Galava's lament! | Udyoga Parva - Section 107 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –36)
பதிவின் சுருக்கம் : விஸ்வாமித்ரர் கேட்ட குருதட்சணையால் கவலையடைந்த காலவர் அழுது புலம்புவது; தனது நண்பனான காலவருக்கு உதவி செய்வதற்காகக் கருடன் அங்கே வந்தது; காலவருக்காக விஷ்ணுவிடம் பரிந்து பேசியதாகக் கருடன் சொல்வது...
நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "பெரும் புத்திக்கூர்மை கொண்ட விஸ்வாமித்ரரால் இப்படிச் சொல்லப்பட்ட காலவர், அமரவோ, படுக்கவோ, உண்ணவோ முடியாத அளவுக்குத் துயரால் நிறைந்தார். பதற்றம் மற்றும் வருத்தத்திற்கு இரையாகி, மனங்கசந்து புலம்பி, குற்றவுணர்வால் ஏற்பட்ட வருத்ததால் எரிச்சலடைந்த காலவர் நிறம் மங்கி எலும்புக்கூடாய் மெலிந்தார். கவலையால் அடிக்கபட்ட அவர், ஓ! சுயோதனா {துரியோதனா}, தனது புலம்பல்களில், "செல்வாக்கு மிக்க நண்பர்களை நான் எங்குக் காண்பேன்? செல்வத்தை எங்கே அடைவேன்? என்ன சேமிப்புகளை நான் கொண்டிருக்கிறேன்? சந்திர வெளுப்பில் எண்ணூறு {800} குதிரைகளை நான் எங்கே காண்பேன்? உண்பதில் என்ன மகிழ்ச்சியை நான் அடைவேன்? இன்பநுகர் பொருட்களில்தான் எனக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கும்?
எனக்கு உயிரின் மேற் கொண்ட ஆசையும் போய்விட்டது. உயிரைக்கொண்டு எனக்குத் தேவை என்ன இருக்கிறது? பெருங்கடலின் அடுத்தக் கரைக்குச் சென்று, அல்லது பூமியில் நெடுந்தொலைவுக்குச் சென்று எனது உயிரைக் கைவிடுவேன். இந்த உயிரால் எனக்கு என்ன பயன்? ஏழையாய் இருந்து, கடும் முயற்சியற்று, வெற்றியடையாமல், வாழ்வின் அனைத்து நல்ல பொருட்களையும் இழந்து, கடனைச் சுமக்கும் ஒருவனுக்கு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? நட்பின் மூலம் நண்பனின் செல்வத்தை அனுபவித்து, அந்த நண்பனுக்குப் பதிலுதவி செய்ய முடியாதவனைப் பொறுத்தவரை, வாழ்வை விட மரணமே அவனுக்குச் சிறந்ததாகும்.
ஒரு செயலைச் செய்வதாக உறுதிகூறிய பின் அதைச் செய்யத் தவறும் ஒரு மனிதனின் அறச் செயல்கள் எல்லாம் அந்தப் பொய்மையின் விளைவால் பலன் இழக்கின்றன. பொய்மை எனும் கறை படிந்தவன், அழகு, பிள்ளைகள், பலம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை அடைய முடியாது. எனவே, அப்படிப்பட்ட ஒருவனால் எப்படி அருள்நிலையை அடைய முடியும்? நன்றிகெட்ட எந்த மனிதன்தான் புகழை ஈட்டியிருக்கிறான்? உண்மையில், அவனுக்கு இடம்தான் ஏது? மகிழ்ச்சிதான் ஏது?
ஒரு நன்றிகெட்ட மனிதனால் ஒருபோதும் மரியாதையையும், பாசத்தையும் பெற முடியாது. முக்தியும் எப்போதும் அவனுடையதாகாது. செல்வமற்ற ஒருவன், வாழக்கூட முடியாத இழிந்தவனாவான். அப்படிப்பட்ட இழிந்தவனால் தனது உறவினர்களையோ நண்பர்களையோ தாங்க முடியாது. தான் பெற்ற நன்மைகளுக்கான பதிலுதவியைச் செய்ய முடியாமல், அவன் அழிவைச் சந்திக்கிறான். என் நோக்கங்களை எனது ஆசானிடம் இருந்து அடைந்த பிறகும், அவர் கேட்பதை என்னால் கொடுக்க முடியாததால், பொய்மையின் கறை படிந்த, வளங்கள் அற்ற, நன்றிகெட்ட இழிந்தவனே நான்.
முடிந்தவரை முயற்சித்த பிறகு, நான் எனது உயிரை விடுவேன். இதற்கு முன்னர் நான் தேவர்களிடம்கூட எதையும் கேட்டதில்லை. வேள்வி செய்யும் இடத்தில் இதற்காக என்னைத் தேவர்கள் கௌரவிப்பார்கள். நானோ, மூவுலகங்களின் தெய்வீகத் தலைவனான விஷ்ணுவிடம், பாதுகாப்பினால் அருளப்பட்டிருக்கும் அனைவருக்கும் அடைக்கலமாக இருப்பவனான அந்தக் கிருஷ்ணனிடம் சென்று எனது பாதுகாப்பைக் கோரப்போகிறேன். அவனிடம் சென்று பணிந்து, துறவிகள் அனைவரிலும் உயர்ந்த நித்தியமானவனும், தேவர்கள் மற்றும் அசுரர்களின் இன்பங்கள் மற்றும் உடைமைகள் அனைத்துக்கும் காரணமானவனுமான கிருஷ்ணனைக் காண நான் விரும்புகிறேன்" என்றார் {காலவர்}.
காலவர் இப்படி அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது, அவரது {காலவரின்} நண்பனான வினதையின் மகன் கருடன் அங்கே தோன்றினான். அவருக்கு நன்மையைச் செய்ய விரும்பிய கருடன், அவரிடம் மகிழ்ச்சியாக, "நீ எனது அன்புக்குரிய நண்பனாவாய். செழிப்போடிருக்கையில், நண்பர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதில் கவனம் செலுத்த வேண்டியது ஒரு நண்பனின் கடமையாகும். ஓ! அந்தணா, நான் கொண்டிருக்கும் செழிப்பு வாசவனின் {இந்திரனின்} தம்பியான விஷ்ணுவுடையது. இதற்கு முன் நான் அவனிடம் {விஷ்ணுவிடம்} உனக்காகப் பரிந்து பேசினேன். அவன் எனது விருப்பங்களால் மகிழ்ந்தான். வா, இப்போதே நாம் இருவரும் சேர்ந்து செல்வோம். கடலின் அடுத்தக் கரைக்கோ, அல்லது பூமியில் கடைசி எல்லைக்கோ நான் உன்னை வசதியாகச் சுமந்து செல்வேன். ஓ! காலவா, தாமதிக்காதே வா" என்றான் {கருடன்}.