The cowherd spoke to Uttara! | Virata Parva - Section 35 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 10)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : பசுக்களை மீட்க திரிகார்த்தர்களைத் தொடர்ந்து ஒருபுறம் விராடன் சென்ற போது, மறுபுறத்தில் துரியோதனனும் அவனது பரிவாரங்களும் நாட்டின் வேறு பகுதி மீது படையெடுத்துப் பசுக்களைக் கவர்வது; இச்செய்தியை மந்தையர்த்தலைவன் உத்தரனிடம் சென்று சொல்வது; உத்தரன் தற்புகழ்ச்சியாகப் பேச ஆரம்பிப்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பசுக்களை மீட்க ஆவல் கொண்ட மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, திரிகார்த்தர்களைத் தொடர்ந்து சென்ற போது, தனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய துரியோதனன், விராடனின் ஆளுகைக்குட்பட்ட {வேறொரு} பகுதி மீது படையெடுத்தான். பீஷ்மர், துரோணர், கர்ணன், சிறந்த ஆயுதங்களை அறிந்த கிருபர், அசுவத்தாமன், சுபலனின் மகன் {சகுனி}, துச்சாசனன், விவிம்சதி, விகர்ணன், பெரும் சக்தி கொண்ட சித்திரசேனன், துர்முகன், துஸ்ஸகன் ஆகியோரும், ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, இன்னும் பிற பெரும் வீரர்களும் மத்ஸ்ய ஆட்சிப் பகுதியை அடைந்து, மன்னன் விராடனின் மந்தையாளர்களை {இடையர்களை – கோ-பாலர்களை} விரைவாக விரட்டிவிட்டு, பசுக்களைப் பலவந்தமாகக் கவர்ந்தனர்.
தேர்க்கூட்டங்களால் அனைத்துப்புறங்களிலும் சூழப்பட்ட கௌரவர்கள், அறுபதினாயிரம் {60,000} பசுக்களைப் பிடித்தனர். அந்தப் பயங்கர மோதலில் அடிபட்ட மந்தையாளர்கள் {கோ-பாலர்கள்}, துயரத்தால் உரக்கக் கதறினார்கள். {அப்போது} மந்தையாளர்களின் தலைவன் {மந்தையர்த்தலைவன்} ஒருவன், பெருவேகத்துடன் தேரில் ஏறி, துக்கத்தில் அழுது கொண்டே நகரத்திற்குப் புறப்பட்டான். மன்னனின் {விராடனின்} நகரத்திற்குள் நுழைந்த அவன், அந்த இடத்திற்கு முன்னேறி, தேரில் இருந்து விரைந்து இறங்கி, (என்ன நடந்தது) என்பதை உரைக்கலானான். பூமிஞ்சயன் {உத்தரன்} என்ற பெயர் கொண்ட மத்ஸ்யனின் பெருமிக்க மகனைக் கண்டு, அரச பசுக்கள் பிடிப்பட்டது குறித்த அனைத்தையும் அவனிடம் {உத்தரனிடம்} தெரிவித்தான்.
மேலும் அவன் அறுபதினாயிரம் {60,000} பசுக்களைக் கௌரவர்கள் பிடித்ததாகவும் சொன்னான். {பிறகு, அவன்-மந்தையர்த்தலைவன்}, “எனவே, ஓ! நாட்டின் புகழை மேம்படுத்துபவனே {உத்தரா}, உனது கால்நடைகளைத் திரும்பக் கொண்டுவருவதற்காக எழு! ஓ! இளவரசே {உத்தரா}, (நாட்டின்) நன்மையை அடைய நீ விரும்பினால், நேரத்தைக் கடத்தாமல் உடனே புறப்படு. உண்மையில், மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} உன்னை வெறுமையான நகரத்தில் விட்டுச் சென்றிருக்கிறார். (உனது தந்தையான) மன்னர் {விராடர்}, “எனது மகன் எனக்கு நிகரான வீரனாவான். எனது குலத்தைத் (குலத்தின் பெருமையைத்) தாங்குபவன் அவனே. கணைகளிலும் ஆயுதங்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த போர்வீரனான எனது மகன் {உத்தரன்} பெரும் துணிவு கொண்டவனாவான்” என்று சபையில் உன்னைக் குறித்துப் {எப்போதும்} பெருமையாகப் பேசுவார்.
ஓ!, அந்த மனிதர்களின் தலைவனுடைய {விராடனுடைய} சொல் உண்மையாகட்டும்! ஓ! மந்தை உரிமையாளர்களின் தலைவா {உத்தரா}, உனது கணைகளின் பயங்கர சக்தியால் குருக்களின் {கௌரவர்களின்} துருப்புகளை எரித்து, அவர்களை வீழ்த்தி, பசுக்களை மீட்டு வா. {யானைகளில்} தலைமை யானை, {வேறு யானை} மந்தையை விரட்டுவது போல, உனது வில்லில் இருந்து புறப்படும், தங்க இறகுகள் கொண்ட நேரான கணைகளைக் கொண்டு எதிரி தலைவர்களைத் துளைத்திடு. உனது வில் வீணையைப் போல இருக்கிறது. அதன் இரண்டு முனைகளும் தந்தத்தாலான தலையணையை ஒத்திருக்கிறது. அதன் முக்கியக் கம்பியான அதன் நாண், அதன் தண்டு, விரல்களைத் தாங்கும் இடம், அதில் இருந்து அடிக்கப்படும் அம்புகள் ஆகியன இசைக்குறிப்புகளைப் போல இருக்கின்றன. எதிரிகளுக்கு மத்தியில் இந்த வீணையின் {வில்லின்} இசையொலியால் {கணைமழையால்} {அவர்களை} அடித்திடு! [1]
[1] “இந்த ஒப்பீட்டைப் புரிந்து கொள்ள இந்திய வீணையின் பொறிமுறை {இயக்கவியல்} குறித்த அறிவு ஒரு வாசகருக்குத் தேவைப்படும். சுருக்கமாகச் சொல்வதென்றால், இரு முனைகளிலும் உள்ள பூசணிகள் போன்ற அமைப்புகளை ஒரு மூங்கில் இணைத்துக் கொண்டிருக்கும். அதுவே வீணை. விரல் வைக்கும் பலகையாகச் செயல்படும் அந்த மூங்கிலே அதன் முக்கிய நாணாக இருக்கும், மேலும் அதில் பல மெல்லிய கம்பிகள் இருக்கும். இவை அனைத்தும் பல {பின்னல் போன்ற} முனைகளையும், இரண்டரை ஏழ்நரம்புகளையும் கடந்து செல்லும். இந்த மொத்த அமைப்பே அந்தக் கருவியை அமைக்கிறது. {அந்த வீணையில்} சம்ஸ்க்ருதத்தில் உபதானங்கள் என்றும், உருதுமொழியில் ஸ்வரிஸ் என்றும் அழைக்கப்படும் தந்தத்தாலான அந்த இரு முனைகளில்தான் கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கும்.” என்கிறார் கங்குலி
ஓ! தலைவா {உத்தரா}, வெள்ளி நிறம் கொண்ட உனது குதிரைகள் தேரில் பூட்டப்படட்டும். தங்க சிங்க இலச்சனை கொண்ட உனது கொடி ஏற்றப்படட்டும். தங்க இறகுகளும், கூரிய முனைகளும் கொண்ட கணைகள், உனது வலிய கரங்களால் அடிக்கப்பட்டு, சூரியனைத் தடுக்கும் கிரகணம் போல, அந்த மன்னர்களின் வழிகளைத் தடுக்கட்டும். அசுரர்களை வீழ்த்தும் வஜ்ரம் தாங்குபவனைப் {இந்திரனைப்} போல, அனைத்துக் குருக்களையும் {கௌரவர்களையும்} போர்க்களத்தில் வீழ்த்தி, பெரும் புகழை அடைந்து நகரம் திரும்புவாயாக. மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} மகனாக நீ இருப்பதால், அறம்சார்ந்த வீரர்களில் முதன்மையான பாண்டு மகன்களில் அர்ஜுனன் போல நீயே இந்த நாட்டின் ஒரே புகலிடம். அவனது சகோதரர்களுக்கு அர்ஜுனன் எப்படியோ, அதே போல, இந்த நாட்டிற்குள் வசிப்போருக்கும் நீயே புகலிடம் என்பதில் ஐயமில்லை. உண்மையில், இந்த ஆட்சியின் குடிமக்களாகிய நாங்கள் உன்னில் எங்கள் பாதுகாவலனைக் கொண்டிருக்கிறோம்” என்றான் {மந்தையர்த்தலைவன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு, பெண்களுக்கு மத்தியில் மூச்சுக்கு மூச்சு வீரச் சொற்களைப் பேசிய அந்த மந்தையாளனால் {கோபாலனால்} இப்படிச் சொல்லப்பட்ட இளவரசன் {உத்தரன்}, தற்புகழ்ச்சியின் வெளிப்பாடாக {பின்வரும்} இச்சொற்களைச் சொன்னான்”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.