Sikhandin's share - Bhishma! | Udyoga Parva - Section 57a | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 17) {யானசந்தி பர்வம் - 11}
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களிடம் சேர்ந்த ஏழு அக்ஷௌஹிணி படைகள் யார் மூலமாக வந்தன என்று சஞ்சயன் சொன்னது; பாண்டவர்கள் தரப்பில் ஒவ்வொருவரும் தங்களுக்கு இலக்காக யார் யாரைப் பிரித்துக் கொண்டார்கள் என்பதைச் சஞ்சயன் சொன்னது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, பாசத்தால் அங்கே வந்தவர்களும், பாண்டவர்கள் சார்பாக என் மகனின் {துரியோதனனின்} படைகளுடன் போரிடப்போகிறர்வர்களுமான யாரையெல்லாம் நீ கண்டாய்?”
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளில் முதன்மையானவனான கிருஷ்ணனையும், சேகிதானனையும், யுயுதானன் என்று அழைக்கப்படும் சாத்யகி ஆகியோர் அங்கு வந்திருந்ததைக் கண்டேன். தங்கள் பலத்தில் செருக்கும், அகில உலகப் புகழும் கொண்ட {சேகிதானான் மற்றும் சாத்யகி ஆகிய} அவ்விரு தேர்வீரர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் பாண்டவர்களை வந்தடைந்தனர்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளில் முதன்மையானவனான கிருஷ்ணனையும், சேகிதானனையும், யுயுதானன் என்று அழைக்கப்படும் சாத்யகி ஆகியோர் அங்கு வந்திருந்ததைக் கண்டேன். தங்கள் பலத்தில் செருக்கும், அகில உலகப் புகழும் கொண்ட {சேகிதானான் மற்றும் சாத்யகி ஆகிய} அவ்விரு தேர்வீரர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் பாண்டவர்களை வந்தடைந்தனர்.
பாஞ்சாலர்களின் மன்னான துருபதன், திருஷ்டத்யும்னன் தலைமையிலான சத்யஜித் மற்றும் பிறரைக் கொண்ட தனது பத்து {10} மகன்களால் சூழப்பட்டு, சிகண்டியால் நன்கு பாதுகாக்கப்பட்டு, தனது படைவீரர்களுக்கு அனைத்து அடிப்படை பொருட்களையும் கொடுத்து, யுதிஷ்டிரனைக் கௌரவப்படுத்தும் வகையில் ஒரு முழு அக்ஷௌஹிணியுடன் அங்கே வந்திருக்கிறான்.
பூமியின் தலைவனான விராடன், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகள் சூழ, தனது மகன்களான சங்கன் மற்றும் உத்தரன் ஆகிய இருவருடனும், மதிராக்ஷன் தலைமையிலான சூரியதத்தன் மற்றும் பிற வீரர்களுடனும், தன் தம்பிகள் மற்றும் மகன்களின் துணையுடனும், பிருதையின் {குந்தியின்} மகனை {யுதிஷ்டிரனை} வந்தடைந்திருக்கிறான்.
ஜராசந்தனின் மகனான மகத மன்னன் {ஜயத்சேனன் [சகாதேவன்]} மற்றும் சேதிகளின் மன்னன் திருஷ்டகேது ஆகியோர் ஆளுக்கு ஒவ்வொரு அக்ஷௌஹிணி துருப்புகளுடன் அங்கே வந்திருக்கின்றனர்.
ஊதா நிறக் கொடிகளுடன் கூடிய கேகயத்தின் ஐந்து சகோதரர்கள், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகள் சூழ, பாண்டவர்களை வந்தடைந்திருக்கிறார்கள். பாண்டவர்களுக்காகத் தார்தராஷ்டிர படைகளுடன் {திருதராஷ்டிர படைகளுடன்} மோதப்போகும் இந்த அளவு எண்ணிக்கையிலான படைகள் அங்கு கூடியிருப்பதை நான் கண்டேன்.
மனித, தெய்வீக, கந்தர்வ, அசுர வகைகளிலான போர் வியூகங்களை அறிந்தவனும், பெரும் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன் அந்தப் படைகளுக்குத் தலைமை தாங்குகிறான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்தனுவின் மகன் பீஷ்மர், சிகண்டியின் பங்காக {இலக்காக} நிர்ணயிப்பட்டிருக்கிறார்; தன் மத்ஸ்ய வீரர்கள் அனைவருடன் விராடன் சிகண்டியை ஆதரிப்பான் {பின்பலமாக இருப்பான்}.
பெரும் பலமிக்க மத்ர மன்னன் {சல்யன்}, பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனின்} பங்காக நிர்ணயிப்பட்டிருக்கிறார். எனினும், இவர்கள் இருவரும் சரியான {சமமான} இணையல்ல என்பது சிலரது கருத்தாக இருக்கிறது.
துரியோதனனும், அவனது தொண்ணூற்றொன்பது சகோதரர்களும், மேலும், கிழக்கு மற்றும் தெற்கின் ஆட்சியாளர்களும் பீமசேனனின் பங்காகக் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றனர்.
விகர்த்தனன் மகன் கர்ணன், சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன் ஆகியோர் அர்ஜுனனின் பங்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், இந்தப் பூமியில் வெல்லப்பட முடியாத வீரர்களையும், தங்கள் பலத்தில் செருக்குடையோரையும், அர்ஜுனன் தனது பங்காக ஏற்றுக் கொண்டான்.
வலிமைமிக்க வில்லாளிகளான கேகயத்தின் ஐந்து அரச சகோதரர்கள் [1], (திருதராஷ்டிரர் பக்கத்தில் உள்ள) கேகய வீரர்களைத் தங்கள் எதிரிகளாக ஏற்று, போரில் தங்கள் பலத்தைக் காட்டப் போகிறார்கள். அவர்களது பங்கில், மாளவர்கள், சால்வகர்கள் மற்றும் திரிகார்த்தப் படையைச் சேர்ந்தவர்களும், வெற்றி அல்லது மரணம் என்று உறுதியேற்றிருப்பவர்களுமான இரு புகழ்பெற்ற {சம்சப்தகர்கள் என்ற} வீரர்களும் அவர்களது {இலக்காக நிர்ணயிக்கப்பட்ட} பங்கில் இருக்கிறார்கள்.
[1] விந்தன், அனுவிந்தன் ஆகியோரால் கேகயத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள் இவர்கள்.
துரியோதனனின் மகன்கள், துச்சாசனன், மன்னன் பிருகத்பலன் ஆகியோர் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} பங்காகக் நிர்ணயிக்கப்பட்டனர்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்க, சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கொடிகளுடைய தேரைக் கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளுமான திரௌபதியின் மகன்கள், திருஷ்டத்யும்னன் தலைமையில் துரோணருக்கு எதிராக முன்னேறுவார்கள்.
சேகிதானன் தனது தேரில் இருந்து கொண்டு சோமதத்தனுடன் தனிப் போரில் மோத விரும்புகிறான். அதே வேளையில் சாத்யகி, போஜர்கள் தலைவனான கிருதவர்மனுக்கு எதிராகப் போரிட ஆவலுடன் இருக்கிறான்.
போர்க்களத்தில் பயங்கரக் கர்ஜனை புரியும் மாத்ரியின் வீரமகனான சகாதேவன், உமது மைத்துனனான சுபலனின் மகனைத் {சகுனியைத்} தனது பங்காகக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறான்.
மத்ராவதியின் {மாத்ரியின்} மகனான நகுலன், வஞ்சகம் நிறைந்த உலூகனையும், சாரஸ்வதர்கள் [2] என்ற பழங்குடியினரையும் தனது பங்காகக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறான்.
[2] சரஸ்வதி ஆற்றங்கரையில் இருந்த மன்னர்கள்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரிடப்போகிறவர்களான பூமியில் உள்ள பிற மன்னர்கள் அனைவரையும், ஒவ்வொருவராகப் பெயரைச் சொல்லி, {அவர்களைத்} தங்கள் ஒவ்வொருவருக்குமான பங்காகப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, பிரித்துக் கொண்டார்கள். இப்படியே பாண்டவப் படை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இப்போது, உமது மகன்களுடன் கூடிய நீர் எது சிறந்தது என்று கருதுவீரோ, அதைத் தாமதமின்றிச் செய்வீராக” என்றான் {சஞ்சயன்}.