Vrihannala enquired Sairindhri! | Virata Parva - Section 24 | Mahabharata In Tamil
(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 11)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம்: சைரந்திரியை அரண்மனைக்குள் சேர்க்க வேண்டாம் என்றும், அவளை நாட்டை விட்டு விரட்டுங்கள் எனவும் குடிமக்கள் விராடனிடம் சொன்னது; விராடன் சுதேஷ்ணையிடம் சைரந்திரியை அவள் விரும்பும் இடத்திற்குச் செல்லச் சொல்லுமாறு கட்டளையிட்டது; திரௌதி விராடனின் சமையலறையில் பீமனைக் கண்டு பேசுவது; பிருஹந்நளையாக இருந்த அர்ஜுனன் சைரந்திரியாக இருந்த திரௌபதியிடம் அவள் எப்படி விடுதலை அடைந்தாள் என்பதைக் கேட்பது; சுதேஷ்ணை சைரந்திரியிடம் அவள் விரும்பிய இடத்திற்குச் செல்லச் சொல்வது; சைரந்திரி பதிமூன்றுநாள் பொறுக்குமாறு கேட்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சூதர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட குடிமக்கள் மன்னனிடம் {விராடனிடம்} சென்று நடந்தது அத்தனையும் சொன்னார்கள். அவர்கள், “ஓ! மன்னா, பலம்பொருந்திய சூதர் மகன்கள் அனைவரும் கந்தர்வர்களால் கொல்லப்பட்டனர். உண்மையில், அவர்கள் அனைவரும் இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரங்களைப் போலப் பூமியில் சிதறிக் கிடக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட சைரந்திரியும் {மாலினியும்}, நகரத்தில் இருக்கும் உமது அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறாள்.
ஐயோ, ஓ! மன்னா {விராடா}, அந்தச் சைரந்திரி வருவது உமது மொத்த நாட்டுக்கும் ஆபத்தாகும். சைரந்திரியோ பெரும் அழகு படைத்தவளாக இருக்கிறாள்; கந்தர்வர்களும் அதீத பலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் இயற்கையாகவே மனிதர்கள் {அவளிடம்} காமங்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! மன்னா {விராடா}, சைரந்திரிக்குச் செய்யப்பட்ட அநீதிகளின் விளைவாக உனது நாடு அழிவைச் சந்திக்கமால் இருக்கத் தாமதமில்லாமல் நடவடிக்கை எடு” என்றனர். அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட அந்தக் கூட்டத்தின் தலைவன் விராடன் அவர்களிடம், “அந்தச் சூதர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்யுங்கள்! ரத்தினங்கள் மற்றும் தாராளமான நறுமணத்தைலங்களுடன் கீசகர்கள் அனைவரும் சுடர்வெட்டெரியும் ஒரே சிதையில் தகனம் செய்யப்படட்டும்!” என்றான்.
பிறகு அச்சம் நிரம்பிய மன்னன் {விராடன்} தனது ராணியான சுதேஷ்ணையிடம், “சைரந்திரி திரும்பி வரும்போது, அவளிடம் நீ “ஓ! அழகிய முகம் கொண்ட சைரந்திரி, உனக்கு மங்களம் உண்டாகட்டும். நீ எங்கு விரும்புகிறாயோ அங்குச் செல்லலாம். ஓ! அழகிய இடை கொண்டவளே {சைரந்திரி}, ஏற்கனவே கந்தர்வர்கள் கரங்களில் பெற்ற தோல்வியால் மன்னர் அச்சமுற்றிருக்கிறார். நீ கந்தர்வர்களின் பாதுகாப்பில் இருக்கும்போது, உன்னிடம் தனிப்பட்ட முறையில் இதைச் சொல்ல எனக்குத் துணிவில்லை. எனினும் ஒரு பெண் உன்னைப் புண்படுத்த முடியாது என்பதால் தான், நான் ஒரு பெண்ணின் மூலம் உன்னிடம் இவற்றைச் சொல்கிறேன். {அதாவது பெண்கள் உன்னிடம் சொல்வதில் குற்றமில்லை. அதனால் பெண்ணான என் மனைவி மூலம் உன்னிடம் சொல்கிறேன்}” என்ற எனது இந்த வார்த்தைகளை அவளிடம் சொல்” என்றான் {விராடன் சுதேஷ்ணையிடம்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சூதர்களைக் கொன்ற பிறகு பீமசேனனால் விடுவிக்கப்பட்டவளும், புத்திக்கூர்மையும் இளமையும் கொண்டவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, தன் அனைத்து அச்சங்களில் இருந்தும் விடுபட்டு, தன் அங்கங்களையும் ஆடைகளையும் நீரில் கழுவிக் கொண்டு, புலியால் பயமுறுத்தப்பட்ட வெள்ளாடு போல நகரத்தை நோக்கிச் சென்றாள். அவளைக் கண்ட குடிமக்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, கந்தர்வர்கள் மேல் கொண்ட பயத்தின் காரணமாக அனைத்துத் திசைகளிலும் ஓடினர். சிலர் தங்கள் கண்களை மூடிக் கொள்ளும் அளவுக்குச் சென்றனர்.
பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, மடைப்பள்ளியின் வாயிலில் மதங்கொண்ட பெரும் யானை போல இருக்கும் பீமசேனனை, அந்தப் பாஞ்சால இளவரசி {திரௌபதி} கண்டாள். ஆச்சரியத்தால் அகன்ற விழிகளுடன் அவனை {பீமசேனனைக்} கண்ட திரௌபதி, தங்கள் இருவருக்கு மட்டுமே புரியும் வார்த்தைகளில், “என்னைக் காப்பாற்றிய கந்தர்வர்களின் இளவரசரை வணங்குகிறேன்” என்றாள். அவளது {திரௌபதியின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட பீமன், “இதுவரை யாருக்குக் கீழ்ப்படிந்து இந்த நகரத்தில் அம்மனிதர்கள் வாழ்ந்தார்களோ, அவளது {உனது} இந்த வார்த்தைகளைக் கேட்டு, தங்கள் கடனில் இருந்து அவர்கள் விடுபட்டத்தாகக் கருதி இனி இங்கே இருப்பார்கள்” என்றான். [1]
[1] //இங்கே பீமன், “உனது கணவர்களான கந்தர்வர்கள் உனக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவர்களாவர்! அவர்களால் உனக்குச் சேவை செய்ய முடிந்ததெனில், அவர்கள் தங்கள் கடனைத் திருப்பித் தந்ததாக மட்டுமே ஆகும்” என்று சொல்கிறான்// என்கிறார் கங்குலி
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு அவள் {திரௌபதி}, ஆடற்கூடத்தில் மன்னன் விராடனின் மகள்களுக்கு ஆடற்கலை கற்பித்துக்கொண்டிருந்த வலிய கரங்கள் கொண்ட தனஞ்சயனைக் {பிருஹந்நளையாக இருந்த அர்ஜுனனைக்} கண்டாள். அப்பாவியாக இருந்தாலும் கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி} அங்கே வந்தபோது, ஆடற்கூடத்தில் இருந்து அர்ஜுனனுடன் வெளியே வந்த காரிகைகள், அவளை {திரௌபதியை} அணுகினர். பிறகு அவர்கள், “ஓ! சைரந்திரி {மாலினி}, நற்பேறாலேயே நீ உனது ஆபத்துக்களில் இருந்து வெளியேறினாய். நற்பேறாலேயே நீ பாதுகாப்பாகத் திரும்பியிருக்கிறாய். மேலும், நீ அப்பாவியாக இருந்தாலும் உனக்குத் தீங்கிழைத்த சூதர்கள் உனது நற்பேறாலேயே கொல்லப்பட்டனர்” என்றார்கள்.
இதைக் கேட்ட பிருஹந்நளை {அர்ஜுனன் - திரௌபதியிடம்}, “ஓ! சைரந்திரி, நீ எப்படி விடுவிக்கப்பட்டாய்? அந்தப் பாவிகளான இழிந்தவர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர்? இவை அனைத்தையும் நடந்தவாறே உன்னிடம் அறிய விரும்புகிறேன்” என்று கேட்க, அதற்குச் சைரந்திரி {திரௌபதி - அர்ஜுனனிடம்}, “ஓ! அருளப்பட்ட பிருஹந்நளையே, எப்போதும் பெண்களின் அறைகளில் மகிழ்ச்சியாக நாட்களைக் கடத்தும் உனக்கு, சைரந்திரியின் விதியில் கவலை கொள்ளச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என்ன இருக்கிறது? சைரந்திரி தாங்கிக் கொள்ள வேண்டிய கவலைகள் ஏதும் உனக்கில்லை! அதனால்தான் துக்கத்திலிருக்கும் என்னிடம் பரிகாசத்துடன் நீ இப்படிக் கேட்கிறாய்” என்றாள் {திரௌபதி}.
அதற்குப் பிருஹந்நளை {அர்ஜுனன் திரௌபதியிடம்}, “ஓ! அருளப்பட்டவளே, பிருஹந்நளைக்கும் தனக்கேயுரிய இணையற்ற துக்கங்கள் இருக்கின்றன. அவள் விலங்கைப் {[அ] அறிவிலியைப்} போலத் தாழ்ந்த நிலையை அடைந்திருக்கிறாள். ஓ! பெண்ணே {திரௌபதி}, இதை நீ புரிந்து கொள்ள வில்லை. நான் உன்னுடன் வாழ்ந்திருக்கிறேன். நீயும் எங்களுடன் வாழ்ந்திருக்கிறாய். எனவே, நீ துன்பத்தால் பாதிக்கப்பட்டால், ஓ! அழகான இடைகள் கொண்டவளே {திரௌபதி}, யார்தான் அதை உணரமாட்டார்கள்? ஆனால் எவராலும் மற்றவரின் இதயத்தை முழுமையாகப் படிக்க முடியாது. எனவே, ஓ! இனிமையாளனவளே {திரௌபதி}, நீ எனது இதயத்தை அறியவில்லை” என்றாள் {பிருஹந்நளை}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு திரௌபதி அந்தப் பெண்களுடன் அரச வசிப்பிடத்துக்குள் நுழைந்து சுதேஷ்ணையின் முன் தோன்ற விரும்பினாள். ராணியின் {சுதேஷ்ணையின்} முன்பு அவள் {திரௌபதி} வந்தபோது, அந்த விராடனின் மனைவி {சுதேஷ்ணை}, மன்னனுடைய கட்டளையின் பேரில், “ஓ! சைரந்திரி, நீ எங்குச் செல்ல விரும்புகிறாயோ அங்கே செல். உனக்கு மங்களம் உண்டாகட்டும், கந்தர்வர்கள் கைகளில் ஏற்பட்ட இந்தத் தோல்வியைக் கண்டு மன்னர் {விராடர்} அஞ்சுகிறார். ஓ! அழகிய கண் புருவங்கள் கொண்டவளே {மாலினி}, நீ இளமையுடனும், பூமியில் இணையற்ற அழகுடனும் இருக்கிறாய். மறுபுறம் ஆண்களின் விருப்பத்துக்குகந்த பொருளாகவும் இருக்கிறாய். கந்தர்வர்களும் அதீதக் கோபக்காரர்களாக இருக்கிறார்கள்” என்றாள்.
அதற்குச் சைரந்திரி {திரௌபதி சுதேஷ்ணையிடம்}, “ஓ! அழகான பெண்ணே {சுதேஷ்ணை}, இன்னும் பதிமூன்று {13} நாட்களுக்கு மட்டும் மன்னர் {விராடர்} என்னைப் பொறுத்துக் கொள்ளட்டும். கந்தர்வர்களும் இதற்கு மிகவும் இணக்கமாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. பிறகு, அவர்கள் {கந்தர்வர்கள்} தங்களை வெளிப்படுத்திக் கொண்டு, விராடருக்கு ஏற்புடையதைச் செய்வார்கள். இப்படிச் செய்வதால், தனது நண்பர்களுடன் கூடிய மன்னர் {விராடர்} பெரிய நன்மை அடைவார் என்பதில் சந்தேகமில்லை” என்றாள் {திரௌபதி}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.