மஹாபராதத்திலேயே
பெரிய பர்வம் சாந்தி பர்வம்.
அதற்கடுத்து பெரிய
பர்வம் வன பர்வமே. அப்படிப்பட்ட
வனபர்வத்தை மொழிபெயர்த்து
முடிக்க ஒரு வருடத்திற்கு
மேல் நிச்சயம் ஆகும் என்று
நினைத்திருந்தேன். நான்
எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே
வனபர்வம் இனிதே முடிந்தது.
வனபர்வம் கடைசி பகுதியை
நேற்றிரவு (16.10.2014) நான்
மொழிபெயர்த்து முடித்து
வலைப்பூவில் வலையேற்றி முடிக்க இரவு மணி 2.30 ஆனது. காலை
8.00 மணிக்கு பிள்ளைகளை
பள்ளிக்கு அனுப்பும் சமயத்தில்தான்
எழுந்தேன். எழுந்ததும்
முகத்தை மட்டும் கழுவி
பிள்ளைகளைப் பள்ளியில்
விட்டுவிட்டு, கடைசி
பதிவைத் மீண்டும் ஒரு முறை
படித்துப் பார்ப்பதற்காக
வலைப்பூவைத் திறந்து பார்த்தேன்.
நண்பர் ஜெயவேலன்
அவர்கள் அந்தப் பதிவையும்
திருத்தி முடித்திருந்தார்.
ஒரு
பதிவை மொழிபெயர்த்ததும்,
வரிகள் எதையும் தடித்த
எழுத்துகளாக மாற்றாமலும்,
பிழை திருத்தம் ஏதும்
செய்யாமலும், எந்த
ஒரு ஒழுங்கமைப்பும் செய்யாமலும்,
அப்படியே வலைப்பூவில்
இடுவதுதான் என் வேலை. அதன்
பிறகு எழுத்துகளுக்கு வண்ணம்
மாற்றுவது, சில
பார்மேட்டிங்குகள் செய்வது,
முக்கியமான வரிகளை
தடித்த எழுத்துகளில் அமைப்பது,
கண்ணில் உடனே படும்
பிழை திருத்தங்கள் போன்றவற்றை
ஜெயவேலனே செய்து வருகிறார்.
எப்போதும் பத்து
பதிவுகள் பின் தங்கியே
இருப்பார். "நள்ளிரவில்தானே
பதிவிட்டோம், அதற்குள்
திருத்திவிட்டாரே!” என்று
நினைத்துக் கொண்டிருந்தபோதே
என்னைத் தொலைபேசியில் அழைத்து,
“நானும் என் மனைவியும்
அங்கேதாங்க வர்றோம்.
வீட்லதானே இருக்கீங்க"
என்று கேட்டார்.
நான் "ஆமாங்க
இங்கதான் இருக்கேன். வாங்க"
என்றேன்.
ஜெயவேல்
அவர்களுக்கு இந்த செப்டம்பர்
மாதம்தான் திருமணம் நடந்தது.
"நண்பருக்குத்
திருமணமாகிவிட்டது, இனி
அவரது மனம் மகாபாரதத்தில்
ஈடுபடுவது கடினம்" என்று
நினைத்து, அவரை
அடிக்கடி தொல்லை கொடுக்கக்கூடாதே
என்றெண்ணி தொலைபேசியில்
அதிகம் பேசுவதை தவிர்த்து
வந்தேன். இந்நிலையில்தான்
வனபர்வ மொழிபெயர்ப்பும்
முடிந்தது. அவரது
தொலைபேசி அழைப்பும் வந்தது.
இதை
நினைத்தபடியே சிற்றுண்டியை
முடித்து, வழக்கம்
போல என் கணினி வரைகலை மையத்தைத்
திறந்து, ஏற்கனவே
ஏற்றிருந்த வேலைகளைச் செய்ய
ஆரம்பித்தேன். அரை
மணிநேரத்தில் அலுவலகத்துக்கு
வந்த அவரையும், அவரது
மனைவி தேவகி அவர்களையும் வரவேற்று வீட்டிற்கு
அழைத்துச் சென்றேன்.
“வனபர்வம் முடிச்சிட்டீங்க!”
என்றார் மகிழ்ச்சியாக.
என் தந்தை, என்
மனைவி, என் தம்பிகளின்
மனைவியர் என அனைவரையும் குசலம்
விசாரித்தார். அவரும்
அவரது மனைவியும் இணையாகச்
சேர்ந்து எங்கள் வீட்டிற்கு
வந்தது இதுவே முதல் முறை.
இருப்பினும் எதுவும்
செய்ய முடியாத நிலையில் நான்...
சிறிது நேரம்
பேசிக்கொண்டிருந்தோம்.
கிளம்பும் முன் பையில்
இருந்து கவரை எடுத்தார்.
என் மனைவி சமைலறைக்குள்
சென்றுவிட்டாள். அதைப்
பார்த்த திரு.ஜெயவேலன்,
“அவங்க வாங்க மாட்டாங்க...
நீங்கதான் வாங்கணும்"
என்றார். நான்
மறுபேச்சில்லாமல் கவரை வாங்கி
கிருஷ்ணன் காலுக்கடியில்
வைத்தேன்.
வெளியே
மழை கொட்டிக் கொண்டிருந்தது.
மழைவிடுவதற்காக சிறிது
நேரம் காத்திருந்த அவர்,
“வனபர்வத்தில் ஏங்க
கர்ணன் கதை வருகிறது?”
என்று கேட்டார்.
“பாண்டவர்களின்
பனிரெண்டாம் {12} ஆண்டு வனவாசத்தில்
கர்ணன் தன்னோட கவசத்தையும்,
குண்டலங்களையும்
இழக்கிறான். அதனாலதான்
வனபர்வத்தோட கடைசில கர்ணன்
வருகிறான்" என்றேன்.
மேலும், “ஃபேஸ்புக்கிலயும்,
விவாத மேடையிலேயும்
கர்ணன் சம்பந்தமா நடந்த
விவாதங்களப் பாத்தீங்களா?”
என்று கேட்டேன்.
“ஆமாங்க... பாத்தேன்...
தேவையில்லாத விவாதங்க"
என்றார். “தேவையற்றது
என்பது மேலெழுந்தவாரியாகச்
சரிதான் என்றாலும், நமது
ஞானமரபென்பதே விவாதங்களில்
வளர்ந்ததுதானே! மகாபாரதம்
உரைக்கப்படுவதும் விவாதமாகவே
உரைக்கப்படுகிறது.
வைசம்பாயனருக்கும்
ஜனமேஜயனுக்கு இடையில் நடந்த
உரையாடலை நைமிச வனத்தில்
முனிவர்களுக்கு சௌதி {சூத
பௌராணிகர்} உரைப்பதே
மகாபாரதம்" என்று
நினைத்து அவருக்கு பதிலளிக்கும்
முன்பே மழைவிட்டதால்,
ஜெயவேல் அவர்கள்
கிளம்பத் தயாரானார்.
ஜெயவேல்
கிளம்பவும், எனது
சித்தி திருமதி.பிரபா அவர்கள் வரவும் சரியாக இருந்தது. சிறு வயதில் என்னை வளர்த்தவர் அவர்தான்.
“சித்தி! வனபர்வம்
மொழிபெயர்ப்பை முடிச்சிட்டேன்
சித்தி" என்றேன்.
“நல்லாயிருப்படே!”
என்றார்கள். கிருஷ்ணன்
காலுக்கடியில் இருந்த கவரை
எடுத்து என் சித்தியிடம்
கொடுத்து, ஜெயவேல்
அவர்கள் கொடுத்ததைப் பற்றிச்
சொன்னேன். என் சித்தி
மகிழ்ந்து, “அப்படியா...?
ஏடே... எவ்வளவுடே...”
என்றார்கள்.
“முப்பத்தோராயிரத்து
முன்னூறு {31300} இருக்கும் சித்தி",
“அதெப்படிடே கரெக்டா
இவ்வளவு சொச்சம் இருக்கும்னு
கவரப் பிரிக்காம சொல்றா" என்றார்கள்.
“வனபர்வம் முன்னூத்திபதிமூணு {313} பகுதி சித்தி" என்று
சொன்னேன். பணத்தை
எண்ணிப் பார்த்துவிட்டு,
“அதெப்பிடிடே..
அந்த மனுசனுக்கு
இப்படி மனசு வருது!” என்று
கேட்டார். “அந்த
ஆளு நல்லா இருக்கணுன்டே!”
என்று சொல்லி, தன் கையில் இருந்த நூறு ரூபாயைக் கொடுத்து, "இத லட்சமா நினைச்சுகணுண்டே" என்று சொல்லி என்
தலையைக் கோதிக் கொடுத்தார்.
3.11.2013 அன்று
வன பர்வத்தை மொழிபெயர்க்கத்தொடங்கினேன்.
இன்று {17.10.2014 அன்று}
வன பர்வ மொழிபெயர்ப்பு
நிறைவடைந்தது. மொத்தம்
348 நாட்கள் ஆகியிருக்கின்றன
{11 மாதங்களும் 14
நாட்களும்}. வன
பர்வம் ஆரம்பித்த போது, இரண்டு
லட்சம் {200000} பார்வைகள் பெற்றிருந்த
முழுமஹாபாரத வலைப்பூ இப்போது
ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் {950000} பார்வைகளை நெருங்கிக்
கொண்டிருக்கிறது. அதற்குப்
பெரிதும் உதவியாக இருந்தவர்
நண்பர் ஜெயவேலன் என்றால் அது
மிகையாகாது. மொழிபெயர்த்த
பகுதிகளைப் பார்வையாளர்களை
ஊக்கப்படுத்துவதற்காகவே
முகநூல் கணக்கினைத் தொடங்கினேன்;
பல குழுமங்களில்
சேர்ந்தேன்; பல
திரட்டிகளில் முழுமஹாபாரத
வலைப்பூவை இணைத்தேன்.
ஆனால், திரட்டிகளில்
இணைப்பதற்காக நான் வலைப்பூவில்
இடும் கோடிங்குகளால் வலைப்பூ
திறப்பது தாமதமாகிறது என்ற
காரணத்தால் சில திரட்டிகளின்
இணைப்பை நீக்கிவிட்டேன்.
பல குழுமங்களில் ஏன்
மகாபாரதத்தையே போடுகிறீர்கள்
என்ற எதிர்வினையின் காரணமாக
அவற்றில் இருந்தும் விலகிவிட்டேன்.
ஒரு நண்பர், "குப்பைகளை இங்கே ஏன் குவிக்கிறீர்கள்" என்றே கேட்டார். நான் அவர்களிடம், "குப்பைகளிலேயே வாழ்பவர்களுக்கு, குப்பையில் கிடக்கும் ரத்தினமும் குப்பையாகத் தான் தெரியும். பரவாயில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி ஒரு குழுமத்தில் இருந்து விலகினேன். இப்போதெல்லாம் எனது
முகநூல் கணக்கில் தொடங்கப்பட்ட
முழுமஹாபாரதம் பக்கத்திலும், எனது சுவரிலும்
மட்டுமே பதிவுகளைப் பகிர்கிறேன்.
மொழியாக்கப்பணிக்காக
பல பாராட்டுகள் வந்தாலும்,
சில எதிர்வினைகள்
மனதைச் சோர்வடையவே செய்கின்றன.
முகநூல் மற்றும்
G+ஆகியவற்றில் வந்த
எதிர்வினைகளை நான் ஏற்கனவே
பகிர்ந்திருப்பதால் வேறு
ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.
தீவிரத்
தமிழ்ப்பற்றும், பொதுவுடைமை
மற்றும் தலித்திய சிந்தனைகளும்
கொண்ட ஒரு நண்பர் தனது வரைகலைப்
பணிக்காக எனது அலுவலகத்திற்கு
அடிக்கடி வருவார். அப்படி
அவர் வரும் ஒரு சமயத்தில்
நான் இணையத்தில் முழுமஹாபாரதம்
சம்பந்தமான வேலைகளில்
ஈடுபட்டிருப்பதைக் கண்டு,
“ஏங்க. உங்களுக்கு
வேற வேலையே இல்லையாங்க.
நீங்களும் கெட்டு,
மற்றவர்களையும் ஏங்க
கெடுக்குறீங்க" என்றார்.
“நல்லதச் செய்றதாத்தான்
நான் நினைக்கிறேன். நான்
வேற என்ன செய்யணும்னு நீங்க
நினைக்கிறீங்க?” என்றேன்.
“ஏங்க நீங்க தமிழங்க...
தமிழுக்காக நீங்க
இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்கீங்க
சொல்லுங்க பார்ப்போம்...”,
“தோழர், மஹாபாரதம்
தமிழ்லதான் எழுதுறேன் தோழர்.
தமிழர்கள் படிக்கத்தான்
எழுதுறேன். மகாபாரதத்தைப்
படிக்காமலேயே உங்கள மாரி
ஆளுங்க திட்டும்போது, அதைக்
கேட்கும் தமிழர்களும்
மகாபாரதத்தை முழுசா படிக்காததனாலதானே
நீங்க சொல்றதெல்லாம் உண்மைனு
நம்புறாங்க. முழுசா
இலவசமா இணையத்திலேயே
கிடைக்குதுன்னா, ஒரு
சிலராவது படிப்பாங்களே தோழர்.
நீங்க ரொம்பலாம் பொய்
சொல்ல முடியாதுல்ல. இன்னும்
கேட்டா வேற மொழியில இருக்கிற
ஒரு படைப்பை தமிழுக்குக்
கொண்டு வர்றதும் தமிழுக்குச்
செய்யுற தொண்டுதானே"
என்றேன். “நல்லா
இருக்குதுங்க ஒங்க தொண்டு.
பாப்பான தூக்கி
நிறுத்திறதுக்குப் பார்ப்பனீயம்
இருக்கு. பார்ப்பனீயத்தை
தூக்கிப் பிடிக்க உங்கள மாறி அடிமைங்க. தமிழுக்குத் தொண்டு செய்ங்கனா செய்யமாட்டீங்க" என்றார்.
“சரி தோழர். என்னால்தான் நீங்கள் நினைக்குமளவுக்கு தொண்டு செய்ய முடியவில்லை. நீங்கள் தமிழுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? எது பார்ப்பனீயம்னு
சொல்றீங்க?” என்று
கேட்டேன். “இந்துமதம்தாங்க
தோழர் பார்ப்பனீயம். இந்து
மதம்ன்ற பேர்லதான பார்ப்பான்
பார்ப்பனீயத்தை போதிச்சி,
நம்மை அடிமையாக்கி
வச்சிருக்கான். அதெல்லாம் தோலுரிச்சு காட்டுறதுதான் தமிழுக்கு நான் செய்யும் தொண்டு." என்றார்.
“ஓ! இதுதான் தொண்டா? சரி தோழர் எது இந்து
மதம்?” என்று கேட்டேன்.
“புராணங்களிலேயும்,
வேதங்களிலேயும் மனுசன
நாலா பிரிச்சு வச்சுச்சுல
அந்த மதம்தான் இந்து மதம்"
என்றார். “இந்து
மதம்னு ஒன்னு இருக்குணு எந்த
புராணத்துல, அல்லது
வேதத்துல சொல்லியிருக்கு
தோழர்? சரி நீங்க
சொல்றபடியே பார்த்தாலும்,
நாலாத்தான பிரிச்சிருக்கானு
சொல்றீங்க, இங்க
நாப்பதாயிரம் இருக்கே!
அதையெல்லாம் யார்
பிரிச்சது" என்று
கேட்டேன். “தோழர்
ஆசிவகம்தான் தோழர் தமிழர்
மதம். நம்மள இந்து
மதம்ன்ற பேருல இப்படி நாப்பதாயிரமா
பிரிச்சிட்டானுக தோழர்"
என்றார் நண்பர்.
“ஆசிவகம் என்ற சொல்
தமிழா தோழர்?” என்று
கேட்டேன். “என்னங்க
இப்படி கேட்டுட்டீங்க.
சீவன்ற வார்த்தைல
இருந்து வந்ததுங்க ஆசிவகம்"
என்றார். “ஜீவன்
என்ற வார்த்தையை சீவன் என்று
சொல்லிக் கொண்டால் அது தமிழாகுமா
தோழர்?” என்று
மீண்டும் கேட்டேன். “ஏங்க
உங்களலாம் திருத்தவே முடியாதுங்க.
தமிழ் வார்த்தைய எல்லாம் அவன் திருடிப்பான். நீங்க அது தமிழ் இல்ல. இது தமிழ் இல்லனுவீங்க. நீங்க எப்படியும்
கெட்டு நாசமா போங்க, தமிழர்கள
விட்ருங்க!” என்று
திட்டாத குறையாக விட்டுச்
சென்றார் அந்த நண்பர்.
ஒரு இடதுசாரி நண்பர், "என்னங்க உங்க மகாபாரதம்லாம் எப்படி போகுது" என்று கேட்டார். நான், "பரவாயில்லை தோழர் எட்டு லட்சம் வியூ கிடைச்சிருக்கு தோழர்" என்றேன். "அதனால எவ்வளவு சம்பாதிச்சீங்க. ஒரு வியூவுக்கு ஒரு ரூபானாலும் எட்டு லட்சம் சம்பாதிச்சிருக்கணுமே. உழைப்ப சரியா பயன்படுத்தணும் தோழர்" என்றார். அப்படிச் சொன்னவர் நான் பெரிதும் மதிக்கும் ஒரு தோழராவார். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நான் விலகுவதற்கு காரணமாக இருந்தவரும் அவர்தான். "நீங்க இடதுசாரி சிந்தனை இல்லாதவர். உங்களுக்கு இங்க இருக்கிறது ரொம்ப கஷ்டம், கட்சிக்கு கஷ்டம்" என்று சொல்லி கட்சியில் இருந்து விலக வைத்தவர். கட்சியில் இருந்தேன் என்றுதான் பெயர், பெரிதான எந்த இயக்கங்களிலும் நான் கலந்து கொண்டது கிடையாது. ஒரு நண்பரின் வற்புறுத்தலாலேயே கட்சியில் நான் இணைந்திருந்தேன். அப்படிப்பட அவரிடம், "நான் பணத்திற்காக இதைச் செய்யவில்லை தோழர். உங்களுக்காகத்தான் செய்றேன்" என்று சொல்லி மனதில் பட்டதையெல்லாம் பட் பட் என்று சொல்லி திட்டி அனுப்பி விட்டேன். திட்டிவிட்ட பிறகு இப்படி நடந்து கொண்டோமே என்று மனம் வருந்தியதால் அன்று மொழிபெயர்ப்பைச் செய்ய முடியவில்லை. இப்படி பாராட்டுகள் கிடைக்கும்போது மகிழ்ச்சியும், எதிர்ப்புகள் வரும்போது துயரமும் அடைந்தேன். "முரண்பட்ட இரட்டைகளைச் சமமாகக் கருத வேண்டும்" என்று மகாபாரதம் அடிக்கடிச் சுட்டிக்காட்டினாலும், மகாபாரதத்தை மொழிபெயர்த்து வரும் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. முயன்றுதான் வருகிறேன். சித்திக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்றும் எனக்கு நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இறைமறுப்பாளர்களும், இடதுசாரிகளும், தலித்தியம் பேசுபவர்களுமாகவே இருக்கிறார்கள். ஆன்மிகவாதிகள், வலதுசாரி எண்ணம் கொண்டவர்கள் ஆகியோரிடம் என்னால் ஒன்ற முடியவில்லை. முகம் தெரியாத ஆன்மிகவாதிகள் மற்றும் வலதுசாரிகளே, இணைய வழியாக எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டதே கிடையாது.
ஒரு இடதுசாரி நண்பர், "என்னங்க உங்க மகாபாரதம்லாம் எப்படி போகுது" என்று கேட்டார். நான், "பரவாயில்லை தோழர் எட்டு லட்சம் வியூ கிடைச்சிருக்கு தோழர்" என்றேன். "அதனால எவ்வளவு சம்பாதிச்சீங்க. ஒரு வியூவுக்கு ஒரு ரூபானாலும் எட்டு லட்சம் சம்பாதிச்சிருக்கணுமே. உழைப்ப சரியா பயன்படுத்தணும் தோழர்" என்றார். அப்படிச் சொன்னவர் நான் பெரிதும் மதிக்கும் ஒரு தோழராவார். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நான் விலகுவதற்கு காரணமாக இருந்தவரும் அவர்தான். "நீங்க இடதுசாரி சிந்தனை இல்லாதவர். உங்களுக்கு இங்க இருக்கிறது ரொம்ப கஷ்டம், கட்சிக்கு கஷ்டம்" என்று சொல்லி கட்சியில் இருந்து விலக வைத்தவர். கட்சியில் இருந்தேன் என்றுதான் பெயர், பெரிதான எந்த இயக்கங்களிலும் நான் கலந்து கொண்டது கிடையாது. ஒரு நண்பரின் வற்புறுத்தலாலேயே கட்சியில் நான் இணைந்திருந்தேன். அப்படிப்பட அவரிடம், "நான் பணத்திற்காக இதைச் செய்யவில்லை தோழர். உங்களுக்காகத்தான் செய்றேன்" என்று சொல்லி மனதில் பட்டதையெல்லாம் பட் பட் என்று சொல்லி திட்டி அனுப்பி விட்டேன். திட்டிவிட்ட பிறகு இப்படி நடந்து கொண்டோமே என்று மனம் வருந்தியதால் அன்று மொழிபெயர்ப்பைச் செய்ய முடியவில்லை. இப்படி பாராட்டுகள் கிடைக்கும்போது மகிழ்ச்சியும், எதிர்ப்புகள் வரும்போது துயரமும் அடைந்தேன். "முரண்பட்ட இரட்டைகளைச் சமமாகக் கருத வேண்டும்" என்று மகாபாரதம் அடிக்கடிச் சுட்டிக்காட்டினாலும், மகாபாரதத்தை மொழிபெயர்த்து வரும் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. முயன்றுதான் வருகிறேன். சித்திக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்றும் எனக்கு நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இறைமறுப்பாளர்களும், இடதுசாரிகளும், தலித்தியம் பேசுபவர்களுமாகவே இருக்கிறார்கள். ஆன்மிகவாதிகள், வலதுசாரி எண்ணம் கொண்டவர்கள் ஆகியோரிடம் என்னால் ஒன்ற முடியவில்லை. முகம் தெரியாத ஆன்மிகவாதிகள் மற்றும் வலதுசாரிகளே, இணைய வழியாக எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டதே கிடையாது.
இப்படி
ஒரு சிலர் அரசியல் ரீதியாக
அணுகி எதிர்வினை புரிந்தாலும்,
"தொழில் மந்தமாகப்
போகிறது! வேண்டாத
வேலை செய்கிறீர்கள். இது
ஆரம்பிப்பதற்கு முன் எவ்வளவு
சம்பாதித்துக் கொண்டிருந்தீர்கள். இப்போது
எவ்வளவு சம்பாதிக்கீறீர்கள்!
உங்கள் நேரத்தையெல்லாம்
வீண் செய்கிறீர்கள்.
பிள்ளைகளைப் பற்றி
கொஞ்சமாவது அக்கறை இருந்தால்
இப்படிச் செய்வீர்களா?”
என்று கேட்கப்படும்
ஒரு சில நண்பர்களின் எதிர்வினைகளை
எதிர்கொள்ள முடியாமல் சில
நேரங்களில் சோர்வடைந்திருக்கிறேன்.
அப்படி சோர்வடையும்
நேரங்களில், வீட்டில் இருக்கும் கணினியில் நான்
அமராமல் இருப்பதைக் கவனிக்கும்
என் மனைவி, “என்னங்க
மகாபாரதம் பண்ணலையா?” என்று
கேட்பாள். “இல்ல
லட்சுமி வேல அதிகம் மனசு வேற
சரியில்ல" என்று
சொல்லி படுத்துவிடுவேன்.
அடுத்த நாள், என்
மனைவி இரவு நான் அலுவலகம்
மூடுவதற்கு முன்பே வந்து
இன்னும் மூடவில்லையா என்று
கேட்டு, உடன் இருந்து
வீட்டுக்கு அழைத்துச் சென்று,
“மகாபாரதம் எப்படி
போகுது, மெயில்
ஏதாவது வந்துச்சா.. அவரு
இப்படி பாராட்டினாரு, இவரு
இப்படி சொல்லியிருக்காரும்பீங்க..
இப்ப ஒன்னுமே சொல்ல
மாட்றீங்களே" என்று
கேட்டு அருகில் அமர்ந்து
மெயில்களைப் பார்ப்பாள்.
“எல்லாரும் பாராட்ட
மட்டுந்தான் செய்றாங்க,
குறையே சொல்ல மாட்றாங்கல"
என்பாள். “இப்ப
எத்தனாவது பகுதி எழுதுறீங்க.
ஏன் ரொம்ப ஸ்லோவா
போறீங்க. இப்ப
மகாபாரதத்துல என்ன கதை வருது"
என்று கேட்டு
உற்சாகமூட்டுவாள். நானும்
மீண்டும் கதையில் ஒன்றி,
எதிர்வினைகளை மறந்து
பழைய நிலைக்கு திரும்பிவிடுவேன்.
சோர்வாகும்
சில நேரங்களில் ஜெயமோகன்
அவர்களின் வெண்முரசு, விஜய்
டிவி மஹாபாரதம் ஆகியன என்னை
பழைய நிலைக்குத் திருப்பும்.
இங்கே ஜெயமோகன்
அவர்களின் வெண்முரசு குறித்து
சில வார்த்தைகள்.... முதற்கனலை
முழுமையாக நாள் விடாமல்
தொடர்ந்து படித்தேன்.
ஆரம்பத்தில் சில
விமர்சனங்களும் எழுதினேன்.
ஆனால் நேரமின்மையால்
அதைத் தொடர முடியாமல் போயிற்று.
விமர்சனம் எழுத
முடியவில்லையாயினும் முதற்கனலை
முழுதாய்த் தொடர்ந்து
முடித்தேன். வேலை
அதிகரித்ததன் காரணமாக
மழைப்பாடலின் ஆரம்பத்தில்
சற்று நிறுத்தினேன். அப்படியே
அதற்கு மேல் தொடராமல்
விட்டுவிட்டேன். அற்புதமான
சொற்களால் வேறு கோணத்தில்
இருந்து கதையை விளக்குவது
லேசுபட்ட காரியமா? கதைசொல்லும்
நேர்த்தியிலும், புதிய
சொற்களைக் கையாளும் விதத்திலும்,
பாத்திரங்களின்
தன்மையைப் படைப்பதிலும்
நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத்
தொட்டுவருகிறார் ஜெயமோகன்.
மீண்டும் படிக்க
ஆரம்பிக்க வேண்டும்.
விட்டதில் இருந்து
அல்ல. தொட்ட இடத்தில்
{ஆரம்பத்தில்}
இருந்து...
விஜய்
டிவி மகாபாரதம் நல்ல நேர்த்தியாகப்
படைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் பல இடங்களில்
மூலத்திற்கு மிக அந்நியமாகவே
போகிறது. வழக்கமாகக்
நாடகங்களிலும், திரைப்படங்களிலும்
கர்ணன் கதாப்பாத்திரத்தைத்தான்
சற்று மிகைப்பட சொல்வார்கள்.
ஆனால் விஜய் டிவியில்
அனைத்து கதாப்பாத்திரங்களின்
இயல்பும் மிகைப்படவே
சொல்லப்படுகிறது. அம்பறாத்தூணியே
இல்லாத வில்லாளிகளை விஜய்
டிவியின் மகாபாரதத்தில்தான்
பார்க்கலாம். அதற்காக
அந்தப் படைப்பை மொத்தமும்
குறைசொல்லிவிடவும் முடியாது.
காட்சி அமைப்பிலும்,
விறுவிறுப்பைக்
கூட்டியிருப்பதிலும் அவர்கள்
வென்றே இருக்கிறார்கள்.
காசியில் வியாசர் கோவில் அருகில் திரு.ஜெயவேலன், நான் மற்றும் திரு.ஜெகதீஷ் |
வனபர்வம்
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும்போது
வடநாடு செல்லவும், பல
கோவில்களைத் தரிசிக்கவும்
பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
6.5.2014 அன்று நண்பர்
ஜெகதீஷ், ஜெயவேல்
மற்றும் சீனிவாசன் அவர்களுடன்
காசி செல்லும் வாய்ப்பு
கிடைத்தது. வாய்ப்பு
நல்கிய நண்பர் ஜெகதீஷ்
அவர்களுக்கும், அந்தப்பயணத்தின் போது எங்கள்
அனைவரையும் தாய் போல கவனித்து
வந்த திருமதி.கீதா
{திரு.ஜெகதீஷ்
அவர்களின் மனைவி} அவர்களுக்கும்
நன்றிகள் கோடி. அவர்கள்
புண்ணியத்தில் உயிர்கொண்ட
தெய்வமான அன்னை கங்கை மடியின்
ஸ்பரிசத்தை உணர்ந்தேன்.
அப்பயணத்தின் போது,
திரு.ஜெகதீஷ்
அவர்களின் பிள்ளைகள் ஆதித்யா
மற்றும் ஆகாஷ் அவர்களின்
மஹாபாரத அறிவையும், பொது
அறிவையும் கண்டு வியந்தேன்.
இன்றும் அவர்களைப்
பார்க்கும்போதெல்லாம்
பெருமையாக இருக்கிறது.
அப்பயணத்தின் தொடர்ச்சியாக
ராமேஸ்வரம் செல்லவும்,
பிறகு, நண்பர்
திரு. ஜெயவேலன்
அவர்கள் திருமணத்திற்காக
ஸ்ரீரங்கம் சென்ற போது,
ரங்கனைத் தரிசித்து,
காவேரி அன்னையின் மடியில்
தவழவும் வாய்ப்புகள் கிடைத்தன.
இப்போது நண்பர்
திரு.ஜெகதீஷ் அவர்கள்
ஒரு சிறு அறுவை சிகிச்சை
மேற்கொண்டு ஓய்வில் இருக்கிறார்.
அவர் பூரண குணமடைய
பரமனை மனதாரத் தியானிக்கிறேன்.
சரி
நமது வலைப்பூவுக்குத்
திரும்புவோம்....
புதிதாக
அருஞ்சொற்பொருள் என்ற பக்கத்தை
உருவாக்கியிருக்கிறேன்.
சில தூய தமிழ் சொற்களைப்
பயன்படுத்தும் இடங்களில்
{#} என்ற குறிகளை
இட்டு, அந்த குறிகளுக்கு
ஹைப்பர்லிங்க் கொடுத்துவருகிறேன்.
அந்த ஹைப்பர்லிங்கைத்
தொடர்ந்து சென்றால், அந்தச்
சொல்லின் பொருள் தெரியும்.
இது வலிந்து சம்ஸ்க்ருதத்தை
விலக்குவதற்காக அல்ல. அழகிய
தமிழ்ச்சொற்களை வலிந்து நாம்
ஏன் கைவிட வேண்டும்.
நடைமுறையில் அவற்றைப்
பயன்படுத்தினால் நன்றாக
இருக்குமே என்ற எண்ணத்தில்தான்
செய்கிறேன்.
வலைப்பூ
பதிவுகளுக்குத் துணையாக பல
துணைபக்கங்களைச் செய்திருந்தாலும்,
அவை எதுவும்
மேம்படுத்தப்படாமலேயே {update}
இருக்கின்றன. நாட்குறிப்பு,
பெயர்க்காரணம்,
நீதிமொழிகள் ஆகியன
அப்படியே இருக்கின்றன.
மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். அதை திரு.ஜெயவேலன் அவர்கள்தான் செய்ய வேண்டும். விவாத மேடை பகுதி
மட்டும்தான் நன்றாக செயல்படுகிறது.
விவாத மேடையில்
திரு.தாமரை,
திரு.மெய்யப்பன்
அருண், திரு.தமிழ்வள்ளுவர்,
திரு.சதானந்த
கிருஷ்ணன் ஆகியோர் நன்றாக
விவாதித்து வருகின்றனர்.
விவாத
மேடையில் "வஞ்சகன்- கண்ணனா? கர்ணனா?"
என்ற திரியின் நல்ல
விவாதங்கள் நடைபெற்றன.
அவற்றை நான் முகநூலிலும்,
முழுமகாபாரத வலைப்பூவின்
முகப்பிலும் வெளியிட்டேன்.
நான் கண்ணனுக்கு
ஆதரவான நிலையை எடுத்தாலும்,
கர்ணனுக்கு ஆதரவாகப்
பேசிய திரு.மெய்யப்பன்அருண் அவர்களின் மறுமொழிகள்
மிகவும் கவரும் வகையில்
இருப்பதைக் கண்டு சிந்தித்திருக்கிறேன். அதற்கு
பதில் சொன்ன தாமரை, சதானந்த
கிருஷ்ணன் ஆகியோரின் மறுமொழிகளும்
அருமையாக இருந்தன.
இவற்றையெல்லாம்
முகநூலில் பகிர்ந்த போது
எதிர்பாராத எதிர்ப்புகள்
வந்தன. “உன் கருத்துகள்
பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுபோல எழுதாதே"
என்று ஒருமையிலேயே
கூட மருமொழிகள் வந்தன.
இவ்வளவுக்கும் நான்
என் கருத்து என்று எதையுமே
முன்வைக்கவில்லை. விவாத
மேடையில் நடந்த நணபர்களின்
விவாதங்களைத் தொகுத்தே
வெளியிட்டேன். கருத்து
என்று வரும்போது நிச்சயம்
ஒரு நிலையை எடுத்துத்தான்
ஆக வேண்டும். இருப்பது
இரண்டு நிலைகள்தான். நான்
இருபுறமும் சேரமாட்டேன்
என்றால் அது நேர்மையாக இருக்காது
என்றே கருதுகிறேன்.
விவாதங்களில்
ஈடுபடும்போது, எதிர்நிலை
எடுக்கும் நண்பர்களின்
மதிப்புமிக்க கருத்துகளை
கவனத்தில் கொள்ளவே செய்கிறேன்.
குறிப்பாக கர்ணன்
சம்பந்தமான விவாதங்களில்
எதிர்நிலை எடுத்திருந்த
நண்பர் திரு.மெய்யப்பன்
அருண் அவர்களின் கருத்துகள்
பலவற்றில் எனக்கு உடன்பாடு
உண்டு. ஆனால் "கர்ணன்
பாண்டவர்களைவிட மிகவும்
நல்லவனா?” என்று
வரும்போது, நான்
அக்கருத்துக்கு எதிர்நிலையே
எடுத்திருக்கிறேன். இதனால்
மொழிபெயர்ப்பில் பாரபட்சம்
காட்டுவேனோ என்று நினைப்பது
தவறு. அப்படி நான்
பாரபட்சம் காட்டவே முடியாது.
ஏனெனில், கங்குலியின்
வரிகளை வரிக்குவரி சரியாக
மொழிபெயர்க்கவே முயன்றுவருகிறேன்.
என் கருத்துகளையோ,
நான் கொண்ட நிலைகளையோ
பதிவுகளில் திணிக்க நான்
முயன்றதில்லை. எங்காவது
பொருளில் விலகிச் சென்றிருக்கிறேன்
என்று நண்பர்கள் கருதினால்,
எனக்குச் சுட்டிக்காட்டவும்.
நான் நிச்சயம் திருத்திக்
கொள்வேன். மொழிபெயர்க்கிறேன்
என்பதற்காக கருத்து கூறும்
சுதந்திரத்தையும் நான் இழக்க
விரும்பவில்லை.
முழுமஹாபாரத்தையும்
முழுமூச்சாகப் படிக்கச்
சிரமப்படுபவர்களுக்கென்று
முழு மஹாபாரதத்தில் இருந்து
சிறு சிறு கதைகளாகச் சேகரித்து
மின்புத்தகங்களாக வெளியிட்டால்
என்ன என்று தோன்றியது.
அப்போது வன பர்வத்தில
நளன் தமயந்தி கதையை மொழிபெயர்த்து
முடித்திருந்தேன். எனவே,
முதலில் நளன் தமயந்தி
கதையை மட்டும் தொகுத்து
மின்புத்தகமாக அளித்தேன்.
நல்ல வரவேற்பு இருந்தது.
அதன் பிறகு வரிசையாக
உதங்கா, ருருவும்
பிரம்மத்வாராவும், கருடன்,
பரிக்ஷித், ஜரத்காரு,
ஆஸ்தீகர், துஷ்யந்தன்
சகுந்தலை, யயாதி
ஆகியவற்றைத் தொகுத்து
மின்புத்தகமாக வெளியிட்டேன்.
நண்பர் ராமராஜன்
மாணிக்கவேல் அவர்கள் வனபர்வத்தில்
கந்தன் கதை வரும் பகுதிகளைத்
தொகுத்து, அட்டையும்
வடிவமைத்து மின்புத்தமாக
எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி
வைத்தார். அதை அப்படி
அவர்கள் அளித்தவாறே திருத்தங்கள்
இன்றி மஹாபாரதச் சிறுகதைகள்
மின்புத்தகத் தொகுப்பில்
சேர்த்தேன்.
ராமராஜன்
மாணிக்கவேல் அவர்கள், நான்
இடும் பதிவுகளை ஜெயவேல்
திருத்துவதற்கு முன்பே
பிழைகளைக் கண்டறிந்து எனக்கு
மின்னஞ்சல் அனுப்பிவருகிறார்.
கிட்டத்தட்ட அவர்
முழுமஹாபாரத பதிவுகளுக்கு
ஒரு ப்ரூஃப் ரீடர் போலவே
செயலாற்றி வருகிறார்.
இதைத்தவிர பதிவுகளின்
தலைப்புகளிலும் தனது ஆலோசனைகளை
வழங்கி வருகிறார். திரு.ராமராஜன்
மாணிக்க வேல் அவர்களுக்கு
நன்றி.
வனபர்வத்தில்
50 பகுதிகள் கொண்ட
ஒவ்வொரு தொகுதி முடிவடையும்போதும்
நண்பர்கள் திரு.செல்வராஜ்
ஜெகன் அவர்களும், சிலவேளைகளில்
திரு.வீரசிங்கம்
விசிதன் அவர்களும் அவற்றைச்
சேகரித்துத் தொகுத்து MS
Word கோப்பாக எனது
மின்னஞ்சலுக்கு அனுப்பி
வருகிறார்கள். நான்
அவற்றுக்கு மேலட்டை மட்டும்
வடிவமைத்து, அவ்வப்போது
நமது முழுமஹாபாரதம் வலைப்பூவில்
வெளியிட்டு வருகிறேன்.
வனபர்வம் பகுதிகள்
அனைத்தையும் (001-313 பகுதிகள்
வரை} புதிதாக,
கடைசியாக செய்யப்பட்டத்
திருத்தங்களுடன் திரு.செல்வராஜ்
ஜெகன் அவர்கள் சேகரித்துத்
தருவதாகச் சொல்லியிருக்கிறார்.
அவர் அனுப்பித்தந்ததும்
வனபர்வம் முழு பிடிஎப் கோப்பாக
நமது வலைப்பூவில் அளிப்பேன்.
மேற்கண்ட நண்பர்களுக்கு
நன்றி. சில நண்பர்கள்,
முகநூலில் நமது
பதிவுகளைப் பகிர்ந்தும்,
ஆலோசனைகள் கூறியும்,
விவாதங்களில்
பங்கெடுத்துக் கொண்டும்
வருகிறார்கள். அந்த
நண்பர்களுக்கு நன்றி.
தீபா
நடராஜன் என்ற முகநூல் நண்பர்
ஒருவர், "ஏன்
மஹாபாரதப் பதிவுகளை ஆடியோ
கோப்புகளாக்கக்கூடாது"
என்று கேட்டார்.
அதற்கு நான் ஏற்கனவே
முயன்றதையும், என்
குரல் நன்றாக இல்லாததால்
அம்முயற்சியை கைவிட்டதையும்,
நான் தீபா அவர்களிடம்
சொன்னேன். “நான்
செய்து தரட்டுமா?” என்று
கேட்டார். “தாராளமாக,
உங்களுக்குக் கோடி
புண்ணியம்" என்று
சொன்னேன். முதல்
ஆடியோவை அனுப்பித் தந்தார்.
குரல் நன்றாக இருந்தது.
மேலும் அதில் பின்னணி
இசையைக் கோர்த்து மீண்டும்
30.6.2014 அன்று அனுப்பிவைத்தார்.
இதுவரை ஆதிபர்வம்15வது பகுதி வரை நமதுவலைப்பூவில் வெளியிட்டிருக்கிறேன்.
ஆடியோவில் 15 பகுதிகள்
மொத்தமாக 3 மணிநேரங்கள்
ஓடுகின்றன. தீபா
அவர்களின் முயற்சியைக் கண்ட
என் தம்பியின் மனைவி ஜெயா
அருண் அவர்கள், “நானும்
இதுபோல ஆடியோ செய்து தரட்டுமா?”
என்று கேட்டார்.
“தீபா அவர்கள் ஆதிபர்வம்
படிக்கிறார். நீ
சபாபர்வம் படிம்மா!” என்றேன்.
பிறகு தீபா அவர்களிடம்
இது குறித்துக் கேட்டேன்.
“தாராளமாகப் படிக்கட்டும்
நண்பரே" என்றார்.
அந்த வகையில் ஜெயா
அவர்கள் சபா பர்வத்தில் இதுவரை
15 பகுதிகள்படித்திருக்கிறார். ஆடியோவில்
சபா பர்வத்தின் 15 பகுதிகள்
2 மணிநேரம் 30
நிமிடங்கள் ஓடுகின்றன.
மேற்கண்ட இரண்டு
பர்வங்களின் ஆடியோக்களையும்
நமது வலைப்பூவில் வெளியிட்டிருக்கிறேன்.
முழுமஹாபாரதம்
பதிவுகளுக்குக் குரல் கொடுக்கும்
மேற்கண்ட நண்பர்களுக்கு
நன்றி.
புத்தகமாக
வெளியிடவில்லை என நண்பர்கள்
மின்னஞ்சலிலும், முகநூலிலும்
கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால், என்னால்தான்
முடியவில்லை. நான்
பப்ளிஷர் யாரையும் இதுவரை
அணுகவில்லை. அச்சகம்
நடத்தும் எனது நண்பர் சீனிவாசன்
அவர்கள் "நாமே
வெளியிடலாம் சார்!” என்றார்.
ஆதிபர்வம் மட்டும்
புத்தகமாக்க வேண்டுமென்றால்
எவ்வளவு ஆகும் என்றும்
கணக்குப்போட்டுப் பார்த்தோம்.
கிட்டத்தட்ட இரண்டு
லட்சம் ரூபாய் ஆகிறது.
முயன்று கொண்டுதான்
இருக்கிறேன். பார்ப்போம்
இந்த வருடம் முடிகிறதா என்று.
இனி,
விராட பர்வத்தின்
மொழிபெயர்ப்பை ஆரம்பிக்க
வேண்டும். வரைகலைப்
பணிகள் அதிகமாக இருக்கின்றன.
வனபர்வத்திற்கு
என்னுரை அளிக்க வேண்டும்
என்று நினைத்து ஆரம்பித்து,
இந்தப் பதிவை முடிக்கவே
இரண்டு நாட்கள் பிடித்துவிட்டன.
தீபாவளி அன்று விராட
பர்வத்தின் முதல் பதிவை
ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.
அதுவரை பணிக்கிடையில்
நேரம் கிடைத்தால் வலைப்பூவில்
சில திருத்தங்கள் செய்யலாம்
என்றிருக்கிறேன். முடிந்த
வரையில் இனிவரும் பர்வங்களை
விரைவாக மொழிபெயர்க்க முயல்வேன்.
பரமன் திருவருள்
புரியட்டும். ஆதரவளித்து
வரும் நண்பர்கள் அனைவருக்கும்
நன்றி.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
18.10.2014
திருவொற்றியூர்
மறுமொழி கூற கீழிருக்கும் முகநூல் லிங்கின் கமென்ட் பட்டனையும் அதற்கு கீழே இருக்கும் மறுமொழி செய்ய என்ற பட்டனையும் பயன்படுத்தலாம்
Post by முழு மஹாபாரதம்.