The counsel of Bhishma! | Virata Parva - Section 28 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 3)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம்: பாண்டவர்களைக் கண்டுபிடிக்க வேண்டாம் என்று பீஷ்மர் சொல்வது; யுதிஷ்டிரன் இருக்கும் இடங்களில் எத்தகு பண்புகள் நிறைந்திருக்கும் என்பதைப் பீஷ்மர் சொல்வது; …
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, துரோணர் தனது பேச்சை முடித்ததும், வேதங்களை அறிந்தவரும், காலம் மற்றும் இடத்தின் தன்மைகளை அறிந்தவரும், அறநெறிகளின் அனைத்து கடமைகளைக் குறித்த அறிவைக் கொண்டவரும், பாரதர்களின் பெரும்பாட்டனும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர், அந்த ஆசானின் {துரோணரின்} வார்த்தைகளைப் பாராட்டிவிட்டு, நேர்மையற்றவர்களால் அதிகம் பேசப்படாதவனும், நேர்மையானவர்களால் விரும்பி சந்திக்கப்பட்டுப் புகழப்படுபவனுமான அறம்சார்ந்த யுதிஷ்டிரன் மீது தாம் கொண்ட பிணைப்பை வெளிப்படுத்தும் வண்ணமும், பாரதர்களின் நன்மைக்கு வழிவகுக்கும் வண்ணமும், அறம்சார்ந்த வார்த்தைகளைப் பேசினார். பீஷ்மர் பேசிய வார்த்தைகள் பாகுபாடற்றவையாகவும், ஞானிகளால் வழிபடப்படுபவையாகவும் இருந்தன.
குருக்களின் பெரும்பாட்டன் {பீஷ்மர்}, “மறுபிறப்பாளரும் {பிராமணரும்}, ஒவ்வொரு காரியத்தின் உண்மையை அறிந்தவருமான துரோணர் சொன்ன வார்த்தைகளை நான் ஏற்கிறேன். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அனைத்து நற்குறிகள், அறம்சார்ந்த நோன்புகள், வேத கல்வி ஆகியவற்றைப் பெற்று, அறச் சடங்குகளுக்குத் தன்னை அர்ப்பணித்து, பல்வேறு அறிவியல்களை அறிந்து, முதிர்ந்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, சத்திய நோன்பைப் பின்பற்றி, காலத்தின் தன்மை அறிந்து, {அஜ்ஞாத வாசம் குறித்து} தாங்கள் கொடுத்த வாக்குறுதியின் படி நடந்து, நடத்தையில் சத்தத்துடன், க்ஷத்திரிய வகைக்கான கடமைகளை எப்போதும் செய்து, கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} எப்போதும் கீழ்ப்படிந்து, உயர் ஆன்மாவும், பெரும் பலமும் கொண்டு, எப்போதும் ஞானிகளின் சுமைகளைத் தாங்கி வரும் அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} கெடுபேறால் கவிழ்ந்து போக மாட்டார்கள்.
அறத்திற்குக் கீழ்ப்படிந்து மறைந்திருக்கும் வாழ்வை வாழ்ந்து வருபவர்களும், தங்கள் சக்தியின் துணை கொண்டவர்களுமான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, நிச்சயம் அழிவை அடைய மாட்டார்கள். இதைத்தான் எனது மனது உத்தேசமாகக் கணிக்கிறது. எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, பாண்டுவின் மகன்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய நேர்மையான ஆலோசனைக்கு நான் உதவுவேன். ஒற்றர்களைக் கொண்டு அவர்களைக் கண்டுபிடிக்கச் செய்வது விவேகமுள்ளவனின் கொள்கையாக இருக்காது [1]. எனது அறிவின் துணை கொண்டு சிந்தித்துப் பார்த்து பாண்டுவின் மகன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்வேன். நான் உங்கள் மீது கொண்ட அதிருப்தியால் எதையும் சொல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
[1] “இது மிகக் கடினமான சுலோகமாகும். நான் சரியாகப் புரிந்திருக்கிறேன் என்ற உறுதி எனக்கில்லை. நீலகண்டர் மற்றும் அர்ஜுன மிஸ்ரா ஆகியோர் இது குறித்து அமைதியாக இருக்கின்றனர் {இது குறித்துச் சொல்லவில்லை}. எனினும், எனது புத்திக்கூர்மையை மட்டும் நம்பாமல், மஹாபாரதத்தை முழுமையாகப் படித்த பல நண்பர்களிடம் இது குறித்துக் கேட்டேன். அதன் இலக்கணக் கட்டமைப்பு எளிமையாகவே இருக்கிறது. அந்தச் சுலோகத்தின் இரண்டாம் பாதிதான் கடினமானது. எனினும், நான் சொல்லியிருக்கும் பொருள், பீஷ்மரின் அறிவுரைத் தொனிக்கு இசைவானதாகவே இருக்கிறது” என்கிறார் கங்குலி.
என்னைப் போன்ற மனிதர்கள் நேர்மையற்றவர்களுக்கு இத்தகு ஆலோசனைகளை வழங்கக்கூடாது. (நான் சொல்வது போன்ற) ஆலோசனைகள் நேர்மையானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். எனினும், தீமையான ஆலோசனைகளை எத்தகு சூழ்நிலையிலும் வழங்கக்கூடாது {என்பதைக் கருத்தில் கொள்கிறேன்}. ஓ! குழந்தாய் {துரியோதனா}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, முதிர்ந்தவர்களுக்குக் கீழ்ப்படிந்து, விவேகமுள்ளவனாக இருக்கும் ஒருவன், அறத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தால், ஒரு சபையின் மத்தியில் பேசும்போது, எத்தகைய சந்தர்ப்பத்திலும் அவன் உண்மையையே பேச வேண்டும். எனவே, வனவாசத்தின் பதிமூன்றாம் {13} வருடத்தில் இருக்கும் நீதிமானான யுதிஷ்டிரனின் வசிப்பிடம் குறித்துப் பேசும்போது, நான் இங்கிருக்கும் மக்கள் அனைவரையும்விட வித்தியாசமாக எண்ணுகிறேன் என்றே நான் சொல்ல வேண்டும்.
ஓ! குழந்தாய் {துரியோதனா}, மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் மாகாணத்தையோ, நகரத்தையோ ஆளும் ஆட்சியாளனை எந்தத் தீப்பேறும் அணுகாது. மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் நாடு, தொண்டுள்ளமும், தாராளமும், மனத்தாழ்மையும் {பணிவும்}, அடக்கமும் கொண்ட மக்கள் நிறைந்ததாக இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் நாட்டில் இருக்கும் மக்கள், ஏற்புடைய {இனிமையான} பேச்சும், ஆசை அடக்கமும், உண்மை நோற்றலும், உற்சாகமும், உடல் நலமும் {ஆரோக்கியமும்}, சுத்தமான நடத்தையும், வேலையில் நிபுணத்துவமும் கொண்டிருப்பார்கள். யுதிஷ்டிரன் இருக்கும் இடத்தில் உள்ள மக்கள் பொறாமைகொண்டவர்களாகவோ, தீங்கிழைப்பவர்களாகவோ, வீணர்களாகவோ, கர்விகளாகவோ இருக்க முடியாது. ஆனால் அவர்கள் {அந்த மக்கள்} அனைவரும் தங்கள் கடமைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். உண்மையில், யுதிஷ்டிரன் வசிக்கும் இடத்தில் அனைத்துப்புறங்களிலும் வேத மந்திரங்கள் ஓதப்படும், வேள்விகள் செய்யப்படும், {அவ்வேள்வியில்} கடைசி நீர்க்காணிக்கைகள் {நெய் போன்றவை} எப்போதும் முழுமையாக உற்றப்படும் [2]. {அவ்வேள்வியில்} அந்தணர்களுக்குக் கொடுக்கப்படும் பரிசுகள் அபரிமிதமாக இருக்கும்.
[2] “வேள்வி தடையில்லாமல் நிறைவேறியது என்பதைக் குறிப்பது” என்கிறார் கங்குலி.
அங்கே மேகங்கள் அபரிமிதமான மழையைப் பொழியும் என்பதில் சந்தேகமில்லை. நல்ல அறுவடையின் காரணமாக அந்த நாடு எப்போது அச்சமற்றதாக இருக்கும். அங்கே நெல்லில் தானியம் இல்லாதிருக்காது; பழங்கள் சாறற்றவையா {ரசமற்றவையாக} இருக்காது; மலர் மாலைகள் நறுமணமற்றவையாக இருக்காது; மனிதர்களின் விவாதங்கள் ஏற்புடைய {இனிமையான} சொற்கள் நிறைந்தவையாகவே எப்போதும் இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் தென்றல் சுகமாக வீசும், மனிதர்களின் கூடுகைகள் நட்புடன் இருக்கும். அச்சத்திற்கான எந்தக் காரணமும் இருக்காது. மெலிந்தோ, பலமற்றதாகவோ எந்தப் பசுவும் இருக்காது. அங்கே பசுக்கள் நிறைந்திருக்கும். பால், தயிர், நெய் ஆகிய அனைத்தும் சுவைமிக்கதாகவும் சத்தானதாகவும் இருக்கும்.
மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், அனைத்துவகைப் பயிர்களும் ஊட்டச்சத்து மிக்கதாகவும், சமையலுக்குகந்த நல்ல சுவையுடனும் இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், {நாக்கு உணரும்} சுவை, {உடல் உணரும்} தொடுதல், {நாசி [மூக்கு] உணரும்} மணம் {வாசனை}, {காது உணரும்} கேள்வித்திறன் ஆகியவை அற்புத தன்மைகளைக் கொண்டிருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், பார்வையும் காட்சிகளும் மகிழ்ச்சி தருவனவையாக இருக்கும். அந்த இடத்தின் மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அறம்சார்ந்தவர்களாகவும், தங்களுக்கு உரிய கடமைகளைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள். உண்மையில், அவர்களது வனவாசத்தின் பதிமூன்றாவது {13} வருடத்தில் இருக்கும் பாண்டுவின் மகன்கள் வசிக்கும் நாட்டில் உள்ள மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், சுத்தமான நடத்தையோடும், எந்த வகைத் துன்பமும் இல்லாதவர்களாக இருப்பார்கள். {அந்த மக்கள்} தேவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், தங்கள் முழு ஆன்மாவோடு அவர்களை {தேவர்களையும் விருந்தினர்களையும்} வழிபடுபவர்களாகவும், தாங்கள் விரும்பியவற்றைத் தானம் செய்பவர்களாகவும், பெரும் சக்தி நிறைந்தவர்களாகவும், நித்தியமான அறத்தைப் பின்பற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.
மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் இருக்கும் மக்கள் தீமையானவை அனைத்தையும் தவிர்த்து, நல்லதை மட்டுமே சாதிக்க விரும்புபவர்களாக இருப்பார்கள். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் இருப்பவர்கள் எப்போதும் வேள்விகளைச் செய்பவர்களாகவும், சுத்தமான நோன்புகளையும் நோற்பவர்களாகவும், பேச்சில் பொய்மையை வெறுப்பவர்களாகவும் இருந்து, நன்மையான, மங்களகரமான பயனுள்ளவற்றை அடைய எப்போதும் விரும்புபவர்களாக இருப்பார்கள். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் உள்ள மக்கள் நன்மையைப் பெற நிச்சயம் விரும்புவார்கள். அவர்களது இதயங்கள் எப்போதும் அறத்தை நோக்கி உயர்ந்தே இருக்கும். ஏற்புடைய {இனிய} நோன்புகளைச் செய்து எப்போதும் அறத்தகுதிகளை அடைவதிலேயே, எப்போதும் அவர்கள் {அம்மக்கள்} ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஓ! குழந்தாய் {துரியோதனா}, சாதாரண மனிதர்களை விட்டுவிடு, புத்திக்கூர்மை, தொண்டுள்ளம், உயர்ந்த மன அமைதி, ஐயமற்ற பொறுமை {மன்னிக்கும் குணம்}, அடக்கம், செழிப்பு, புகழ், பெரும் சக்தி, அனைத்து உயிர்களிடமும் அன்பு ஆகியவற்றைக் கொண்ட பிருதையின் மகனை {யுதிஷ்டிரனை}, (அவன் இப்போது தன்னை மறைத்துக் கொண்டிருப்பதால்) அந்தணர்களால் கூடக் கண்டுபிடிக்க இயலாது. நான் விவரித்த பண்புகள் கொண்ட {மக்கள் வசிக்கும்} பகுதியில்தான் ஞானியான யுதிஷ்டிரன் மாறுவேடத்தில் வசிக்க வேண்டும். அவனின் {யுதிஷ்டிரனின்} சிறந்த வாழ்வு முறையைக் குறித்து மேலும் எதையும் சொல்ல நான் துணிய மாட்டேன். இவை யாவையும் நினைத்துப் பார்த்து, ஓ! குருகுலத்தின் இளவரசே {துரியோதனா}, உண்மையில் என் மீது நீ ஏதாவது நம்பிக்கை கொண்டிருந்தாயானால், எது நன்மையைத் தரும் என்று நீ நினைக்கிறாயோ அதைக் காலந்தாழ்த்தாமல் செய்” என்றார் {பீஷ்மர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.