The fearless Dhrishtadyumna!! | Udyoga Parva - Section 57b | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 17) {யானசந்தி பர்வம் - 11}
பதிவின் சுருக்கம் : துரியோதனனை நினைத்து திருதராஷ்டிரன் வருந்தியது; பாண்டவர்களின் பலம் அறிந்ததாலேயே பீஷ்மர் போரை விரும்பவில்லை என்று திருதராஷ்டிரன் சொன்னது; துரியோதனன் தனது தந்தை திருதராஷ்டிரனுக்கு உற்சாகமூட்டியது; யுதிஷ்டிரனைப் போருக்கு யார் தூண்டுவது எனத் திருதராஷ்டிரன் மீண்டும் சஞ்சயனிடம் கேட்டது; சஞ்சயன் திருஷ்டத்யும்னனைக் குறித்துச் சொன்னது; திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரனிடம் பேசியது; யுதிஷ்டிரன் திருஷ்டத்யும்னனை மெச்சியது; கௌரவர்களை எச்சரிக்கும் வகையான சொற்களைத் திருஷ்டத்யும்னன் சஞ்சயனிடம் சொன்னது…
திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொன்னான், “ஐயோ, ஏமாற்றுகரப் பகடைக்கு அடிமையான எனது மூட மகன்கள் அனைவரும், யாருடன் போர்க்களத்தில் மோத வேண்டும் என்று விரும்பினார்களோ, அந்த வலிமைமிக்கப் பீமனால் ஏற்கனவே மாண்டுவிட்டார்கள். நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைப் போல, வேள்விக்காக மரணத்தால் {காலனால்} புனிதமாக்கப்பட்டவர்கள் போல {வேள்வி விலங்கைப் போல}, பூமியின் மன்னர்கள் அனைவருமே கூடக் காண்டீவத்தை நோக்கி விரைவார்கள். என்னால் காயமுற்ற அந்த ஒப்பற்ற வீரர்களால் {பாண்டவர்களால்} எனது படை ஏற்கனவே துரத்தப்பட்டு விட்டதாகவே நான் நினைக்கிறேன். உண்மையில், பாண்டுவின் மகன்களால் {பாண்டவர்களால்} மோதலில் உடைக்கப்பட்ட எனது வீரர்களின் தலைவர்களை யார் பின்தொடர்வார்கள்?
அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும், வலிமை மிக்கத் தேர்வீரர்களாவர். பெரும் துணிவும், புகழ்மிக்கச் சாதனைகளும், பெரும் ஆற்றலும், எரியும் சூரியனுக்கு நிகரான சக்தி ஆகியவற்றைக் கொண்ட அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் போரில் வெற்றிவாகை சூடுபவர்களாவர். யுதிஷ்டிரனைத் தங்கள் தலைவனாகவும், மதுவைக் கொன்றவனை {மதுசூதனன்_கிருஷ்ணனைத்} தங்கள் பாதுகாவலனாகவும், வீரனான சவ்யசச்சின் {அர்ஜுனன்} மற்றும் விருகோதரனை {பீமனைத்} தங்கள் போர்வீரர்களாகவும், நகுலன், சகாதவேன், பிரஷதன் மகனான திருஷ்டத்யும்னன், சாத்யகி, துருபதன், தன் மகனுடன் கூடிய திருஷ்டகேது, உத்தமௌஜஸ், பாஞ்சாலர்களின் வெல்லப்பட முடியாத யுதாமன்யு, சிகண்டி, க்ஷத்திரதேவன், விராடனின் மகன் உத்தரன், காசயர்கள் {காசி நாட்டவர்}, சேதிக்கள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள், விராடனின் மகன் பப்ரு, பாஞ்சாலர்கள், பிரபத்திரகர்கள் ஆகியோரைத் தங்களுக்காகப் போரிடுபவர்களாகக் கொண்டவர்களிடம் இருந்து இந்திரனாலும் இந்தப் பூமியைப் பறிக்க முடியாது. போரில் அமைதியும் உறுதியும் கொண்ட அவ்வீரர்களால் மலைகளையும் பிளக்க முடியும். ஐயோ, தொண்டை கட்டுமளவுக்கு நான் கதறினாலும் கூட, என்னைப் புறக்கணித்து, ஓ சஞ்சயா, அனைத்து அறங்களையும் கொண்ட அந்தத் தெய்வீக ஆற்றல் படைத்தோரிடம் {பாண்டவர்களிடம்} எனது தீய மகன் {துரியோதனன்} போரிட விரும்புகிறானே.”
துரியோதனன் {திருதராஷ்டிரனிடம், “பாண்டவர்களும் நாங்களும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களே; அவர்களும் நாங்களும் ஒரே பூமியில் தான் நடக்கிறோம். பாண்டவர்களுக்கே வெற்றி கிட்டும் என்று நீர் தீர்மானிப்பது எப்படி? வலிமைமிக்க வில்லாளிகளான பீஷ்மர், துரோணர், கிருபர், வெல்லப்பட முடியாத கர்ணன், ஜெயத்ரதன், சோமதத்தன், அஸ்வத்தாமன் ஆகிய அனைவரும் பெரும் ஆற்றல் படைத்தவர்களாவர். தேவர்களோடு கூடிய இந்திரனே ஆனாலும் அவர்களை வீழ்த்த முடியாது. அப்படியிருக்கையில், ஓ! தந்தையே, பாண்டவர்களைக் குறித்து நீர் என்ன சொல்வீர்?
ஆயுதம் தாங்கி நிற்கும் இந்த உன்னதமான வீர மன்னர்கள் அனைவரும், ஓ! தந்தையே, எனக்காகப் பாண்டவர்களை எதிர்த்து நிற்க இயன்றவர்களே, அதே வேளையில் பாண்டவர்கள் எனது துருப்புகளைப் பார்க்கக்கூட இயன்றவர்களல்லர். பாண்டவர்களையும், அவர்களது மகன்களையும் போரில் சந்திக்கப் போதிய பலம் கொண்டவனாகவே நான் இருக்கிறேன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எனது நலனில் ஆவலுள்ள இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும், இளம் மான்களை வலையில் பிடிப்பது போல, பாண்டவர்கள் அனைவரையும் நிச்சயம் பிடிப்பார்கள். நமது தேர்க்கூட்டங்கள் மற்றும் கணைகளின் கண்ணிகளின் விளைவாகப் பாஞ்சாலர்களும் பாண்டவர்களும் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்படுவார்கள் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன்” என்றான் {துரியோதனன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, இந்த எனது மகன் {துரியோதனன்} பைத்தியக்காரனைப் போலப் பேசுகிறான். நீதிமானான யுதிஷ்டிரனைப் போர்க்களத்தில் வீழ்த்த இயலாதவனாக இருக்கிறான். அந்த ஒப்பற்றவர்களுடன் {பாண்டவர்களுடன்} இந்தப் பீஷ்மர் போரை விரும்பவில்லை. ஆகையால், புகழ்வாய்ந்த, பலமிக்க, அறம்சார்ந்த, உயர்ஆன்ம பாண்டவர்கள் மற்றும் அவர்களின் மகன்களின் வலிமையை இவர் {இந்தப் பீஷ்மர்} உண்மையில் அறிந்திருக்கிறார். ஆனால், ஓ! சஞ்சயா, அவர்களது {பாண்டவர்களின்} நடவடிக்கைகளை எனக்கு மீண்டும் சொல். (ஹோம) நெருப்பைத் தெளிந்த நெய்யைக் கொண்டு தூண்டும் புரோகிதர்களைப் போல, அந்த ஒப்பற்ற, பெரும் வேகம் கொண்ட அந்த வலிமைமிக்க வில்லாளிகளை {பாண்டவர்களை} யார் தூண்டி விடுகிறார்கள் என்பதை எனக்குச் சொல்” என்றான் {திருதராஷ்டிரன்}.
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் {யுதிஷ்டிரனிடம்}, “பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, போரிடுவீராக. சிறு அச்சத்தையும் ஊக்கப்படுத்தாதீர். திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} உள்ள பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும், வரப்போகும் கடும் மோதலில் ஆயுத மழைக்கு இலக்காவார்கள். உண்மையில், சிறு மீன்களை நீரில் பிடிக்கும் திமிங்கலம் போல, அங்கே தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து, சினத்துடன் கூடியிருக்கும் அந்த மன்னர்கள் அனைவருடனும் நான் ஒருவனே {தனியனாக} மோதுவேன். பெருகும் கடலைத் தடுக்கும் கரையைப் போல, பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சல்யன், சுயோதனன் {துரியோதனன்} ஆகிய அனைவரையும் நானே {ஒருவனாகவே} தடுப்பேன்” என்று பாண்டவர்களிடம் எப்போதும் போருக்காகத் தூண்டுகிறான் {திருஷ்டத்யும்னன்}.
அறம் சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன், அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்}, “உனது ஆற்றலையும், உறுதியையுமே பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் முழுமையாக நம்பியிருக்கிறோம். போரிலிருந்து எங்களைப் பாதுகாப்பாக மீட்பாயாக. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, க்ஷத்திரிய வகைக் கடமைகளில் நீ உறுதியாக இருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உண்மையில், கௌரவர்களிடம் தனியொருவனாகப் போரிட நீ தகுந்தவனே. போரிட விரும்பி, அவர்கள் {கௌரவர்கள்} நம் முன்னிலையில் நிற்கும்போது, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {திருஷ்டத்யும்னா}, நீ எதைச் செய்வாயோ, அஃது எங்களுக்கு நன்மையானதாகவே இருக்கும் என்பது நிச்சயம். படுதோல்வி அடைந்து, பாதுகாப்பு நாடி போரில் இருந்து தப்பியோடுபர்களுக்கும் நம்பிக்கை தரும் வகையில், தன் ஆற்றலை வெளிக்காட்டும் ஒரு வீரனை ஆயிரம் {விலை} கொடுத்தாவது {ஒருவன்} வாங்க வேண்டும் என்பதே சாத்திரமறிந்தோர் கருத்து. போர்க்களத்தில் அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களை விடுவிப்பவன் நீ என்பதில் {யாருக்கும்} ஐயமில்லை. {அதாவது, நீ எங்களுக்கு மதிப்புமிக்கவன் என்பதில் ஐயமில்லை}” என்றான் {யுதிஷ்டிரன்}.
நீதிமானான குந்தியின் மகன் யுதிஷ்டிரன் இதைச் சொன்ன போது, அச்சமற்ற வகையில் திருஷ்டத்யும்னன் {சஞ்சயனான} என்னிடம், “ஓ! சூதரே {சஞ்சயரே}, நீர் தாமதமில்லாமல் சென்று, துரியோதனனுக்காகப் போரிட வந்திருக்கும் அனைவரிடமும், பாஹ்லீகர்களோடு கூடிய பிரதீப குல குருக்களிடமும், சரத்வான் மகன் {கிருபர்}, கர்ணன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஜெயத்ரதன், துச்சாசனன், விகர்ணன், மன்னன் துரியோதனன் மற்றும் பீஷ்மர் ஆகியோரிடமும் “தேவர்களால் பாதுகாக்கப்படும் அர்ஜுனனால் நீங்கள் கொல்லப்பட வேண்டாம். அது நடப்பதற்குள், ஏதேனும் ஒரு நல்ல மனிதன் யுதிஷ்டிரரைத் அணுகி, மனிதரில் சிறந்தவரான அந்தப் பாண்டுவின் மகனிடம், {பாண்டவர்கள் ஒப்படைத்த} நாட்டை ஏற்றுக் கொள்ளும்படி தாமதமில்லாமல் வேண்டிக் கொள்ளட்டும். கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்டவரான பாண்டுவின் மகன் சவ்யசச்சினைப் {அர்ஜுனரைப்} போன்ற வீரர் எவரும் இந்தப் பூமியில் இல்லை. காண்டீவத்தைக் கொண்டிருப்பவரின் {அர்ஜுனரின்} தெய்வீகத் தேர் தேவர்களாலேயே பாதுகாக்கப்படுகிறது. மனிதர்களால் அவர் {அர்ஜுனர்} வெல்லப்படத்தக்கவர் அல்ல. எனவே, போரிடத் துணியாதீர்” என்று சொல்லும்” என்ற இந்தச் சொற்களைப் {திருஷ்டத்யும்னன்} பேசினான்” என்றான் {சஞ்சயன்}.