அவர்களை வென்று, நாட்டின் எல்லைகளை விரிவாக்க உதவியதும், சுண்டினால் இடியொலியெழுப்புவதுமான பயங்கரமான பெரிய காண்டீவத்தின் நாணைத் தளர்த்தினான். மேலும், பகைவர்களை ஒடுக்கும் போர்க்குணம் கொண்ட யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரக் களத்தைக் காத்த {தனது} வில்லின் அழியாத நாணைத் தளர்த்தினான். பாஞ்சாலர்கள், சிந்துவின் தலைவன் ஆகியோரைத் தன்னந்தனியாக வீழ்த்த உதவியதும், சுண்டினால் மலையை உடைக்கும் இடியொலியுடன் கர்ஜிப்பதும், (பயத்தால்} எதிரிகளைக் களத்தை விட்டு ஓட வைத்ததுமான தனது வில்லின் நாணை சிறப்புமிக்கப் பீமசேனன் கழற்றினான்.
செம்பின் நிறம், மிதமான பேச்சு, போர்க்களத்தில் பெரும் பராக்கிரமம் ஆகியவற்றைக் கொண்டவனும், குடும்பத்தில் ஒப்பற்ற அழகு கொண்டதன் விளைவாக நகுலன் என்ற பெயரில் அழைகப்பட்டவனுமான பாண்டுவின் மகன், மேற்குப் பகுதிகள் அனைத்தையும் தான் வெல்ல உதவிய வில்லின் நாணைத் தளர்த்தினான். மென்மையான மனநிலை கொண்ட வீரனான சகாதேவனும், தெற்கு நாடுகளைத் தான் வெல்லக் காரணமாக இருந்த வில்லின் நாணைக் கழற்றினான். பிறகு தங்களுடைய விற்களுடன் தங்கள் நீண்ட பளபளக்கும் வாள்களையும், தங்கள் மதிப்புமிக்க அம்பறாத்தூணிகளையும், கத்தி போன்ற கூர்மையுடைய தங்கள் கணைகளையும் ஒன்றாக வைத்தனர். பிறகு நகுலன் அந்த மரத்தில் ஏறி விற்களையும் பிற ஆயுதங்களையும் அதில் வைத்தான் {Nakula ascended the tree, and deposited on it the bows and the other weapons}. அந்த மரத்தில் உடையாத பகுதி என்றும், மழையும் ஊடுருவாத பகுதி என்றும் தான் {நகுலன்} நினைத்த பகுதியில் அவற்றை {அந்த ஆயுதங்களை} இறுக்கமாகக் கட்டினான்.
{உயிரற்றுக் கிடந்த பசுவின் தோலை அறுத்து, அதில் சகாதேவன் [நகுலன் அல்ல] ஆயுதங்களைக் கட்டினான் என்று வேறு பதிப்புகளில் வருகிறது}
{உயிரற்றுக் கிடந்த பசுவின் தோலை அறுத்து, அதில் சகாதேவன் [நகுலன் அல்ல] ஆயுதங்களைக் கட்டினான் என்று வேறு பதிப்புகளில் வருகிறது}
பிறகு, {தாங்கள் கட்டப்போகும் சடலத்தின்} துர்வாடையை நுகரும் மக்கள் "இங்கே ஒரு சடலம் இருக்கிறது" என்று கருதி அந்த மரத்தை தூரத்திலேயே தவிர்த்து விடுவார்கள் என்று எண்ணிய பாண்டவர்கள், (அந்த மரத்தில்) ஒரு சடலத்தைத் தொங்கவிட்டனர் {சடலத்தை சகாதேவன் கட்டியதாக வேறு பதிப்புகள் சொல்கின்றன}. ஆடு மேய்ப்பவர்களும், மாடு மேய்ப்பவர்களும் அந்தச் சடலத்தைக் குறித்துக் கேட்ட போது, அந்த எதிரிகளை ஒடுக்குபவர்கள் {பாண்டவர்கள்}, அவர்களிடம், “இது நூற்றியெண்பது வயதான எங்கள் தாய் ஆவாள். எங்கள் மூதாதையர்களின் வழக்கப்படி நாங்கள் அவளது சடலத்தைத் தொங்கவிட்டிருக்கிறோம்" என்றனர்.
பிறகு அந்தப் பகைவர்களைத் தாங்குபவர்கள் {பாண்டவர்கள்} நகரத்தை {விராட நகரத்தை} அணுகினார்கள். தாங்கள் கண்டுபிடிக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காக ஜயன், ஜயந்தன், விஜயன், ஜயத்சேனன், ஜயத்பாலன் என்ற (ஐந்து) பெயர்களைத் தனக்கும், தன் தம்பிகளுக்கும் யுதிஷ்டிரன் சூட்டிக்கொண்டான். பிறகு, (துரியோதனனுக்கு) வாக்குறுதி கொடுத்ததற்கு ஏற்ப, கண்டறியப்படாமல் இருக்க வேண்டிய {அஞ்ஜாதவாசம் செய்ய வேண்டிய} பதிமூன்றாவது வருடத்தைக் கழிக்கும் நோக்குடன், அவர்கள் அந்தப் பெரும் நகரத்திற்குள் நுழைந்தனர்.
பிறகு அந்தப் பகைவர்களைத் தாங்குபவர்கள் {பாண்டவர்கள்} நகரத்தை {விராட நகரத்தை} அணுகினார்கள். தாங்கள் கண்டுபிடிக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காக ஜயன், ஜயந்தன், விஜயன், ஜயத்சேனன், ஜயத்பாலன் என்ற (ஐந்து) பெயர்களைத் தனக்கும், தன் தம்பிகளுக்கும் யுதிஷ்டிரன் சூட்டிக்கொண்டான். பிறகு, (துரியோதனனுக்கு) வாக்குறுதி கொடுத்ததற்கு ஏற்ப, கண்டறியப்படாமல் இருக்க வேண்டிய {அஞ்ஜாதவாசம் செய்ய வேண்டிய} பதிமூன்றாவது வருடத்தைக் கழிக்கும் நோக்குடன், அவர்கள் அந்தப் பெரும் நகரத்திற்குள் நுழைந்தனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.