"I will make feel the truth" said Krishna! | Udyoga Parva - Section 73 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –2)
பதிவின் சுருக்கம் : வெற்றியும் மரணமும் க்ஷத்திரியனின் கடமை; கோழைத்தனம் மெச்சத்தகுந்ததல்ல என்று யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் சொல்வது; கௌரவர்களிடம் மிதமாக, மென்மையாக நடந்து கொண்டால் யுதிஷ்டிரனால் தனது நாட்டைத் திரும்பப் பெற முடியாது என்று சொன்னது; தீச்செயல் செய்துவிட்டு அதற்காக வெட்கப்படாத துரியோதனன், அதன் காரணமாக முன்பே இறந்து விட்டான் என்று சொன்னது; பாண்டவர்கள் அனாதரவாக விடப்பட்டத்தையும், திரௌபதிக்கு நேர்ந்த அவமானத்தையும் நினைவூட்டி, துரியோதனன் கொல்லத்தக்கவன் என்று சொன்னது; குருக்களிடம் சென்று, அங்கே கூடியிருக்கும் மன்னர்களிடம் யுதிஷ்டிரனின் அறச்செயல்களையும், துரியோதனனின் தீமைகளையும் எடுத்துரைக்கப் போவதாகச் சொன்னது; தான் சென்று விரைந்து திரும்பி விடுவதாகவும், பாண்டவர்களின் படையைப் போருக்குத் தயாராக நிறுத்தும்படியும் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "நான் சஞ்சயரின் வார்த்தைகளைக் கேட்டேன். இப்போது உம்முடையவற்றையும் கேட்டேன். அவரது {சஞ்சயரின்} நோக்கங்களையும் உம்முடையவற்றையும் குறித்த அனைத்தையும் நான் அறிவேன். உமது இதயம் அறத்தை நோக்குகிறது, அதே வேளையில் அவர்களது {கௌரவர்களது} இதயமோ பகைமையை நோக்கி இருக்கிறது. போரில்லாமல் கிடைக்கும் எதுவும் உமக்கு மதிப்பு மிக்கதே.
ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, நீண்ட நாள் பிரம்மச்சாரியாக இருப்பது க்ஷத்திரியனின் கடமையாகாது. உண்மையில், க்ஷத்திரியர்கள் பிச்சையால் தங்களைத் தாங்கிக் கொள்ளக்கூடாது என்றே நான்கு வகைகளைச் சேர்ந்த மனிதர்களும் சொல்லியிருக்கின்றனர். போர்க்களத்தில் வெற்றி அல்லது மரணம் என்பது படைப்பாளனால் நிலையானதாக விதிக்கப்பட்டுள்ளது; அதுவே க்ஷத்திரியனின் கடமையும் கூட. (க்ஷத்திரியரில்) கோழைத்தனம் மெச்சத்தகுந்ததல்ல. ஓ! யுதிஷ்டிரரே, ஓ! வலிய கரங்கள் கொண்டவரே, கோழைத்தனத்தால் வாழ்வாதாரம் சாத்தியமல்ல. உமது வீரத்தை வெளிப்படுத்தி, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, உமது எதிரிகளை வீழ்த்துவீராக.
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, திருதராஷ்டிரரின் பேராசை கொண்ட மகன் {துரியோதனன்}, (பல மன்னர்களுடன்) நீண்ட காலம் வாழ்ந்ததால், {அவர்களுடன் ஏற்பட்ட} பாசத்தாலும் நட்பாலும் மிகுந்த பலவானாகி விட்டான். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உம்முடன் அவன் {துரியோதனன்} சமாதானம் கொள்வான் என்பதில் {எனக்கு} நம்பிக்கையே இல்லை. பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் பிறர் தங்களோடு இருப்பதால், அவர்கள் {கௌரவர்கள்} தங்களைப் பலவான்களாகக் கருதுகிறார்கள்.
ஓ! மன்னா, ஓ! எதிரிகளை வாட்டுபவரே {யுதிஷ்டிரரே}, நீர் எவ்வளவு காலம் அவர்களோடு மென்மையாகப் பழகுகிறீரோ, அவ்வளவு காலம் உமது நாட்டை அவர்களே வைத்துக் கொள்வர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, {நீர் காட்டும்} கருணையாலோ, மென்மையாலோ, நீதியுணர்வின் காரணத்தாலோ, திருதராஷ்டிரர் மகன்கள் உமது விருப்பங்களை நிறைவேற்ற மாட்டார்கள்.
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அவர்கள் உம்மோடு சமாதானம் செய்ய மாட்டார்கள் என்பதற்கு இது மற்றுமொரு சாட்சியாகும். உம்மைக் கோவணத்துடன் {Kaupina} தள்ளி, உமக்கு ஆழ்ந்த வலியை உண்டாக்கிய அவர்கள் {கௌரவர்கள்}, அதற்காக வருத்தமடையவில்லை. ஈகை, மென்மை, சுயக்கட்டுபாடு, அறம், கடும் நோன்புகள் ஆகியவற்றைக் கொண்ட உம்மை, பாட்டன் {பீஷ்மர்}, துரோணர், ஞானியான விதுரர், மற்றும் பல புனிதமான அந்தணர்கள், மன்னன் {திருதராஷ்டிரர்}, குடிமக்கள் மற்றும் கௌரவர்களில் முக்கியத் தலைவர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஏமாற்றுகரமாகப் பகடையில் வீழ்த்திய கொடூரனான துரியோதனன், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} தனது அந்தத் தீயச் செயலுக்காக வெட்கப்படவில்லையே.
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இத்தகு மனநிலை கொண்ட அந்த இழிந்தவனுக்கு {துரியோதனனுக்கு} நீர் எந்த இரக்கத்தையும் காட்டாதீர். அனைவரின் கைகளாலும் மரணத்தைப் பெற அவர்கள் தகுந்தவர்களே எனும்போது, ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, உம்மால் கொல்லப்பட அவர்கள் எவ்வளவு தகுந்தவர்கள்? ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, மகிழ்ச்சியுடன் பல தற்பெருமைப் பேச்சுகளில் ஈடுபட்டவனும், தனது தம்பிகளுடன் கூடியவனுமான துரியோதனன், எப்படிப்பட்ட முறையற்ற பேச்சுகளால் உம்மையும் உமது தம்பிகளையும் துன்புறுத்தினான்?
அவன் {துரியோதனன்}, "இந்தப் பரந்த பூமியில் இப்போது பாண்டவர்கள் தங்களுக்கென்று எதையும் கொண்டிருக்கவில்லை. அவர்களது {பாண்டவர்களது} குலமும் பெயர்களும் கூட அழிந்து போகும். முடிவிலா காலத்தில், தோல்வி மட்டுமே அவர்களுடையதாகும். அவர்களது அறங்கள் அனைத்தும் என்னில் கலந்து, ஐம்பூதங்களாக அவர்கள் குறைக்கப்பட்டுவிட்டனர்." என்று சொன்னான்.
பகடையாட்டம் நடந்து கொண்டிருந்த போது, பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரின் முன்னிலையில், தீய ஆன்மா கொண்ட இழிந்தவனான துச்சாசனன், பாதுகாப்பற்ற ஒருத்தியைப் போல, அழுது கொண்டிருக்கும் மங்கையான திரௌபதியின் கூந்தலைப் பற்றி மன்னர்களின் சபைக்கு இழுத்து வந்து, மீண்டும் மீண்டும் அவளை {திரௌபதியை} "மாடே, மாடே" என்று அழைத்தான். பயங்கர ஆற்றல்படைத்த உமது சகோதரர்கள், உம்மால் தடுக்கப்பட்டு, அறத்தின் கட்டுகளுக்குக் கட்டுப்பட்டு, பழிதீர்க்க எதுவும் செய்யவில்லை; அதன் பிறகு, நீங்கள் காட்டிற்கு நாடுகடத்தப்பட்ட பிறகும், தனது உறவினர்களுக்கு மத்தியில் இத்தகு வார்த்தைகளையும், மேலும் கொடும் வார்த்தைகளைச் சொல்லி, துரியோதனன் தற்பெருமை பேசினான்.
நீர் {குற்றமற்ற) அப்பாவி என்பதை அறிந்தும், அங்கே கூடியிருந்தவர்கள் அந்தச் சபாமண்டபத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு அடைபட்ட குரலுடன் அழுது கொண்டிருந்தார்கள். அந்தணர்களோடு அங்கே கூடியிருந்த மன்னர்கள் இதற்காக அவனை {துரியோதனனை} மெச்சவில்லை. உண்மையில், அங்கே இருந்த சபை உறுப்பினர்கள் அனைவரும் அவனை {துரியோதனனை} நிந்திக்கவே செய்தனர்.
ஓ! எதிரிகளை வாட்டுபவரே {யுதிஷ்டிரரே}, நற்குலத்தில் பிறந்தவனுக்கு நிந்தனையே கூட மரணமாகும். பழி நிறைந்த வாழ்வை வாழ்வதை விட மரணமே பல மடங்கு சிறந்ததாகும். பூமியின் மன்னர்கள் அனைவராலும் நிந்திக்கப்பட்டும், வெட்கமடையாத அவன் {துரியோதனன்}, அப்போதே இறந்துவிட்டான். தனது குணத்தை இவ்வளவு அருவருக்கத்தக்கதாக அமைத்துக் கொண்ட ஒருவன், ஒரே பலவீனமான வேரில் நிமிர்ந்து நிற்கும் வேரற்ற மரத்தைப் போல எளிதில் அழிவடைவான். பாவம் நிறைந்த, தீய மனம் படைத்த துரியோதனன், பாம்பைப் போல அனைவர் கையாலும் சாகத் தகுந்தவனாவான். எனவே, எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அவனை {துரியோதனனைக்} கொன்றுவிடும். சற்றும் தயங்காதீர்.
ஓ! பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, உமது தந்தையான திருதராஷ்டிரருக்கும், பீஷ்மருக்கும் நீர் மரியாதை செலுத்துவதை நானும் விரும்புகிறேன், உமக்கும் அது தகும். துரியோதனனின் தீமைகளைக் குறித்து முடிவெடுக்க முடியாமல் இருக்கும் மனிதர்களின் சந்தேகங்கள் அனைத்தையும் நான் அங்கே {ஹஸ்தினாபுரம்} சென்று நீக்கிவிடுவேன். அங்கே, நான், மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும், அனைத்து மனிதர்களிடமும் காண முடியாதவையும், உம்மில் இருப்பவையுமான அறங்கள் அனைத்தையும், மேலும், துரியோதனனின் தீமைகள் அனைத்தையும் பட்டியலிடுவேன்.
அறம் மற்றும் பொருள் நிறைந்த நல்ல வார்த்தைகளை நான் பேசுவதைக் கேட்கும் பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்கள், {யுதிஷ்டிரனாகிய} உம்மை, அறம்சார்ந்த ஆன்மா கொண்டவராகவும், உண்மையைப் பேசுபவராகவும் கருதுவார்கள். அதே வேளையில், துரியோதனன் எவ்வளவு பேராசை கொண்டவன் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். அங்கே கூடியிருக்கும் குடிமக்கள் மற்றும் அந்த நாட்டில் வசிப்பவர்கள் ஆகிய இருவரிடமும், இளையவர் மற்றும் முதியவர் ஆகிய இருவரிடமும், நால் வகை மக்கள் அனைவரிடமும், துரியோதனனின் தீமைகளை எடுத்துச் சொல்வேன்.
நீர் சமாதானத்தைக் கேட்பதால் யாரும் உம்மைப் பாவம் நிறைந்தவன் என்று குற்றஞ்சாட்டமாட்டார்கள். அதே வேளையில், பூமியின் தலைவர்கள் அனைவரும் குருக்களையும் {கௌரவர்களையும்}, திருதராஷ்டிரரையும் நிந்திப்பார்கள். மனிதர்கள் அனைவராலும் கைவிடப்பட்டதன் விளைவால் துரியோதனன் கொல்லப்பட்டால், மேற்கொண்டு செய்வதற்கு எதுவும் இருக்காது. எனவே, செய்ய வேண்டியதை இப்போதே செய்வீராக.
குருக்களிடம் {கௌரவர்களிடம்} சென்று, உங்கள் விருப்பங்களைத் தியாகம் செய்யாமல் அமைதியேற்படுத்த முயன்று, அவர்களது போர் எண்ணத்தையும், அவர்களது ஏற்பாடுகளையும் குறித்துக் கொண்டு, ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, உமது வெற்றிக்காக நான் விரைந்து வருவேன். எதிரியிடம் போர் நிச்சயம் என்றே நான் நினைக்கிறேன். நான் காணும் சகுனங்கள் அனைத்தும் அதையே குறிக்கின்றன. முன்னிரவு நேரத்தில், பறவைகளும், விலங்குகளும் பயங்கமாக அலறுகின்றன. யானைகள் மற்றும் குதிரைகளில் முதன்மையாவை கொடூர உருவங்களைக் கொள்கின்றன. நெருப்பே கூடப் பல்வேறு வகைகளில் பயங்கர வண்ணங்களை வெளிப்பட்டுத்துகின்றன! உலகத்தை அழிக்கப்போகும் பேரழிவு நமக்கு மத்தியில் வந்திருப்பதாலேயே வழக்கத்திற்கு மாறான இவற்றை நாம் காண்கிறோம்.
ஆயுதங்கள், பொறிகள், கவசங்கள், தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைத் தயார் செய்தபடி உமது வீரர்கள் அனைவரும் போருக்குத் தயாராக இருக்கட்டும். அவர்கள், தங்கள் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களைக் கவனித்துக் கொள்ளட்டும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, வரப்போகும் போரில் உமக்குத் தேவையான அனைத்தையும் சேகரித்துக் கொள்ளும். துரியோதனன் எவ்வளவு காலம் வாழ்கிறானோ, அவ்வளவு காலம் அவனால் உமக்கு எவ்வழியிலும் {நாட்டைத்} திருப்பிக் கொடுக்க இயலாது. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, செழிப்பு மிகுந்த உமது நாட்டை அவன் {துரியோதனன்} பகடை கொண்டு உம்மிடம் கைப்பற்றினான்" என்றான் {கிருஷ்ணன்}.