The advice of Vidura! | Udyoga Parva - Section 87 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –16)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனின் நற்பண்புகளை எடுத்துரைத்த விதுரன், தற்போதைய அவனது செயல்பாடுகளுக்காக அவனைக் கடிந்து கொண்டது; கிருஷ்ணனுக்குக் கொடுக்க நினைப்பதெல்லாம் திருதராஷ்டிரனின் அறநோக்கமோ, கிருஷ்ணன் விரும்பியதைக் கொடுப்பதோ அல்ல என்றும், பாண்டவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்கத் திருதராஷ்டிரன் விரும்பவில்லை என்பதே வெளிப்படை என்றும் விதுரன் சொல்வது; கிருஷ்ணன் சமாதான நோக்கத்துக்கு வருவதால், அவனது அறிவுரைப்படி நடப்பதே நல்ல விருந்தோம்பல் என்று விதுரன் திருதராஷ்டிரனை இடித்துரைப்பது...
விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, மூவுலகத்தாலும் நீர் மதிக்கப்படுகிறீர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் அனைவராலும் விரும்பப்பட்டு மதிக்கப்படுகிறீர். முதிர்ந்தவரான நீர் இந்த வயதில் சொல்வது எதுவும் சாத்திர விதிகளுக்கும், நன்கு செலுத்தப்பட்ட அறிவின் முடிவுக்கும் முரணாக இருக்க இயலாது. ஏனெனில் உமது மனம் எப்போதும் அமைதியாகவே இருக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்லில் உள்ள எழுத்துகள், சூரியனின் ஒளி, பெருங்கடலின் அலை ஆகியவை போல உம்முள் அறம் நிரந்தரமாகவே வசிக்கிறது.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது எண்ணிலடங்கா அறங்களின் விளைவாக அனைவரும் மதிக்கப்பட்டு, மகிழ்ச்சியூட்டப்படுகிறார்கள். எனவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய நீர் உமது அறங்களைத் தக்கவைத்துக் கொள்ள முயல்வீராக. உமக்கு அன்பான உறவினர்கள், நண்பர்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உமது மகன்களின் மொத்த அழிவுக்கு மூடத்தனத்தால் நீரே காரணமாகாதீர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருந்தினனாக வரும் கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} நீர் அதிகமாகவே கொடுக்க விரும்புகிறீர். எனினும், கேசவன் {கிருஷ்ணன்} இதைவிட எல்லாம் இன்னும் இன்னும் அதிகமாகப் பெறத் தகுந்தவன், ஏன் மொத்த உலகத்தையுமே கூடப் பெறத் தகுந்தவனே.
உண்மையாக எனது ஆத்மாவின் {உயிரின்} மேல் ஆணையாக நான் சொல்கிறேன், இவை யாவையும், அறநோக்கத்தாலோ, அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஏற்புடையதைச் செய்யும் நோக்கத்தாலோ நீர் கிருஷ்ணனுக்குக் கொடுக்கவில்லை. ஓ! பெரும் செல்வத்தைக் கொடுப்பவரே {திருதராஷ்டிரரே}, இவை யாவும் மோசடி, பொய் மற்றும் நேர்மையற்ற {உமது} தன்மையையே காட்டுகிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வெளிப்புறச் செயல்களால் {மறைக்கப்பட்ட} உமது கமுக்கமான {இரகசிய} காரியங்களை நான் அறிவேன்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஐந்து பாண்டவர்களும் ஐந்து கிராமங்களை மட்டுமே விரும்புகின்றனர். எனினும், நீர் அவற்றைக்கூட அவர்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை. ஆகவே, நீர் {அவர்களுடனான} சமாதானத்துக்கு உடன்பட விரும்பவில்லை. வலிய கரங்களைக் கொண்ட அந்த விருஷ்ணி குலத்து வீரனை {கிருஷ்ணனை}, உமது செல்வத்தைக் கொண்டு உமதாக்க முயல்கிறீர்; ஆனால் அடியிலோ, இதன் மூலம் பாண்டவர்களிடம் இருந்து கேசவனை {கிருஷ்ணனை} நீர் பிரிக்க முயல்கிறீர்.
எனினும், செல்வத்தாலோ, கவனிப்பாலோ, வழிபாட்டாலோ தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து கிருஷ்ணனை உம்மால் பிரிக்க இயலாது என நான் உமக்குச் சொல்கிறேன். கிருஷ்ணனின் பெருமையை நான் அறிவேன்; அர்ஜுனனிடம் அவன் {கிருஷ்ணன்} கொண்டிருக்கும் உறுதியான அர்ப்பணிப்பை நான் அறிவேன்; கேசவனின் {கிருஷ்ணனின்} உயிரான தனஞ்சயனை {அர்ஜுனனை} கிருஷ்ணனால் விட முடியாது என்பதையும் நான் அறிவேன். நீர்ப்பாத்திரத்தால் தனது காலைக் கழுவுவதைத் தவிர, (வழக்கமான} நலன் விசாரிப்புகளைத் தவிர, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} வேறு எந்த விருந்தோம்பலையும் ஏற்கவோ, வேறு பொருளின் மீது தனது கண்களை நிலைக்க வைக்கவோ {செலுத்தவோ} மாட்டன்.
எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து மரியாதைகளுக்கும் தகுதி வாய்ந்த அந்த ஒப்பற்றவனுக்கு {கிருஷ்ணனுக்கு} மிகவும் ஏற்புடைய விருந்தோம்பலைக் கொடுப்பீராக. ஏனெனில், ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} கொடுக்கக்கூடாத எந்த மரியாதையும் கிடையாது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இருதரப்புக்கும் நன்மை விளைவிக்கும் நோக்கத்துடன் அவன் {கிருஷ்ணன்} குருக்களிடம் வருகிறான். அவன் எதிர்பார்க்கும் அந்த நோக்கத்துக்கு உகந்தவற்றை அந்தக் கேசவனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} கொடுப்பீராக. துரியோதனனை ஒருபுறத்திலும், பாண்டவர்களை மறுபுறத்திலும் கொண்டு உங்களுக்குள் சமாதானத்தை நிறுவவே கேசவன் {கிருஷ்ணன்} விரும்புகிறான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனது ஆலோசனைகளைப் பின்பற்றுவீராக. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் அவர்களுக்குத் தந்தையும்; பாண்டவர்கள் உமக்கு மகன்களுமாவர். நீர் முதிர்ந்தவர், அவர்களோ வயதால் உமக்குச் சிறுபிள்ளைகளே. பிள்ளைகளின் மனநிலையில் இருந்து உம்மை மதிக்கும் அவர்களிடம் தந்தையாக நடந்து கொள்ளும்" என்றான் {விதுரன்}.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இருதரப்புக்கும் நன்மை விளைவிக்கும் நோக்கத்துடன் அவன் {கிருஷ்ணன்} குருக்களிடம் வருகிறான். அவன் எதிர்பார்க்கும் அந்த நோக்கத்துக்கு உகந்தவற்றை அந்தக் கேசவனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} கொடுப்பீராக. துரியோதனனை ஒருபுறத்திலும், பாண்டவர்களை மறுபுறத்திலும் கொண்டு உங்களுக்குள் சமாதானத்தை நிறுவவே கேசவன் {கிருஷ்ணன்} விரும்புகிறான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனது ஆலோசனைகளைப் பின்பற்றுவீராக. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் அவர்களுக்குத் தந்தையும்; பாண்டவர்கள் உமக்கு மகன்களுமாவர். நீர் முதிர்ந்தவர், அவர்களோ வயதால் உமக்குச் சிறுபிள்ளைகளே. பிள்ளைகளின் மனநிலையில் இருந்து உம்மை மதிக்கும் அவர்களிடம் தந்தையாக நடந்து கொள்ளும்" என்றான் {விதுரன்}.