The Nupital festival of Abhimanyu and Uttara! | Virata Parva - Section 72 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 47)
பதிவின் சுருக்கம் : உத்தரையை மருமகளாக ஏற்றது ஏன் என்று அர்ஜுனன் விராடனுக்குச் சொன்னது; அர்ஜுனனின் திட்டத்தை விராடன் ஏற்பது; அபிமன்யு உத்தரை திருமணத்திற்காக அர்ஜுனனும் விராடனும் நண்பர்களையும் உறவினர்க்ள அனைவரையும் அழைத்தது; கிருஷ்ணனுடன் கூடிய யாதவர்கள் அனைவரும் பெருஞ்செல்வத்துடன் அங்கே வந்தது; காசி மன்னனும், சைப்பியனும் படைகளுடன் வந்தது; துருபதன் தனது உறவினர்களுடன் வந்தது; அபிமன்யு உத்தரை திருமணம் நிறைவு பெற்றது; அந்தணர்களுக்கு யுதிஷ்டிரன் வழங்கிய கொடை...
விராடன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “ஓ! பாண்டவர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நான் உனக்குத் தந்த எனது மகள் உத்தரையை நீ ஏன் மனைவியாக ஏற்க விரும்பவில்லை?” என்று கேட்டான்.
அதற்கு அர்ஜுனன் {விராடனிடம்}, “நான் உமது அந்தப்புரத்தில் வசித்தபோது, உமது மகளை {உத்தரையைப்} பார்ப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு எப்போதும் வாய்த்தது. தனிமையிலோ, துணையுடனோ இருக்கும்போதெல்லாம் அவளும் {உத்தரையும்} என்னை ஒரு தந்தையை நம்புவது போல நம்பினாள். பாடலையும் ஆடலையும் நன்கு அறிந்ததால், நான் அவளால் விரும்பப்பட்டு, மதிக்கப்பட்டேன். உண்மையில் உமது மகள் என்னை அவளது பாதுகாவலனாகவே [1] எப்போதும் கருதுகிறாள். ஓ! மன்னா, அவள் பூப்படையும் வயதை அடைந்தும் கூட நான் அவளுடன் ஓர் ஆண்டு முழுவதும் வாழ்ந்தேன். இந்தச் சூழ்நிலையில், நீரோ, பிற மனிதர்களோ அவள் மீதோ என் மீதோ காரணமில்லாமலேயே சந்தேகங்கொள்ள இஃது ஏதுவாக இருக்கும்.
[1] ஆங்கிலத்தில் Protector என்று இருக்கிறது. அது Preceptor என்று இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். Preceptor என்றால் ஆசான் என்று பொருள் வரும். வேறு பதிப்புகளில் உத்தரை தன்னை ஆசானாகக் கருதுகிறாள் என்று அர்ஜுனன் சொல்வதாக வருகிறது.
எனவே, ஓ! மன்னா {விராடரே}, என் உணர்வுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தித் தூய்மையாக இருக்கும் நான், ஓ! ஏகாதிபதி {விராடரே}, உமது மகளை {உத்தரையை} எனக்கு மருமகளாய்க் கொடுக்குமாறு உம்மிடம் இரந்து கேட்கிறேன். இப்படியே நான் அவளது தூய்மையை அங்கீகரிக்கிறேன். ஒரு மகனுக்கும் அந்த மகனின் சுயத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லாதது போலவே, ஒரு மருமகளுக்கும் மகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே, இவ்வழியைப் மேற்கொள்வதால் அவளது தூய்மை நிரூபிக்கப்படும். நான் அவதூறுக்கும், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் அஞ்சுகிறேன். எனவே, ஓ! மன்னா {விராடரே}, நான் உமது மகள் உத்தரையை எனது மருமகளாக ஏற்கிறேன். ஆயுத அறிவுடையவர்கள் அனைவரையும் விஞ்சியவனும், அழகில் தெய்வீக இளமையைக் கொண்டவனுமான அந்த வலிய கரங்கள் கொண்ட அபிமன்யு, சக்கரம் தாங்குபவனான வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பிடித்தமான மருமகனாவான். ஓ! மன்னா {விராடரே}, உமக்கு மருமகனாகவும், உமது மகளுக்குக் கணவனாகவும் தகுந்தவன் அவனே {அபிமன்யுவே}”, என்றான் {அர்ஜுனன்}.
விராடன் {அர்ஜுனனிடம்} ,“அறத்தில் நிலைபெற்ற விவேகியும், குருக்களில் சிறந்த குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} சொல்வதால் இது தகுந்ததே. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, இதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, அதைச் செய்வாயாக. தனது மருமகனின் தந்தையாக {தனது சம்பந்தியாக} அர்ஜுனனைக் கொண்டிருப்பவன் தனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறியவனாக இருப்பான்” என்றான் {விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த ஏகாதிபதி {விராடன்} இதைச் சொன்னதும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், மத்ஸ்ய மன்னனுக்கும் {விராடனுக்கும்}, அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அந்த ஒப்பந்தத்திற்குத் தனது ஏற்பைத் தெரிவித்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு, வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} அழைப்பை அனுப்பினான். விராடனும் அதையே செய்தான். பதிமூன்றாம் வருடத்தின் நிறைவுக்குப் பிறகு, அந்த ஐந்து பாண்டவர்களும், விராடனின் நகரங்களில் ஒன்றான உபப்லாவியத்தில் {Upaplavya} தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்}, ஆனர்த்த நாட்டில் இருந்து தாசார்ஹ குலத்தின் மக்கள் பலரையும், அபிமன்யுவையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} அழைத்து வந்தான்.
யுதிஷ்டிரனுக்கு மிக நெருங்கிய நண்பர்களான காசியின் மன்னனும், சைவியனும் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணி* துருப்புகளுடன் அங்கே வந்தனர். வலிமைமிக்கத் துருபதன், திரௌபதியின் வீரமிக்க மகன்களுடனும், வீழ்த்தப்பட முடியாத சிகண்டியுடனும், ஆயுதம் தாங்குபவர்களில் முதன்மையான ஒப்பற்ற திருஷ்டத்யும்னனுடனும், ஓர் அக்ஷௌஹிணி* துருப்புகளுடனும் வந்தான். அங்கு வந்த மன்னர்கள் அனைவரும் அக்ஷௌஹிணி தலைவர்களாக மட்டும் இல்லாமல், வேள்விகளில் அந்தணர்களுக்கு அபரிமிதமாகக் கொடையளிப்பவர்களாகவும், வேத அறிவுடன் வீரம் கொண்டவர்களாகவும், போரில் மரணத்தைத் தழுவத் தயாராக இருப்பவர்களாகவும் இருந்தனர்.
*அக்ஷெளணிக்கான குறிப்பு:
- See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section2a.html
முனிவர்கள், ``'ஓ சூதரின் குமாரனே {சௌதியே}, அக்ஷௌஹிணி என்பது என்ன? அதில் எத்தனை குதிரைகள், காலாட்கள், தேர்கள், யானைகள் இருக்கும். முழுவதும் கூறு,” என்றனர்.- See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section2a.html }சௌதி சொன்னார்,'ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்கள், மூன்று குதிரைகள் அடங்கியது ஒரு பட்டி, மூன்று பட்டிகள் ஒரு சேனாமுகம், மூன்று சேனாமுகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படும். மூன்று குல்மாக்கள் ஒரு கணம், மூன்று கணங்கள் ஒரு வாகினி, மூன்று வாகினிகள் சேர்ந்தது ஒரு பிருதனை என்றழைக்கப்படும். மூன்று பிருதனாக்கள் சேர்ந்தது ஒரு சம்மு, மூன்று சம்முக்கள் ஒரு அனீகினி, பத்து அனீகினிக்கள் சேர்ந்ததுதான் ஒரு அக்ஷௌஹிணி. ஓ அந்தணர்களே, கணிதவியலாளர்கள், ஒரு அக்ஷௌஹிணியில் இருபத்து ஓராயிரத்து எண்ணூற்று எழுபது {21870} தேர்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும் {21870}, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்றி ஐம்பது {109350} காலாட்படைவீரர்களும், அறுபத்தைந்து ஆயிரத்து அறுநூற்று பத்தும் {65610} குதிரைகளும் ஆகும். ஓ அந்தணர்களே! இதுதான் ஒரு அக்ஷௌஹிணியின் கணக்காகும் என்று எண்களின் இலக்கணப்படிச் சொல்கிறார்கள். இந்தக் கணக்குப்படி கௌரவர்களும் பாண்டவர்களுமாக பதினெட்டு{18} அக்ஷௌஹிணி படைகள் இருந்தன.
18 அக்ஷௌஹிணி படைகள்
அவர்கள் வந்ததைக் கண்ட அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, முறைப்படி அவர்களை வணங்கி, அவர்களது துருப்புகளையும், பணியாட்களையும், சுமை தூக்கிகளையும் மகிழ்வித்தான். அவன் {விராடன்} தனது மகளை {உத்தரையை} அபிமன்யுவுக்கு அளிப்பதில் மிகவும் மகிழ்ந்திருந்தான். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மன்னர்கள் வந்த பிறகு, மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அங்கு வந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஹலாயுதன் {பலராமன்}, ஹ்ருதிகனின் மகன் கிருதவர்மன், சத்யகனின் மகன் யுயுதானான், ஆனாத்ருஷ்டி, அக்ரூரர், சாம்பன், நிசடன் ஆகியோருடன் வந்தான். எதிரிகளை அழிப்பவர்களான அவர்கள் {அந்த யாதவர்கள்} தங்களுடன் அபிமன்யுவையும், அவனது தாயையும் {சுபத்திரையையும்} அழைத்து வந்தனர். ஒரு வருடம் முழுவதும் துவாரகையில் வசித்த இந்திரசேனனும் மற்றவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்ட பாண்டவர்களின் தேர்களைத் தங்களுடன் கொண்டு வந்தனர். அந்த விருஷ்ணிகளில் புலியான பெரும் பிரகாசமிக்க வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தொடர்ந்து, பத்தாயிரம் {10,000} யானைகளும், பத்தாயிரம் {10,000} தேர்களும், பத்து கோடி {10,00,00,000 Hundred Million} குதிரைகளும், பத்தாயிரம் கோடி {10000,00,00,000 Hundred Billion} காலாட்படையினரும், பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற விருஷ்ணிகளும், அந்தகர்களும், போஜர்களும் அங்கே வந்தனர்.
ஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் ஒவ்வொருவருக்கும், எண்ணற்ற அடிமைப்பெண்களையும், ரத்தினங்களையும், ஆடைகளையும் கிருஷ்ணன் கொடுத்தான். பிறகு மத்ஸ்ய மன்னன் {விராடன்} மற்றும் பாண்டவர் குடும்பங்களின் திருமணத் திருவிழா ஆரம்பித்தது. பாண்டவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சங்குகள், கைத்தாளங்களும், கொம்புகளும், பேரிகைகளும் மற்றும் பிற இசைக்கருவிகள் விராடனின் அரண்மனையில் ஒலிக்கத் தொடங்கின. பல்வேறு வகையான மான்களும், தூய்மையான விலங்குகளும் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டன. பல்வேறு வகையான மதுவகைகளும், மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட போதைச் சாறுகளும் அபரிமிதமாகச் சேகரிக்கப்பட்டன. பாடுவதில் வல்லவர்களும், பழங்கதைகள் அறிந்தவர்களுமான நாடகக் கலைஞர்களும், புலவர்களும், துதிபாடிகளும் மன்னர்களுக்காகக் காத்திருந்து, அவர்களது புகழையும் குல வரிசைகளையும் {வம்ச வரலாறுகளையும்} பாடினர்.
சமச்சீரான உடல்கள் மற்றும் கால்கள் கொண்ட முதிர்வயது பெண்கள், திருமண முடிச்சுக் கட்டப்படும் இடத்திற்கு {திருமண மண்டபத்திற்கு} சுதேஷ்ணையின் தலைமையில் வந்தனர். அழகிய நிறமும், அற்புத ஆபரணங்களும் கொண்ட அந்த அழகிய பெண்களுக்கு மத்தியில், அழகிலும், புகழிலும், காந்தியிலும் கிருஷ்ணையே {திரௌபதியே} முதன்மையானவளாக இருந்தாள். பெரும் இந்திரனின் மகளைப் போல அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த இளவரசி உத்தரையை அழைத்துக் கொண்டு அவர்கள் அனைவரும் அங்கே வந்தனர்.
பிறகு, குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, சுபத்திரையின் மூலம் பிறந்த தனது மகன் {அபிமன்யு} சார்பாக, குறைகளற்ற அங்கங்கள் கொண்ட விராடனின் மகளை {உத்தரையை} ஏற்றுக் கொண்டான். இந்திரனைப் போல அங்கே நின்று கொண்டிருந்த பெரும் மன்னனான குந்தியின் மகன் யுதிஷ்டிரனும் அவளை {உத்தரையை} தனது மருமகளாக ஏற்றுக் கொண்டான். அவளை ஏற்றுக் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன் முன் ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} கொண்டு, சுபத்திரையின் ஒப்பற்ற மகனின் {அபிமன்யுவின்} திருமண விழாவை நடத்தச் செய்தான்.
பிறகு அவனுக்கு {அர்ஜுனனுக்கு}, விராடன், காற்றின் வேகம் கொண்ட ஏழாயிரம் {7000} குதிரைகளையும், சிறந்த வகையிலான இருநூறு {200} யானைகளையும், பெருஞ்செல்வத்தையும் (வரதட்சணையாகக்) கொடுத்தான். சுடர்விடும் நெருப்புக்குள் தெளிந்த நெய்யை நீர்க்காணிக்கையாகக் கொடுத்து, இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்கு} மரியாதை செலுத்திய விராடன், பாண்டவர்களுக்குத் தனது நாடு, படை, கருவூலம், மற்றும் தன்னையே காணிக்கையாகக் கொடுத்தான்.
திருமணம் நிறைவு பெற்றதும், தர்மனின் மகனான யுதிஷ்டிரன், மங்காப்புகழ் கொண்ட கிருஷ்ணன் கொண்டு வந்த செல்வத்தை அந்தணர்கள் அனைவருக்கும் காணிக்கையாகக் கொடுத்தான். மேலும், ஆயிரக்கணக்கான பசுக்களையும், பல்வேறு வகைகளிலான ஆடைகளையும், அற்புத ஆபரணங்களையும், வாகனங்களையும், படுக்கைகளையும், பல்வேறு வகைகளிலான இனிய பானங்களையும், பல்வேறு இனங்களிலான சிவந்த பானங்களையும் கொடுத்தான். அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தணர்களுக்கு, நிலக்கொடையும், ஆயிரக்கணக்கான கால்நடைகளையும் உரிய சடங்குகளுடன் அளித்தான். ஆயிரக்கணக்கான குதிரைகளையும், தங்கம் மற்றும் பிற வகைச் செல்வங்களையும் அதிகமாக, வயது முதிர்ந்தவர்கள் அனைவருக்கும் கொடுத்தான். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, நன்கு உண்டு மகிழ்ச்சியுடனிருந்த மனிதர்களால் நிரம்பிய அந்த மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} நகரம், பெரும் திருவிழா நடைப்பதைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது” என்றார் {வைசம்பாயனர்}.
****************** கோஹரணப் பர்வம் முற்றிற்று ******************
********* விராட பர்வம் முற்றிற்று *********
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.