Thy daughter may be my daughter-in-law! | Virata Parva - Section 71 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 46)
பதிவின் சுருக்கம் : விராடன் அர்ஜுனனிடம் மற்ற பாண்டவர்களை அடையாளங்காட்டச் சொல்வது; அர்ஜுனன் ஒவ்வொருவராக அடையாளங்காட்டுவது; உத்தரன் மீண்டும் பாண்டவர்களை வர்ணித்து அடையாளங்காட்டுவது; விராடன் தனது மகளை அர்ஜுனனுக்குக் கொடுக்க முன் வருவது; அர்ஜுனன் உத்தரையைத் தனது மருமகளாக ஏற்பதாகச் சொல்வது...
விராடன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “உண்மையில், இவரே குந்தியின் மகனான குரு மன்னன் யுதிஷ்டிரர் என்றால், இவர்களில் யார் இவரது தம்பி அர்ஜுனன். இதில் யார் பலமிக்கப் பீமன். இவர்களில் யார் நகுலன், யார் சகாதேவன், கொண்டாடப்படும் அந்தத் திரௌபதி எங்கே? பகடையாட்டத்தில் வீழ்ந்த பிறகு, பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} குறித்து யாராலும் எதுவும் கேள்விப்படவில்லை” என்றான் {விராடன்}.
அதற்கு அர்ஜுனன் {விராடரிடம்}, “ஓ! மன்னா {விராடரே}, வல்லவன் என்று அழைக்கப்படும் உமது சமையற்கலைஞரான இவரே வலிமைமிக்கக் கரங்களும், பயங்கர வலிமையும், சீற்றமிகு உத்வேகமும் கொண்ட பீமராவார். கந்தமாதன மலைகளில் ராட்சசர்களைக் கொன்று, பெரும் நறுமணமிக்க தெய்வீக மலர்களை {செங்கழுநீர் மலர்களைக்} கிருஷ்ணைக்கு {திரௌபதிக்குக்} கொணர்ந்தவர் இவரே. தீய ஆன்மா கொண்ட கீசகனைக் கொன்றவர் இவரே {பீமரே}. உமது அரண்மனை அந்தப்புரத்தில், புலிகளையும், கரடிகளையும், காட்டுப்பன்றிகளையும் கொன்றவர் இவரே {பீமரே}.
உமது குதிரைகளைப் பாதுகாப்பவனே நகுலன் என்று அழைக்கப்படும் எதிரிகளைக் கொல்பவனாவான். உமது பசுக்களைப் பாதுகாக்கும் இவனே சகாதேவன். பெரும் புகழையும், மேனி அழகும் கொண்ட இந்த இரு மாத்ரி மகன்களும் பெரும் தேர்வீரர்களாவர்.
உமது மனைவியின் {சுதேஷ்ணையின்}, {பணிப்பெண்ணான} சைரந்திரியும், தாமரையிதழ் போன்ற கண்களும், கொடியிடையும், இனிய புன்னகையும் கொண்ட இந்த மங்கையே துருபதன் மகள் {திரௌபதி} ஆவாள். இவள் பொருட்டே, ஓ! மன்னா {விராடரே} கீசகர்கள் கொல்லப்பட்டனர். ஓ! மன்னா {விராடரே}, பிருதையின் {குந்தியின்} மகனும், பீமருக்கு இளையவனும், இரட்டையர்களுக்கு மூத்தவனுமான நானே அர்ஜுனன். இதை நீர் கேள்விப்பட்டிருப்பீர் என்பது தெளிவு. ஓ! மன்னா {விராடரே}, கண்டறியப்படக்கூடாத {அஞ்ஞாதவாச} காலத்தை, கருவறைக்குள் இருக்கும் குழந்தைகளைப் போல, உமது வசிப்பிடத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகக் கழித்தோம்!” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வீரர்களான அந்த ஐந்து பாண்டவர்களையும் அர்ஜுனன் சுட்டிக்காட்டிய பிறகு, அர்ஜுனனுடைய பராக்கிரமம் குறித்து விராடனின் மகன் {உத்தரன்} பேசினான். உத்தரன் மீண்டும் பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} அடையாளம் காட்டினான். பிறகு அந்த இளவரசன் {உத்தரன்}, “சுத்தமான தங்கம் போன்ற பிரகாசமான நிறமும், முழுதாய் வளர்ந்த சிங்கம் போலப் பருத்திருப்பவரும், நேர்த்தியான மூக்கு உடையவரும், விரிந்த பெரிய கண்களைக் கொண்டவருமான தாமிர நிறத்திலான அகன்ற முகத்தைக் கொண்டவரே குருக்களின் மன்னன் {யுதிஷ்டிரர்} ஆவார்.
மதங்கொண்ட யானையின் நடையும், புடம்போட்ட தங்கம்போன்ற நிறமும், அகன்று விரிந்த தோள்களும், நீண்ட பருத்த கரங்களும் கொண்ட இந்த விருகோதரைப் {பீமரைப்} பாரும். அவரது அருகில் கரிய நிறத்தில், யானை மந்தையின் தலைமை யானையைப் போல, சிங்க போன்ற அகன்ற தோள்களும், பலமிக்க யானையின் நடையும், தாமரை இதழ்களைப் போன்ற விரிந்த பெரிய கண்களும் கொண்டு நிற்பவரே வில்லாளிகளில் முதன்மையான அர்ஜுனர் ஆவார். மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} அருகே விஷ்ணுவையும், இந்திரனையும் போல இருப்பவர்களும், மனிதர்களின் உலகத்தில், அழகிலும், பலத்திலும், நடத்தையிலும் தனக்கு நிகர் இல்லாதவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான இரட்டையர்களை இதோ அனைவரும் பாருங்கள். அவர்களுக்கு அருகே, தங்கம் போன்ற அழகுடனும், ஒளியே உருவம் கொண்டு வந்தது போலவும், நீலத்தாமரையின் {நீலோத்பலமலரின்} நிறத்துடனும், தெய்வீக மங்கையைப் போலவும், லட்சுமியின் வாழும் உருவத்தைப் பிரதிபலிப்பது போலவும் நிற்கும் அவரே கிருஷ்ணையாவார்” என்றான் {உத்தரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு விராடனின் மகன் {உத்தரன்}, அர்ஜுனனின் பராக்கிரமத்தை விவரிக்க எண்ணி, “மான்கூட்டத்தை நாசம் செய்யும் சிங்க போல எதிரிகளைக் கொன்றவர் இவரே. எதிரிகளின் தேர்க்கூட்டத்திற்கு மத்தியில் உலவி, அவர்களது சிறந்த தேர்வீரர்களைக் கொன்றவர் இவரே. மதங்கொண்ட ஒரு பெரிய யானை இவரது ஒரே கணையால் கொல்லப்பட்டது. தங்கக் கவசம் பூண்டிருந்த அந்தப் பெரிய விலங்கு, இவரால் துளைக்கப்பட்டு, தனது தந்தங்களால் பூமியைத் துளைத்தவண்ணம் கீழே விழுந்தது. பசுக்களை மீட்டதும், போரில் கௌரவர்களை வீழ்த்தியதும் இவரே. இவரது சங்கொலியால் எனது காதுகள் செவிடாகின. துரியோதனனுடன் கூடிய பீஷ்மர், துரோணர் ஆகியோர் இந்தக் கடுஞ்செயல் புரியும் வீரராலேயே வீழ்த்தப்பட்டனர். அந்தச் சாதனை அவருடையதே! எனதல்ல” என்றான் {உத்தரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட மத்ஸ்யர்களின் வலிமைமிக்க மன்னன் {விராடன்}, யுதிஷ்டிரனுக்குக் காயமேற்படுத்தியதைக் குற்றமாகக் கருதி உத்தரனிடம், “பாண்டு மகன்களை {பாண்டவர்களை} அமைதிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது என நான் நினைக்கிறேன். நீ விரும்பினால், எனது மகள் உத்தரையை அர்ஜுனனுக்கு அளிப்பேன்” என்றான் {விராடன்}.
உத்தரன் {விராடனிடம்}, “நம்மால் வழிபடத்தகுந்தவர்களும், நமது போற்றுதலுக்கும், வழிபாட்டுக்கும், மதிப்புக்கும் உரிய பாண்டுவின் ஒப்பற்ற மகன்களை {பாண்டவர்களை} வழிபடும் நேரம் வந்துவிட்டது” என்றான்.
விராடன் {உத்தரனிடம்}, “போரில் நான் எதிரிகளிடம் அகப்பட்ட போது, பீமசேனனே என்னைக் காத்தான். எனது பசுக்களும் அர்ஜுனனால் மீட்கப்பட்டுள்ளன. உங்கள் கரங்களின் பலத்தினாலேயே நாங்கள் போரில் வெற்றியை அடைந்திருக்கிறோம். இப்படியே அனைத்தும் நடந்திருப்பதால், நமது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய நாங்கள் அனைவரும் குந்தியின் மகனான யுதிஷ்டிரரை அமைதிப்படுத்துவோம். ஓ! பாண்டு மகன்களில் காளையே {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளுடன் கூடிய நீர் அருளப்பட்டிரும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சொல்லாலோ, செயலாலோ, இதற்கு முன்னர், அறியாமையின் காரணமாக நான் எப்போதாவது தீங்கிழைத்திருந்தால், எங்களை மன்னிப்பதே உமக்குத் தகும். பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்} அறம்சார்ந்தவரல்லவா?” என்று கேட்டான் {விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்த உயர் ஆன்ம விராடன், பெரிதும் மகிழ்ந்து மன்னன் யுதிஷ்டிரனை அணுகி அவனிடம் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு, செங்கோல், கருவூலம் மற்றும் தலைநகரம் ஆகியவை அனைத்தையும் கொண்ட தனது முழு {மத்ஸ்ய} நாட்டையும் அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அளித்தான். பிறகு அனைத்துப் பாண்டவர்களிடமும், குறிப்பாகத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, அந்த வலிமைமிக்க மத்ஸ்ய மன்னன் {விராடன்} மீண்டும் மீண்டும், “நற்பேறாலேயே நான் உன்னைக் காண்கிறேன்” என்று சொன்னான். பிறகு மீண்டும் மீண்டும், யுதிஷ்டிரனையும், பீமனையும் மாத்ரியின் மகன்களையும் தழுவி, அவர்களது உச்சந்தலையை முகர்ந்து பார்த்த பெரும்படைக்குச் சொந்தக்காரனான விராடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் திருப்தியடையவில்லை.
பிறகு மிகவும் மகிழ்ந்த அவன் {விராடன்}, மன்னன் யுதிஷ்டிரனிடம், “நற்பேறாலேயே, காட்டிலிருந்து பாதுகாப்பாக நீர் வந்ததைக் கண்டேன். நற்பேறாலேயே அடைவதற்குக் கடினமான வனவாச காலத்தையும், அந்தத் தீயவர்களால் கண்டறியப்படாமல் நிறைவு செய்திருக்கிறீர்கள். என்னிடம் உள்ள அனைத்தையும், எனது மொத்த நாட்டையும் நான் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்குக் {பாண்டவர்களுக்குக்} கொடுக்கிறேன். சிறு தயக்கமும் இன்றிப் பாண்டுவின் மகன்கள் இவற்றை ஏற்கட்டும். சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, உத்தரையின் கரங்களை ஏற்கட்டும். மனிதர்களில் சிறந்த அவனே {அர்ஜுனனே} அவளுக்கு {உத்திரைக்குத்} தலைவனாக இருக்கத் தகுந்தவன்” என்றான் {விராடன்}. இப்படிச் சொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது பார்வையைச் செலுத்தினான். தனது அண்ணனால் இப்படிப் பார்க்கப்பட்ட அர்ஜுனன், மத்ஸ்ய மன்னனிடம் {விராடனிடம்}, “ஓ! ஏகாதிபதி {விராடரே}, உமது மகளை {உத்திரையை} நான் எனது மருமகளாக ஏற்பேன். மத்ஸ்யருக்கும், பாரதருக்கும் இடையிலான கூட்டணி இந்த வகையில் அமைவதே உண்மையில் விரும்பத்தக்கதாகும்” என்றான் {அர்ஜுனன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.