The spies who met Duryodhana! | Virata Parva - Section 25 | Mahabharata In Tamil
(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 12)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம்: துரியோதனனால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் பாண்டவர்களைக் கண்டடைய முடியாமல் ஹஸ்தினாபுரம் திரும்புவது; குருக்களின் எதிரியான கீசகன் கந்தர்வர்களால் கொல்லப்பட்டான் என்ற செய்தியை ஒற்றர்கள் துரியோதனனுக்குச் சொல்வது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, கீசகனும் அவனது தம்பிகளும் கொல்லப்பட்டதைப் பயங்கரமான சாதனையாக நினைத்த மக்கள் ஆச்சரியத்தில் நிறைந்தனர். மேலும், நகரம் மற்றும் மாகாணங்களில், மன்னனின் வல்லவன் {பீமன்} மற்றும் கீசகன் ஆகிய இரு வலிமைமிக்க வீரர்களின் வீரத்தைக் குறித்துப் பொதுவாக வதந்திகள் பரவியிருந்தன. “எனினும், தீய கீசகன், மனிதர்களை எப்போதும் ஒடுக்குபவனே! பிற மனிதர்களின் மனைவிகளை அவமதிப்பவனே! அதற்காகவே அந்தத் தீய பாவகர ஆன்மா {கீசகன்} கந்தர்வர்களால் கொல்லப்பட்டான்”. இப்படியே, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பகைவர் கூட்டத்தைக் கொல்பவனான ஒப்பற்ற கீசகனைக் குறித்து மாகாணத்துக்கு மாகாணம் மக்கள் பேசிக் கொள்ளத் தொடங்கினர்.
அதே வேளையில், திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} நியமிக்கப்பட்டிருந்த ஒற்றர்கள், பல்வேறு கிராமங்களையும், நகரங்களையும், நாடுகளையும், தங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்த பல இடங்களையும் குறித்தபடி தேடி முடித்து, தாங்கள் அறிந்த ஒரே ஒரு செய்தியில் மனநிறைவு கொண்டு நாகரூபத்திற்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினார்கள்.
பிறகு திருதராஷ்டிரன் மகனான குரு குலத்தின் மன்னன் துரியோதனன் தனது அவையில் துரோணர், கர்ணன், கிருபர், உயர் ஆன்ம பீஷ்மர், தனது தம்பிகள், பெரும் வீரர்களான திரிகார்த்தர்கள் ஆகியோரோடு அமர்ந்திருந்த போது, அவனிடம் {துரியோதனனிடம் அவனது ஒற்றர்கள்}, “ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனரே}, பெரும் வனத்தில் பாண்டுவின் மகன்களைத் தேடுவதில் நாங்கள் மிகுந்த அக்கறை செலுத்தினோம். மான்கள் மற்றும் பிற விலங்குகள் நிறைந்ததும், மரங்கள் மற்றும் வித்தியாசமான வகைகளிலான கொடிகள் நிறைந்ததுமான ஏகாந்தமான வனாந்தரங்களில் நாங்கள் {அவர்களைத்} தேடினோம்.
படர்ந்த காடுகள், தாவரங்கள், அனைத்து வகைக் கொடியினங்கள் ஆகியவை நிறைந்த சூழல் கொண்ட இடங்களில் தேடினோம். ஆனால், அடக்க முடியாத சக்தி கொண்ட பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்களான பாண்டவர்கள்} சென்ற பாதையைக் கண்டுபிடிப்பதில் தோல்வியுற்றோம். இந்த இடங்களிலும், மேலும் பல இடங்களிலும் அவர்களது பாதச்சுவடுகளைத் தேடினோம். ஓ! மன்னா {துரியோதனா}, அடைவதற்கரிதான காடுகளிலும், பல்வேறு நாடுகளிலும், மக்கள் நிறைந்த மாகாணங்களிலும், நாற்சந்திகளிலும், நகரங்களிலும் நாங்கள் நெருக்கமாகத் தேடினோம். பாண்டுவின் மகன்களைக் {பாண்டவர்களைக்} குறித்த எந்தத் தடயமும் இன்னும் {எங்களுக்குக்} கிடைக்கவில்லை.
உமக்கு மங்களம் உண்டாகட்டும். ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனரே}, எந்தத் தடயத்தையும் விட்டுவைக்காமல் அவர்கள் {அந்த பாண்டவர்கள்} அழிந்துவிட்டதாகவே தெரிகிறது. ஓ! வீரர்களில் முதன்மையானவரே {துரியோதனரே}, நாங்கள் அவர்களது பாதையிலேயே தொடர்ந்து சென்றாலும், ஓ! மனிதர்களில் சிறந்தவரே {துரியோதனரே}, விரைவில் அவர்களது காற்தடங்களைத் தொலைத்தோம். {எங்களுக்கு அவர்களது கால்தடங்கள் தெரியவில்லை}. இப்போது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை {நாங்கள்} அறியவில்லை.
ஓ! மனிதர்களின் தலைவா, சில காலம் நாங்கள் அவர்களின் தேரோட்டிகளைத் தொடர்ந்து சென்றோம். முறையாக விசாரித்ததில் நாங்கள் அறிய விரும்பியதை உண்மையில் உறுதி செய்து கொண்டோம். ஓ! எதிரிகளைக் கொல்பவனே, அந்தத் தேரோட்டிகள் தங்கள் மத்தியில் பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்களான பாண்டவர்கள்} இல்லாமலேயே துவாராவதியை {துவாரகையை} அடைந்தனர். ஓ! மன்னா {துரியோதனரே}, பாண்டுவின் மகன்களோ {பாண்டவர்களோ}, கற்புள்ள கிருஷ்ணையோ {திரௌபதியோ} யாதவர்களின் நகரத்தில் இல்லை.
ஓ! பாரதகுலத்தின் காளையே {துரியோதனரே}, அவர்கள் தற்சமயம் எங்கு வசிக்கிறார்கள் என்பதையோ, அவர்களது பாதையையோ எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. உமக்கு வந்தனம், அவர்கள் அழிந்து விட்டார்கள். பாண்டு மகன்களின் மனநிலையை நாங்கள் அறிந்தவர்கள். அவர்களது சாதனைகளில் சிலவற்றையும் அறிந்திருக்கிறோம். எனவே, ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, பாண்டு மகன்களைத் தேடும் விவகாரத்தில் அடுத்து நாங்கள் செய்ய வேண்டியது என்ன என்று, ஓ! ஏகாதபதி {துரியோதனரே} எங்களுக்கு உத்தரவு அளியும்.
ஓ! வீரரே, உமக்கு நம்பிக்கைத் தரக்கூடிய ஏற்புடைய எங்களது {வேறு} வார்த்தைகளைக் கேளும். மன்னர் மத்ஸ்யரின் {விராடரின்} தளபதியும், திரிகார்த்தர்களை மீண்டும் மீண்டும் வீழ்த்தி, பெரும்பலத்தால் அவர்களைக் கொன்றவனும், தீய ஆன்மாவுமான கீசகன், ஓ! ஏகாதிபதி {துரியோதனரே}, கண்ணுக்குப்புலப்படாத கந்தர்வர்களால் இருள் சூழ்ந்த நேரத்தில், ஓ! மங்காப்புகழ் கொண்டவரே {துரியோதனரே} தனது தம்பிகள் அனைவருடனும் சேர்த்து கொல்லப்பட்டான். நமது எதிரிகளின் {இந்த} நிலைமை பற்றிய மகிழ்ச்சிகரமான செய்தியைக் கேள்விப்பட்டு, ஓ! கௌரவ்யரே {துரியோதனரே}, நாங்கள் மிகுந்த மனநிறைவு கொண்டோம். அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது சொல்வீராக”, என்றனர் {ஒற்றர்கள்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.