Garuda described the east! | Udyoga Parva - Section 108 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –37)
பதிவின் சுருக்கம் : கருடன் காலவரிடம் நான்கு திசையில் எந்தத் திசையில் செல்லலாம் எனக் கேட்டது; கிழக்குத் திசையின் தன்மைகளையும், அங்கே முற்காலத்தில் நடைபெற்ற செயல்களையும் காலவருக்குக் கருடன் எடுத்துரைத்தது...
கருடன் {காலவரிடம்} சொன்னான், "ஓ! காலவா, அனைத்து அறிவுக்கும் காரணமான தேவனால் நான் கட்டளையிடப்பட்டிருக்கிறேன். நான் உன்னைக் கேட்கிறேன். அந்தத் திசையில் என்ன இருக்கிறது என்பதைக் காண நான் உன்னை எந்தத் திசைக்கு அழைத்துச் செல்லட்டும்? கிழக்கா? தெற்கா? மேற்கா? வடக்கா, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே, ஓ! காலவா, நான் எங்கே செல்லட்டும்?" என்று கேட்டான்.
எத்திசையில் அண்டத்திற்கு ஒளியூட்டுபவனான சூரியன் உதிக்கிறானோ; எங்கே மாலை நேரங்களில் சத்யஸ்கள் தங்கள் தவத்துறவுகளில் ஈடுபடுகிறார்களோ; எங்கே அண்டம் முழுவதும் ஊடுருவியிருக்கும் அறிவு முதலில் எழுகிறதோ. எங்கே தர்மனும் அவனது இரு கண்களும் நிலைத்திருக்கின்றனவோ; எங்கே முதலில் வேள்வியில் ஊற்றப்பட்ட தெளிந்த நெய் அதன்பிறகு சுற்றிலும் வழிகிறதோ; அத்திசையிலேயே {கிழக்கு திசையிலேயே}, ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே {காலவா}, நாள் மற்றும் காலத்தின் கதவுகள் இருக்கின்றன.
அங்கேதான் புராதனமான காலங்களில், தக்ஷனின் மகள்கள் தங்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். அங்கேதான் காசியபரின் பிள்ளைகள் முதலில் பெருகினர். அந்தத் திசைதான் தேவர்களின் அனைத்துச் செழிப்புக்கும் ஊற்றுக்கண்ணாகும், ஏனெனில், இங்கேதான் சக்ரன் {இந்திரன்} தேவர்களின் தலைவனாக முடிசூட்டப்பட்டான். ஓ! மறுபிறப்பாள முனிவா {காலவா}, இந்திரனும் தேவர்களும் இங்கேதான் தங்கள் தவங்களை இயற்றினர். ஓ! அந்தணா {காலவா}, அதன் காரணமாகவே இந்தத் திசை (முதலில்) பூர்வம் என்று அழைக்கப்பட்டது. காலங்களின் ஆதியில் இத்திசையில் சூரர்கள் {தேவர்கள்} பரவியிருந்ததன் காரணமாகவே இது பூர்வம் என்று அழைக்கப்பட்டது. செழிப்பை விரும்பிய தேவர்கள் தங்கள் அறச்சடங்குகள் அனைத்தையும் இங்கேயே செய்தனர். இங்கேதான் தெய்வீகப் படைப்பாளன் {பிரம்மன்} வேதங்களை முதலில் பாடினார்.
புனித பாடல்களை ஓதுவோருக்கு இங்கேதான் சூரியன் முதலில் காயத்ரியைப் {காயத்ரி மந்திரத்தைப்} போதித்தான். ஓ! அந்தணர்களில் சிறந்தவனே {காலவா}, இங்கேதான் சூரியன் {யாக்ஞவல்கியருக்கு} யஜூர் வேதத்தை வழங்கினான். வரங்களால் புனிதப்படுத்தப்பட்ட சோமச்சாறு {சோமபானம்}, இங்கேதான் வேள்விகளில் சூரர்களால் {தேவர்களால்} முதலில் பருகப்பட்டது. (மந்திரங்களால் நிறைவடைந்த) ஹோம நெருப்புகளால் இங்கே தான் உறவுள்ள தோற்றமுடைய {உடன்பிறந்த} பொருட்கள் முதலில் பருகப்பட்டன [1].
[1] வேள்வியில் நீர்க்காணிக்கைகளாகப் பயன்படுத்தப்படும் தெளிந்த நெய், பால் மற்றும் {சோமம் போன்ற} பிற பொருட்களே உறவுள்ள தோற்றமுடைய {உடன்பிறந்த} பொருட்களாகும்.
இங்கேதான் வருணன் முதலில் பாதாள உலகத்திற்குச் சென்று தனது செழிப்பு அனைத்தையும் அடைந்தான். ஓ! இரு பிறப்பாளர்களில் {பிராமணர்களில்} காளையே {காலவா}, இங்கேதான், பழங்கால வசிஷ்டரின் பிறப்பு, வளர்ச்சி, மரணம் ஆகியன நேரிட்டன. இங்கேதான் முதலில் நூறு பல்வேறு கிளைகளைக் கொண்ட ஓம் வளர்ந்தது [2]. {இங்கேதான் ஓங்காரத்தின் பதினாயிரம் வழிகள் உண்டாயின}.
[2] அனைத்தின் தோற்றமும், புதிர் நிறைந்ததுமான {ஓம் என்ற} பிரணவ மந்திரத்தின் உப பிரிவுகள் அனைத்தும் இங்கேதான் {கிழக்கு திசையில்தான்} முதலில் பிரகடனப்படுத்தப்பட்டன என்பதே இங்கே பொருள். ஆனால், வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவையும் மற்றும் சுருதிகளிலும் ஸ்ம்ருதிகளிலும் உள்ள பல்வேறு கிளைகளின் தோற்றத்தையும் இது குறிக்கிறது என நீலகண்டர் கருதுகிறார் என்று கங்குலி சொல்கிறார்.
இங்கேதான் புகையை உண்ணும் {தூம்பர்கள் என்ற} முனிவர்கள் வேள்வி நெருப்புகளில் புகையாக {தூமமாக} இருக்கின்றனர். இந்தப் பகுதியில்தான் கூட்டங்கூட்டமாகப் பன்றிகளும், பிற விலங்குகளலும், சக்ரனால் {இந்திரனால்} கொல்லப்பட்டு, அவை தேவர்களுக்கு வேள்விப்பாகமாகக் காணிக்கையாக்கப்பட்டன. இங்கேதான் ஆயிரங்கதிர் கொண்ட சூரியன் சினத்துடன் எழுந்து, மனிதர்களில் தீயவர்களையும், நன்றிகெட்டவர்களையும், அசுரர்களையும் விழுங்குகிறான். இதுவே {கிழக்கு திசையே} மூன்று உலகங்களின் வாயிலாக இருக்கிறது. இதுவே சொர்க்கத்திற்கும் இன்ப நிலைக்கும் வழியாகும். இந்தத் திசையே பூர்வம் {கிழக்குத் திசை} என்று அழைக்கப்படுகிறது.
உனக்கு விருப்பம் இருந்தால் நாம் அங்கே செல்வோம். நான் எப்போதும் எனக்கு நண்பனாய் இருப்பவர்களுக்கு ஏற்புடையதையே செய்வேன். ஓ! காலவா, சொல். வேறு ஏதாவது திசையில் உனக்கு விருப்பமிருந்தால், நாம் அங்கே செல்லலாம். மற்றொரு திசையைக் குறித்தும் நான் சொல்வதைக் கேள்" என்றான் {கருடன்}.