"I will imprison Krishna!" said Duryodhana | Udyoga Parva - Section 88 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –17)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனைக் குறித்து விதுரன் சொன்னது உண்மையே, இருப்பினும் அச்சத்தால் செய்கிறோம் என்று அவன் நினைக்கக்கூடும் என்பதால் கிருஷ்ணனுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்று துரியோதனன் சொன்னது; கிருஷ்ணனை அவமதிக்கக்கூடாதென்றும், பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொள்வதே சிறந்தது என்றும் பீஷ்மர் சொல்வது; கிருஷ்ணனை சிறையில் அடைத்து, பாண்டவர்களைப் பணிய வைக்கப் போவதாகத் துரியோதனன் சொன்னது; இதற்காகத் துரியோதனனை நிந்தித்த பீஷ்மர், கோபத்தில் அவையை விட்டு எழுந்து சென்றது...
துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}சொன்னான், "உண்மையில் கிருஷ்ணனைக் குறித்து விதுரர் சொன்னது அனைத்தும் உண்மையாகவே சொல்லப்பட்டிருக்கிறது; ஏனெனில் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} பாண்டவர்களிடம் பெரும் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும், அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவும் இருக்கிறான். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} அளிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்ட பல்வேறு வகையான செல்வங்களில் ஒன்றையும் அவனுக்குக் கொடுக்கக்கூடாது. நிச்சயமாக, கேசவன் {கிருஷ்ணன்} நமது வழிபாட்டுக்குத் தகுந்தவனே, ஆனால் காலமும் இடமும் அதற்கு எதிராக இருக்கின்றன. ஏனெனில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {கிருஷ்ணன்} நமது வழிபாட்டைப் பெற்றால், அவன் {கிருஷ்ணன்} மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நாம் அவனை வழிபடுகிறோம் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அறிவார்ந்த ஒரு க்ஷத்திரியன் தனக்கு அவமானத்தைத் தரக்கூடிய ஒரு காரியத்தைச் செய்யக்கூடாது, என்பதே எனது உறுதியான நம்பிக்கை. மூவுலகங்களிலும் உள்ள மிகுந்த மரியாதைக்குரிய வழிபாட்டுக்கும் தகுந்தவனே நீண்ட கண் கொண்ட கிருஷ்ணன் என்பதை நான் நன்கறிவேன். எனவே, ஓ! ஒப்பற்ற மன்னா {திருதராஷ்டிரரே}, இப்போது நாம் அவனுக்கு எதையும் கொடுப்பதற்கு எந்த இடமும் இல்லை. ஏனெனில் போர் என்பது தீர்மானிக்கப்பட்ட பிறகு, அது விருந்தோம்பலால் தள்ளிப்போகக்கூடாது" என்றான் {துரியோதனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவனது {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட குருக்களின் பாட்டன் {பீஷ்மர்}, விசித்திரவீரியனின் அரச மகனிடம் {திருதராஷ்டிரனிடம்}, "வழிபடப்பட்டாலோ, வழிபடப்படாவிட்டலோ ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} கோபமடைய மாட்டான். எனினும், யாரும் அவனை அவமதிக்க முடியாது. ஏனெனில, கேசவன் அலட்சியப்படுத்தத்தக்கவன் அல்ல. ஓ! வலிமைவாய்ந்தவனே {திருதராஷ்டிரா}, அவன் {கிருஷ்ணன்} என்ன செய்ய நோக்குகிறானோ, அதை, எவராலும், தனது அதிகாரம் அனைத்தினாலும், எந்த வகையிலும் தடுக்க முடியாது. வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணன் சொல்வதைத் தயங்காமல் செய்வாயாக. வாசுதேவனை {கிருஷ்ணனை} வழியாகக் கொண்டு பாண்டவர்களிடம் சமாதானம் கொள்வாயாக. உண்மையில், அறம் சார்ந்த ஆன்மா கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அறம் மற்றும் பொருளுக்கு உகந்ததையே சொல்வான். எனவே, உனது நண்பர்கள் அனைவருடனும் கூடிய நீ, அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஏற்புடையதை மட்டும் சொல்வதே உனக்குத் தகும்" என்றார் {பீஷ்மர்}.
துரியோதனன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா {பிதாமஹரே, பீஷ்மரே}, நான் எந்த வகையிலும், இந்த எனது பெருகும் செழிப்பைப் {செழிப்பு நிறைந்த நாட்டைப்} பாண்டவர்களுடன் பகிர்ந்து கொண்டு வாழ முடியாது. உண்மையில், நான் இப்போது எட்டியிருக்கும் இந்தத் தீர்மானம் பெரியதாகும். அதைக் கேளும். பாண்டவர்களுக்குப் புகலிடமாய் இருக்கும் ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} நான் சிறை பிடிப்பேன். நாளை காலை அவன் {கிருஷ்ணன்} இங்கே வருவான்; அவன் {கிருஷ்ணன்} இங்கு அடைபட்டிருக்கும்போது, விருஷ்ணிகளும், பாண்டவர்களும், ஏன் இந்த முழு உலகமும் எனக்கு அடிபணியும். ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} நமது நோக்கத்தை யூகிக்க முடியாதபடி அதை நிறைவேற்றவும், அதன் காரணமாக நமக்கு எந்த ஆபத்தும் நேராமல் இருக்கவும் உள்ள வழிமுறைகள் என்ன என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான் {துரியோதனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கிருஷ்ணனைச் சிறைபிடிக்கப் போவதாக, தனது மகன் {துரியோதனன்} சொன்ன அச்சம் தரும் வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், தனது ஆலோசகர்களுடன் சேர்ந்து மிகவும் துன்புற்று ஆழமாகக் காயமடைந்தான். பிறகு மன்னன் திருதராஷ்டிரன் துரியோதனனிடம், "ஓ! மனிதர்களில் ஆள்பவனே {துரியோதனா}, மீண்டும் இதை ஒருபோதும் சொல்லாதே. இது பழங்கால வழக்கமல்ல. ரிஷிகேசன் {கிருஷ்ணன்} இங்கே தூதனாக வருகிறான். அஃது ஒருபுறமிருக்க, அவன் {கிருஷ்ணன்} நமது உறவினனும், நமது அன்புக்குரியவனும் ஆவான். அவன் நமக்கு எந்தத் தவறையும் செய்யவில்லை; பிறகு எப்படி அவன் சிறையிலடைக்கப்படத் தகுந்தவனாவான்?" என்றான் {திருதராஷ்டிரன்}.
பீஷ்மர் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! திருதராஷ்டிரா, இந்த உனது தீய மகனுக்கான {துரியோதனனுக்கான} காலம் வந்துவிட்டது. தனது நலன் விரும்பிகளால் வேண்டப்பட்டாலும், நன்மையையல்லாமல் அவன் தீமையையே தேர்ந்தெடுக்கிறான். தன் நலன் விரும்பிகளின் வார்த்தைகளைக் கேட்காமல், முள் நிறைந்த பாதையில் நடந்து பாவச் சூழலைக் கொண்ட இந்த இழிந்த தீயவனையே {துரியோதனனையே} நீயும் தொடர்ந்து பின்பற்றிச் செல்கிறாய். கறைபடியா செயல்களைக் கொண்ட கிருஷ்ணனின் தொடர்பு ஏற்படும்போது {கிருஷ்ணனை துரியோதனன் சந்திக்கும்போது}, தனது ஆலோசகர்களுடன் கூடிய இந்த உனது மிகத் தீய மகன் {துரியோதனன்}, அந்தக் கணத்திலேயே அழிக்கப்படுவான். அறம் அனைத்தையும் கைவிட்டிருக்கும் இழிந்தவனும், தீயவனுமான இந்தப் பாவம் நிறைந்தவனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்கத் துணிய மாட்டேன்" என்றார் {பீஷ்மர்}.
கலங்கடிக்கப்படமுடியா ஆற்றல் கொண்டவரும், பாரதக் குலத்தின் முதிர்ந்த தலைவருமான அந்தப் பீஷ்மர், இதைச் சொல்லிவிட்டு, கோபத்தால் தூண்டப்பட்டு, எழுந்து, அந்த இடத்தைவிட்டு அகன்றார்" என்றார் {வைசம்பாயனர்}.