"I will slay Bhishma!" said Krishna! | Bhishma-Parva-Section-059c | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 17)
பதிவின் சுருக்கம் : சாத்யகியை மெச்சிய கிருஷ்ணன், பீஷ்மரைத் தானே கொல்லப் போவதாகச் சொன்னது; கைகளில் சக்கரத்துடன் பீஷ்மரை எதிர்த்துச் சென்ற கிருஷ்ணன்; தன்னைக் கொல்லக் கிருஷ்ணனை வரவேற்ற பீஷ்மர்; கிருஷ்ணனின் காலைப் பிடித்துக் கெஞ்சிய அர்ஜுனன்; கோபம் தணிந்த கிருஷ்ணன் மீண்டும் தேரில் ஏறி கடிவாளத்தைப் பிடித்தது; கௌரவப் படையில் எழுந்த ஆரவாரம்...
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, "{பாண்டவத் தரப்பின்} அந்த மன்னர்களில் முதன்மையானோர் ஒன்றாகப் போர்க்களத்தை விட்டு ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டும், பார்த்தன் {அர்ஜுனன்} மென்மையாகப் போரிட்டதைக் குறித்துக் கொண்டும், போரில் பீஷ்மர் பெரும் பலத்துடன் முயற்சித்துக் கொண்டிருந்ததையும், அனைத்துப் புறங்களில் இருந்து விரையும் கௌரவர்களையும் கண்டும் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், தாசார்ஹர்களின் உயர் ஆன்மப் பாதுகாவலனுமான அந்த வாசவனின் {இந்திரனின்} தம்பி {கிருஷ்ணன்}, சிநியின் புகழ்பெற்ற பேரனை {சாத்யகியை} மெச்சிப் பேசியபடி, "ஓ! சிநி குலத்து வீரா {சாத்யகி}, எவர் பின்வாங்கிச் செல்கிறார்களோ, அவர்கள் புறமுதுகிடுகிறார்கள் என்பது உண்மையே. எவர் இருக்கிறார்களோ, ஓ! சாத்வத குலத்தோனே {சாத்யகி}, அவர்களையும் வெளியேற விடுவாயாக. விரைவில் இப்போரில் தொண்டர்களோடு கூடிய பீஷ்மரையும், துரோணரையும் அவர்களது தேரில் இருந்து நான் வீழ்த்தப் போவதைப் பார். ஓ! சாத்வத குலத்தோனே {சாத்யகி}, குரு படையில் ஒருவரும் என் கோபத்திற்குத் தப்பப்போவதில்லை. எனவே, கடுமையான எனது சக்கரத்தை எடுத்து உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரை நான் கொல்லப்போகிறேன். தேர்வீரர்களில் முதன்மையான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரையும், அவர்களின் தொண்டர்களோடு சேர்த்துப் போரில் கொன்று, ஓ! சிநியின் பேரனே {சாத்யகி}, தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்}, மன்னரையும் {யுதிஷ்டிரரையும்}, பீமனையும், அஸ்வினி இரட்டையர்களையும் {நகுலன் மற்றும் சகாதேவனையும்} மகிழ்விக்கப் போகிறேன். திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும், அவர்களின் தரப்பை அடைந்த மன்னர்களில் முதன்மையானோர் அனைவரையும் கொன்று, மகிழ்ச்சியாக நான் மன்னன் அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரரிடம்} நாட்டைக் கொடுப்பேன்" என்றான் {கிருஷ்ணன்}.
இதைச் சொன்ன அந்த வசுதேவர் மகன் {கிருஷ்ணன்}, குதிரைகளைக் (குதிரைகளின் கடிவாளத்தைக்) கைவிட்டு, ஆயிரம் வஜ்ராயுதங்களுக்கு நிகரான பலத்தைக் கொண்டதும், சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டதும், கத்தியைப் போன்று கூர்மையான முனைகளைக் கொண்டதும், அழகிய துளை கொண்டதுமான சக்கரத்தைத் தன் (வலது) கரத்தில் சுழற்றிக் கொண்டே, தேரில் இருந்து கீழே குதித்தான். தனது நடையால் பூமியை நடுங்கச் செய்த உயர் ஆன்மக் கிருஷ்ணன், பீஷ்மரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். கோபத்தால் தூண்டப்பட்டவனும், தேவர்களின் தலைவனுடைய {இந்திரனின்} தம்பியுமான {விஷ்ணுவுமான} அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {கிருஷ்ணன்}, சினத்தால் குருடானதும், தாக்குதலுக்காகச் செருக்குடன் நிற்பதுமான யானைகளின் இளவரசனைக் {தலைமை யானையைக்} கொல்லும் விருப்பதுடன் செல்லும் சிங்கத்தைப் போல, தனது துருப்புகளுக்கு மத்தியில் இருந்த பீஷ்மரை நோக்கி விரைந்தான்.
காற்றில் ஆடிய அவனது மஞ்சள் ஆடையின் நுனி, வானத்தில் இருக்கும் மின்னலுடன் கூடிய மேகம் போலத் தோன்றியது. சுதர்சனம் என்றழைக்கப்படும் சக்கரமான அந்தத் தாமரை, சௌரியுடைய {கிருஷ்ணனுடைய} அழகிய கரத்தைத் தனது தண்டாகக் கொண்டு, காலைச் சூரியனைப் போல {பால சூரியனைப் போல} பிரகாசமானதும், நாராயணனின் நாபிக்கமலத்தில் உதித்ததுமான ஆதிகாலத்துத் தாமரை போல அழகுடன் திகழ்ந்தது. கிருஷ்ணனின் கோபமே காலைச் சூரியனாகி அந்தத் தாமரையை மலரச் செய்தது. அந்தத் தாமரையின் அழகிய இலைகள் கத்தியின் முனை போலக் கூர்மையாக இருந்தன. கிருஷ்ணனின் உடலே அழகியத் தடாகமாக இருந்தது. அவனது (வலது) கரமே அந்தத் தாமரை உதித்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் தண்டானது.
கோபத்தால் தூண்டப்பட்டவனும், உரக்க முழங்கியவனும், சக்கரத்தை ஏந்தியவனுமான மகேந்திரனின் {இந்திரனின்} தம்பியைக் {கிருஷ்ணனைக்} கண்ட உயிரினங்கள் அனைத்தும் குருக்களின் அழிவு நெருங்கிவிட்டதென எண்ணி உரக்க ஓலமிட்டன. தனது சக்கரத்தை ஏந்திய வாசுதேவன் {கிருஷ்ணன்}, உலகத்தை எரிப்பதற்காக யுக முடிவின் போது தோன்றும் சம்வர்த்த நெருப்பைப் {ஊழித்தீயைப்} போலத் தோன்றினான். உயிரினங்கள் அனைத்தையும் உட்கொள்ள உதித்த, ஒரு கடும் விண்மீன் போல அண்டத்தின் ஆசான் {கிருஷ்ணன்} சுடர்விட்டெரிந்தான்.
இரண்டு கால் படைத்த உயிரினங்களில் {மனிதர்களில்} முன்மையானவனான அந்தத் தெய்வீக மனிதன் {கிருஷ்ணன்}, கைகளில் சக்கரத்துடன் முன்னேறி வருவதைக் கண்டச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, தனது தேரில் நின்றபடியே, கையில் வில் மற்றும் கணையுடன், அச்சமற்ற வகையில், "வா, ஓ! தேவர்களின் தலைவா {தேவநாதா, கிருஷ்ணா} வா. ஓ! அண்டத்தை வசிப்பிடமாகக் கொண்டவனே {ஜகந்நிவாசா, கிருஷ்ணா}, ஓ! கதாயுதம், வாள் மற்றும் சாரங்கம் தரித்தவனே, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! அண்டத்தின் தலைவா {லோகநாதா, கிருஷ்ணா}, இந்தப் போரில், ஓ! உயிர்களனைத்தின் புகலிடமானவனே {சர்வசரண்யனே, கிருஷ்ணா}. இந்த அற்புதத் தேரில் இருந்து என்னைப் பலவந்தமாகத் தூக்கி எறிவாயாக. உன்னால் இங்குக் கொல்லப்பட்டால் , ஓ! கிருஷ்ணா, இவ்வுலகிலும், அடுத்த உலகிலும் {இம்மையிலும் மறுமையிலும்} நான் அடையும் நற்பேறு பெரியதாக இருக்கும். ஓ! விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் தலைவா {கிருஷ்ணா}, நீ எனக்குக் கொடுக்கும் மதிப்பு {கௌரவம்} பெரியதாகும். எனது கண்ணியம் மூவுலகத்தாலும் கொண்டாடப்படும்" என்றார் {பீஷ்மர்}.
சந்தனுமகனின் {பீஷ்மரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன் மூர்க்கமாக அவரிடம் விரைந்து, "பூமியில் நடைபெறும் இந்தப் பெரும் படுகொலைக்கான வேர் நீரே. துரியோதனன் கொல்லப்படுவதை இன்று நீர் காண்பீர். நீதியின் பாதையில் நடக்கும் அறிவுள்ள அமைச்சன் ஒருவன், தீமையான சூதாட்டத்திற்கு அடிமையாக இருக்கும் மன்னனைத் தடுக்க வேண்டும். விதியால் தவறாக வழிநடத்தப்பட்ட புத்தி கொண்டவன் கைவிடப்படுவதைப் போல, தன் குலத்தில் இழிந்தவனான கடமை மீறுபவன் எவனோ, அவன் கைவிடப்பட வேண்டும்" என்றான் {கிருஷ்ணன்}.
அரசனைப் போன்ற பீஷ்மர், இவ்வார்த்தைகளைக் கேட்டு, யதுக்களின் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்}, "விதியே வலிமை நிறைந்தது. யதுக்கள், தங்கள் நன்மைக்காகக் கம்சனைக் கைவிட்டார்கள். இதை நான் மன்னனிடம் (திருதராஷ்டிரனிடம்) சொன்னேன். ஆனால், அவன் {திருதராஷ்டிரன்} அதைப் பொருட்படுத்தவில்லை. கேட்பதில் பயனேதும் இல்லாமல் செவிகொடுப்பவன், (விதியின் ஆதிக்கத்தின்) மூலம் மாறுபட்ட புரிதலை அடைந்து, (தனது தனிப்பட்ட) துயரத்தைத் தானே ஈட்டிக் கொள்கிறான்" என்று மறுமொழி கூறினார் {பீஷ்மர்}.
அதேவேளையில், தனது தேரில் இருந்து குதித்தவனும், நீண்ட பருத்த கரங்களைக் கொண்டவனுமானப் பார்த்தன் {அர்ஜுனன்}, நீண்ட பருத்த கரங்களைக் கொண்ட யதுகுலத் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்} கால்நடையாகவே விரைந்தோடி, தன் இரு கரங்களாலும் அவனைப் {கிருஷ்ணனைப்} பிடித்துக் கொண்டான். தன்னில் {ஆத்மாவில்} அர்ப்பணிப்புக் கொண்ட தேவர்கள் அனைவரிலும் முதன்மையான கிருஷ்ணன் அப்போது கோபத்தால் தூண்டப்பட்டிருந்தான். எனவே, இப்படிப் பிடிக்கப்பட்டிருந்தாலும், அந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, தனி மரத்தைச் சுமந்து செல்லும் புயலைப் போல, ஜிஷ்ணுவைத் {அர்ஜுனனைத்} தன் பின்னே இழுத்துச் சென்றான். எனினும், பீஷ்மரை நோக்கி வேகமாக நடந்த அவனது {கிருஷ்ணனின்} கால்களைப் பெரும்பலத்துடன் பற்றிய அந்த உயர் ஆன்மப் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சிரமத்திற்குப் பிறகு பத்தாவது {10} அடியில் {எட்டில்} அவனைத் {கிருஷ்ணனைத்} தடுப்பதில் வென்றான்.
கிருஷ்ணன் நின்றதும், அழகிய பொன்மாலையைப் பூண்டவன் {அர்ஜுனன்} அவனை {கிருஷ்ணனை} மகிழ்ச்சியாக வணங்கி, "இந்த உனது கோபத்தைத் தணிப்பாயாக. ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டவர்களின் புகலிடம் நீயே. ஓ கேசவா {கிருஷ்ணா}, உறுதியேற்றபடியே நான் செயல்களில் இருந்த விலக மாட்டேன் என்று எனது மகன்கள் மீதும், எனது சகோதரர்கள் மீதும் ஆணையிடுகிறேன். ஓ! இந்திரனின் தம்பியே {உபேந்திரனே, கிருஷ்ணா}, உனது கட்டளையின் பேரில், நிச்சயம் நான் குருக்களை நிர்மூலமாக்குவேன்" என்றான்.
அவனது {அர்ஜுனனின்} உறுதிமொழியையும், ஆணையையும் கேட்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மனநிறைவை அடைந்தான். குருக்களில் சிறந்தவனான அர்ஜுனனுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்வதில் ஈடுபடுபவனான அவன் {கிருஷ்ணன்} கைகளில் சக்கரத்துடன் மீண்டும் தனது தேரில் ஏறினான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {கிருஷ்ணன்}, (தான் கைவிட்ட) அந்தக் கடிவாளங்களை மீண்டும் பற்றினான். பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் தனது சங்கை எடுத்த சௌரி {கிருஷ்ணன்}, திக்குகள் அனைத்தும், ஆகாயமும் நிறையும்படி முழக்கினான்.
ஆரம், தோள்வளை, குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், வளைந்த இமைமயிர்கள் புழுதியடைந்தவனும், முற்றிலும் வெண்மையான பற்களையுடையவனுமான கிருஷ்ணன், மீண்டும் தனது சங்கை எடுத்ததைக் கண்ட குரு வீரர்கள் உரக்கக் கதறினர். மிருதங்கங்கள், பேரிகைகள், பணவங்கள் ஆகியவற்றின் ஒலிகளும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளும், சிறிய வகைத் துந்துபிகளின் ஒலிகளும், குருவீரர்களின் படையணிகளுக்கு மத்தியில் இருந்து எழுந்த சிம்ம முழக்கங்களோடு கலந்து கடுமையான ஆரவாரத்தை உண்டாக்கின. இடியின் உறுமலை ஒத்த பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} காண்டீவத்தின் நாணொலி ஆகாயத்தையும், அனைத்துத் திசைகளையும் நிறைத்தது. பாண்டு மகனின் {அர்ஜுனனின்} வில்லில் இருந்த அடிக்கப்பட்டவையும், பிரகாசமானவையும், சுடர்விடுபவையுமான கணைகள் அனைத்துப் புறங்களுக்கும் சென்றன" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |