The terrible dance of Bhimasena! | Bhishma-Parva-Section-062 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 20)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனின் வருத்தம்; சல்லியனுக்கும், திருஷ்டத்யும்னனுக்கும் இடையில் நடைபெற்ற போரை வர்ணித்த சஞ்சயன்; அபிமன்யு இடையில் புகுந்தது; ஒருபுறம் பத்துப் பேரும், மறுபுறம் இன்னும் பத்துப் பேரும் இருந்து போரிட்டது; மகத யானைகளைக் கொன்ற பீமன்; அபிமன்யுவுக்கும் மகதமன்னனுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; மகத மன்னனின் தலையைக் கொய்த அபிமன்யு; பீமனால் யானைகள் அடைந்த துன்பம்; ஊழிக்கால ருத்திரனைப் போல இருந்த பீமன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "என் மகனின் {துரியோதனனின்} படைகள் அனைத்தும், பாண்டவப்படையால் தொடர்ந்து கொல்லப்படுவதால், ஓ! சஞ்சயா, உழைப்பைவிட {முயற்சியைவிட} விதியே மேன்மையானது என நான் கருதுகிறேன். ஓ! சூதா {சஞ்சயா}, எனது துருப்புகள் கொல்லப்படுவதாகவே நீ எப்போதும் சொல்கிறாய். மேலும், பாண்டவர்களைக் கொல்லப்படாதவர்களாகவும் உற்சாகம் நிறைந்தவர்களாகவும் எப்போதும் சொல்கிறாய்.
உண்மையில், ஓ! சஞ்சயா, என்னுடையவர்களை ஆண்மையற்றவர்களாகவும், தங்கள் சக்தியைச் சிறப்பாகப் பயன்படுத்தினாலும், வெற்றிக்காகக் கடினமாக முயற்சித்தாலும் அவர்கள் வீழ்த்தப்பட்டதாகவும், வீழ்த்தப்படுவதாகவும், கொல்லப்பட்டதாகவும் நீ சொல்கிறாய். பாண்டவர்கள் வெற்றி அடைவதாகவும், என்னவர்கள் மேலும் மேலும் பலவீனமடைந்ததாகவுமே எப்போதும் நீ என்னிடம் சொல்கிறாய். ஓ! குழந்தாய் {சஞ்சயா}, துரியோதனனின் செயல்களால், தாங்கிக் கொள்ள முடியாததும், எரிச்சலூட்டுவதுமான எண்ணற்ற துயரங்களை நான் இடவிடமால் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஓ! சஞ்சயா, போரில் பாண்டவர்களைப் பலவீனப்படுத்தவும், எனது மகன்கள் வெற்றியை அடையவும் எந்த வழியையும் நான் காணவில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பெரும் தீமை உம்மில் இருந்தே வந்திருக்கிறது. மனிதர்கள், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியவற்றின் படுகொலையை இப்போது பொறுமையாகக் கேட்பீராக.
சல்லியனின் ஒன்பது கணைகளால் பீடிக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், பதிலுக்கு எஃகால் ஆன பல கணைகளைக் கொண்டு மத்ர ஆட்சியாளனைப் {சல்லியனைப்} பீடித்தான். சபைகளின் ரத்தினமான சல்லியனை விரைவாகத் தடுத்த திருஷ்டத்யும்னனின் அற்புதமான ஆற்றலை நாங்கள் கண்டோம். அவர்கள் இருவருக்கும் இடையிலான அந்தப் போர் குறுகிய காலமே நீடித்தது. கோபத்துடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள் ஓய்வதை ஒருக்கணம் கூட யாராலும் காணமுடியவில்லை.
அப்போது அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர்முனையுடனும், அற்புத திடத்துடனும் கூடிய ஒரு பல்லத்தை {அகன்ற தலை கொண்ட கணையைக்} கொண்டு திருஷ்டத்யும்னனின் வில்லைச் சல்லியன் அறுத்தான். மேலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவன் {சல்லியன்}, மழைக்காலங்களில் மலையின் சாரலில் தங்கள் துளிகளைப் பொழியும் மழைநிறைந்த மேகங்களைப் போல, கணை மழையால் அவனை {திருஷ்டத்யும்னனை} மறைத்தான். இப்படித் திருஷ்டத்யும்னன் பீடிக்கப்பட்ட போது, சினம் தூண்டப்பட்ட அபிமன்யு, மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அளவிலா ஆன்மா கொண்டவனான கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} கோபம்நிறைந்த மகன் {அபிமன்யு} மத்ர ஆட்சியாளனின் தேரை அடைந்து (அம்பு ஏவும் தொலைவை அடைந்து} மூன்று கணைகளால் அர்த்தாயனியைத் [1] {சல்லியனைத்} துளைத்தான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} எதிர்க்க விரும்பிய உமது படையின் போர்வீரர்கள், மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரை விரைவாகச் சூழ்ந்து கொண்டனர்.
[1] சல்லியன், தனது தந்தையின் பெயரால் அர்த்தாயனி என்றும் அழைக்கப்பட்டான் என்று கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு பதிப்புகளில் இந்தப் பெயர் ருதாயனன் என்றும் இருக்கிறது.
துரியோதனன், விகர்ணன், துச்சாசனன், விவிம்சதி, துர்மர்ஷணன், துஸ்ஸஹன், சித்திரசேனன், துர்முகன், சத்யவிரதன், புருமித்ரன் ஆகியோர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரைப் பாதுகாத்தபடி அங்கேயே நிலைநின்றனர். அப்போது, கோபம் தூண்டப்பட்டவனான பீமசேனன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், திரௌபதியின் ஐந்து மகன்கள், அபிமன்யு, மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வகை ஆயுதங்களால் தங்களைத் தாக்கிக் கொண்டிருந்த திருதராஷ்டிரப் படையின் அந்தப் பத்து வீரர்களை எதிர்த்தனர்.
உமது தீயக் கொள்கையின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பிய அவர்கள், மற்றவர்களை அணுகித் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். அச்சந்தரும் அந்தப் போரில், சினத்தால் தூண்டப்பட்ட அந்தப் பத்து தேர்வீரர்களும், பிற பத்து வீரர்களுடன் போரில் ஈடுபட்ட போது, உமது படை மற்றும் எதிரியின் படை ஆகிய இரண்டையும் சேர்ந்த மற்ற தேர்வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களாகவே நின்றனர். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏவிக் கொண்டும், ஒருவரை நோக்கி ஒருவர் முழக்கமிட்டபடியும், மிகக் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். நெஞ்சங்களில் உதித்த கோபத்துடன் ஒருவரை ஒருவர் கொல்லவிரும்பிய அவர்கள், தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சவாலுக்கழைத்துக் கடுமையாக முழக்கமிட்டனர். தங்களுக்குள் பொறாமை கொண்ட அந்த உறவினர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் ஒன்றுகூடி வலிமைமிக்க ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன் அந்தப் போரில் நான்கு கூரிய கணைகளால் திருஷ்டத்யும்னனைத் துளைத்தான் என்பதைச் சொல்ல அற்புதமாகத்தான் இருக்கிறது [2]. துர்மர்ஷணன் இருபது கணைகளாலும், சித்திரசேனன் ஐந்தாலும், துர்முகன் ஒன்பதாலும், துஸ்ஸஹன் ஏழாலும், விவிம்சதி ஐந்தாலும், துச்சாசனன் மூன்று கணைகளாலும் அவனைத் {திருஷ்டத்யும்னனைத்} துளைத்தனர். அப்போது, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளை எரிப்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் இருபத்தைந்து கணைகளால் துளைத்துத் தனது கர வேகத்தை வெளிப்படுத்தினான்.
[2] இங்கே சஞ்சயன் துரியோதனனை வஞ்சப் புகழ்ச்சி செய்வதாகத் தெரிகிறது. ஆனால் வேறு பதிப்புகளில் இந்த இடத்தில் பொருத்தமில்லா தன்மையால் ஒரு சொல் விடப்பட்டது என்ற குறிப்பைச் சொல்லி துரியோதனன் திருஷ்டத்யும்னனை நான்கு கணைகளால் அடித்தான் என்று மட்டுமே முடித்திருக்கின்றனர்.
அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சத்தியவிரதன், புருமித்திரன் ஆகியோர் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் அபிமன்யு துளைத்தான். தங்கள் தாய்க்கு மகிழ்ச்சியை அளிப்பவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, கூரிய கணை மழையால் தங்கள் மாமனை {சல்லியனை} மறைத்தார்கள். இவை அனைத்தும் காண அற்புதமாக இருந்தன. அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், தங்கள் மாமனின் {சல்லியனின்} செயல்களுக்குப் பதிலடி கொடுக்க விரும்புபவர்களுமான தன் மருமகன்கள் இருவரையும் சல்லியன் கணைகளால் மறைத்தான். எனினும் அந்த மாத்ரியின் மகன்கள் நடுங்கவில்லை.
துரியோதனனைக் கண்டவனும், பாண்டுவின் மகனுமான வலிமைமிக்கப் பீமசேனன், போருக்கு ஒரு முடிவைக் கொண்டு வர விரும்பித் தன் கதாயுதத்தை எடுத்தான். உயர்த்திப் பிடிக்கப்பட்ட கதாயுதத்துடன் கூடியவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், சிகரங்களுடன் கூடிய கயிலாய மலையைப் போன்றவனுமான பீமசேனனைக் கண்ட உமது மகன்கள் அச்சத்தால் ஓடினார்கள். எனினும், கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், பெரும் சுறுசுறுப்புடையவையும், பத்தாயிரம் {10000} யானைகளைக் கொண்டவையுமான மகதப் படைப்பிரிவை ஏவினான். அந்த யானைப் படையின் துணையுடனும், மகத ஆட்சியாளனை {?} [3] தனக்கு முன்னிலையில் நிறுத்திக் கொண்டும், பீமசேனனை நோக்கி மன்னன் துரியோதனன் முன்னேறினான்.
[3] மகத நாட்டு மன்னன் என்று ஜெயத்சேனன் குறிப்பிடப் படுகிறான். உத்யோக பர்வம் பகுதி 19ல் ஜெயத்சேனன் பாண்டவத் தரப்பை அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் போரில் அவன் கௌரவத் தரப்பில் நின்று போரிட்டதாகவே பல குறிப்புகள் காணக்க கிடைக்கின்றன. 5:19ல் மட்டுமே அவன் பாண்டவத் தரப்பை அடைந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், ஜராசந்தனின் மகனான சகாதேவனும் மகத நாட்டு மன்னனே என்றும் குறிப்புகள் இருக்கின்றன. இவன் பாண்டவப் படையின் தளபதிகள் எழுவரில் ஒருவனாகவும் இருந்தான். இவன் ஓர் அக்ஷௌஹிணி துருப்புடன் பாண்டவத் தரப்பை அடைந்ததாக உத்யோக பர்வம் பகுதி 57ல் குறிப்பு இருக்கிறது. போரில் இந்தச் சகாதேவன் பீஷ்மரால் கொல்லப்படுகிறான். ஆனால், இங்கே இந்தப் பகுதியில் சுட்டப்படும் மகதர்களின் ஆட்சியாளன் யார் என்பதில் ஐயமுள்ளது. இந்த இருவரில் ஒருவனாக அவன் இருக்க முடியாது.
தன்னை நோக்கி முன்னேறும் அந்த யானைப்படையைக் கண்ட விருகோதரன் {பீமன்}, கையில் கதாயுதத்துடன் தேரில் இருந்து கீழே குதித்து, சிங்கத்தைப் போல உரக்க முழக்கமிட்டான். பெரும் கனமும், கடுமையான வலிமையும் கொண்ட அந்தப் பலமிக்கக் கதாயுதத்துடன் கூடிய அவன் {பீமன்}, வாயை அகல விரித்திருக்கும் அந்தகனைப் போல அந்த யானைப்படையை நோக்கி விரைந்தான். பெரும் பலம்பொருந்தியவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன், தானவப் படைக்கு மத்தியில் விருத்திரனைக் கொன்றவனை {இந்திரனைப்} போல, தன் காதாயுதத்தால் யானைகளைக் கொன்றபடி களத்தில் திரிந்தான். மனத்தையும், இதயத்தையும் அச்சத்தால் நடுங்கச் செய்யும் பீமனுடைய உரத்த முழக்கங்களால், வெருண்ட {நெருங்கிப் பதுங்கிய} யானைகள் தங்கள் அசையும் சக்திகள் அனைத்தையும் இழந்தன.
திரௌபதியின் மகன்கள், வலிய தேர்வீரனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, நகுலன் மற்றும் சகாதேவன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன் ஆகியோர் பீமனின் பின்புறத்தைப் பாதுகாத்தபடி, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரியைப் பொழிந்து அனைவரையும் தடுத்தனர். யானையின் முதுகில் இருந்து போரிடும் தங்கள் எதிரிகளின் தலைகளை, அந்தப் பாண்டவவீரர்கள், நன்கு கடினமாக்கப்பட்டவையும், கூரிய முனை கொண்டவைகளும், பல்வேறு வடிவங்களிலானவையுமான கணைகளால் [4] வெட்டி வீழ்த்தினர். (யானைவீரர்களின்) தலைகளும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களும், அங்குசங்கள் பிடித்த கைகளும் விழுவது ஒரு கல்மழையை ஒத்திருந்தது. தாங்கள் செலுத்திய விலங்குகளின் {யானைகளின்} கழுத்தில் இருந்த யானைவீரர்களின் தலையற்ற உடல்கள், மலைக்குன்றுகளில் இருக்கும் தலையற்ற மரங்களைப் போலத் தெரிந்தன.
[4] இவை க்ஷூரங்கள் (Kshuras - கூர்மையான தலை கொண்ட கணைகள்), க்ஷூரப்ரங்கள் (kshurapras - குதிரைலாடம் போன்ற தலைகள் கொண்ட கணைகள்), பல்லங்கள் (bhallas - அகன்ற தலை கொண்ட கணைகள்), அஞ்சலிகங்கள் (anjalikas - பிறைவடிவ தலை கொண்ட கணைகள்) ஆகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
அப்போது அந்தப் போரில் மகதர்களின் ஆட்சியாளன் {?}, ஐராவதம் போன்றிருந்த தன் யானையைச் சுபத்திரைமகனின் {அபிமன்யுவின்} தேரை நோக்கிச் செலுத்தினான். பகைவீரர்களைக் கொல்பவனான சுபத்திரையின் வீர மகன் {அபிமன்யு}, தன்னை நோக்கி வரும் வலிமைமிக்க யானையைக் கண்டு, ஒரே கணையால் அதைக் கொன்றான். இப்படித் தனது யானையை மகதர்களின் ஆட்சியாளன் இழந்த போது, பகை நகரங்களை வெல்பவனான அந்தக் கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு}, வெள்ளிச் சிறகுகள் கொண்ட ஒரு பல்லத்தினால் அந்த {மகத} மன்னனின் தலையைக் கொய்தான்.
அந்த யானைப் படைக்குள் ஊடுருவிய பாண்டுவின் மகனான பீமசேனன், மலைகளை நசுக்கும் இந்திரனைப் போலத் தன்னைச் சுற்றிலும் இருந்த அந்த விலங்குகளை {யானைகளை} நசுக்கியபடி களத்தில் திரியத் தொடங்கினான். இடியினால் பிளக்கப்படும் மலைகளைப் போல, (தன் கதாயுதத்தின்) ஒரே அடியில், ஒவ்வொரு யானையையும் அந்தப் போரில் பீமசேனன் கொல்வதை நாங்கள் கண்டோம். மலைகளைப் போன்று பெரிதாக இருந்த பல யானைகள், தந்தங்கள் உடைக்கப்பட்டோ, நெற்றிப்பொட்டு, எலும்புகள், முதுகுகள் அல்லது கும்பம் {முன் மண்டை} உடைக்கப்பட்டோ கொல்லப்பட்டன.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இன்னும் அங்கே கிடந்த பிற {யானைகள்}, வாயில் நுரை தள்ளி உயிரை விட்டன. வலிமைமிக்கப் பல யானைகள் முற்றிலும் தங்கள் கும்பம் நொறுக்கப்பட்டுப் பெருமளவில் உதிரத்தைக் கக்கின. இன்னும் சில அச்சத்தால் சிறு குன்றுகளைப் போலத் தங்களை அந்தப் பூமியில் கிடத்திக் கொண்டன. (யானைகளின்) கொழுப்பு, உதிரம் ஆகியவை பூசப்பட்டு, அவற்றின் {யானைகளின்} மஜ்ஜையில் கிட்டத்தட்ட குளித்திருந்த பீமன், அந்தகனைப் போலக் கையில் கதாயுதத்துடன் களத்தில் திரிந்தான்.
யானைகளின் உதிரத்தால் நனைத்திருந்த தனது கதாயுதத்தைச் சுழற்றிய விருகோதரன் {பீமன்}, பிநாகையைத் தரித்திருக்கும் பிநாகைதாங்கியைப் போல {சிவனைப் போல} பயங்கரமானவனாகவும், பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்துபவனாகவும் இருந்தான். கோபக்கார பீமனால் (இப்படி) நசுக்கப்பட்ட அந்தப் பெரும் யானைகள், பெரிதும் பீடிக்கப்பட்டு, தங்கள் படையணிகளையே நசுக்கிய படி திடீரென ஓடத் தொடங்கின. சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} தலைமை தாங்கப்பட்ட இந்த வலிமைமிக்க வில்லாளிகளும், தேர்வீரர்களும், வஜ்ரதாங்கியைப் {இந்திரனைப்} பாதுகாக்கும் தேவர்களைப் போல, யானைகளின் உதிரத்தால் நனைந்த தன் பயங்கரக் கதாயுதத்தைச் சுழற்றிப் போரிட்டுக் கொண்டிருந்த வீரனை {பீமனை} (அவ்வளவு நேரமும்) பாதுகாத்தனர். பயங்கர ஆன்மா கொண்ட பீமசேனனைக் காண அந்த அந்தகனைப் போல இருந்தான்.
உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கைகளில் கதாயுதத்துடன் அனைத்துப் புறங்களிலும் தன் பலத்தைச் செலுத்திய பீமசேனனை, (யுக முடிவின் போது) கூத்தாடும் சங்கரனைப் போல நாங்கள் கண்டோம். யமனின் தண்டாயுதத்தைப் போலக் கனமானதும், கடினமானதும், ஒலிபெருக்குவதுமான அவனது {பீமனது} கதாயுதம், இந்திரனின் வஜ்ரத்தைப் போன்ற ஒலியைக் கொண்டிருந்தது. மஜ்ஜைகளாலும், மயிர்களாலும் பூசப்பட்டிருந்ததும், கோரமானதுமான அவனது கதாயுதம், அனைத்து உயிர்களையும் அழிக்கும் கோபம் மிகுந்த ருத்திரனின் {சிவனின்} பிநாகையைப் போலவும் இருந்தது.
கால்நடைக்கூட்டத்தைத் தனது கோலால் தண்டிக்கும் மந்தையாளனைப் போலவே, பீமனும், தன் கதாயுதத்தால் அந்த யானைப்படையை அடித்தான். பீமனின் கதாயுதத்தாலும், (அவனுக்குப் பின்பு இருந்து பாதுகாத்தவர்கள் அடித்த) கணைகளாலும் இப்படிக் கொல்லப்பட்ட அந்த யானைகள் அனைத்துப் புறங்களிலும் ஓடி தங்கள் சொந்தப் படையையே நசுக்கின. அதன் பிறகு, மேகத்திரளை விரட்டும் வலிமைமிக்கக் காற்றைப் போல அந்தக் களத்தில் இருந்து யானைகளை விரட்டிய பீமன், சுடலையில் நிற்கும் திரிசூலந்தாங்கியைப் {சிவனைப்} போல அங்கே நின்றான்.
ஆங்கிலத்தில் | In English |