Thursday, September 03, 2015

பாண்டவர்களின் எதிர்வியூகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 019

The Counter array of the Pandavas! | Bhishma-Parva-Section-019 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 7)

பதிவின் சுருக்கம் : பாண்டவப் படையின் புறப்பாடு; அந்தப் படைக்குத் தலைமையேற்றவர்கள், அந்தப் படையால் வகுக்கப்பட்ட எதிர்வியூகம், பீமசேனனின் ஆற்றல், போர் தொடங்குவதற்கு முன்னர் ஏற்பட்ட சகுனங்கள் ஆகியவற்றைத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "நமது பதினோரு {11} அக்ஷௌஹிணிகள் போருக்காக அணிவகுக்கப்பட்டிருப்பதைக் கண்ட பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், எண்ணிக்கையில் குறைந்த தனது படையைக் கொண்டு எவ்வாறு எதிரணிவகுத்தான்? ஓ! சஞ்சயா, மனித, தேவ, கந்தர்வ, அசுர மற்றும் அனைத்து வகை அணிவகுப்புகளையும் அறிந்த பீஷ்மருக்கு எதிராக அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} எப்படி எதிரணிவகுத்தான்?" என்று கேட்டான்.அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "திருதராஷ்டிரப் படைப்பிரிவுகள் போருக்காக அணிவகுக்கப்பட்டிருப்பதைக் கண்டவனும், அறம்சார்ந்த ஆன்மா கொண்ட பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, "எண்ணிக்கையில் குறைந்தவர்களை, ஒடுங்கிக் குவிந்து {ஒன்றுசேர்ந்து} போரிட வைக்க வேண்டும். அதே வேளையில், பலராக இருப்பவர்களை விருப்பப்படி {தனித்தனியாகப் பிரித்து} பரந்திருக்கச் செய்ய வேண்டும். சிலர், பலரோடு மோதும் மோதல்களில், வகுக்கப்படும் அணிவகுப்பானது, ஊசி முனை கொண்டதாக {சூசீமுக வியூகம்} வடிக்கப்பட வேண்டும் என்ற பெரும் முனிவர் பிருஹஸ்பதியின் வார்த்தைகளே மனிதர்களுக்குச் சொல்லப்படுகிறது. எதிரிகளுடன் ஒப்பிடுகையில் நமது துருப்புகள் குறைவானதே. ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அந்தப் பெரும் முனிவரின் {பிருஹஸ்பதியின்} பார்வையைக் கருத்தில் கொண்டு நமது துருப்புகளை அணிவகுப்பாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.

இதைக் கேட்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பதிலளிக்கும் வகையில், "வஜ்ரந்தாங்கியால் {இந்திரனால்} வடிமைக்கப்பட்டதும், வஜ்ரம் என்ற பெயரால் அறியப்படுவதுமான அசைக்கப்பட முடியாத {உறுதியான} அணிவகுப்பு {வஜ்ர வியூகம்} ஒன்று உள்ளது. ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, அந்த ஒப்பற்ற அணிவகுப்பையே {வியூகத்தையே}, நான் உமக்காக அமைக்கப் போகிறேன். வெடிக்கும் சூறாவெளியைப் போன்றவரும், போரில் எதிரியால் தாங்கிக்கொள்ளப்பட முடியாதவரும், அடிப்பவர்களில் முதன்மையானவருமான பீமர் நமக்குத் தலைமையில் போரிடுவார். போரின் அனைத்துப் பயன்பாடுகளையும் அறிந்தவரான அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீமர்}, நமக்குத் தலைவராகி, படையின் முன்னணியில் போரிட்டு, எதிரிகளின் சக்தியை நசுக்குவார்.

அடிப்பவர்களில் முதன்மையான பீமரைக் காணும் துரியோதனன் தலைமையிலான பகையணி வீரர்கள், சிங்கத்தைக் கண்ட சிறு விலங்குகளைப் போலப் பீதியில் ஓடிப் போவார்கள். அத்தகைய அவர் {பீமர்} சுவராக இருந்து நமது புகலிடமானால், இந்திரனின் பாதுகாப்பை நாடும் தேவர்களைப் போல நாம் அனைவரும் அச்சம் விலகியவர்களாவோம். கடுமையாகச் செயலாற்றும் மனிதர்களில் காளையான விருகோதர் {பீமர்}, கோபமடையும்போதும், அவர் {பீமர்} மீது கண்களைச் செலுத்தும் மனிதன், இவ்வுலகில் சுவாசிக்க மாட்டான். {பீமரைப் பார்ப்பதற்கு சக்தியுள்ள மனிதன் இவ்வுலகத்தில் இல்லை என்பது நிச்சயம்} [1]." என்றான் {அர்ஜுனன்}.

[1] வேறு பதிப்பில் இந்த இடத்தில் அர்ஜுனன் இன்னும் பேசுகிறான். வேறு பதிப்புகளில் அர்ஜுனன் தொடர்ந்து, "இடிபோன்ற பலமும் உறுதியும் கொண்ட கதாயுதத்தை எடுத்துக் கொண்டு விரைவாக நகரும் பீமசேனர் கடலையும் வற்றும்படி செய்துவிடுவார். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் பலசாலியான பீமசேனரைத் தனது பெரும்பலத்தைக் காண்பிக்கச் செய்யும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கேகயர்கள், திருஷ்டகேது, துணிச்சல்மிக்கச் சேகிதானன் ஆகியோர் தங்கள் அமைச்சர்களுடன் படைகளை அழைத்துக் கொண்டு திருதராஷ்டிரன் மகன்களை நோக்கிச் செல்லட்டும்" என்றான் {அர்ஜுனன்}" என்று முடிகிறது.

இதைச் சொன்னவனும், வலிமையான கரங்களைக் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தான் சொன்னது போலவே செய்தான். மேலும் அந்தப் பல்குனன் {அர்ஜுனன்}, விரைவாகத் தனது துருப்புகளை அணிவகுத்து (எதிரிகளுக்கு எதிராக) முன்னேறினான். பாண்டவர்களின் வலிமைமிக்க அந்தப் படை, குருக்களின் படை நகர்வதைக் கண்டு, விரைந்து உருள்வதும், அசைக்க முடியாததும் முழுமையாக நிரம்பி ஓடும் கங்கையின் ஊற்றைப்போலக் காணப்பட்டது.

பீமசேனன், பெரும் சக்தியுடைய திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன், மன்னன் திருஷ்டகேது ஆகியோர் அந்தப் படையின் தலைவர்களானார்கள். ஓர் அக்ஷௌஹிணி படைகளால் சூழப்பட்ட மன்னன் விராடன், தனது தம்பிகள் மற்றும் மகன்கள் துணையுடன் பின்புறத்தைப் பாதுகாத்தபடி பின்னே அணிவகுத்து வந்தான். பெரும் பிரகாசமிக்க மாத்ரியின் இரு மகன்களும் {நகுல-சகாதேவன்}, பீமனின் சக்கரங்களை {பக்கங்களைப்} பாதுகாப்பவர்கள் ஆனார்கள்; அதே வேளையில், திரௌபதியின் (ஐந்து) மகன்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனான சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} (பீமனைப்) பின்புறத்தில் இருந்து பாதுகாத்தார்கள்.

வலிமைமிக்கத் தேர்வீரனும், பாஞ்சால இளவரசனுமான திருஷ்டத்யும்னன், தேர்வீரர்களில் முதன்மையானோரான பிரபத்ரகர்களோடு சேர்ந்து {மேற்கண்ட} அந்த வீரப் போராளிகளைப் பின்னால் இருந்து பாதுகாத்தான். அவனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} பின்னே சிகண்டி இருந்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}. பீஷ்மரை அழிப்பதில் முழுக்கவனத்துடன் இருந்த அவனை {சிகண்டியை} அர்ஜுனன் பாதுகாத்தான். அர்ஜுனனுக்குப் பின்னால், பெரும்பலமிக்க யுயுதானன் இருந்தான். யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய பாஞ்சால இளவரசர்கள் இருவரும், கேகயச் சகோதரர்கள், திருஷ்டகேது, பெரும் வீரமிக்கச் சேகிதானன் ஆகியோரோடு அர்ஜுனனின் சக்கரங்களைக் பாதுகாத்தனர்.

"கடினமான உலோகத்தால் ஆன கதாயுதத்தைத் தரித்துக் கடும் வேகத்துடன் {களத்தில்} உலாவி வரும் இந்தப் பீமசேனரால் கடலையே வற்ற செய்ய முடியும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, திருதராஷ்டிரர் மகன்களின் ஆலோசகர்களும் அவரைப் {பீமரைப்} பார்த்துக் கொண்டே அங்கேதான் இருக்கின்றனர்" என்று வலிமைமிக்கப் பீமசேனனை {யுதிஷ்டிரனிடம்} சுட்டிக்காட்டியபடியே பீபத்சு {அர்ஜுனன்} சொன்னான். பார்த்தன் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துதிவார்த்தைகளைச் சொல்லி துருப்புகள் அனைத்தும் அவனை {யுதிஷ்டிரனை} வழிபட்டன. குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், மலைகளை ஒத்த மூர்க்கமான பெரிய யானைகள் சூழ, அந்தப் படைக்கு நடுவில் தனது நிலையை ஏற்றுக் கொண்டான்.

பாஞ்சாலர்களின் மன்னனும், பெரும் ஆற்றல் கொண்டவனுமான உயர் ஆன்ம யக்ஞசேனன் {துருபதன்}, பாண்டவர்களுக்காக வந்த ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் விராடனுக்குப் பின்னால் தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்களின் தேர்கள் அனைத்தும், பல்வேறு விதமான கொடிகளுடன் கூடிய கொடிக்கம்பங்களைக் கொண்டிருந்தன. அவை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையாகவும், சூரியன் மற்றும் சந்திரனின் பிரகாசத்தையும் கொண்டவையாக இருந்தன. அந்த மன்னர்களை நகரும்படி செய்து, தனக்கு இடத்தை ஏற்படுத்திக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், தனது தம்பிகள் துணையுடன், யுதிஷ்டிரனைப் பின்னால் இருந்து பாதுகாத்தான்.

உமது தரப்பில் உள்ள தேர்கள் அனைத்திலும், எதிரியின் தேர்களிலும் உள்ள உயர்ந்த கொடிக்கம்பங்கள் அனைத்தையும் விட, அர்ஜுனனின் தேரில் இருந்த மகத்தான குரங்கின் {ஹனுமன்} கொடி மேம்பட்டதாக இருந்தது. வாட்கள், வேல்கள், ரிஷ்டிகள் ஆகியவற்றைக் கையில் கொண்ட பல லட்சம் காலாட்படை வீரர்கள் பீமசேனனுக்கு முன்பு இருந்து அவனைப் பாதுகாத்தார்கள். மதப்பெருக்குள்ள கன்னங்களும், வாய்களும் கொண்டு, (அதன் காரணமாக) மழைபொழியும் மேகங்களைப் போன்றிருப்பவையும், பெரும் துணிவு கொண்டவையும், தங்கக் கவசங்களால் சுடர்விடுபவையும், பெரும் மலைகளைப் போன்றவையும், விலையுயர்ந்தவையும், தாமரையின் நறுமணத்தை அளிப்பவையுமான பத்தாயிரம் {10,000} யானைகள், நகரும் மலைகளைப் போல அந்த மன்னனைப் {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்தன. உயர் ஆன்மா கொண்டவனும், ஒப்பற்றவனுமான பீமசேனன், பரிகத்தை [2] ஒத்திருந்த தனது கடுமையான கதாயுதத்தைக் கொண்டு (உமது மகனின்) பெரும் படையை நசுக்கப் போவது போலத் தெரிந்தது.

[2] "பரிகம் என்பது இரும்பால் செய்யப்பட்ட தடித்த தண்டம் போன்ற ஓர் ஆயுதமாகும். மனிதப் போராளிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட பரிகத்தை விடப் பீமனின் கதாயுதம் கனமாகவும், பருமனாகவும் இருக்கும் என்பது பிரபலமான மதிப்பீடாகும். இங்கே செய்யப்பட்டும் ஒப்பீடு மிகவும் அற்பமாக உள்ளது என்கிறார் கங்குலி.

சூரியனைப் போல (நெருப்பைப் போல) {எதிரிகளை} எரித்து, கண்ணால் காணமுடியாதவனாக இருந்த அவனை {பீமனை}, பகையணி படையின் போராளிகளால் எந்தப் புள்ளியில் இருந்தும் காண முடியவில்லை. அச்சமற்றதாகவும், அனைத்துப் புறமும் நோக்குவதாகவும், விற்களைத் தனது மின்னல் குறியீடாகக் கொண்டதாகவும் [3], மிகக் கடுமையானதாகவும் இருந்த வஜ்ரம் என்று அழைக்கப்படும் இந்த வியூகம் {வஜ்ர வியூகம்-படைவரிசை} காண்டீவந்தாங்கியால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்பட்டது. தங்கள் துருப்புகளை உமது படைக்கு எதிராக எதிரணிவகுக்கச் செய்து {எதிர்வியூகத்தில் அமைத்து}, போருக்காகப் பாண்டவர்கள் காத்திருந்தனர். பாண்டவர்களால் பாதுகாக்கப்பட்ட அந்த வியூகம் மனிதர்களின் உலகில் ஒப்பற்றதானது.

[3] வஜ்ரம் என்ற பெயர், வைரம் மற்றும் கற்களைச் சலிக்கப் பயன்படும் கடினமான ஊசியையோ, {ஆணியின் வடிவில் தெரியும்} இடியையோ சுட்டுகிறது. இந்தச் சுலோகத்தில் வஜ்ரம் என்ற சொல் இடியுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. எனவே, இந்தக் குறிப்பிட்ட வஜ்ரத்தில், மின்னலுடன் கூடிய இடியைப் போல வீரர்களின் விற்கள் மின்னலின் குறியீடுகளாக இருந்தன எனக் கொள்ளலாம்.

அந்த (இரு) படைகளும், நாளின் காலைச் சந்தியில் {அதிகாலையில்} சூரிய உதயத்துக்காகக் காத்திருந்தது. (விழும்) நீர்த்துளிகளுடன் காற்று வீசத் தொடங்கியது. மேகமற்றிருந்த போதே இடியின் உருளல் {ஒலி} கேட்கப்பட்டது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பெரும் எரிகற்கள்,  கிழக்கு முகமாகச் சூரியனை அடிப்பது போல விழந்து, பெரும் ஒலியுடன் துண்டுகளாகச் சிதறிப் போயின.

துருப்புகள் அணிவகுத்து நின்ற போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சூரியன் ஒளியிழந்து எழுந்தான். பல இடங்களில் பெரும் ஒலியுடன் பிளந்த பூமி, {அதைவிடப்} பெரும் ஒலியுடன் நடுங்கியது. இடியின் உருளல், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அனைத்துப் புறங்களிலும் தொடர்ச்சியாகக் கேட்கப்பட்டன. எதையும் காணமுடியாத படி அடர்த்தியான புழுதி எழுந்தது. மணி வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், தங்க ஆபரணங்கள், மலர் மாலைகள், விலையுயர்ந்த துணிகள் ஆகியவை நிறைந்தவையும், கொடியுடன் கூடியவையும், சூரியனின் பிரகாசத்தைக் கொண்டவையுமான (போராளிகளின்) உயர்ந்த கொடிக் கம்பங்கள், திடீரெனக் காற்றால் அசைக்கப்பட்டு, (காற்றால் அசைக்கப்பட்ட) பனைமரக்காட்டைப் போல "ஜணஜண" என்ற ஒலியை உண்டாக்கியது.

இப்படியே, போரில் எப்போதும் மகிழும் மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மகன்கள், உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} எதிராகத் தங்கள் எதிரணிவகுப்பைச் செய்து, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நமது வீரர்களை எலும்பு மஜ்ஜையை உறிவது போல உறிஞ்சி, தங்கள் தலைமையில் நிலைத்திருந்த பீமசேனனின் மீது தங்கள் கண்களை வீசி, கையில் கதாயுதங்களுடன் அங்கே நின்றனர்" என்றான் {சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top