The counsel of Drupada! | Udyoga Parva - Section 4 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 4)
பதிவின் சுருக்கம் : துரியோதனன் குறித்துப் பலராமன் சொன்ன ஆலோசனை உதவாதென்று துருபதன் சொல்வது; படைதிரட்டுவது குறித்து ஆலோசனை வழங்கிய துருபதன்...
துருபதன் சொன்னான், “ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {சாத்யகி}, இது நீ சொன்னது போலவே நடக்கும். இதில் ஐயமில்லை. துரியோதனன், அமைதியான வழியில் நாட்டைக் கொடுக்க மாட்டான். மகன் {துரியோதனன்} மீது பாசம் கொண்ட திருதராஷ்டிரனும் அவனது {துரியோதனனின்} விருப்பத்தையே பின்பற்றுவான். மனோதிடம் அற்றதால் {imbecility = செழிப்பற்றதால் [அ] வறுமையால் என்றும் இங்கே பொருள் கொள்ளலாம்} பீஷ்மரும், துரோணரும், மூடத்தனத்தால் கர்ணனும், சகுனியும் அப்படியே {துரியோதனனைப்} பின்தொடர்வார்கள். எனது தீர்மானத்தைப் பலதேவனின் {பலராமனின்} சொற்களே தீர்மானித்திருக்க வேண்டும்; உண்மையில், அமைதியான ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்று விரும்பும் மனிதனிடமே, அவனால் {பலராமனால்} சுட்டிக்காட்டப்படும் வழி பின்பற்றப்பட வேண்டும். ஆனால் துரியோதனனிடம், மென்மையான வார்த்தைகளில் பேசக்கூடாது.
இயல்பிலேயே தீயவனான அவனை {துரியோதனனை}, மென்மை, {மென்மையான சொற்கள்} வழிக்குக் கொண்டுவராது என்றே நான் நினைக்கிறேன். கழுதையைப் பொறுத்தவரை, மென்மை அவசியம்தான்; ஆனால் பசு வகை விலங்கினங்களைப் {bovine species} பொறுத்தவரை, கடுமையே காட்டப்பட வேண்டும். யாராவது ஒருவர் துரியோதனனிடம் மென்மையாகப் பேசினால், இயற்கையிலேயே தீயவனான அந்தப் பொல்லாதவன் {துரியோதனன்}, அப்படிப் பேசுபவரை மனோதிடமற்றவராகக் {imbecile} கருதுவான். அவனிடம் மென்மையான முறைகள் கையாளப்பட்டால், தான் வென்று விட்டதாகவே அந்த முட்டாள் {துரியோதனன்} நினைத்துக் கொள்வான். நாம் இப்படிச் செய்யலாமே. நாம் தயாராவோம். நமக்காகப் படை திரட்ட நமது நண்பர்களுக்கு அழைப்பு கொடுப்போம்.
சல்லியன், திருஷ்டகேது, ஜயத்சேனன் மற்றும் கேகேயர்களின் இளவரசன் {பிருஹத்ஷத்ரன்} ஆகியோரிடம் வேகமான தூதர்கள் செல்லட்டும். தனது பங்குக்கு, துரியோதனனும், மன்னர்கள் அனைவருக்கும் தனது சொற்களை அனுப்புவான். எனினும், முதலில் வேண்டிக் கொள்பவர்களின் கோரிக்கைக்கே நேர்மையான நபர்கள் செவிசாய்ப்பார்கள். எனவே, உங்களுக்குத் தகுந்த இந்த மனிதர்களின் ஆட்சியாளர்களிடம் விரைந்து செல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு பெரிய பொறுப்பு நமக்காகக் காத்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். சல்லியனுக்கும் அவனுக்குக் கீழ் உள்ள மன்னர்களுக்கும், கிழக்குக் கடற்கரையில் வசிக்கும் அளவிடமுடியா வீரம் கொண்ட மன்னன் பகதத்தனுக்கும் {பிராக்ஜோதிஷ {இன்றைய அசாம்} நாட்டு மன்னன்}, கடுமையான ஹார்த்திக்யன் {ஹிருதிகனின் மகனான கிருதவர்மன்}, ஆஹுகன், வலிய மனம் கொண்ட மள்ளர்கள் [1] மன்னன், ரோசமானான் ஆகியோருக்கும் விரைந்து சொல்லி அனுப்புங்கள்.
[1] கோசலத்திற்கும் விதேஹத்திற்கும் இடையில் உள்ள நாடு என்று விக்கி சொல்கிறது. https://en.wikipedia.org/wiki/Malla_Kingdom
பிருஹந்தன், மன்னன் சேனாபிந்து, பாஹ்லீகன், முஞ்சகேசன், சேனஜித், சேதியின் ஆட்சியாளன், சுபார்ஸ்வன், சுபாஹு, பெரும் வீரனான பௌரவன், சகர்கள் {இந்நாட்டு மன்னன்சூராரி}, பாஹ்லவர்கள் [2] {இந்நாட்டு மன்னன் நதீஜன்}, தரதர்களின் {கர்ணவேஷ்டன்} மன்னர்களாகிய, சூராரி, நதீஜன் மற்றும் மன்னன் கர்ணவேஷ்டன் ஆகியோர், நீலன், வீரமிக்க மன்னனான வீரதர்மன், துர்ஜயன், தந்தவக்கிரன், ருக்மி, ஜனமேஜயன், ஆஷாடன், வாயுவேகன், மன்னன் பூர்வபாலி, பூரிதேஜன், தேவகன், ஏகலாயன் {Ekalayan என்று இருக்கிறது, ஏகலவ்யனா என்று தெரியவில்லை} மற்றும் அவனது மகன்கள், காரூஷ குல மன்னர்கள், வீரமிக்க க்ஷேமதூர்த்தி, காம்போஜத்தின் மன்னர்கள், ரிசீக இனக்குழுக்கள், மேற்குக் கடலோரத்தில் உள்ள மன்னர்களான, ஜயத்சேனன், காசிமன்னன், ஐந்து நதிகள் பாயும் நிலத்தின் {பஞ்சாபின்} மன்னர்கள், கிராதனின் பெருமைமிக்க மகன், மலைப்பகுதிகளின் ஆட்சியாளர்களான ஜானகி, சுசர்மன், மணிமான், போதிமத்ஸகன், வீரமிக்கத் திருஷ்டகேது, பாம்சு நாட்டின் ஆட்சியாளன், பௌந்தரன், தண்டதாரன், வீரமிக்கப் பிருஹத்சேனன், அபராஜிதன், நிஷாதன், ஸ்ரேணிமான், வசுமான், பெரும் பலம் உடைய பிருஹத்பலன், எதிரி நகரங்களை வெல்லும் பாஹு, போர்க்குணமிக்க மன்னன் சமுத்ரசேனன் மற்றும் அவனது மகன், உத்பவன், ஷேகமகன், மன்னன் வாடதானன், ஸ்ருதாயு, த்ருடாயு, சால்வனின் கம்பீரமான மகன், கலிங்கர்கள் மன்னன், போரில் வெல்லப்பட முடியாத குமாரன் ஆகியோரை வரவழையுங்கள்.
[2] தமிழ்ப்பதிப்புகளில் இந்தப் பெயர் பல்லவர்கள் என்று பிழையாகப் பொருள் கொள்ளப்படுகிறது என்று நினைக்கிறேன். Phalava பாஹ்லவம் என்பது அன்றைய ஈரானிய நாடாக இருக்க வேண்டும் என்று விக்கி சொல்கிறது https://en.wikipedia.org/wiki/Pahlava_Kingdom
இவர்களுக்கு விரைந்து சொல்லியனுப்புங்கள். இதுவே சரியென எனக்குப் படுகிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கற்ற அந்தணரான இந்த எனது புரோகிதர், திருதராஷ்டிரனிடம் செல்லட்டும். அவனிடம் இவர் சொல்ல வேண்டிய சொற்களையும், துரியோதனனிடம் சொல்ல வேண்டியதையும், பீஷ்மர் மற்றும் தேர்வீரர்களில் சிறந்த துரோணரிடம் பேச வேண்டிய முறையையும், இவரிடம் சொல்!” என்றான் {துருபதன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.